நீயே என் இதய தேவதை 16

1
1060
Neeye En Idhaya Devathai

  அன்புவைப் பார்த்து அதிர்ந்தவள்கள் கவி ஏதேனும் பிரச்சனை ஆகுமோ? வேலைக்கு பாதிப்பு வருமோ..? என்று பயந்து உள்ளூர  நடுக்கம் கண்டால் பிரியாவோ அண்ணன் தன்னை தவறாக எண்ணிவிடக் கூடுமோ..? என்று எண்ணி வருந்தினாள். இவர்களின் எண்ணவோட்டதிற்கு எதிராக அன்புவின் முகம் எதையும் காட்டாது உணர்ச்சிகளற்று இறுகி  கிடந்தது. இந்த நிலையில் கவிக்கு தான் செய்தது தவறு  என்பது புரிந்தாலும் கவி பிரியா இருவருக்கும் அன்புவிடம் தானே சென்று மன்னிப்பு கேட்கவோ தன்னிலை விளக்கம் கொடுக்கவோ தைரியம் இல்லை.

அங்கிருந்த பணி முடிந்ததும் கணினிக்கு முன் சென்றமர்ந்தான் அன்பு.சாதாரணமாக இருந்தால் இவர்களை கடந்து செல்லும் போது எப்பொழுதும் “பேச்சை குறைச்சிட்டு… வேலையைப் பாருங்க” என்றோ  கவுண்ட்டிங் இன்னும் வரலை க்விக்… என்றோ  அதட்டல் போட்டுவிட்டுத்தான் செல்வான்.இவனது இந்த  அமைதி கவியை மேலும் கிலியூட்ட அவளது வலப்பக்கம் திரும்பி பிரியாவைப் பார்த்தால் அவள் மும்முரமாக அவளது வேலையை செய்து கொண்டிருந்தாள். பிரியா….. பிரியா…..கூடுமானவரை சத்தமாக அழைத்து பார்த்தும்  அவளோ கவியின் புறம் திரும்பவே இல்லை இதுவே சொல்லாமல் சொல்லியது அவள் மேல் கடும் கோபத்தில் இருக்கிறாள் என்று.கவிக்கு பிரியாவை சமாதானப்படுத்த என்ன செய்வது என்று தெரியவில்லை.இவள் சத்தமாக அழைத்ததில் அந்த வழியே இவர்களை கடந்து சென்ற வினோத் ஒரு கணம் நின்று கவியை முறைத்தார்.இருக்கிற பிரச்சனை போதாதென்று வினோத்திடமும் அர்ச்சனை வாங்கிக் கொள்ள தேவையில்லையென நினைத்தவள் அவளது வேலையில் கவனம் செலுத்தினாள்.

ஷிப்ட் முடிந்ததும் உள் அறையிலிருக்கும் ஷர்மியை அழைத்துவிட்டு பிரியா விறுவிறுவென அறையை விட்டு  வெளியேற பிரியாவின் பின் “பிரியா சாரிடீ… சாரீ..நான் வேணும்னே அப்படி பேசலை. ஏதோ கோவத்துல சொல்லிட்டேன். இனி இந்த மாதிரி செய்யமாட்டேன்.” என கவி கெஞ்சியபடி நடக்க அதற்கு பின்னால் ஷர்மி என்ன நடந்தது? ஏன் பிரியா இப்படி நடந்து கொள்கிறாள்?  என எதுவும் புரியாமல் குழம்பியபடி வந்தாள். இவர்களுக்குள் நடந்தது எதுவும் அவளுக்கு தெரியாது அல்லவா…?

எவ்வளவு கெஞ்சியும் கவியுடன் பிரியா ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை.என்னாச்சு… பிரியா ஏன் இப்படி நடந்துக்கற….? நீ என்ன பண்ண கவி…? என்று கேள்விகளை தொடுத்த ஷர்மியையும் ஒரு முறைப்பில் அடக்கி தன்னுடன் அழைத்துச் சென்றாள்.அவள் இழுத்த இழுப்புக்கு உடன் சென்றபடியே ஷர்மி ” நீ கவலைப்படாதே எல்லாம் நான்  பாத்துக்கிறேன். அவ  நாளைக்கு பேசுவா… உன்கிட்ட ” என சைகையுடன் சத்தம் எழாமல் வாயசைத்து கவிக்கு நம்பிக்கையளித்தாள்.அந்த நம்பிக்கையை பற்றிக்கொண்டே கவி வீடு சென்றிறங்கினாள்.
குழந்தையை காமாட்சி அத்தை வீட்டிலிருந்து அழைத்து வருவது மதிய உணவு சமைப்பது பாப்பாவுக்கு விளையாட்டு காட்டி ஊட்டுவது பாத்திரங்களை சுத்தப்படுத்தி எடுத்து வைப்பது என அனைத்து வேலைகளையும் அதன் போக்கில் செய்தாலும் நினைவில் கம்பெனியில் நடந்த நிகழ்வே திரும்ப திரும்ப நிழலாடியது.   தவறு செய்துவிட்ட குற்றவுணர்வு மனதில் மனதில் எழாமல் இல்லை. ஆனாலும்  வீரியம் புரியாமல் பேசி விட்ட வாரத்தையை திரும்ப எடுத்துக்கொள்ள முடியாதே.என்ன சிந்தித்தும்  இந்த தவறை சரிசெய்யும் வழி மட்டும் புலப்படவில்லை. இப்போதும் கவியின் மனது பெரும்பாரம் கொண்டிருப்பது பிரியாவினை வருத்திவிட்ட காரணத்திற்காகத்தான். பிரியாவிற்கு கவியின் மேல் ஏற்பட்டது அவள் செய்த பிழைக்கான வருத்தம்.அதிலும்  உன்னிடம் இத்தகைய செயலை நான் எதிர்பார்க்கவில்லையென்ற ஆதங்கம்.ஆனால் கவியின் சொல்லில் நேரிடையாக காயப்பட்டவன் நிலைமைதான் மிகவும் மோசமானதாக இருந்தது.

அன்பு மாலை 3 மணி வரை முடிந்தவரை பணியில் கவனத்தை திசை திருப்ப முயன்று தோற்றவன் அதற்குமேல் முடியாதென்று மேலாளரிடம் தலைவலியென்று அனுமதி வேண்டி நின்றான். இன்னொரு நாள் இப்படி அனுமதி கேட்டால் அறைநாள் விடுப்பில் சேரும் என எச்சரித்துவிட்டு வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.  

இதுவரை நினைத்துக்கூட பார்த்திரா அளவிற்கு குடித்த அதிகப்படியான மதுவின் விளைவினால் போதையில் அதிக தள்ளாட்டத்துடனும் ஏதேதோ உளறல்களுடனும்   எதிர்படும் சக அப்பார்ட்மென்ட் வாசிகளின் முகச்சுழிப்பை லட்சியம் செய்யும் நிதானமுமின்றி  எப்படியோ நடந்தே வீடு வந்து சேர்ந்தான் அன்பு. இருசக்கர வாகனம் கம்பெனியில் ஒரு நண்பனுக்கு இரவல் வழங்கப்பட்டிருந்தது நல்லதாய் போயிற்று.   தள்ளாட்டதுடனே வாசற்கதவை மூடியவனின் கால்கள்    கதவின் பக்கசுவரிலே சரிந்து விழுந்தன.உடலின் சோர்வு படுக்கையறை வரை செல்லமுடியாதென உணர்த்த விழுந்த இடத்திலேயே முடங்கிக் கொண்டான்.சுவற்றில் தலையை சாய்த்தபடியே கால்களை குறுக்கி விட்டத்தை வெறித்தப்படி  அமர்ந்திருந்தவனின் கண்கள்  கண்ணீரை சுமந்து கொண்டு வலியை மட்டுமே பிரதிபலித்தது .கவி போன்றதொரு அமைதியான பெண்ணின் வாயிலிருந்து இத்தகைய சொல்லை எதிர்பார்த்திருக்கவேயில்லை.மனதில் அவமானத்தையும் தாண்டி ஏதோ தன்மீதே வெறுப்பு மண்டுவதை போல் உணர்ந்தான். 
மாதுவின் வார்த்தைகளில் காயமடைந்தவன் உள்ளக்கிடங்கை கரைக்க இறுதியில் மதுவிடம் தஞ்சமடைந்தான்.நடந்து முடிந்த நிகழ்வுகள்,நேர்ந்துவிட்ட துயரம், ஈடு செய்யமுடியாத இழப்பு,   கருணை கொண்டு அரவைணக்க வேண்டிய உறவுகளின் எள்ளல்கள், கடக்க முடியாமல் தொடரும் அவமானம், ஆத்திரம் என அத்தனையும் நினைவுகளையும் மறக்கத்தான் குடியை நாடினான்.  மருந்து சாப்பிடும் போது குரங்கை நினைக்கூடாது என்றால் குரங்கு மட்டுமே நினைவில் வரும் கதையாய் மனம் ஒரு மீளமுடியா சுழலில் சிக்கியது போல பழைய நினைவுகளிலே இன்னும் தீவிரமாக சுழன்றுக் கொண்டிருந்தது. மனத்திரையில் அவளது முகம் அதனையடுத்து அவனைப் பெற்றத்தாயின் உயிரற்ற உடல். தான் மட்டும் வாழ்வில் அவளை பார்த்திராவிட்டால் அம்மா இன்னும் சில காலம் தன்னோடு வாழ்ந்து கொண்டிருப்பார் என நினைக்கும் போதே வார்த்தைகளால் விளக்கமுடியாத ஒரு குற்றவுணர்ச்சி கிளர்ந்தெழுந்து நெஞ்சம் முழுதும் ஒரு இயலாமை கலந்த அசௌகரியம் படருகிறது.   என்ன தவறு செய்தேன் அல்லது  எந்த இடத்தில் ஏமாற்றப்பட்டேன்…..?

போதையின் இறுக்கம் தளர்ந்தபோது மனம் நிதானமாக   ஒவ்வொரு நிகழ்வையும்  திரையில் விரித்தது.

(அடுத்த எபி பிளாஸ்பேக் )

1 COMMENT

  1. வார்த்தைகள் இல்லா அத்தியாயம் அருமை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here