Tsc 29. முகை _ விஜயமலர் சிவநயனி முகுந்தன்

0
385

நன்றாகத்தான் இருந்தது… பல லட்சம் வீரர்களுள் ஒன்றாய் நீச்சலடித்து ஒரு வீட்டை கண்டு அதனுள்ளே புகுந்து வெற்றிக்களிப்பில் மிதந்த போது நன்றாகத்தான் இருந்தது… கதகதப்பாய், சுகமாய், அப்பப்பா இனிமையோ இனிமை… அடடே என்ன அது… என் தேகம் வளர்கிறதே… ஓ உலக வரலாற்றில் சாதனை படைக்க இறைவன் கொடுத்த வரமோ அவை… எதோ மார்பின் மத்தியில் படபடக்கிறதே… அடடா ஓர் நாள் காதலில் களித்து இன்புற்று வாழ இயற்க்கை தந்த கொடையோ அது. கைகால்கள் நீள்கிறதே… துள்ளிக்குதிக்க மனம் ஏங்குதே… சாதுவாய் பசிக்கிறதே… நினைத்த உடனே பசி தொலைகிறதே…

ஆகா என்ன இனிமை… சுவாசிக்க வேண்டியதில்லை, வருந்த வேண்டியதில்லை, உறக்கம் மட்டும் வேலையாய்… நன்றாகத்தான் இருந்தது… மெதுவாக கையசைத்து என்னை உணர முயன்றேன். ஆணா பெண்ணா தெரியவில்லை… கதவை திறந்து வெளியே வந்தால், தொட்டுப்பார்க்கும் ஆண்கள் மூலம் புரிந்துகொள்வேனோ பெண்ணென்று… உலக சுமையை தலையில் போட்டால் தெரிந்து கொள்வேனோ ஆண் என்று… ஆனாலும் தெரியவில்லை… நான் யார் என்று…

எப்போது உலகம் என்னை காணும்… என்னை படைத்தவர்களை எப்போது பார்ப்பேன்… இன்றா நாளையோ… ஆவல் அடக்க முடியவில்லையே…

அந்த அறைக்குள் சென்று நான்கு மாதம் இருக்குமா, இன்னும் எத்தனை நாள் காத்திருக்க வேண்டும். எப்போது என் தாயின் மார்பில் பாலருந்துவேன். எப்போது தந்தையின் அரவணைப்பில் ஊஞ்சலாடுவேன்… அண்ணா உண்டா, பாட்டி உண்டா…

யார் அது… எதற்காக ஓடுகிறார்கள்… எதற்கு என்னை சுற்றி இத்தனை போராட்டம்… ஐயோ… என்ன இது… எதுவோ நீள உலோகம் என்னை நோக்கி வருகிறதே… என் மார்பை பற்றுகிறதே… இழுக்கிறதே… வலிக்கிறது… தங்க முடியா வலி… என்னை விடுங்கள்… வலிக்கிறது… நான் துடிப்பது அவர்களுக்கு தெரியவில்லையோ…புதிதாய் முளைத்த கைகால் கொண்டு விடுவிக்க பார்க்கிறேன்… அய்யய்யோ… ஒரு கரம் பிய்ந்து மிதக்கிறதே… விடுங்கள்… நான் வரவில்லை… வி… வி… விடுங்கள்… இங்கே நன்றாக இருக்கிறது… விடுங்கள்… கோபம் வருகிறது எனக்கு அழுத்தாதே வலிப்பது தெரியவில்லை… ஆ… எங்கே இழுக்கிறாய்… வி… விடு… இழுத்த வேகத்தில் எங்கோ விழுகிறேன். கரடு முரடாய் இருக்கிறது. குளிர்கிறது… எரிகிறது… தகிக்கிறது… என் மூச்சும் கரைந்து போகிறது… இறுதியாய் மெதுவாக துடிக்கிறேன்… ஒருமுறை விழிக்கிறேன்… என்னை பார்த்து கோரமாய் சிரிக்கும் மனிதர்கள்…

பெட்டைப்புள்ள தொலையட்டும்…

‘ஓஹ் நான் பெண்ணா… எதற்க்காக என்னை அழித்தார்கள்’ காரணம் புரியாமலே காற்றோடு கலக்கிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here