நீயே என் இதய தேவதை 19

1
1111
Neeye En Idhaya Devathai

என்ன சொன்ன …?

i love u. அன்பு இந்த வார்த்தைகளை திரும்பக் கேட்டதும் அதிர்ச்சியில் அமர்ந்திருந்த நாற்காலியிலிருந்து எழுந்துவிட்டவனுக்கு  பேச வார்த்தையெழாமல் முடிந்த மட்டும் அந்த பெண்ணை முறைக்க அவளோ தலைகவிழ்ந்தாள்.

ச்ச்ச…..என்ன பொண்ணு நீ….வெறுப்பாய் உதிர்ந்தன வாரத்தைகள்.

அன்பு….என தயங்கி அழைக்க

என்னது அன்புவா …? இதுக்கு முன்னாடி என்ன நீ எப்படி கூப்பிடுவ….. ? முகத்தில் வெறுப்பு சற்று கூட குறையவில்லை.

அது….அதுவந்து

கேட்கிறேன்…. ல பதில் சொல்லு கோபத்தின் உச்சியில் கத்தினான்.

சுற்றும் முற்றும் ஒருமுறை பார்த்துக் கொண்டவள் ஷ்ஷ்ஷ்….. எதுக்கு இப்போ கத்துறீங்க….நான் அப்படி என்ன  சொல்லிட்டேன். என அவனை திசை திருப்ப முயல அவனோ விடாக்கண்டனாக நான் கேட்டதுக்கு பதில் வேணும். நேத்து வரை என்னை என்ன சொல்லி கூப்பிட்ட ? என

அண்ணா… னு சொல்லி எனும் போது   அவளது குரல் அவளுக்கே கேட்காத படி கம்மிப்போனது.

ஹான்…. சரியா கேக்கலை இன்னொரு தடவை சொல்லேன். என்று அன்பு நக்கலாக கேட்க இந்த முறை அவளுக்கும் கோபம் வந்தது.

ஆமா நேத்துவரை நான் உங்களை அண்ணானு தான் கூப்பிட்டேன்.அதனால என்ன இப்போ  ?  சாதாரணமாக சொல்ல

அதனால என்னவா …? யாராவது அண்ணனை காதலிக்கிறேன்னு சொல்லுவாங்களா? அப்போ நீ சொன்ன அண்ணன் ன்ற உறவுக்கு என்ன மரியாதை …?

ப்ப்ச்ச்…..இங்க பாருங்க. நான் உங்ககிட்ட  பேசுற விதம்  இங்க இருக்கிற மத்தவங்களுக்கு  எந்த உறுத்தலும் தோன்றக் கூடாதுனுதான் எல்லாரையும் போல அண்ணானு கூப்பிடுறேன்.தவிர  மனதளவில் உங்கள அண்ணனா லாம் நெனச்சு கூட பார்க்க முடியாது.ஏன்… னா நான் உங்களை நேசிக்கிறேன். இன்னைக்கு நேத்து இல்லை.நீங்க இந்த கம்பெனியில சேர்ந்ததுல இருந்தே .என மனதில் இருந்ததையெல்லாம் பட்டென்று சொல்லி விட்டாள்.

ஏய்…..என்று ஆத்திரத்தில் அறையவே சென்றுவிட்டவனை கண்டு நடுங்கிப்போனாள் அவள்.அவளின் பயந்த முகத்தைக் கண்டபின்புதான்  தான் சுற்றுப்புறம்  உரைக்க என்ன காரியம் செய்ய துணிந்துவிட்டாய் என மனசாட்சி கூக்குரலிட  தன்நிலை உணர்ந்து பின்வாங்கியவன் ஆழ மூச்செடுத்து தன்னை சமன்படுத்திக் கொண்டான்.இத்தனைக்கு பிறகும் நின்ற இடத்தினின்று நகராது  அவனை பார்த்தப்படியே நின்றவளது முகம் தெரிவித்தது என்னவோ  எனக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் என்கிற பிடிவாதம் தான்.

எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல்  அந்த முகம் மேலும் எரிச்சலூட்ட இப்போது அவளுடன் வாதம் செய்து கொண்டிருந்தால் மனதின் அமைதி மட்டும் தான் கெடும் என்று உணர்ந்தவனோ  மேற்கொண்டு எதுவும் பேசாமல் வேறிடம் சென்றான்.

அன்று முழுக்க சற்றே குழப்பமான மனநிலையில்தான் வலம்வந்தான். ஒரு முறை மனம்  நீ செய்தது தவறு.அவளை அடிக்க கையுயர்த்தும் அளவு அப்படி என்ன ஆத்திரம் ?யாரோ வீட்டு பெண்ணை கையுயர்த்த உனக்கு என்ன உரிமை இருக்கிறது ? என இடித்துரைக்க அதே மனம் அடுத்த முறை அவள் செய்தது மட்டும் சரியா …? என்றும் கேள்வி கேட்டது. அன்றைக்கு மட்டும் நேரம் மிக மெதுவாய் நகர்கிறதா எனும்படி வீடு திரும்புவதற்காய் காத்திருந்தான்.மன உளைச்சலோ குழப்பமோ எப்போதும் அவன் தஞ்சமடைவது அவனது வீட்டில்தான்.வளரும்வரை  எல்லா நிகழ்வுகளையும் சிவகாமியிடம் ஒப்பித்து தீர்வு கேட்பவன் கொஞ்சம் முதிர்ச்சி வந்தவுடன் முக்கிய நிகழ்வுகளை வீட்டுக்கு வந்து ஒருமுறை உழற்றிப் பார்ப்பான்.அலைந்து திரிந்து வீடு வந்த நிம்மதி என்பது இதுதானே…?

அன்று மாலை அலுவலகம் முடிந்து வீடு வந்தவன் முதலில் கண்டது தங்கை சந்தியாவின் முகம்தான். ஆம் உடல் உபாதைகள் கால் வீக்கம்  சோர்வு காரணமாக ஐந்தாம் மாதமே அம்மா வீட்டிற்கு வந்திருந்தாள்.  அன்பு உள்ளே வர அம்மா அண்ணா வந்துட்டான் அவனுக்கும் சேர்த்து  காபி போடு என்றவள் ஆறரை மாதத்தில் மேடிட்ட வயிற்றுடன்   நிதானமாக எழுந்து சென்று தண்ணீர்  கொண்டு வந்து கொடுத்தாள்.

நானே எடு்த்துக்க மாட்டேனா அம்மு…? நீ உட்காரு முதல்ல….என்று அதட்டினாலும் தண்ணீரை முழுதும் வாயில் சரித்துக் கொண்டான்.அந்த நேரத்தில் தண்ணீர்  மிகவும் தேவையாயிருந்தது.

என்ன அண்ணா இன்னைக்கு ரொம்ப வேலையா …? பார்க்க ரொம்ப சோர்வா தெரியுற …? என்ற இளையவளை உற்று பார்த்து புன்னகைத்தான்.

அவளோ எதுவும் புரியாமல் இப்போ நான் என்ன கேட்டேன் ? ஏன் நீ  சிரிக்கிற..?என வினவ ஒன்னும் இல்லை நான் போய் குளிச்சிட்டு வரேன் என அவனது அறைக்குள் நுழைந்தான். இதுவரையில் துள்ளி திரிந்தபடி இருந்த தங்கை திருமணத்துக்கு பின்பு வெகுவாய் மாறிவிட்டதாய் தோன்றியது.அதற்காகத்தான் அந்த புன்னகை .எப்போதும் துறுதுறுப்பானவள் இன்று இத்தனை அமைதியாய் நம்பவேமுடியவில்லை.இன்று அலுவலகத்தில் தன்னை காதலிப்பதாய் சொன்னவளின் நினைவு உறுத்தியது.அவளது பெயரும் சந்தியா தான்.அதுவே தான் அவனது கோபத்திற்கு காரணம்.அலுவலகத்தில் தனக்கு கீழே பணிபுரியும் பெண்கள் அண்ணா என்றும் வயதில் மூத்த பெண்கள் பெயர் சொல்லியோ அல்லது தம்பி என்றோ தான் அழைப்பர்.உறவுகளுக்கு மரியாதை தருபவன் அந்த அழைப்புகளுக்கு மரியாதை கொடுத்து அவர்களை அக்கா தங்கையாக தான் பாவித்தான்.வேறு யாராகினும் உன்னை நேசக்கிறேன் என்று வந்தால் இந்தளவிற்கு கோபம் வந்திருக்குமா என்றால் தெரியாது. ஆனால்  சந்தியா உன்னிடம் காதல் வயப்பட்டேன் என்பது நினைக்கவே ஆத்திரம் பொங்கிற்று. இயல்பாகவே தங்கை என்றாலே உருகுபவன் அவளது பெயரில் அவளின் குணங்கள் சிலவற்றை கொண்டிருப்பவளை இன்னொரு தங்கையாகத் தான் பார்த்தான்.சில நேரம் தங்கை ஏதாவது தவறு செய்துவிட்டு முழிக்கும் போது  அவளின் காதை திருகியபடியே அம்மாவிடம்  கூறியிருக்கிறான் சந்தியா னு பேரு வைச்சதுங்க எல்லாமே இப்படித்தான் இருக்கும்.அஙகேயும் ஒன்னு இப்படித்தான் நிதானமே இல்லாம துறுதுறுன்னு ஓடிக்கிட்டு  மெட்டீரியல்ஸ நாசம் பண்ணிட்டு இருக்கும்.

ஆம்.அவளது வேலையில் சிறு  தவறுகள் செய்து விட்டு முழிக்கும் போது லேசாக அதட்டி அதை சரி செய்ய சொல்லிக்கொடுத்து விட்டு நகர்வான்அந்த நேரத்தில் தங்கை நினைவு தான் வரும்.இதே மற்ற சூப்பர்வைசர்களாக இருந்தால் ஒன்றிற்கு இரண்டு வேலை வைத்துவிட்ட கடுப்பில் எல்லார் முன்பும் சத்தமாக திட்டி அவமானப் படுத்தி இருப்பார்கள் என்பது உறுதி.ஒருவேளை இந்த செய்கைகள் தான் அவளை காதலிக்க தூண்டியிருக்குமோ என்று நினைத்துப் பார்த்து மேலும் குழம்பினான்.இப்படியாக குழம்பி குழம்பி இறுதியில்   எப்படி இருந்தாலும் அந்த சூழலை அவன்  அநாகரீகமாக கையாண்டிருக்கிறான் என்பது புரிந்தது. அதற்குள் அம்மா காபி சாப்பிட அழைக்க  “பத்து நிமிஷத்துல வரேன் மா…என்றுவிட்டு குளியலறைக்குள் நுழைந்தான்.

அடுத்தநாள் சந்தியாவிடம்  உணவு இடைவெளியின் போது நேற்று கை ஓங்கியதற்காக மன்னிப்பு கேட்டுவிட்டு
எனக்கு உன்மீது காதல் போன்ற எந்த எண்ணமும் இல்லை என்றும் தான் திருமணம் செய்யப் போகும் பெண்ணை வெகுவாய்  நேசிப்பதாகவும் தெளிவாக எடுத்துக் கூறினான்.

அப்போதும் அவள் லேசாய் கண்ணில் துளிர்த்துவிட்ட நீருடன் நான் மட்டும் உங்களை அண்ணானு கூப்பிடலைனா என் காதலை ஏத்திக்கிட்டிருப்பிங்க இல்ல என கேட்க

  அன்புவோ நீ காதலிப்பாய் சொன்னாய்.அதை ஏற்றுக்கொள்ள முடியாதற்கான காரணத்தை சொல்லிவிட்டேன். இத்துடன்  எனது கடமை முடிந்துவிட்டது. இனிமேல் உனக்கு புரிய வைக்க முயற்சித்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.எப்படியோ போ என்பவனாய் கடந்து சென்றுவிட்டான்.அடுத்தடுத்த நாட்களில்  சுத்தமாய் அவளை கண்டு கொள்ளவேயில்லை.

அவனது இன்றைய வேதனைக்கு அவளும் ஒரு காரணம் என்றறியும்  போது அவனது எண்ணம் என்னவாக இருக்கும்?

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here