Tsc 57. குனிந்துப் பார்.. _ பாலா சுந்தர்

0
82

குனிந்துப் பார்…

“இன்னைக்கு ஒரே டென்ஷன்… எதுக்கு தான் வாழுறோம்னு இருக்கு… கையில பத்து பைசா இல்ல… ஸ்ரெஸ் ஒரே ஸ்ரெஸ்… போடி அங்குட்டு இட்லி வேணுமா? சட்னி வேணுமான்னு வந்திட்டா… திங்கிறதுக்கு துட்டு வேணும்ல்ல? எங்கயிருந்து வரும்?” என்று அவன் அறைக்குள்ளிருந்து கத்தியபோது அவனது கால் பாதங்களை யாரோ சுரண்டியதும், குனிந்து நிலம் நோக்கினான்.

எறும்புகளோ கரப்பான்களோ இல்லை, ஆனால் குனிந்து பாதத்தை தூக்கியபோது தரையில் இருந்து பல கைகள் தெரிந்தன.

ஒரு கையைப் பற்றியதும் அது அவனை தரையைப் பிளந்துகொண்டு ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு மண்ணுக்கடியில் இருந்த ஒரு அழிந்த சிதைந்த பெரு நகரத்திற்கு இழுத்தச் சென்றது.

ஒரு எலும்புக்கூட்டின் கழுத்துப்பகுதியை ஆறடி நீளமுள்ள ஒரு பாம்பின் எலும்புக்கூடு கவ்வியிருக்க, ஒரு மலைக்குன்றில் புலியால் துரத்தப்படும் பெண்ணின் ஓவியமும், யானையின் கால்களில் மிதிபட்டு இறக்கும் ஆணின் உருவமும் , ஆற்றுத் தண்ணீரில் முதலையின் பிடியினால் வலியால் துடிக்கும் இளைஞனின் உருவமும் , ஓநாய்களால் துரத்தப் படும் சிறுவர்களின் உருவமும் வரையப்பட்டிருந்தது.

தன்னைப்பிடித்திருந்த கைகளை உதறிக்கொண்டு தனது அறைக்குள் மீண்டும் புகுந்தவன் மனைவியிடம் சென்று, “இப்ப துளிகூட ஸ்ரெஸ் இல்ல… கொஞ்சம் இட்லி தர்றியா?” என்றான் அந்த இட்லியின் அருமை உணர்ந்து… உயிருக்காக ஒவ்வொரு நிமிடமும் போராடத்தேவையில்லாத நிலை உணர்ந்து.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here