30.மாசுக்காற்றில்… காதல் சின்னம்!_14.7_ஜெயக்குமார் சுந்தரம்

0
508

காதலித்த மனைவிக்கு

காலத்தினால் அழியாத

காவியத்தைக் கட்டிவைத்தான்

காதலுக்குச் சின்னமாக


ஷாஜஹானின் காதல் சின்னம்

பாரதத்தின் பெருமைச் சின்னம்

பாருலகின் அதிசயத்தில் – தாஜ்மகால்,

பெருமைமிகுக் கலை சின்னம்


அன்பு மனைவி மும்தாஜின்

துன் மரண துயரத்திலே

யமுனை ஆற்றின் கரையோரம்

ஆக்ராவில் அமைத்தானே


வெள்ளை சலவை கல்லினாலே

உள்ளம் கவரும் வண்ணமாக

கல்லறையைக் கட்டிவைத்தான்

கலைநயத்தின் சின்னமாக


பளிங்கு கல்லில் பலவகையாய்

பளபளக்கும் சித்திரங்கள்

எழிலூட்டும் சிற்பங்களை

அழகூட்டச் செதுக்கிவைத்தான்


வாயில்களின் வளைவுகளும்

சாளரத்தின் நுணுக்கங்களும்

கூடங்களும் கோபுரமும்

காண்போரைக் கவர்ந்திழுக்கும்


பகலவனின் பார்வையிலும்

நிலவொளிரும் இரவினிலும்

முப்பொழுதும் எப்பொழுதும்

பல வண்ண நிறம் மின்னும்


நான்கு பக்கம் சூழ்ந்திருக்கும்

நன்கமைந்த தோட்டங்களும்

நீர்நிலைகளும் நீரூற்றும்

பார்வையினை மயங்க வைக்கும்


இப்பொழுதோ…


அருகிருக்கும் தொழிற்சாலைகள் புகையைக் கக்குது

வாகனங்கள் நச்சுப் புகையைக் காற்றில் ஏற்றுது

பயிரினத்தின் தாளடிகள் எரிக்கப்படுகுது.

புகை மண்டலம் காற்றுதனை மாசுப் படுத்துது


மாசு நிறைந்த காற்றினூடே மழை பொழியுது

மழை நீரோ அமிலமாகி மண்ணில் விழுகுது

வெயிலும் மழையும் மாசுக் காற்றும் காதல்

சின்னத்தின்வெண்மையான வண்ணத்திலே மாசுப் பூசுது


காலை அழகில் காதல் சின்னம் காட்சியளிக்குது

மாசுக்காற்று தாஜ்மஹாலைச் சூழ்ந்திருக்குது

மாசுக்குள்ளே ஏழை ஒருவன் வேலை செய்கிறான்

காசுக்காக மாசுக்குள்ளே கஷ்டப்படுகிறான்


தாஜ்மஹாலில் ஷாஜஹானின் காதல் புரியுது – அதில்

மும்தாஜின் மரணம் தந்த சோகம் தெரியுது

மனைவியிடம் காதல் கொண்ட ஷாஜஹானிடம்

மனையாளை காதலிக்கக் கற்றுக் கொள்ளணும்!

– ஜெயக்குமார் சுந்தரம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here