நீயே என் இதய தேவதை 20

0
819
Neeye En Idhaya Devathai

வசந்த காலம் 20

சூரியன் மேற்குவான மேகங்களைத் தாண்டி மூழ்கி கொண்டிருந்தான்.மாலை 6.30 மணி இருக்கலாம்.பிரபல மருத்துவமனையில் பிரசவ அறைக்கு வெளியே  பதட்டத்தோடு காத்திருந்தனர் அன்புவும் அவனது மைத்துனன் புவனேஸ்வரனும்.எந்நேரமும் குழந்தை பிறந்தவிடலாம் என்கிற நிலையில் சந்தியா வலியில் அலறிக் கொண்டிருக்க வெளியே நின்றிருந்த புவனேஷின் முகத்தில் அத்தனை பயம். மருத்துவமனைக்கே உரிய வாசம் இந்த நேரத்தில் மேலும் தலைவலியை அதிகப்படுத்தியது அன்புவுக்கு.

காலை அலுவலகம் சென்றவன் மதியம் உணவு இடைவேளையில் சாதாரணமாக அம்மாவிற்கு அழைத்தான். முந்தைய முறை செக்கப்பின் போது சந்தியா கொஞ்சம் பலவீனமாக இருந்ததால்  நேரத்திற்கு ஒழுங்காக சாப்பிடுவதில்லையா …? போலிக் அமில மாத்திரை எடுத்துக் கொள்வதில்லையா ? என்று மருத்துவர் குடும்பத்தையே விளாசி எடுத்திருந்தார்.அன்றைய நாளிலிருந்து அலுவலகம் சென்றாலும் அடிக்கடி அம்மாவுக்கு அழைத்து தங்கையை பற்றி விசாரிப்பான்.அப்படித்தான் அழைத்தது.

ஹலோம்மா…..

ஹான்….ஹலோ அன்பு..கண்ணா

அம்மாவின் குரலில் இருந்த வித்தியாசத்தை உணர்ந்த அன்பு சொல்லும்மா ஏன் பதட்டமா இருக்க…?

சந்தியாவிற்கு வலி வந்திடுச்சி.

அச்சோ நான்  இப்பவே வரேன் மா …>

முழுசா பேச விடுடா.நான் ,abc ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு வந்துட்டேன்.  மாப்பிள்ளைக்கு தகவல் சொல்லிட்டேன்.அவரும் இங்கதான் இருக்கிறாரு. இப்போதைக்கு ஒன்னும் பிரச்சனையில்லை.நீ சாயங்காலம் ஆபிஸ் முடிச்சிட்டு நேரா இங்க வந்திடு.சரியா…?

வச்சிடுறேன்… டா. டாக்டர் கூப்பிடுறாங்க எனறு துண்டித்துவிட்டார்.ஏதும் பிரச்சனையில்லை மாலை வந்தால் போதும் என்று தெளிவாக சொன்னாலும்  அன்புவுக்கோ அங்கே நிலை கொள்ளவில்லை.வேலையில் சற்றும் கவனம் செலுத்த முடியவில்லை.மேலாளரிடம் அரைநாள் விடுப்பு சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான்.அங்கே சென்று பார்த்தால் தான் தெரிகிறது சந்தியாவின் நிலையை விட புவனேஷின் நிலைதான் மோசமாக இருப்பது போலத் தோன்றியது. இடைவேளி விட்டு விட்டு வலியெடுக்கும் போதெல்லாம் அவள் சிரமப்படுவதை பார்த்தவன்  எப்போது குழந்தை பிறக்கும் ….? அவ ரொம்பவே அழுகுறா ஏதாவது செய்யுங்க ? என்று மருத்துவரை வாட்டி எடுத்துக் கொண்டிருந்தான்.சிவகாமியோ மகளிற்கு தைரியம் சொல்வதா …? இல்லை மருமகனை சமாளிப்பதா என புரியாமல் திண்டாடி கொண்டிருந்தார். பிரசவத்திற்காக மருத்துவர் கொடுத்த தேதிக்கு இரண்டு வாரங்கள் முன்பாகவே வலி வந்துவிட சிவகாமிக்கும் பயம் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.

இவன் சென்ற நேரம் புவனேஷ் செய்த அலப்பறையினால்  கோபமான மருத்துவர் ஒருவர் என்ன சார் உங்க பிரச்சனை …? எதுக்கு சத்தம் போட்றீங்க …?  மத்த  பேஷண்ட்ஸ்க்கு எல்லாம்  டிஸ்டர்ப் ஆவாங்க னு தெரியாதா …? இது ஹாஸ்பிட்டலா இல்ல வேற ஏதாச்சுமானு தெரியலை …? என திருப்பி கத்த கோபமான புவனேஷ் சண்டைக்கு செல்ல எத்தனிக்க அங்கிருந்தோர் எல்லார் கவனமும் இவர்கள் மீது குவிந்தது.புவனேஷை அடக்கிவிட்டு டாக்டரை சமாதானம் செய்து அனுப்பி வைப்பதற்குள் போதும் போதுமென்றாகியது அன்புவுக்கு.

வயதில் பெரியவர் மற்றும் நிச்சயமாக மரியாதை கொடுத்தே ஆக வேண்டிய உறவு முறை என்பதால் புவனேஷின் சிறுபிள்ளை போன்ற செயல்களை ரொம்பவும் கடிந்து கொள்ள முடியவில்லை. அவனை அமைதிப்படுத்தி அங்கிருக்கும் இருக்கையில் அமரவைத்து விட்டு
உள்ளே சென்று சந்தியாவை பாரக்க பெரும் வலியுடன் கூடிய சோர்ந்த சந்தியாவின் முகம்  அவனுக்கும் பரிதாபமாக இருந்தது . “தைரியமா இருடா ஒன்னும் ஆகாது” என்று சில வார்த்தைகள் ஆதரவாக பேசியவன் அவன் அம்மாவை தனியே அழைத்தான்.”என்னம்மா… நடக்குது இங்க. இவர் ஏன் இப்படி நடந்துக்குறாரு. சந்தியாவே பயந்துபோய் இருக்கா.இந்த நேரத்துல தைரியம் சொல்றமாதிரி பேசுவீங்களா இல்ல அவளை இன்னும் பயமுறுத்துவீங்களா. வயசுக்கேத்த அறிவு வேணாம்.டாக்டர போட்டு டார்ச்சர் பண்ணிட்டு இருக்காரு.” என்று கண்களால் புவனேஷை சுட்டிக்காட்டி அடிக்குரலில் சீறிக்கொண்டிருந்தான்.

எனக்கும் அதான்…டா தெரியலை…ஏன் இப்படி குழந்தை மாதிரி நடந்திக்குறாருனு.
பயப்படுறாரு போல

இந்த நேரத்துல தான் அவங்க அம்மா அப்பா ஊர்ப்பயணம் போகனுமா …?

அவங்களே ஏண்டா திட்டுற..குழந்தை நல்லபடியா பிறக்கணும்னு தானே கோவில் கோவிலா சுத்திட்டிருக்காங்க…அதுதவிர அவங்களும் இவ்வளவு சீக்கிரம் இவளுக்கு வலி வரும்னு எதிர்ப்பார்த்திருக்க மாட்டாங்க..டா

என்னவோ…போ

அவர்கள் இருந்திருந்தால் இவனை கண்டித்து இருப்பார்களே என்ற கோபம் அந்த நேரத்தில் அப்படி பேச செய்தது. சிவகாமியின் முகமும் கவலை படிந்து காணப்பட்டது.பாவம் மேலும் அவரிடம் கோபத்தை கொட்டி கவிழ்ப்பதால் எந்த பயனும் இல்லை என்று உணர்ந்தவன் மருத்துவரின் அறைக் கதவை தட்டினான்.

எக்ஸ்கியூஸ் மீ மேம்….

எஸ் கம் இன்….

மேம்…நான் என்று ஆரம்பித்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு சந்தியாவின்
நிலை குறித்து கேட்டான்.

எத்தனை முறை சார் சொல்றது ….அவங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. டெலிவரி அப்போ பெயின் இருக்கத்தான் செய்யும்.விட்டு விட்டுத்தான் வலி எடுக்குது தொடர்ந்து வலி வரட்டும் கொஞ்ச நேரத்துல குழந்தை பிறந்திடு்ம் என்று சாதாரணமாக சொன்னார்.பின்னே இவர்களுக்கு வேண்டுமானால் சந்தியாவின் தற்போதைய அவஸ்தை பயமாக இருக்கலாம். மகப்பேறு மருத்துவர்களுக்கு அது தினமும் சந்திக்க கூடிய ஒன்றுதானே.அதுவும் சந்தியாவுக்கு குழந்தை பிறப்பில் எந்த பிரச்சனையுமில்லை.புவனேஷ் செய்வது எல்லாம் ஓவர் ரியாக்ட் போல் தோன்றிற்று அவர்களுக்கு.

மருத்துவரிடம் நன்றி கூறிவிட்டு புவனேஷ் சார்பில் மன்னிப்பு கேட்டுவிட்டு அம்மாவிடம் வந்தான்.சிவகாமி என்னடா… டாக்டர் என்ன சொல்றாங்க என பதற ஹான்….உன் மருமகன்வாய வச்சிட்டு சும்மா இருந்தா எந்த பிரச்சனையில்லைனு சொல்றாங்க எனக் கூற அவனது பேச்சில் கோபத்தை உணர்ந்த சிவகாமியோ அதற்கு மேல் பேசவில்லை.
சிறிது நேரம் கழித்து அதே டாக்டர் சந்தியாவை இன்னொரு முறை பரிசோதித்து விட்டு கொஞ்ச நேரம் நடக்கலாமே…..மா எனப் பேசி முடிப்பதற்குள்
அவளே வலியில கஷ்டப் படுறா இந்த நேரத்துல போய் நடக்க சொல்றீங்க? எப்படி முடியும் அவளால என்று இடைமறித்து பேச

மருத்துவர் நெற்றிப்பொட்டில் கையை வைத்து அழுத்திக்கொண்டவர் நார்மல் டெலிவரி… னா பெயின் இருக்கத்தான் செய்யும் சார்.எல்லா பொண்ணுங்களும் அனுபவிச்சிதான் ஆகணும் என நிதானமாக கூற

வலிக்கும்னா  நார்மல் டெலிவரி வேண்டாம்.சிசிரியேன் பண்ணுங்க என டாக்டருக்கு கோபமேறியது.அதே நேரம் இவரிடம் எப்படி எடுத்து சொல்வதென புரியாமல் தவித்தார்.சந்தியாவோ கணவனிடம் ஏதோ சொல்ல வர நீ எதுவும் சொல்ல வேணாம் சந்தியா சிசிரியன் பண்ணிக்கலாம்.நீ கஷ்டப்படுறதை என்னால பார்க்க முடியலை என கம்மிய குரலில் சொல்ல சந்தியாவோ கணவனை எப்படி சமாளிப்பதென புரியாமல் திணறினாள்.

அறைக்குளிருந்து வெளியே வந்த டாக்டர் அன்புவை அழைத்து அவங்க ஹஸ்பெண்ட சிசேரியன் பண்ண சொல்றாங்க.நான் என்ன பண்ணட்டும் எனக் கேட்க
சிவகாமியோ என்னடா இது சோதனை…? என்று அன்புவை பார்த்து எததனையோ பெண்கள் ஆபரேஷனுக்கு பயந்து  சுகப்பிரசவம் ஆக வேண்டும்  என்று பிரார்த்தனை செய்து கொண்டிருக்க
இவன் என்றால் எத்தனை எளிதாக மனைவி வயிற்றில் கத்தி வைக்க சொல்கிறான்.முருகா…..

இதற்கு மேல் அமைதியாய் இருந்தால் ஒன்றும் வேலைக்காகாது என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டு மருத்துவரிடம் சிசேரியன் லாம் வேணாம் டாக்டர் நான் அவரை பார்த்துக்கிறேன்.இனி அவர் உங்களை தொந்தரவு பண்ண மாட்டாரு. நீங்க உங்க வேலையை பாருங்க.
என்றுவிட்டு சந்தியாவை அழைக்க அவளது பின்னே அவளது கணவனும் வந்தான்.
டாக்டர் சொல்லும் படி கேட்டு செய் என ஆரம்பிக்க அதுலாம் வேணாம் நான்தான் சொல்றேன்ல ஆபரேஷன் பண்ணிக்கோ என முடிப்பதற்குள் அன்புவின் கை புவனேஷின் கன்னத்தில் பலமாக பதிந்தது.

டேய் ….என சிவகாமியும் அண்ணா… என சந்தியாவும் ஒரே நேரத்தில் அதிர
அவர்களிருவரையும் ஒரே  முறைப்பில் அடக்கியவன் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளாமல் கன்னத்தை பிடித்தபடியிருந்த புவனேஷை வாங்க….என கூட்டி போய் சற்று தள்ளியிருந்த இருக்கையில் அமர வைத்துவிட்டு தானும் அருகில் அமர்ந்துகொண்டான்.இனி என்ன செய்கிறாயென்று பார்க்கிறேன் எனும் தோரணையில் .அதன் பிறகு புவனேஷ் எதுவும் பேசவில்லை.சந்தியா டாக்டர் சொல்வதை கேட்டு முழுமையாக ஒத்துழைத்தாள்.

இப்படி ஒரு கலவரத்துக்கு பிறகு இரவு 8.30 மணியளவில் பூமிக்கு வந்தது அந்த தேவதை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here