நீயே என் இதய தேவதை_ 43_பாரதி

0
563

குண்சீலன்- கலைவாணி தம்பதியருக்கு இரண்டாவது மகவாக பிறந்தவள் கவிதா. மூத்த அண்ணன் ஜுவா.அவள் தந்தை குணசீலன் பெயரில் மட்டுமே குணம் கொண்டவர்.குடிக்கு அடிமையானவர்.அங்கிருந்த தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து வந்தவர் அந்த சொற்ப சம்பளத்திலும் பாதி குடிக்காக செலவு செய்துவிடுவார்.இந்த நிலையில் தான் கவிக்கு மூன்று வயதாகும் போது அவளது தங்கை சத்யா பிறக்கும் போது பிரசவம் சிக்கலாகி கலைவாணி இறந்தார்.

கைக்குழந்தையை குணசீலனை நம்பி விட்டு வைக்க மனம் இல்லாமல் கலைவாணியின் தங்கை மதுரவாணி சத்யாவை கொஞ்ச காலம் தான் வளர்ப்பதாய் கூறி தன்னுடன் எடுத்துச் சென்றார்.

எளிமையான வாழ்வானாலும் சத்யா சித்தியின் அரவணைப்பில் சுகமாக வாழ்ந்தாள்.

கவியும் வாழ்வும் அவளது அண்ணன் ஜீவாவின் வாழ்வும் கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும் கொடிது இளமையில் வறுமை என்ற வரிகளுக்கு சாட்சியாகத் தான் அமைந்தது.ஏற்கனவே குடிகாரரான தந்தை இப்போது இரவு பகல் பாராது குடிக்க ஆரம்பித்தார்.மனைவி இறந்த சோகம் என்னும் சாக்கு வேறு.குடிகாரர்களுக்கு காரணமா கிடைக்காது.ஜூவாவும், கவியும் சிறுவயதிலேயே தங்கள் வேலைகளை தாங்களே பார்த்து செய்து கொள்ளத் தொடங்கினர்.வெறு வழியில்லையே.
குணசீலன் எப்போதாவது கொண்டு வந்து காசை சிக்கனமாக பயன்படுத்தி தங்களது தங்களது பசிக்கான உணவையும் தேவையையும் நிறைவேற்றிக் கொண்டனர்.

கவியும் ஜூவாவும் மதிய உணவிற்காக தினம்  பள்ளி சென்றார்கள்  என்றால் மறுக்க முடியாது.அன்றைய காலத்தில் அவர்களுக்கு பசுமையான நினைவுகள் என்றால் மதுரவாணி சித்தி வீடுதான்.கொடை விடுமுறைக்கு வந்து இவர்களை கூட்டிச் செல்லும் அவள் தன்னால் முடிந்தளவு அன்பை பொழிவாள்.அந்த ஒரு மாதம் வரை அவர்களின் வயிறு வாடாமல் பார்த்துக் கொள்வாள்.எப்பாடு பட்டாவது ஒரு புதுத்துணி மற்றும் அடுத்த பள்ளி நாட்களுக்கு இவர்களுக்கு தேவைப்படும் நோட்டுகளை வாங்கி கொடுத்து அனுப்புவாள்.

10 வது வரை சத்யாவை படிக்க வைத்துவிட்டாள்.அதன் பின்னர் தன் பிள்ளைகளுக்கான செலவும அதிகரிக்க தான் சத்யாவை அரை மனதுடன் அவள் தந்தையுடன் அனுப்பி வைத்தார்.

இந்த நிலையில் கவிதா +2 முடிக்க அவர்கள் இனத்திலேயை அவளை நிறைய இடத்தில் பெண் கேட்க ஆரம்பித்தனர். குணசீலனைப் பொறுத்தவரையில் கவிதாவை கட்டிக் கொடுத்து புகுந்த வீட்டிற்கு துரத்திவிட்டால் ஒரு கடமை முடியும் வாழ்வில் பெரும்பாரம் குறையும் தான்.
ஆனால் அவர்கள் கேட்கிற குபைந்தபட்ச சீர் கூட செய்ய அவரிடம் காசு இல்லை.
என்ன செய்யலாம் என்று யோசனையில் இருக்கும் போது அவரது தூரத்து சொந்தமான அக்கா அவர்களின் மகனான ராகவனுக்கு கவிதாவை பெண் கேட்டார்.வரதட்சணை சீர் என்று எதுவும் செய்ய வேண்டாமென்று விட மேலும் பெண்ணுக்கு பரிசம் போட்டு கல்யாணம் செய்து கொள்வதாய் சொல்ல குணசீலனுக்கு ஜாக்பாட் அடித்தாற் போலிருந்தது.

காசு செலவில்லை  என்பதில் மகிழ்ந்து போன அவருக்கு பையன் என்ன வேலை பாக்கிறான்? அவன் எப்படிப்பட்டவன் என்பதையெல்லாம் தெரிந்து கொள்ள தோன்றவேயில்லை.தெரிந்தாலும் பொருட்படுத்தும் நிலையில் இல்லை.

மதுரவாணியை எதிர்ப்பையும் மீறி கவிதாவிற்கு திருமணம் செய்து வைத்தவர் அன்றுடன் தனது கடமை முடிந்ததாய் எண்ணிக் கொண்டு வீடு சேர்ந்தார்.அதன் பிறகான மகளது வாழ்வு அவரது சிந்தையிலே இல்லை.

கவிக்கு 17 வயது திருமணம் என்றால் முழுமையாக என்னவென்றே தெரியாத சிறுபெண்.தந்தையை எதிர்த்து போச தோன்றாமல் ராகவனை மணந்து கொண்டாள்.ஆனால் அங்கு சென்ற பின்னர் தான் தெரிந்தது தான் வாணலிக்கு தப்பி அடுப்பில் விழுந்திருக்கோம் என்பது.
மூன்று அக்காள்க்களுக்கு பிறந்த ஒரே ஆண்மகனான ராகவனை கடைக்குட்டி என்று அவனது குடும்பத்தினர் அதீதமான செல்லத்தில் குளிப்பாட்ட அதுவே அவன் சிறு வயதிலேயே தவறான வழிக்குச் செல்ல வழிவகுத்தது.பள்ளி செல்லும் வயதிலேயே குடி சிகெரெட் என்று தீய பழக்கங்கள் பழகிவிட்டான்.இது அவன் வீட்டுக்குத் தெரிந்து அவனது தந்தை கண்டித்தாலும் தாயோ வளர்நாதவுடன்  சரியாகிருவான் என்று  அப்போதும் அவனுக்கு ஆதரவாக இருந்தார்.

19  வயதில் ராகவன் தன்னை விட மூத்த பெண்ணிடத்தில் தவறான சகவாசம் வைத்திக்கிறான் என்று தகவல் வர தலைமேல் கையை வைத்துக் கொண்டு அமர்ந்துவிட்டார் அவரது தந்தை.சிறிது காலத்திற்குள்ளாகவே அவனது அக்காக்களுக்கு அவசரமாக திருமணம் செய்து வைத்து புகுந்த வீட்டிற்கு அனுப்பி விட்டு இவனை என்ன செய்யலாம் என்று யோசிக்க

அவரது மனைவியோ பொண்ணுங்களையெல்லாம் கட்டிக் கொடுத்தாச்சு.சூட்டோட சூடா அவனுக்கும் ஒரு கால்கட்டு போட்டாச்சுனா அவன் உண்டு அவன் குடும்பம் உண்டுனு இருந்துக்க போறான். என

இங்க நாட்டுல நல்லவனுக்கே பொண்ணு கிடைக்கல.
ஒரு வேலையும் செய்யாம இத்தன வயசு வரை அப்பன் காசுல உக்காந்து தின்னிட்டு இருக்கிறதும் இல்லாம குடிக்கு அடிமையாகி பொம்பளை சகவாசம் வச்சியிருக்கிற உன் உத்தம புத்திரனுக்கு எவன் டி பொண்ணு கொடுப்பான் என்றாலும் அவரும் பெண் தேட ஆரம்பித்தார்.

அந்த தேடலில் பலிகடா ஆகியவள் தான் கவிதா.

கல்யாணமான முதல் நாளிலிருந்தே அவன் குடிப்பதை அறிந்திருந்தாலும் தந்தையை பார்த்து வளர்ந்தவளுக்கு அது அத்தனை பெரிதாக தோன்றவில்லை.ஏற்கனவே இன்னொரு பெண்ணின் மீது மயக்கத்தில் இருந்த ராகவனுக்கு தனது மனைவியிடம் பெரிதான ஒட்டுதல் எல்லாம் இல்லை.

கடமைக்கென கல்யாணம் புரிந்தவன் அதுபோலவே  தான் அவளிடம் கூடினான்.கவியின் நிலை தான் மோசமாக இருந்தது.திருமண வாழ்வே இப்படித்தான் இருக்கும் போல என்று நினைத்துக் கொண்டாள்.

ஆனால்,அவள் கணவன் வேறொரு பெண்ணுடன் தகாத உறவில் இருப்பது தெரிந்து கொதித்துப் போனாள்.அதை தனது மாமியாரிடம் கேட்க, அவரோ கொஞ்ச நாளில் சரியாகிடுவான்.ஒரு குழந்தை உண்டாகினா எல்லாம் சரியாகிடும் என்று சமாளித்து வைத்தார்.கவியின் மனது ஆறவில்லை என்றாலும் அவளால் எதுவும் செய்ய முடியவில்லை.

சில மாதங்களில் கவிதா கர்ப்பம் தரிக்க
இந்த நிலையில் தான்
ராகவன் திருமணம் செய்தும் மாறாமல் இன்னமும் தந்தை சொத்தை அழித்து செலவு செய்து கொண்டிருப்பதை கவனித்து துணுக்குற்ற அவளது அக்காக்கள் சொத்தை பிரித்துக் கொடுக்கும்படி சண்டையிட ஆரம்பித்தனர்.

அதுவரை அவன் சரியாகிடுவான், விட்டுக் கொடுத்துப் போ என்று மருமகளிடம் பேசி வந்த ராகவனின் தாயே கல்யாணம் பண்ணி இத்தனை நாளாச்சு. இன்னமும் அவன் மாறாம அப்படியே இருக்கான்னா.என்ன பொண்டாட்டி நீ. இதுக்கா ஊரில இல்லாத அழகின்னு உன்ன கட்டி வச்சன்.புருஷன்காரன் தப்பான வழியில போனா பொண்டாட்டி நீதான் அவன திருத்தி மாத்தி வழிக்கு கொண்டு வரணும் என்று பேச
கவிக்கோ குருவி தலையில் பாறாங்கல்லை வைத்த நிலை.

அதன் பிறகு ராகவனை எங்க போறீங்க ? எப்போ வரீங்க? வேலைக்கு எப்போ கிளம்புறீங்க  என்பது போல கவி  கேள்வி கேட்க ஆரம்பிக்க இதுவரை சும்மா இருந்த மனைவி இப்போது நச்சரிக்க ஆரம்பித்து விட்டதில் ஏகத்துக்கும் எரிச்சலானான் ராகவன்.

ஒருநாள் ஆமா அவ வீட்டுக்குத் தான் போறன்.உனக்கென்ன? புதுசா இதெல்லாம் கேட்குற …என எகிற ஆத்திரத்தில் கவியும் எதையெதையோ பேசிவிட வாக்குவாதம்  சண்டையாக  முற்றி நிறை மாத கர்ப்பிணி என்றும் பாராமல் அவளை அடித்து நொறுக்கி விட்டுச் சென்றுவிட்டான். அந்நேரம் பார்த்து வீட்டில் வேறு யாரும் இல்லாது போய்  உயிர் போகும் வலியில் இவள் துடித்துக் கொண்டிருக்க,

ராகவனது தந்தையை பார்த்துப்போக வீட்டிற்கு வந்த ஒரு பெரியவர் இவளது நிலை கண்டு பதறி போனார்.அக்கம் பக்கத்திலிருந்த பெண்களை அழைத்து பார்க்கச் சொன்னவர் பின் அவரது வாகனத்திலே கொண்டு போய் ஹாஸ்பிட்டலில் சேர்த்து விட்டு ராகவன் வீட்டிற்கு தகவல் சொன்னார்.

ராகவனின் தாயோ கவிதாவின் அப்பாவை தொடர்பு கொள்ள முடியாது போக அவள் சித்தியை அழைத்து தகவல் சொல்ல மதுரவாணி அடித்து பிடித்து அடுத்த பேருந்திலேயே ஹாஸ்பிட்டலுக்கு  வந்து நின்றார்.கவிதாவை ராகவன்  அடித்திருக்கிறான் என்பது  ஹாஸ்பிட்டலில் தெரிந்துவிட  சின்ன பெண்ணுக்கு கல்யாணம் செய்து கொடுத்த தனது மாமனையும் கர்ப்பிணி என்றும் பாராமல் அவளை இந்த நிலைக்கு ஆளாக்கியவனையும் திட்டித் தீர்த்தாள்.அவளால் செய்ய முடிந்தது அது மட்டும் தானே.

மாயா பிறந்தவுடன் சந்தோசப்பட்டது என் அக்காவே பொண்ணா பொறந்துட்டா என்று சந்தோசப்பட்டது  அவள் ஒருத்தி மட்டும் தான்.

மாயா பிறந்தவுடன் கவிதா புகுந்த வீடு செல்ல பயந்து தந்தையின் வீட்டில் வசித்தாள்.ஜுவா அங்கு இல்லை.ஒரு பணக்கார வீட்டில் வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்க சம்மதித்து ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டான்.மாத மாதமா கொஞ்சமாய் பணம் அனுப்புவான். அந்த நேரம் சத்யாவுக்கு திருமணம் என்றதும் முதலில் அதிர்ச்சியடைந்தவள் மதுரவாணி சித்தி சொன்ன சம்மந்தம் என்றவுடன் அமைதியாகிப் போனாள்.சித்தி ஒருபோதும் தன் தங்கைக்கு தீங்கு  நினைக்க மாட்டாள் என்றும்.அவள் ஒன்று செய்தால் அதன் பின் ஏதேனும் காரணம் இருக்கும் என தீர்க்கமாக நம்பினாள்.

சத்யாவின் திருமணம் முடிந்தும் தன் வீட்டிலிந்த கவியை அவரது தந்தை முனுமுனுக்க ஆரம்பித்தார்.பின்னே ஜுவா அனுப்பும் பணம் உணவுக்கும் குழந்தையின் தேவைக்கும் சரியாக இருக்க இவர் எங்கே குடிப்பது?

ஒருநாள் நேரடியாகவே எப்ப உன் வீட்டுக்குப் போற என்று கவியிடம் கேட்க

அவளோ இனிமேல் அங்கு செல்வதாய் இல்லை என்றுவிட்டு அங்கு நடப்பதையெல்லாம் சொல்லி கதறி அழ,

அந்த அழுகையெல்லாம் அவரை ஒன்றுமே பாதிக்கவில்லை.கட்டி கொடுத்தாச்சுல இனிமே அங்க நடக்கிற பிரச்சனையெல்லாம் நீதான் சமாளிச்சு வாழ பழகிக்கணும் என்று சாதாரணமாய் பேசியவர் அவளது சித்தியை அழைத்தார்.

உன் பொண்ணு புகுந்த வீட்டிற்கு போக மாட்டேன்னு அடம்பிடிக்குது. புத்தி சொல்லி அனுப்பி வை என்று சொல்ல
மதுரவாணியோ கொதித்து விட்டார்.

இவ எதுக்கு அங்க போகணும்? கர்ப்பமாயிருக்கிற பொண்ணுகிட்ட மிருகத்தை விட கேவலமா நடந்திருக்கான் உன் மருமவன்.குழந்தை பொறந்து இத்தனை நாளாச்சே அவங்க வீட்ல இருந்து ஒருத்தர்க்கு கூட குழந்தையை வந்து பார்க்கணும் தோணலை.அப்பேர்பட்டவங்க வீட்டுக்கு கொண்டு போய் விட சொல்றீங்க.அரை கொறை உசுரோட வந்தவளை திரும்பவும் கொண்டு விட்டு பொணமா ஆக்கப் பாக்குறீங்களோ ? என்று கத்தியவள்

பின் நிதானமாக உன் மருமகனா திருந்தி பொண்டாட்டி வேணும் குழந்தை வேணும்னு  வரட்டும்.அப்ப அனுப்பி வைக்கிறன்  என்றுவி்ட்டு கவிதாவை அவளது வீட்டிற்கு அழைத்தச் சென்று விட்டாள்.குணசீலனுக்கு என்ன ? விட்டது தொல்லை என்று இருந்துவிட்டார்.

அதன் பிறகுதான் சித்தியின் பொருளாதார  கஷ்டம் உணர்ந்து சுகுணாவிடம் (மாயாக்கு 8 மாதங்கள் ஆகிய போதிலிருந்து) வேலை கேட்டுகொண்டிருந்தாள்.சுகுணா கூப்பிட்டவுடன் இங்கு வந்து வேலை பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

அழுகையினுடே இது எல்லாவற்றையும் ப்ரியாவிடம் சொல்லி முடித்து அவளது கரங்களை இறுக பற்றியபடி உறங்கிப் போனாள் கவி.பாரம் சற்று குறைந்தாற் போல் இருந்தது.அவளுக்கு அப்படியென்றால் அவளது கதையை கேட்ட ப்ரியாவுக்கும் ஷர்மிக்கும் மனது கணத்து போனது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here