22. வனமும் வேரும்_ 8.2_ஜெயக்குமார் சுந்தரம்

0
532

வனமும் வேரும்

கற்பனைக்கு எட்டாத காட்சியினை – தன்

கற்பனையில் ஒருங்கிணைத்தான் ஓவியத்தில்

காதலிக்கும் காதலியின் இதழ் இரண்டை

கானகத்தால் மூடிவிட்டான் மாட்சியுடன்

அடர்ந்திருக்கும் அழகான காடு -அதில்

நெடிதுயர்ந்து செழித்திருக்கும் மரங்கள்

மேலிதழில் கானகத்தின் வனப்பு

கீழிதழில் தாங்கி நிற்கும் வேர்கள்

கானகத்துள் கானம் பாடும் புள்ளினமும் உண்டு

கானத்திற்கு நடனமாடும் மயிலினமும் உண்டு

புல்லினத்தை வேட்டையாடும் வல்லினமும் உண்டு

வல்லினத்தை விரட்டியடிக்கும் வேழங்களும் உண்டு

இனிமையான கனிகள் தரும் பழமரங்கள் உண்டு

இதயத்திற்கு மகிழ்ச்சி தரும் மலரினமும் உண்டு

மலரினிலே தேனை உண்ணும் வண்டினமும் உண்டு

வண்டினங்கள் சேர்த்து வைக்கும் தேன்வகையும் உண்டு

வனமொன்றை வனப்போடு வரைந்து வைத்த ஓவியன்

வனிதையவள் இதழ்களிலே பொருத்தி வைத்ததேனோ!

மரமளிக்கும் இன்பங்களை

இதழ் இரண்டும் ஈந்திடுமோ?

இதழ் இரண்டும் பெண்ணினத்தின் பிரதிபலிப்புத்தானோ?

பெண்மையவள் இதழ்விரித்தால் புன்னகையை உதிர்க்கும்

மென்மையாக வாய்திறந்தால் இன்பமதில் பெருகும்

வன்மையான மொழிப்பிறந்தால் கொடுங்காற்று வீசும் – அவள்

இதழிடையில் மெல்லினமும் வல்லினமும் பிறக்கும்

மண் அரிப்பு நடவாமல் காத்திடுமே வேர்கள்

மரம் வளர நீரெடுத்துக் கொடுத்திடுமே வேர்கள்

வளர்ந்த மரம் சாயாமல்  வலு சேர்க்கும் வேர்கள்

நிலச்சரிவு நடவாமல் தடுத்திடுமே வேர்கள்

மண்ணுக்குள் இருக்கின்ற வேர்கள் 

கண்ணெதிரில் தெரிகிறது ஏனோ?

காற்று மண்ணை கரைத்ததோ! 

மழை அரித்துச் சென்றதோ!

காட்டு வெள்ளம் பெருக்கெடுத்து

கரையை பெயர்த்துச் சென்றதோ!

மண்ணில்லா கரையோரம் மரம் வளருமா? – அந்த

மரமெல்லாம் நெடுங்காலம் நிலைத்து நிற்குமா?

மரங்களெல்லாம் அழிந்துவிட்டால்?….

மனித இனம் மடிந்துவிடும்!

மூச்சுவிடும் காற்றினிலே கரியமல வாயு உண்டு

மரம் அதனை உள்வாங்கி ஆக்சிஜனை வெளியேற்றும்.

மரங்களெல்லாம் அழிந்துவிட்டால்?…

கரியமல வாயுவினால் காற்றெல்லாம் மாசுபடும்

மாசடைந்த காற்றினாலே

இரத்த சுத்திக் கெட்டுவிடும்

கெட்ட இரத்தம் மனிதனுக்கு

நோயை உடலில் கொண்டுவரும்

நோயினாலே மனித இனம் நாளடைவில் அழிந்துவிடும்

குடும்பமெனும் மரத்திற்கு வேர்தானே மனைவி!

வேர் நிலைத்தால் மரம் வளரும்

மரம் வளர்ந்தால் வனம் இருக்கும்

வனம் இருந்தால் வளம் பெருகும்

வளம் பெருக மனம் மகிழும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here