31.அஃறிணை காதல்_ 7.3_ லயா

0
520

அஃறிணை காதல்

அன்று,
தீண்டி… தடவி…
குதித்து… கொஞ்சி…
நக்கி… நுகர்ந்து…
எச்சிலிட்டு…முத்தமிட்டு…
செல்லமாய் கடித்து…
நகக்கீறல் பதித்து…
சலுகையாய் மடிசாய்ந்து…

காதலாய் உருமாறி
உயிர்பெற்று நீ
உயர்திணை காதலன்
ஆனாயோ!!!

இன்று,
நீ இல்லா நாழிகையில்
தறிகெட்டு ஓடும்
திமிர்பிடித்த
உன்  நினைவுகளால்…
ஓர் அதட்டலில்
வாலைச் சுருட்டி
ஒடுங்கி…  சுருண்டு…
படுத்துக் கொள்ளும்…
நாய் குட்டி என…

இந்த ஏந்திழையும் 
அஃறிணை காதலி
ஆனேனே!!!

அன்று,
ஒரு முன்பனிக் காலத்தில்
பின்பனி இரவில்
தொலைதூரம் கூட்டிச்சென்று
வழி தெரியா தெருவில்
விட்டு வர…
நான் வரும் முன்னே
என்னைத் தேடி
வீடு  வந்து
வாலை ஆட்டிக் குழையும்
உன்னைப் போலவே…

இன்று,
மறக்க நினைத்து
எங்கோ தொலைத்து வந்த
உன் நினைவுகளும்…
ஒளிந்து… மறைந்து…
கண்ணாம்மூச்சி ஆடி…
என் தனிமை தேடி வந்து
வாலை ஆட்டிக் குழைகிறது…

கடற்கரைக் கூட்டத்தில்
கரையோர மணற்பரப்பில்
தொலைந்து போன
கால்தடம் போலவே…
என்னுள் தொலைந்த உன்னை
ஏங்கித் தவித்து…
தீராத் தேடலுடன்
தேடி அலைகிறது
வேறு போகிடமற்ற பாழ்மனது!!!
                                              — லயா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here