நீயே என் இதய தேவதை 8

0
979
Neeye En Idhaya Devathai

கவி காலை 5மணிக்கு எழுந்து குளித்து கிளம்பிவிட்டாள். குழந்தையை தூக்கிக் கொண்டு போய் சுகுணாவிடம் கொடுத்துவிட்டு கலாவுடன் சேர்ந்து தொழிற்சாலை  வந்துவிட்டாள். நேற்றிருந்த சுதா அக்காவும் அப்போதுதான் அங்கு வந்து சேர்ந்தாள். கூடவே தன் வயதொத்த இன்னொரு பெண் சுதாவுடன் பேசியபடி இருந்தாள்.
நேற்று புதிதாக வேலைக்கு சேர்ந்த பயத்தினால் எதையும் கவனிக்கவில்லை. இன்று பார்த்தால் கிட்டத்தட்ட 20  வரிசைகளில் ஒன்றிற்கு மூன்றாய் அத்தனை இயந்திரங்கள். புரியாத பல மூலப் பொருட்கள். இவளுக்கு பின்னால் இருந்த வரிசைகளில் சில ஆண்களும் இருந்தனர்.
முழித்துக் கொண்டு நின்றிருந்தவளை “நேத்து பண்ண வேலையே பாரு… பாப்பா” என்று சுதா கூற இவளுக்கு நேற்று பரீட்ச்சயமான அந்த இயந்தித்தின் அருகில்  நின்று கவனமாய் வேலை பார்க்க ஆரம்பித்தாள்.
பக்கத்தில் சுதாவுடன் பேசிக்கொண்டிருந்த பெண் மற்றொரு இயந்திரத்தை இயக்கிக்கொண்டிருந்தாள். கவிக்கு அவளது வேகத்தை பார்த்து பெருத்த  ஆச்சர்யம். இந்த வேலைக்கு நன்கு பழக்கப்பட்டிருப்பாள் போல இல்லையெனில் இத்தனை லாவகமாய் செய்ய முடியாது.சுற்றி முற்றி பார்த்தால் அங்கிருக்கும் எல்லோரும் அப்படித்தான். கைகள் மின்னல் போல செயல்பட்டுகொண்டிருந்தது.  இத்தனை வேகம் கண்டிப்பாக கவியால் இப்போது முயற்சிக்க முடியாது.

“ஹாய்க்கா உங்க பேரென்ன…?” அந்த பெண்ணே பேச்சை ஆரம்பித்தாள். கவிதா என்று பதிலளித்தவள் அப்போதுதான் அந்த புதிய பெண்ணை உற்றுநோக்கினாள்.மாநிறம், செதுக்கப்பட்ட சிற்பம் போன்ற முகவெட்டு. அழகி.

உங்க பேரு? வயதொத்தவள் என்பதாலோ என்னவோ கவிக்கு அவளிடம் தயக்கமோ பயமோ இல்லாமல் பேச்சை வளர்த்தாள்.

என் பேரு பிரியா. இரண்டு நாளா லீவ்ல இருந்தேன். அதான் உங்களுக்கு என்னை தெரியலை.நம்ம இரண்டு பேரும் ஒரே லைன்தான். நீங்க,  நான்,  சுதாக்கா,  மணி அண்ணா, அப்புறம் மேரியக்கா எல்லாரும் ஒரே லைன் என்றாள் கடகடவென.

இவர்களின் உட்பிரிவைத்தான் லைன் என்கிறாள் போல. ஷப்பா… என்ன வாய் என்று எண்ணிணாள்.புதியவள் என்ற தயக்கம் பிரியாவிடமும் இல்லை. அந்த வாயாடித்தனத்திலும் ரசிக்க கூடிய ஒன்று இருப்பதாக தோன்றியது கவிக்கு

“உங்களுக்கு கல்யாணம் ஆய்டுச்சா…?ஹஸ்பண்ட் என்ன பண்றாங்க..?”  எத்தனை பசங்க? யார் பாத்துக்கிறாங்க. நந்தினி கேள்விகளை  அடுக்கிக்கொண்டே போக

லேசாய் சிரித்துக்கொண்டே இருங்க… இருங்க… கொஞ்சம் இடைவெளி விட்டு கேளுங்க. கல்யாணம் ஆய்டுச்சு. ஒரே பொண்ணு. சித்தி கிட்ட பாத்துக்க விட்ருக்கேன்.. வேற எதுனா கேக்கணுமா? என்றாள்.

ஈஈஈ……இப்போதைக்கு இல்லை.அப்புறம் வாங்க போங்கனுலாம் பேசாதீங்க. பேர் சொல்லியே கூப்பிடுங்க. ஓகே வா.

கவி, ஓகே.  அப்போ என்னையும் நீங்க  பேர் சொல்லி கூப்பிடுங்க என்றவுடன்

அவளது வயதை கேட்டு( 21)  அறிந்த பிரியா உனக்கு இதுக்குள்ள மேரேஜ் ஆகிடுச்சா. குழந்தையும் இருக்கா என அதிசயித்தவள் அப்போதிலிருந்து ஒருமையில் பேச ஆரம்பித்தாள்.

அந்த கம்பெனி வேலை செய்யும் ஆட்கள் சூப்பர்வைசர்கள் குணம் என பிரியாவிற்கு பேச நிறைய இருந்தது. கவியும் அவள் கூறுவதையெல்லாம்  நிதானமாக கேட்டுக்கொண்டு அவளது வேலை பற்றிய சந்தேகங்களையும் கேட்டுக்கொண்டாள்.

உரையாடலின் சுவாரஸ்யத்தில் கவி சற்று கவன பிசகினால் அஸெம்பிளில்(assemble) சிறு தவறு செய்திருக்க அவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. நேற்றும் இதே தவறு செய்து அன்புவிடம் தலைகுனிந்து நின்றதெல்லாம் ஞாபகம் வந்தது.
அஷெம்பிள் என்பது இவர்களுக்கு தரப்பட்ட  பல பகுதி பொருட்களை மெஷின் மூலமாக
ஒன்றாக இணைத்தல்.பின் அந்த பொருள் அடுத்த நிலைக்கு அனுப்பபட்டு சில மாற்றங்கள் செய்யப்படும்.முதல் நிலையிலேயே தவறு செய்தால் அந்த பொருள் அடுத்த நிலைக்கு செல்ல தகுதியற்று போகும் (ரிஜெக்டட்.).

பேசிக் கொண்டிருந்தவள் திடீரென மௌனமாகவும் என்னாவாயிற்று…? என இவள் பக்கம் திரும்பினாள் பிரியா. கவி தவறு செய்த பொருளினை பிரியாவிடம் காட்ட ஓ ரிஜக்ட் ஆயிடுச்சா என்று சுற்றும் முற்றும் யாராவது கவனிக்கிறார்களா எனப் பார்த்தவள் அந்த பொருளை வாங்கி ரிஜக்சன் பாக்ஸில் போட்டாள்.

சாதாரணமாக ஒரு மூலப்பொருளில்  இவர்கள் தவறு செய்துவிட்டால் அதனை தனியாக  ஒரு ட்ரேயில் எடு்த்துவைத்து அவர்களின் சூப்பர்வைசர்களிடம் காட்ட வேண்டும். பிறகு அவர்கள் ரிஜக்சன் பாக்சில் போடுவார்கள். நிறைய தவறுசெய்யப்பட்ட பொருட்கள் இருந்தால் நிச்சயமாக திட்டு விழும்.

நேற்றே கவியின் ட்ரே முழுக்க நிறைந்துவிட்டிருந்தது. ஆகையால் பிரியா அவளாகவே கவி ரிஜக்ட் செய்த பொருளை ரிஜக்சன் பாக்சில் போட்டுவிட்டாள்.

கவியின் அருகில் வந்த பிரியா யாரும் பாக்கலைல…. என வினவ

ம்ம்ஹூம்…. இல்லையென புரியாது தலையசக்க

“ஓ…..சரி சரீ….மூஞ்சிய பாவமா வச்சுக்க. அப்போதான் யாருக்கும் டௌட் வராது.ம்ம்ம் இந்த மாதிரி என அவள் செய்து காட்டிய பாவனையில் இருவருக்கும் சிரிப்புத்தான் வந்தது.

அதற்குள் சாப்பிட போலாம் என்றொரு குரல் கேட்டவுடன் பிரியா “ஹப்படா….வா ௧ேண்டீன் போலாம்”என்று கவியை அழைத்தாள்.

சாப்பிட போக சொன்னவனை சுட்டிக்காட்டி இவர் யாருட….? என கவி வினவ

இந்த குள்ளன்தான் நம்ம சூப்பர்வைசர்.  வினோத் அண்ணா. உனக்கு தெரியாதா?

நான் பாக்கலையே

நேத்து வேற ஷிப்ட்ல இருந்திருப்பாரு. அதான் உனக்கு தெரியலை.

அதற்குள் அங்கொரு சிறுபெண் வந்து பிரியாவிடம்  போலாமா? என்றபடி வந்து நிற்க வா ஷர்மிளா போலாம். வா கவி
என்று இருவரையும் அழைத்துக் கொண்டு நடந்தவள் ஒருவர்க்கொருவரை அறிமுகப்படுத்தி வைத்தாள்.ஷர்மிக்கு அலட்டலில்லா அழகுடன் இருந்த  கவியை பார்த்தவுடனே பிடித்துவிட்டது.

கவிக்கு சிறு குழப்பம் கேட்பதா… வேண்டாமா..? என எண்ணுவதற்குள் கேன்டீன் வந்தாயிற்று. வரிசையில் நின்று உணவு வாங்கி கொண்டு அங்கிருந்த இருக்கையில் சென்று அமர்ந்தனர் மூவரும். உணவில் ருசி இல்லை ஆனால் வேறுவழியில்லை அங்கு எல்லாருமே இதைத்தான் சாப்பிட்டாக வேண்டும்.

கவி மெதுவாக ஷர்மியிடம் கேட்டாள். நீ பாக்க சின்ன பொண்ணா இருக்க 18 வயசு முடிஞ்சிதா உனக்கு?  என ஷர்மி  நமட்டு சிரிப்புடன் ஓ முடிஞ்சிடுச்சே என்றாள். பொய் என அப்பட்டமாக தெரிந்தது.

பிரியா சிரித்துக் கொண்டே உடனே நம்பாதடி சும்மா சொல்றா. இது ஃபிராடுடி 11th முடிச்சிட்டு சர்ட்டிபிக்கேட் ஜெராக்ஸ்ல கோல்மால் பண்ணி வேலைக்கு சேர்ந்திருக்கு. கம்பெனில ஒரிஜினல் கேட்டா மாட்டிக்கும் என்றவுடன் கவிக்கு ஆச்சர்யமாக இருந்தது. டீ போட்டு பேசுமளவு முதல் நாளிலே நெருக்கம் வந்திருந்தது மூவர்க்கும்.

இவர்களது இருக்கைக்கு நேராக வலப்புறத்தில் ஆண்கள் அமரும் இடத்தில் அமர்ந்து சாப்பிட்டுக் கொணடிருந்தான் அன்பு. கூட வேலை செய்யும் பசங்களுடன்அமர்ந்திருந்தான்.   எப்போதும் போல அந்த உணவினை வேக வேகமாக விழுங்கினான். நிதானமாக ருசி தெரிய சாப்பிட்டால் அதை சாப்பிடவே முடியாது.

சாப்பிட்டு எல்லோரும் எழுந்து மறுபடியும் அவரவர் இடம் சென்று  அவர்கள் விட்ட பணியை தொடர்கையில் அன்பு கவியிடம் வந்து நின்றான். அவனை பார்த்தவுடன் கவியின் கைகள் லேசாக நடுங்கியதை கண்டு இவள் என்னை பொறுக்கியாகவே முடிவு செய்துவிட்டாளா ? என்று மேலெழுந்த கோபத்தை கட்டுபடுத்தியவன் அங்கிருந்து  நகர்ந்து பிரியாவின் அருகில் சென்றான். தர கட்டுபாடு அவனது  துறை. சில நேரங்களில் புதிய தொழிலாளர்கள் ஒழுங்காக வேலை செய்கிறார்களா என்பதை மேற்பார்வை பார்த்தாக வேண்டும். அதற்காக அருகில் நின்றது. ஆனால் நடந்தது…..

பிரியா அருகில் சென்றவன் என்ன மேடம் வேலைக்குலாம்.. ஒழுங்கா வர மாட்டிங்களா?
போன மாசம் 8 நாள் லீவு இந்த மாசம் தொடங்கும் போதே 2நாள் லீவு….. நக்கலாக கேட்டவன் மேலும் தொடர்ந்தான். உங்களுக்கு வேலைக்கு வர இஷ்டமில்லைனா… வீட்லயே இருந்துக்கங்க எதுக்கு பாதி நாள் லீவு போடுறது…. பாதி நாளு கம்பெனி வரதுனு என் உயிர வாங்குறீங்க ….?ம்ம்ம் எனக் காட்டமாய் கேட்க கவிக்கு அன்புவின் மேல் மேலும் பயம் கூடியது.

ஆனால் பிரியாவிற்கு அப்படியெல்லாம இல்லை .முகத்தினை பாவமாய் வைத்துக் கொண்டு ஒடம்பு சரியில்லண்ணா….?  என பதிலளிக்க

“சரி லீவ் பார்ம் எழுதிக்கொடு…”என்று தணிந்தவன் “இப்போ ஓகே தான… முடிஞ்ச அளவு லீவ் போடாம வேலைக்கு வரப் பாரு பாப்பா”  என்ன என்றுவி்ட்டு நகர்ந்தான்.  இதுதான் அன்பு. கோபத்தில் வார்த்தைகளை வீசினாலும் எதிராளியின் நிலையிலிருந்தும் சற்று யோசித்து பார்ப்பான். உடல்நிலை சரியில்லாத பெண் நிச்சயமாக 8மணி நேரம் நின்று வேலைபார்க்க முடியாது என்றுணர்ந்தவன் சிறு கண்டிப்போடு நிறுத்திக்கொண்டான்.

அன்பு சற்று தூரம் சென்றவுடன் கவி பிரியாவிடம் கேட்டாள்
யாருடி …இவரு எதுக்கு இப்படி திட்டுராறு. நேத்து நான்கூட திட்டு இவர்கிட்ட தான் திட்டு வாங்குனன் தெரியுமா?

பின்னே நீ செஞ்ச வேலைக்கு கொஞ்சுவாங்களா…. என்றபடி அங்கிருந்த கவியால் தவறு செய்த பொருட்கள் நிறைந்திருந்த ட்ரேவைக் காட்டினாள் பிரியா.

“ம்ம்கும்…”என நொடித்துக்கொண்டவள் நான் இப்போதான வேலைக்கு சேர்ந்தேன். கொஞ்சம் தப்பாயிடுச்சு. அதுக்குனு எப்படி கத்திட்டாரு தெரியுமா? அழுதிட்டிருப்பேன்.

ஹே…. நல்ல அண்ணா டி.இங்கிருக்க எல்லா சூப்பர்வைசர்விடவும் அன்பண்ணா தான் எல்லாருக்கும் பிடிக்கும் தெரியுமா?

நம்பாமல் பார்த்தவளிடம்

“முன்னாடி எல்லாம் இப்படி பேச மாட்டாரு. ச்சீனு… ஒரு வார்த்தை சொல்ல மாட்டாரு. எல்லாம் அந்த சனியனால வந்தது. அவள நெனச்சாலே அசிங்கமா வருது வாயில” சொல்லும்போது அத்தனை அருவருப்பு தெரிந்தது பிரியாவின் முகத்தில்

யாரடி சொல்ற….

அவர் பொண்டாட்டிய தான் சொல்றேன் கவி. கல்யாணம் முடிஞ்ச ஒரு மாசத்துல வேற ஒருத்தன் கூட ஓடி போய்டுச்சி.எல்லாரும் அன்பண்ணா குடும்பத்தை அசிங்கமா பேச அன்பண்ணா அம்மா  அந்த கஷ்டத்திலதான் இறந்துட்டாங்க. அதுக்கடுத்து கல்யாணமே பண்ணிக்கல அவரு.

கவனித்துக்கொண்டிருந்தவளின் அம்மா இறந்தது வருத்தம்தான். ஆனால் திருமணமாகி ஒரே மாதத்தில் அந்த பெண் புகுந்த வீட்டை  வெளியேறும்படி இவன் என்ன செய்தானோ? என்றுதான் யோசித்து அவள் கடந்து வந்த பாதை  அப்படி.மனம் அத்தனை சீக்கிரத்தில் ஒரு ஆண்மகனை யோக்கியனாய் ஏற்றுக் கொள்ள மறுத்தது.ஆனால் அதை பிரியாவிடம் சொல்ல முடியாதே.

ப்ச்ச்…..பாவம்ல அவருக்கும் என்னை மாதிரியே அம்மா இல்லாம போய்டுச்சு என்ற பிரியாவின் தொடர்ந்த வார்த்தைகளில் பதறியவள்

“என்னது. உனக்கும் அம்மா இல்லையா….? காலையில அம்மா அப்பா தங்கச்சி பத்திலாம் சொல்லிட்டுருந்தயே”

என் ஊரு சென்னை இல்லடி திருச்சி. அம்மா நான் எட்டாவது படிக்கும்போது இறந்துட்டாங்க. அம்மாவோட தங்கச்சி என் சித்தி வீட்லதான் தங்கியிருக்கேன். அவங்களையும் அவங்க ஹஸ்பண்டையும் அம்மா அப்பானு தான் கூப்பிடுவேன். அப்பா ஊர்ல இருக்காரு.

கவிக்கு பிரியாவை நினைத்து பாவமாய் இருந்தாலும் வெளிக்காட்டி கொள்ளவில்லை. கவி போலில்லை பிரியா. தைரியமான பெண்.பரிதாபம் காட்டி அவளை பலவீனப்படுத்த விரும்பவில்லை.எப்படி இது…? பிரியா ஒரே நாளிலே மனதிற்கு நெருங்கியவளாகிட்டாள். இவளது நட்பு இறுதி வரை தொடரவேண்டும் என இறைவனிடம் மானசீகமாய்  பிரார்த்தித்தாள்.

உரையாடிக் கொண்டே வேலை செய்ததில் வேலையின் கடினம் குறைந்தது போலிருந்தது கவிக்கு. மதியம் 10 நிமிடம் டீ டைம் பிறகு மறுபடியும் 2மணிவரை வேலை என்று முடிந்து வீட்டுக்கு செல்லும் நேரம் வந்ததும் அப்படியொரு நிம்மதி இருவருக்கும்.

இவர்களது அறைக்கு பக்கத்திலிருக்கும் அறையில் ஷர்மிக்கு வேலை. ஏசி பொருத்தப்பட்ட கண்ணாடி அறை அது.  அதன் வழியே டைம். முடிஞ்சிடுச்சு வா போலாம் என்று ஜாடைகாட்டி அவளையும் அழைத்துச் சென்றனர். பேசிக்கொண்டே கீழிறங்கியவர்கள் கவியை அவளது வேனில் ஏற்றிவிட்டு இரண்டுபேரும் அவரவர் விடைபெற்று கிள்ம்பினர்.

வேலை பற்றிய சங்கடமெல்லாம் தீர்ந்து வெகு  நாட்கள்  பிறகு அத்தனை மலர்ச்சி கவி முகத்தினில்.இதே நிலை நீடிக்குமா?

                                     தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here