107. தனிமையின்(ல்) தோழன்_7.9_ ஆஹிரி

0
399

தனிமையின்(ல்) தோழன்

அம்மாவிற்குப் பிறகான
என் அன்பை எல்லாம்..
சிறுகச்சிறுகச் சேமித்து
இதயப்பெட்டகத்தில்
நிறைத்து வைத்திருக்க..
அதை கொடுப்பதற்கும்
அள்ளிச்செல்வதற்கும்
யாருமே இருந்ததில்லை..

கடையோர மரத்தடியில்
நம் இதயப்பரிமாற்றம்..
உன் ஒற்றை வாலில்
என் மொத்த அன்பும்
குத்தகையாய்
எடுத்துக்கொண்டாய்..
உன் நாவால் என் ஸ்பரிசம்
தீண்டிய போதெல்லாம்..
ஆயிரம் சூரியன்கள்
என் கறுத்த வானத்தில்..

நான் நேசித்த அத்தனையும்
ஏனோ என்னிடம்
இருப்பதேயில்லை!!!
உன்னைப் போலவே..
என்னுடனே திரிந்து
என்னுடனே உண்டு
என்னுடனே உறங்கி
என்னுடன் நீ வாழ்ந்த
ஒவ்வொரு ஞாபகப் பூக்களும்
இன்று வானத்து விண்மீன்களாய்..

தகித்திருந்த வானமெல்லாம்
மீண்டும் காரிருளாய்..
ஆனாலும் உன்னை
உணர்ந்து கொள்கிறேன்
ஒட்டியும் ஒட்டாத
நிழலைப் போல..
முடிந்தவரை பின் தொடர்கிறேன்..
நிழலல்லவா!!!
விலகியேசெல்கிறாய்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here