நீயே என் இதய தேவதை 11

0
881
Neeye En Idhaya Devathai

அன்புவின் கோபத்தில் மனமுடைந்த கவி அன்று முழுக்க தனது தோழிகளுடன் கூட சரியாக பேசவில்லை. பிரியா அன்று அவள் அருகில் இல்லை.  வேறு லைனின் ஆட்கள் குறைவாக இருந்ததால் இன்று ஒருநாள் மட்டும்  அங்கு அனுப்பபட்டாள்.வர்ஷினிக்கு அடுத்த அறையில் சத்தம் கேட்கவில்லை. ஆக அவளும் கவனிக்கவில்லை.

ஷிப்ட் முடிந்து  வீட்டிற்கு சென்று முகம் கை கால் கழுவிக் கொண்டு குழந்தையை வாங்க காமாட்சியம்மாள் வீட்டிற்கு வந்தாள்.
கடையைத் தாண்டி வீட்டிற்குள் போனால் முற்றத்தில் விரித்தப் பாயில் பொம்மைகளுக்கு நடுவில் அமர்ந்து கொண்டு என்னவோ விளையாடிக் கொண்டிருந்த குழந்தை இவளைப் பார்த்தவுடன் “அம்மா”என தவழ்ந்து வந்து கட்டிக் கொண்டது.   காமாட்சி அம்மாள்
“வாம்மா” என்றாள் சாப்பிட்டு போயேன் என்ற அழைப்பை மென்மையாக மறுத்துவிட்டு குழந்தையை தூக்கி கொண்டு அறைக்கு வந்தாள்.

அன்பு சொன்ன “இந்த ஒரு வாரம் பாப்பேன். ஒழுங்கா வேல செய்யலேனா  வேறு டிபார்ட்மென்ட் மாத்தி விட்டுடுவேன்” இந்த வார்த்தைகள் நினைவிலே உறுத்திக் கொண்டிருந்தது. அதே கம்பெனியில் வேறு துறைக்கு மாற்றிவிட்டால் அன்புவின் தொல்லையிலிருந்து தப்பித்து விடலாம் எண்ணும் போது
கான்ட்ராக் சூப்பர்வைசர் பாலா வேலையில் சேர்க்கும் போது “பாப்பா இதுதான் இருக்கிறதுல ஈசியான வேலை அதனால இங்க சேர்த்துவிடுறேன்” என சொன்னது அசரீரீ போல ஒலிக்கிறது. கூடவே வேறு துறை மாறிவிட்டால் பிரியாவும் வர்ஷினியையும் அடுக்கடி  பார்க்க முடியுமா …? என்பது சந்தேகம். இப்படியாக கவி தனக்குள் உழன்றுக் கொண்டிருந்தாள்.  தாய்  தன்னை கவனிப்பதை விட்டு வேறு ஏதோ யோசனையில் இருப்பதைப் பார்த்து குழந்தை மாயா  “ம்மா..  ம்மா… ” கண்ணம் தட்டி அழைத்தாள்.

என்னடா குட்டி….. அம்மா இதோ வரேன்…  என்றவள் குழந்தைக்காக பால் சுடவைத்தாள்.

அன்று கவியை மட்டுமல்ல கண்ணில் எதிர்படும், அவனுக்கு கீழ் பணிபுரியும் யாவரும் சிறு தவறு செய்திருந்தாலும் காய்ச்சி எடுத்திருந்தான் அன்பு.மாலை 5. 30 மணிக்கு அவனது வேலை முடிந்தவுடன்
ஆசுவாசமாய் உணர்ந்தவன் விட்டால் போதுமென்ற நிலையில் வீட்டிற்குச் சென்றான். அத்தனை களைப்பு. அவனை நினைத்து அவனுக்கே சற்று கோபமாய் தான் இருந்தது. மற்ற பையன்களைத்  திட்டியது பராவாயில்லை. அவன்கள் பெரிதாய் எடுத்துக் கொள்ளப் போவதில்லை. கவியின் அழுத முகம் அது  மட்டும் நினைக்கையில் உறுத்தியது.அவள் மீது பெரிய தவறில்லை. நன்றாக வேலை தெரிந்தவரே சில சமயம் அசெம்பிளில் தவறுகள் செய்வர்.அவளோ புதியவள் இதை பழக இன்னும் சில வாரம் தேவைப்படும் என்பது அவனுக்கு தெரியும். இருந்தும் இதையெல்லாம் மேனேஜரிடம் சொல்லமுடியாதே.ஆம் அந்த மேனஜர்.  எல்லாம் அவனால் தான் வந்தது எனக் கறுவிக் கொண்டே இனி   பிறர் மீது செலுத்தும் கோபத்தை கொஞ்சம் கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டுமென நினைத்தான்.

அப்படித்தான் அடிக்கடி நினைக்கற. ஆனா எங்க கடைபிடிக்கிறனு மனக்குரல் ஒலிக்க
இனிமே கோபப்படமாட்டேன் என அதை  சமாதானம் செய்து சிறு குளியல் போட்டுவிட்டு சிற்றுண்டிக்கு தயார் செய்தான். இன்றும் கேவலமாகவே சமைத்திருந்தான். உப்புமாவை அள்ளி வாயில் வைக்கும் போது  “இரண்டு வருசமா சமைச்சும் ஒரு உப்புமாவை கூட உனக்கு ஒழுங்கா சமைக்க தெரிலயே ராசா. எந்த தைரியத்துல இரண்டு வாரமா வேலைக்கு வர பொண்ணு எல்லா வேலையும் சரியா செய்யணும்னு எதிர்பாக்குற” மனசாட்சி கேள்வியெழுப்பியது. அதை அலட்சியம் செய்தவன் வேறு வழியின்றி உப்புமாவை கட கடவென வாயில் திணித்துக் கொண்டு
கை கழுவினான்.

இரவு மணி எட்டாகியவுடன் குழந்தை மாயா சமத்தாக தூங்கிப்போனாள். அவளை தட்டிக் கொடுத்துக் கொண்டே அருகில் படுத்திருந்திருந்த கவிக்கு தூக்கமே வரவில்லை. திரும்ப திரும்ப அதே யோசனை.இறுதியில் நாளையிலிருந்து அதி கவனமாக தனது வேலையை செய்ய வேண்டும் கூடுமானவரை அன்புவின் பார்வை தன்மீது விழுவதை தவிர்க்க வேண்டும் என  உறுதியெடுத்துக் கொண்டு உறங்கினாள்
                                         தொடரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here