21.பிரியும் முன், பிரியமுடன்…. _11.10_ஜெயக்குமார் சுந்தரம்

1
960

பிரியும் முன், பிரியமுடன்….

எல்லையினை பாதுகாக்க

இன்பங்களை விட்டெறிந்து

செல்லுகின்ற வீரனுக்கு

இணையெதுவும் இல்லை!

பனிமலையின் அடியினிலே

பனிகாற்று வீசுகையில்

தனிமையிலே எல்லையோரம்

பணியிருக்கும் வீரனன்றோ!

குண்டு மழை பொழிந்தாலும்

கண்ணி வெடி வெடித்தாலும்

தன்னுயிரைத் துச்சமென

எண்ணுபவன் அவனன்றோ!

கலவரங்கள் நிகழ்ந்தாலும்

நிலச்சரிவு என்றாலும்

பேரிடர்கள் வந்தாலும்

நேரிடுவோர், நண்பனன்றோ!

காதல் மனைவி காத்திருக்க

கனவு உலகில் தானிருக்க

கட்டி வைத்த ஆசைகளை

கொட்டித் தீர்க்க விடுப்பில் வந்தான்!

மஞ்சத்திலே தனை சுமந்த

அஞ்சுகத்தின் பாதங்களில்

பாவையவள் தூங்குகையில்

பாதசரம் பூட்டிவிட்டான்!

மருதாணி அரைத்தெடுத்து

மடி மீதவள் காலை வைத்து

மயங்க மயங்க பூசிவிட்டான்

மனைவியவள்  பாதத்திலே!

விடுப்பு முடித்து விடைபெறுமுன்

அடக்கி வைத்த ஆசைகளை

கட்டியணைத்து முத்தமிட்டு

விட்டுச் செல்லும் தருணமிது!

பாரதத்தை பாதுகாக்கும்

ராணுவத்து வீரனவன்

தாரத்திடம் விடைபெறவே

போராடும் காட்சியன்றோ!

பல மாத பணிக்கிடையில்

சில நாட்கள் ‘கூட’ வந்தான்

கலந்து மகிழ்ந்த நாளை அவன்

உளமதிலே சுமந்து சென்றான்!

கொலுசு ஒலி கிலு கிலுக்க

மனசு முழுதும் அவளிருக்க

கனத்த நெஞ்சை சுமந்தவனாய்

தனித்து அவளைப் பிரிந்து சென்றான் !

இமை இரண்டும் படபடக்க

இதழோடு இதழ் சேர்த்து

இன்பமான துன்பமதை

ஏந்திழையாள் கொடுத்தாளோ!

பிரிந்திருக்கும் வேளையிலே

பருவ நோயும் தாக்கிடுமே

தனித்திருக்கும் வேளையிலே

நினைத்திருக்க அணைத்தாயோ!

முத்தமிட்டு செல்கிறவன்

எப்பொழுது வருவான் என

நித்தம் நித்தம் வெந்துருகும்

உத்தமியின் தியாகம் என்னே!

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here