121. நினைவு (ப்) ஸ்பரிசம் (பரிசு)_11.26_Mary Naveena

0
435

நினைவு (ப்) ஸ்பரிசம் (பரிசு)

ஒரு திங்கள் விடுமுறையென்று வந்திருந்தாய்..

ஏற்கனவே நிச்சயித்த திருமணம்..
ஏழு மாத உரையாடல்கள்…
என்றாலும்
முதல் பரஸ்பர சந்திப்பு நிகழ்வதென்னவோ
நம் திருமணத்தன்று தான்…

இனிதினிதாய் துவங்குகிறது
நல் இல்வாழ்வு…

உன்னோடிருக்கும் இவ்வீரேழு நாட்களையும்
புதையலைப் போல் பொதிந்து கொள்கிறேன்..
மீண்டும் (மீண்டு) நீ வரும் வரையில்
 என்னோடிருக்கும் உன்  நினைவுகளுக்காய்…

அலைபேசி வழி வந்த அழைப்பு
 ஈரேழு நாட்களைப் பாதியாய் நசுக்க
பரிதவிப்போடு விடைபெற ஆயத்தமாகிறாய்..

என் பாதமிட்ட மருதாணி அழிந்து போகுமுன்னே
 பாரதத் தாய்க்கு பணிவிடை செய்ய
அழைக்கப்படுகிறாய்..

என் காலிட்ட கொலுசு கருத்து போகுமுன்னே
கடமை உன்னை கைப்பிடித்து இழுத்துச் செல்கிறது..

சற்று நில்!!

உன் ஆறடி உயரத்தை அரை நொடியில் அளந்து கொள்கிறேன் ஒரு முறை
செயற்கையாய் சிவந்த என் பாதம் கொண்டும்
இயற்கையாய் சிவந்த என் இதழ் கொண்டும்…

மீண்டும் உன்னைச் சந்திக்கையில் 
எதைச் சுமந்து வருவாயென்றோ 
எதை இழந்து வருவாயென்றொ
எவருக்கும் தெரியாது…

இறுதியாய்…
உன் நுதல் ஒற்றும் என் இதழீரத்தை 
உனக்கு நானிடும் திலகமாய் சமந்து போ..
.எனக்கோ அது உன் ஸ்பரிசம் தாங்கிய நினைவுப் பரிசு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here