நீயே என் இதய தேவதை_42_பாரதி

0
526

வசந்தகாலம் 43

இரண்டு வாரத்திற்கு பிறகு,

அன்று அன்பரசனுக்கு வேலை  அதிகமாக இருந்தது.அவனுடன் வேலைப் பார்க்கும் 1 மணிக்கே சூப்பர்வைசர்கள் கேண்ட்டீன் சென்று சாப்பிட்டு வந்திருக்க இவன் அப்போதும் வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.  அவனது மேனஜரை சாப்பிட்டு வந்து பாருடா என்று வற்புறுத்தி கேண்ட்டீனுக்கு அனுப்பி வைக்கும் படி ஆயிற்று.

எப்போதும் போல வெறுமையுடன் தட்டில் என்ன இருக்கிறது என்பது கூட தெரியாது அந்த உணவை கொறித்து விட்டு திரும்ப அதற்குள்  2 மணி ஆகி இரண்டாவது ஷிப்ட் தொடங்கி விட்டது.

மாடியேறிவன்  முதலில் பார்த்தது மேனேஜரின் எதிரில் தலைகுனிந்து நின்றிருந்த கவியைத் தான்.தலை முதல் கால் வரை அவளை உற்றுப் பார்த்தவனுக்கு அவளுக்கு ஒன்றும் ஆகவில்லை என்ற நிம்மதியில் பெருமூச்சு ஒன்று வெளிப்பட்டது.அதன் பின்னர் சூழலை ஆராய்ந்தான்.

ப்ரியா தனது இடத்தில் வேலைப் பார்த்து கொண்டிருந்தாள்.கவனமாக கவி என்ற ஒருத்தியை தனக்கு தெரியாது என்பதை போல அவள் நிற்கும் திசை பக்கமே திரும்பவில்லை ப்ரியா.அவளுக்குமே கவி சொல்லாமல் போனதில் நிறைய கோபம் இருக்கும் என நினைத்துக் கொண்டான்.

அதன் பின்னர் தான் கவனித்தான்.மேனேஜரின் அருகிலிருந்த வினோத் கவியை சரிமாரியாக திட்டிக் கொண்டிருந்தான். வாங்கட்டும் தனக்கும் இதற்கும் ஏதும் சம்மந்தம் இல்லையென்பது போல் அவர்களை கடந்து  மேனேஜர் நாற்காலியின் அருகிலிருந்த தனது நாற்காலியில் அமர்ந்து கணினியை நோக்க ஆரம்பித்தான்.அவள் அழுதுகொண்டிருப்பாள் என்பது தெரியும்.அதனால் தான் கவனமாக அவளைப் பார்ப்பதை தவிர்த்தான்.
அத்தனை கோவம் அவள் மேல். கொஞ்ச நாட்களில் எப்படியெல்லாம் யோசிக்க வைத்து தவிக்க விட்டு கிட்டத்தட்ட பைத்தியக்காரன் போல் அல்லவா மாற்றிவிட்டாள்.கொஞ்சமாவது அதற்கான தண்டனையை அனுபவிக்கட்டும் என்று நினைத்து கல் போல அமர்ந்திருந்தான்.

ஆனால் கண்கள் கணினியை நோக்கினாலும் கவனம் முழுக்க அங்கு என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்வதில் தான் இருந்தது.

நீங்க நினைச்ச போது வருவீங்க.நினைச்ச போது யாருக்கும் சொல்லாம இரண்டு வாரம் லீவு போடுவீங்க.இது என்ன சத்திரமா…? கம்பெனி ரூல்ஸ் தெரிஞ்சி தான சேர்ந்த…?நீ எப்படி சேலரி வாங்குற நான் பாக்குறேன்.வெளிய போம்மா … என்று கத்தினான்.

அங்கிருந்த சூப்பர்வைசர்கள் வேலை செய்பவர்கள் எல்லாரும் இதை பார்த்தபடியிருந்தனர். மேனேஜருக்கே ஒரு மாதிரி ஆகிவிட்டது. பெண் பிள்ளைகளிடம் அவரே இப்படியெல்லாம் கத்தியதில்லை.

அன்பரசனுக்கு வினோத் மேல் ஆத்திரம் வந்தாலும் அவனால் ஏதும் செய்ய முடியாத நிலை. கை முஷ்டி இறுக தன்னை கட்டுப்படுத்தி கொண்டு அமர்ந்திருந்தான்.

ப்ரியாவுக்கோ கண்ட கண்ட நாய்லாம் இவ்ளோ கேவலமா  திட்டுது.இதெல்லாம் தேவையா இவளுக்கு ? என்றிருந்தது.

வினோத் மறுபடியும் ஏதோ ஆரம்பிக்க வர மேனேஜரே நீ கொஞ்ச நேரம் சும்மா இரேன் என்று விட்டு கவியிடம் நீ சொல்லும்மா…. ஏன் இத்தனை நாள் வேலைக்கு வரலை. என்ன இருந்தாலும் முன்னாடியே இன்பார்ம் பண்ணியிருக்கலாம் ல என…?

அவள் சொன்ன பதிலில் அன்பரசன், ப்ரியா இருவரும் அதிர்ந்து போனார்கள்.

இரண்டு வாரத்திற்கு முன்னாடி ஒரு ஆக்சிடென்ட் ல என் வீட்டுகாரர் இறந்து போய்ட்டாரு சார்.அந்த நிலைமைல உங்களுக்கு இன்பார்ம் பண்ணனும் தோணல.மன்னிச்சிருங்க. என்று கவி  நிதானமாக கூற அங்கு நடப்பதையெல்லாம் கவனிக்காதது போல நடித்துக் கொண்டிருந்த ப்ரியாவும் அன்பரசனை திகைத்து அவளை நோக்கினர்.

இன்னும் குழந்தைத்தனம் மீதமிருக்கும் அந்த முகத்தில் வெறுமை விரவியிருந்தது.

அன்புவுக்கும் ப்ரியாவுக்கும் மட்டுமன்றி மேனேஜருக்கும் கூட அவளைப் பார்க்க பாவமாய் இருந்தது.மேனஜரின் முகமாற்றத்தை கவனித்து வினோத் மேலும் ஏதும் சொல்லாமல் நிறுத்திக் கொண்டான்.

மேனேஜரோ உன்னால முடியும்னா இப்போ போய் வேலைப் பாரு.இல்லைண்ணா….  போய்ட்டு நாளைக்கு கூட வாங்க என  பரவாயில்லை என்றுவிட்டு தனது இடத்திற்குச் சென்றாள்.

அமைதியாக தனது வேலைகளை கவனிக்கத் தொடங்கினாள்.அன்பரசனுக்கு குற்றவுணர்வின் மிகுதியில் தன் மீதே கோபம் வந்தது.இவள் மீது கொண்ட கோபத்திற்காக இப்போது தன்மீது கோபம் கொள்கிறான்.

அன்றைய வேலைகள் முடியும் வரை ப்ரியாவுக்கும் கவிக்கும் இடையே கணத்த சூழல் நிலவியது.எப்போதும் போல உணவு இடைவேளையிலும் தேநீர்  இடைவேளையிலும் ஒன்றாகவே இருந்தாலும் இருவரும் பேசிக் கொள்ளவில்லை.
கவியிடம் மிகுந்த கோபத்தில் இருந்த ப்ரியா அவள் திரும்பி கம்பெனி வரும்போது எங்க போய் தொலைஞ்ச என்று சண்டை போட வேண்டும்.முடிந்தால் கண்ணத்தில் அறைய வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தாள். ஆனால்  அவளது தற்போதைய நிலை அறிந்த பின்பு என்ன பேசுவது என்பதே தெரியவில்லை.ஷர்மிக்கும் அப்படித்தான்.

தேநீர் இடைவேளையின் போது சுதாக்கா மட்டும் மனச தேத்தீக்க பாப்பா.நாங்க லாம் இருக்கோம்ல.தைரியமா இருக்கணும் என்ன ? என்று அவளால் முடிந்த வரை ஆறுதல் சொல்ல பொம்மை போல தலையசைத்து விட்டாலும் கவிதாவின்  முகத்தில் அதே வெறுமை.

ஷிப்ட் முடிந்து வேனில் ஏறும்போது மட்டும் வரேன் என்று ஷர்மியிடமும் ப்ரியாவிடமும் விடைபெற்றாள்.அன்றைக்கு முழுவதுமேவஅவள் அவர்களிடம் பேசிய வார்த்தை அது மட்டும் தான்.

ஷர்மிக்கு கண்களில் நீர் தேங்கிவிட்டது.
ப்ரியாவிடம் கவியும் மாயா பாப்பாவும் பாவம்ல” என்று விட்டு கண்ணீரை துடைத்தாள்.

நாளைக்கு சீக்கிரம் கெளம்பி வா.அவ ரூமுக்குப் போய் பாத்து கூட்டிட்டு வரலாம் என்று ப்ரியா சொல்ல  ஷர்மியும் சரி என்றாள்.

அன்று காலை அன்பரசனும் ப்ரியாவுக்கு போன் செய்து உன் ப்ரென்ட் ட போய் பாத்து ஏதாச்சும் பேசு  எனச் சொல்ல சரியென்றாலும் ப்ரியாவிற்கு உள்ளே ஏதோ சொன்னது.

அடுத்த நாள் காலை ப்ரியாவும் ஷர்மியும் கவியின் வீட்டுக்கு செல்லும் முன்பாகவே அன்பரசன் ஆனந்தை அழைத்து கொண்டு சென்றவன் ஒரு வீட்டின் முன்பு பைக்கை நிறுத்தினான்.

என்ன டா பங்காளி.வெளியே போலாம் சொல்ட்டு இங்க கூட்டிட்டு வந்திருக்க.யார் வீடு இது என கேள்வி கேட்டுக் கொண்டே இறங்க

அவனும்  சாதாரணமாக பதில் சொன்னான்.

ஆனந்தோ ஏதேனும் பிரச்சனை செய்து விடுவானோ என்று பயந்து வேணாம் வாடா, திரும்பி போய்டுவோம் என அவனை பிடித்து இழுத்தான்.ஒரு முடிவு எடுத்துவிட்டால் அதிலிருந்து அவனை மாற்றிக் கொள்வது சுலபமா ? என்ன?

ஆனந்தையும் வற்புறுத்தி கிட்டதட்ட இழுத்துக் கொண்டு போய் அந்த வீட்டின் கதவை தட்டினான்.கதவு திறக்கப்படவில்லை.மேலும் உள்ளே ஒரு  இளைஞன் யாரையோ கொச்சையான வார்த்தைகளால் மோசமாக திட்டிக் கொண்டிருப்பதை அலட்சியப் படுத்திக் கொண்டு மறுபடியும் கதவை தட்டினான்.

யார்டா அவன் என்று  சத்தம் வர

ஆனந்தோ மறுபடியும் வாடா போய்டலாம்.எதும் பிரச்சனை வேண்டாம்.எதுன்னாலும் அப்புறம் பேசிக்கலாம் என்று அன்பரசனிடம் கெஞ்சிக் கொண்டிருந்த நேரம் ,

  கதவு திறக்கப்பட நேரத்தை வீணடிக்காமல்  தான் பேச வந்ததை மட்டும் பேசிவிட்டு எழ  ஆனந்தோ அன்பரசனா இது ? என்று வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தான்.

கவி ப்ரியாவின் ரூம் கதவை தட்ட திறந்தவளோ வாங்க என்றுவிட்டு போய் ஒரு மூலையில் அமர்ந்திருந்தாள்.

தந்தை இறந்து போனது கூட தெரியாமல் எப்போதும் போல தன் பாட்டுக்கு விளையாடிக் கொண்டிருந்த மாயாவைப் பார்க்க கண்கள் கசிந்தது ப்ரியாவிற்கு.

கவியிடம் மாயா சாப்பிட்டாளா என்று கேட்க

சித்தி வந்து ஊட்டுனாங்க ….என்றுவிட்டு தலையை சுவற்றில் சாய்த்துக் கொண்டாள்.

ஷர்மியும் ப்ரியாவும் வந்து அவளது கரங்களை பிடிக்க கொஞ்ச நேரம் தாக்குப்பிடித்தவள் பின் துயரத்தின் பாரம் தாளாது ப்ரியா மடியில்  சாய்ந்து அழ ஆரம்பிக்க மென்மையான குணம் கொண்ட ஷர்மி அவளுமே அழுது,
கவி அழாத கவி , என சொல்ல ப்ரியா ஷர்மியை சற்று அமைதியாய் இருக்கும்படி சைகை காட்டினாள். கவி அழட்டும். அழுது தீர்த்து விட்டால் அவளது  இறுக்கம் குறையும் என்று நினைத்து அவளும்  அமைதியாய் இருந்தாள்.

அன்று இரவு மாயாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்  உற்சாகம் இன்னும்  மீதமிருக்க நிம்மதியாக உறங்கினாள்.நடு ராத்திரியில் சுகுணா அழுது கொண்டே கதவை தட்டி உன் கணவன் இறந்துவிட்டான் என்றது ஒன்றும் புரியவில்லை கவிக்கு. அதிர்ச்சியில் தனக்குள் இறுகி போய்விட்டவளை ஊருக்கு அழைத்து போனது  அங்கே ஈமக் காரியங்களை செய்ய வைத்து  இப்போது திரும்பி இங்கு வரும் வரையிலும் சுகுணா தான் எல்லாமே பார்த்துக் கொண்டான்.

கவியும் அவளது கணவன் ராகவனும் அந்நோன்ய தம்பதிகள் எல்லாம் இல்லை.அவளைப் பொறுத்த வரையில் மனதளவில் கணவன் மனைவி என்ற பந்தம் எப்போதோ முறிந்து விட்டது.தன் கணவனாக இல்லாவிட்டாலும் மாயாவின் தந்தையாக என்றைக்காவது ராகவன்  திரும்பி வருவான் என்று மனதில் சிறு நம்பிக்கை இருந்தது.இப்போது அந்த நம்பிக்கையும் மொத்தமாய் உடைத்திருந்தது விதி.நாம் ஒன்று நினைக்க  தெய்வம் ஒன்று நினைக்குமாம் என்பது சரியாய் போனது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here