நீயே என் இதய தேவதை_ 29_பாரதி

0
607
Neeye En Idhaya Devathai
Neeye En Idhaya Devathai

ஏதோ முதல் முதலில் சுற்றுலா செல்லப்போகும் பள்ளிக் குழந்தை போல உற்சாகமாக அந்த இடத்திற்கு சென்ற கவிதாவிற்கு பின்னர்தான் தெரிந்தது.அன்பு தன்னை ஏன் டிரிம்மிங் செக்ஷன் அனுப்ப மறுத்தான் என்று.

அங்கு சென்றவுடன் ட்ரைனிங் என்ற பெயரில் ஒரு கூர்மையான சிறுகத்தி ஒன்றையும் உருளை வடிவிலான நெகழியால் செய்யப்பட்ட பொருள் ஒன்றையும் கொடுத்தார்கள்.கத்தியை பயன்படுத்தி அந்த நெகிழியில் ஆங்காங்கே இருக்கும் பிசிறுகளை அரிந்தெடுத்து சீராக்க வேண்டும்.பார்ப்பதற்கு மிக எளிதாக தோன்றும்.ஆனால் அத்தனை சுலபமில்லை.கொஞ்சம் பிசகினால் கத்தி ஆழமாக சதையை கிழித்துவிடும்.சில சமயம் அதில் சீனியர்களே பலமுறை காயம் வாங்கியிருக்கிறார்கள்.


பிரியாவிற்கு ஏற்கனவே அதில் அனுபவம் இருந்தாலும் கத்திப் பிடித்து வெகுநாட்கள் ஆகியிருந்ததால் நிதானமாக ஆரம்பித்தவள்.கொஞ்சம் லாவகம் கைகூடி வந்தபிறகு வேலையில் வேகத்தை அதிகப்படுத்திக்கொண்டு  சீனியர்களின் ஏச்சு பேச்சுகளிடமிருந்து தப்பித்தாள்.


ஆனால்  அன்பு சொன்னவாறு சுலபமான வேலையிலே சற்று தடுமாறும் கவியோ மிக மோசமாக வசையாடப் பட்டாள். இதுதான் சாக்கென்று  நமக்கொரு அடிமை சிக்கிட்டான்…டா என்ற ரேஞ்சுக்கு நடத்தப்பட்டாள்.


ஏய்… எத்தனை முறை சொல்லிக்கொடுக்கிறது உனக்கு ? வேலைக்கு தான வந்த? இல்ல வேற எதுக்காச்சும்…..என்ற விமலாவை இடைமறித்த பிரியா அவ வேலைக்கு புதுசு….. இதுலாம் அவளுக்கு தெரியாது என்று தன்னை மீறியும் தோழி்க்கு ஆதரவாய் பேச 
நல்லா திங்கத் தெரியுமா….? என்று ஏளனமாய் கேட்க ஏதோ பெரிய ஹாஸ்யம் போல எல்லோருக்கும் சிரிக்க கவிக்கு மிகவும் அவமானமாகிப் போனது.

என்ன முயன்றும் அவளால் அந்த வேலையை செய்ய முடியவில்லை.பொறுத்து பொறுத்து பார்த்தவர்கள் நீ இதுக்கு சரிப்பட மாட்ட? வா என்றழைத்துக் கொண்டு மெட்டீரியல் ட்ரேவை தூக்கி வரச் சொன்னார்கள்.


நீளமான செவ்வக வடிவிலான டரேக்கள் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கபட்டிருக்க அதனை எடுத்துக் கொண்டு போய் அதில் மெட்டீரியலை நிரப்பிக் கொண்டு வந்து தர வேண்டும்.அதுவும் அங்கிருக்கும் அத்தனை பேரின் டேபிள்களுக்கும் இவள் ஒருத்தியே செய்ய வேண்டும். மொத்தம் 24 டேபிள்களுக்கும்  எடுத்து போய் கொடுத்துவிட்டு நின்றால் முதல் டேபிளிலிருந்து மெட்டிரீயல் காலி என்று சத்தம் வரும்.மீண்டும் ஓட வேண்டும். 

இந்த வேலைகளை பெரும்பாலும் ஆண்கள் தான் செய்வார்கள்.ஆனால் இது தெரிந்தாலும் கவியால் மறுத்து பேச முடியுமா என்ன? 


நெகிழியாக இருந்தாலும் எல்லாம் எடை மிக்கவை.சக்கையாக ஒருவரை கசக்கிப் பிழிவது என்பதை கேள்விப்பட்டிருப்பாள்.ஆனால் முதல்முதலில் அதை இப்போதுதான் அனுபவிக்கிறாள்.


சிறிது நேரம் ஓய்வுக்காக நின்றாலும் கூட மோசமான வார்த்தைகளால் திட்டினாள் விமலா.ரெஸ்ட் ரூம் செல்லக் கூட அனுமதியில்லை.பிரியா ஏன் அன்பரசனை கொண்டாடுகிறாள் என்பது இன்றைக்குத்தான் கவிக்கு புரிந்தது.இவர்களை ஒப்பிடும் போது அவனுக்கு கோவிலே கட்டலாம் என்றெல்லாம் சிந்தை தோன்ற யுகமொன்று கழிந்தது போல  அந்த ஒரு நாள் ஷிப்ட் முடிந்தது.மனதளவிலும் உடலளவிலும் மிகவும் சோர்ந்து போயிருந்தாள் கவி.

வேலைக்கு சேர்ந்த முதல் நாளை விட இந்த நாள் மிக அயர்ச்சியாய் இருந்தது.அப்படியும் ஷிப்ட் முடிந்தவுடன் நேராக கீழே செல்லாமல் அன்பு இருக்குமிடம் வந்தாள்.


கவிதா தன்னை நோக்கி வருவதை  அன்பு கவனித்தாலும் எதுவானாலும் அவளே பேசட்டும் என்று அமைதியாய் அவன் வேலைச் செய்து கொண்டிருந்தான். தயங்கி தயங்கி “சார்” என்றழைத்தாள்?


என்ன? சொல்லுங்க ?


அது வந்து…..”நான் உங்கள  பத்தி அப்படி பேசுனது தப்புத்தான்.மன்னிச்சிடுங்க”என்று ஒரு வழியாக சொல்லிவிட்டவள்நிஜமாகவே தன் தவறை முழுதும் உணர்ந்திருந்தாள்.


அவள் கேட்ட மன்னிப்பை விட அதிகம் கவனிக்க வைத்தது கவியின் தற்போதைய தோற்றம். அவளது களைத்த தோற்றமும், லேசாக கலங்கிய விழிகளும் சொல்லாமல் சொல்லியது.டிரிம்மிங் செக்ஷனில் என்ன நடந்திருக்கும் என்பதை.மேடம் பட்டுத்தான் திருந்துவீங்க போல என கிண்டல் செய்தான்.


ஆக கவிக்கு புரிந்தது.டிரிம்மிங் செக்ஷன் க்கு அவன் தன்னை அனுப்ப மறுத்தப் போது கவி அவன் மீது கோவப் பட்டதையும் கண்டுகொண்டிருக்கிறான்.சிசிவிடி கேமிராக்களே இந்த லைனுக்கு தேவைப்படாது போல என்று உள்ளூர நினைத்துக்கொண்டவளின் “எமகாதகன் ” என்று முனுமுனுத்துக் கொண்டது.


இதையும் அன்பு கவனிக்க தவறவில்லை.நியாயத்திற்கு இதற்கும் மனதில் கோபம் மூண்டெழுந்திருக்க வேண்டும்.ஆனால் அதற்கு மாறாக அவள் சொன்னது ஒரு வகையில் தன்னை பாரட்டியது போல தோன்ற உதடுகளில் ஒரு புன்னகை பரவியது.அதை அவள் கண்டுகொள்ளாமல் அடக்க மிகவும் சிரமப்பட்டான்.


சரி என்ன வீட்டுக்கு கிளம்புறதா இல்லையா? ஓவர்டைம் எல்லாம் நாங்களா சொல்லும் போது பாத்தா போதும்.இல்லை விமலா அக்காகிட்ட வேலை எதாச்சும் இருக்கா கேக்கவா என மலர்ந்து சிரிக்க 


கவிக்கு விமலா அக்கா என்றவுடனே ஷாக் அடித்தது போலானது. அவன் விளையாட்டுக்குத்தான் அவ்வாறு சொன்னான் என்பதை உணராமல்  சார் சார் வேணாம் சார் என கெஞ்ச ஆரம்பிக்க அவனுக்கு பாவமாய் இருந்தது.


கூல்.சும்மா விளையாட்டுக்குத்தான் சொன்னேன். நீ கெளம்பலையா ?


கேட்ட மன்னிப்புக்கு எந்த ஒரு பதிலும் சொல்லவில்லையே என்று அவள் அங்கேயே நிற்க


சார்


சொல்லு 


இப்போலாம் ப்ரியா என்கிட்ட பேசுறது இல்லை.அன்னைக்கு நான் உங்கள அப்படி பேசுனதுக்காக என்கிட்ட பேச மாட்றா என


ஓஓஓ….அப்படியா? இந்த விஷயம் எந்த நியூஸ் சேனல்லயும் வரலையா அதான் எனக்கு தெரியல ? சரி இப்போ என்ன பண்ணனும்?என மறுபடி கேலியில் இறங்க

கவிக்கு வேணா …வலிக்குது அழுதுருவன் நிலைமைதான்.அவளது முகமாற்றத்தில் விளையாட்டை கைவிட்டவன் இப்போ என்ன உனக்கு? பிரியா முன்னாடி உன்கிட்ட பேசணும் அவ்ளோதான ? நான் பாத்துக்கிறன்.


சார் 


மறுபடியும் என்ன ? சலித்துக் கொண்டான்.


சாரி…. சார்.
ஐய்யோ அதை நான் மறந்துட்டன்.சீக்கிரம் போ.வேன் மிஸ் பண்ணிட போற என்று விரட்டினான்.விடைபெற்று விரைந்தவளை ஏதோ ஓர் நிம்மதி தழுவியது போலிருந்தது.

அன்பு ஒரு உற்சாகத்தோடு அடுத்த ஷிப்ட்க்கான வேலையாட்களை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தான்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here