நீயே என் இதய தேவதை _ 27_ பாரதி

1
798
Neeye En Idhaya Devathai
Neeye En Idhaya Devathai

மிகவும் சிரமப்பட்டு கண்விழித்தவனின் தலை நிலையில்லாமல் சுழல்வது போலிருந்தது.அலுவலகம் செல்ல வேண்டும் என்ற எண்ணமே வராமல் அப்படியே கிடந்தவன் சிறிது நேரத்தில் நிதானமாக எழுந்து குளியலறைக்குச் சென்றான்.

இங்கிருக்கும் வெறுமையில் உழல்வதை விட அலுவலகம் எத்தனையோ மேல்.தவிர நேற்று விடுப்பு சொன்னவுடன் மறுப்பேதும் சொல்லாமல் அனுமதித்த மேலாளருக்கும் அலுவலகத்துக்கும் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டுமல்லவா? காய்ச்சலில் கூட முழுநேர வேலை பார்த்திக்கிறான்.இது வெறும் தலைவலி தானே என்று கிளம்பிவிட்டான்.


உணவை சமைத்து சாப்பிடுவதற்கான நேரம் இல்லை ஆகையால் கேண்டீனில் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று நடந்தே அலுவலகம் வரை வந்துவிட்டான்.கேண்டீனில் அமர்ந்தால் இரண்டு வேளை உண்ணாதது,இரவு நேர தூக்கமின்மை, இன்னும் தெளியாதிருந்த முந்தைய நாள் போதை, எல்லாம் சேர்ந்து இப்போது உணவு உண்டால் வாந்தி வரும் போல உணர்ந்தான்.


தலையில் வலி வின்வின்னென்று தெறிக்க தேநீரை மட்டும் வாங்கி பருகியவனுக்கு சற்று இதமாக இருந்தது.


நேரமாகிவிட்டதை உணர்ந்து அவசர அவரசமாக மாடியேறி தனது இடத்தில் வந்து அமர்ந்தவனைப் பார்த்து அவனது மேலாளர் இடக்காக கேட்டார்.


என்ன அன்பு சார் ஆபிஸ் இருக்க இடமே மறந்து போச்சா? ஆனாலும் பரவாயில்லை ரொம்ப சீக்கிரமே தேடிக் கண்டுபிடிச்சி வந்திட்டிங்க? இது இவருக்கு வழக்கம்தான்.அடுத்தவரை கேலி பேசுவது இவருக்கு கை வந்த கலை.


அன்புவோ சாரி சார்.கொஞ்சம் லேட் ஆகிடுச்சு என்றடோடு நிறுத்திக் கொண்டது.


அவனது குரலில் பணிவு இல்லை கேள்வி கேட்டாய்  நான் பதில் சொல்லிவிட்டேன் என்பதாய் இருந்தது அவனது பதில்.


அவனது மாற்றத்தை உணர்ந்த மேலாளர் அவனை நன்றாக பார்க்க அவனது கண்கள் வழக்கத்திற்கு மாறாய் சிவந்திருந்ததை குறிப்பெடுத்துக் கொண்டார்.இதை முன்பே கவனித்திருந்தால் அவனை கேள்வியே கேட்டிருக்க மாட்டார்.அவரது அனுபவம் அப்படி.எதிரில் இருப்பவன் மனநிலையை கூட எடை போட முடியும் அவரால்.யாரை எந்த நேரத்தில் தட்டிக் கொடுக்க வேண்டும் எந்த நேரத்தில் தடுக்கி விழ வைக்க வேண்டும் என்று நன்றாக அறிந்தவர்.


இப்போதைக்கு இவர் அன்புவை முறைத்துக் கொண்டால் ஒன்று எப்படியோ போ என்று வீட்டிற்கு சென்றுவிடுவான். அவனது வேலையைப் பார்க்க வேறு ஆள் இல்லை.அல்லது நீயா நானா பாரக்கலாம் என்று சண்டை துவங்கும்.இடையில்  எதாவது அசிங்கமாய் பேசி விட்டால் அல்லது அடித்து விட்டால் சிறு பையனிடம் அவமானப்பட விரும்பவில்லை. இரண்டில் எது நடந்தாலும் இப்போது நட்டம் அவருக்குதான்.


அதுவுமில்லாது கான்ட்ராக்ட்டில் பணிபுரியும் தொழிலாளர்களிடம் எதிர்த்து பேசினால் வேலை பறிபோய்விடும் என்று மிரட்டுகிற பம்மாத்தும் நிரந்தரமாய் பணியிலமர்த்தப்பட்ட இவனிடம் செல்லுபடியாகாது.
எனவே “சரி நீ போய்  வேலையைப் பாருப்பா ” என்று தன்மையாக பேசுவிட்டு கணினியை வெறித்தார்.


கடை இதழில் தோன்றிய குறுநகையை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டான்.அவர் மட்டும்தான் எதிரில் இருப்பவனின் மனநிலையை கணிப்பாரா என்ன ?இத்தனை காலம் இவரோடு பணிபுரிந்ததில் இவர் எந்த நேரம் கெஞ்சுவார்.எந்த நேரம் மிஞ்சுவார் என அத்தனையும் துல்லியமாக தெரியும் அவனுக்கு.இன்றைக்கு சூப்பர்வைசர் வினோத்தும் வரவில்லை.அவரது வேலையும் சேர்ந்து பார்க்க இப்போது அன்புவை தவிர அங்கு யாருமில்லை.அதனால் அடங்கி போகிறார் என புரிந்து கொண்டான்.


இதைப் போன்றே அவளது மனதையும் தெரிந்து கொள்ள முடிந்திருந்தால்….ப்ப்ச்ச் மறுபடியும் தறிகெட்டு ஓடத் துவங்கிய மனதை கட்டுக்குள் கொண்டு வந்து வேலையில் கவனத்தை செலுத்தான்.இன்றைக்கு டெலிவரி செய்யப்பட வேண்டிய பொருட்களின் அட்டவணையைத் தயாரித்தவன்.,இறுதி நிலையில் இருந்த பொருட்களை மீண்டும் ஒரு முறை பரிசோதிக்க சென்றான்.


அங்கிருந்து கவி இருந்த இடத்தைப் பார்க்க அவள் எப்போதும் போல மும்முரமாக அவளது எதிரில் இருந்த இயந்திரத்தில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.இந்த வேலை முடிந்த பிறகு அங்குதான் செல்ல வேண்டும்.அவளை கவனிக்க பயமாய் இருந்தது.ஒன்று அழுது வைத்து குற்றவுணர்வை ஏற்படுத்துகிறாள்.இல்லையென்றால் அழ வைக்கிறாள்.எதானால இயல்பாய் இருக்க முடியவில்லை அவளிடம் என்று மனம் சிந்திக்க கைகள் அதன் போக்கில் வேலையை செய்து முடிந்தது.இறுதி நிலையில் ரிஜெக்ட் செய்யப்பட்ட பொருட்களை மறுவேலைக்காக கொடுத்து விட்டு பிரியாவிடம் வந்தான்.


அவள் வேலையில் நேர்த்தியாக இருப்பாள் .எப்போதும் போல எந்த தவறும் இல்லை.அடுத்ததாக கவியிடம் நகர அவனிடம் மன்னிப்பு கேட்க நினைத்து நிமிரந்த பிரியா அவனது சிவந்திருந்த கண்களையும் கலைந்த தோற்றத்தையும் பார்த்தவள் என்ன நினைத்தாளோ எதுவும் பேசாமல் பின்வாங்கினாள்.


கவி வேலை செய்யும்போது நின்று கவனித்தான்.ஏற்கனவே வேண்டிய அளவு பட்டுவிட்டாதாலோ அல்லதுபிரியாவுடன் பேசாமல் இருந்ததாலோ இன்று அவள் வேலையில் எந்த தவறும் செய்யவில்லை.கம்பெனி வரும் வரையிலும் வழி நெடுக அன்புவிடம் மன்னிப்பு கேட்க நினைத்துக் கொண்டே வந்தவள் அன்பு அருகில் வந்தும் அவனை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை.காரணம் பயம்.அவ்வளவுதான்.நிமிர்ந்து பார்த்திருந்தால் பிரியாவை விட அதீத குற்றவுணர்ச்சிக்கு ஆளாகியிருப்பாள்.


இரண்டு மணிநேரம் முடிந்தது.வேறு பிரிவில் வேலைப் பார்க்கும் தொழிலாளர்கள்  இரண்டு பெண் தொழிலாளர்கள் அன்புவிடம் வந்து நின்றனர்.
கவி வரப் போகும் துன்பம் எதையும் அறியாது வேலையில் முனைப்பாயிருந்தாள்.
                                   தொடரும்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here