57. வானம் வசப்படும்_ 9.6_ நர்மதா சுப்ரமணியம்

0
473

பரந்து விரிந்த உலகில்

ஆசைகள் அனைத்தும்

நிறைவேறிவிடுகிறதா என்ன??

நிறைவேறிடத்தான்

விடுகிறார்களா?

இவ்வையகத்தோரும்

சுற்றத்தாரும் !!!

அதுவும் பெண்ணென்று

வந்துவிட்டால்

குட்டிச்சுவரும் போராளியாகி,

போதிக்கத் தான் வந்திடுமே!!

அரிவைக்கு அறிவு எதற்கு?

தெரிவைக்கு இலக்கெதற்கென

இழித்து பேசக் கூடிடுமே

இச்சமூகம்!!

அவ்விழிசமூகத்தின்

ஒருத்தியாய் பேதைமை

பெதும்பையாய்த் தான்

இருந்தாள் அவளும்!!

தனதாசை குறிக்கோளாயேற்று

நிறைவேற்றிடத் தான்

எனக்கான இவ்வாழ்க்கையென

போராடினாள் அவள்!

தெருவில் கேட்ட

தப்பாட்டத் தாளத்திற்கு

தப்பும் தவறுமாய் -அவள்

குட்டி கால்களும்,

சுட்டிக் கைகளும்;

ஆட்டம் போட்டு நடனமாடிட,

கைதட்டி ஆர்பரித்திருந்தனர்

அவளின் பெற்றோர்!

வளர்ந்து வரும் வேளையிலே

பள்ளியின் நடனப்போட்டியில்

கோப்பைகளை அள்ளிவரும்

மகத்தான பொழுதுகளில்

பூரித்து மகிழ்ந்திருந்தனர்

அவளின் பெற்றோர்!

பால்யத்தின் வயதினிலே

வளரிளம் மங்கையாய்

அவள் பருவ மெய்திவிட

“அடங்கியிரு! சத்தமாய் சிரிக்காதே

அதிர்ந்து நடக்காதே”

பற்பல கோடுகளுக்குள்

ஒடுங்கி முடங்கி இருக்கச் செய்து

அவளின் வாழ்நாள் கனவையும்

அர்த்தமற்ற கனவாய் மாற்றிட

முனைந்தனர் அவளின் பெற்றோர்!

சிறு பாதம் ஆடிய போது

ஆகா…ஓகோ..வென

கைத்தட்டி ரசித்திருந்தவரும்,

வயதுக்கு வந்துவிட்ட பேதையவள்

கால்களுக்கு ஆட்டமெதற்கென

அடுப்படியே கதியென்று

அளித்திருந்தனர்

அவளின் கடமையாய்!


கண்ணானவனே

கணவனென மொழிந்து,

அவனுக்கு சேவை செய்வதே

வாழ்வின் பாக்கியமெனயுரைத்து

அவளின் நடன ஆசையை

நப்பாசையாய் மாற்றியிருந்தது

இச்சமூகம்!

குழந்தைக்கும் தாயான பின்பு,

அக்குழந்தை வளர்ந்து வந்த நேரத்தில்,

அதே தப்பாட்டத் தாளத்திற்கு

தப்பும் தவறுமாய் ஆடியது

அக்குட்டி கால்கள்!


தனதிலக்கினை

மகளுடையதாய்

மாற்றியிருந்தாள் அவள்!

தனக்காய் தனது குறிக்கோளுக்காய்

எதிர்த்து குரல் கொடுக்காமல்

போராடாமல் இருந்தவள்

தன் மகளுக்காய் போராடினாள்!

கணவனேயாயினும்

எம் பெண்ணின்

லட்சியத்திற்கு தடைசெய்தால்

அவன் தேவையில்லையென

தூக்கியெறிந்தாள்!

பெண்ணின் மாண்பாய்

இச்சமூகம் வகுத்திருந்த

வரையறையை வெட்டியெறிய

ஆடினாள் வெகுவாய்

போராடினாள்!


தனது மகளுடன்

சென்றாள் அவளும்

நடனப்பள்ளிக்கு!

இருவரின் குறிக்கோள்களும்

ஓரிடத்தில் ஒன்றாய் சங்கமிக்க,

தாயும் மகளுமாய்

மேடையேறினர்

நடனப் போட்டியில்!


அந்நிகழ்ச்சியின்

அரும்பெரும் வெற்றியாளராய்

கோப்பையை பெற்றிருந்தனர்

அப்பெண்கள்!

சமூகத்தால்

பெண்ணிற்கு நடனமெதற்கென

புறம் தள்ளப்பட்ட அப்பெண்கள்!

சிறகுகள் வீசி வானில் பறந்திட,

முட்டி மோதி போராடி,

முன்னேற எத்தனித்தால் மட்டுமே

வானம் வசப்படும் பெண்ணே!


இத்தனையும் கடந்து வந்து

வெற்றிவாகை சூடி

வசப்படுத்தி காட்டினர்

அப்பெண்கள்!
LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here