Tsc 82. மனிதம் இனி?_ Sharmi Usha

0
489

கூடிய விரைவில், குடியிருப்பை விரிவாக்கம் செய்யும் பொழுது பூங்கா அமைப்போம் என்று எங்களை வீட்டை வாங்க வைத்த பில்டர், இரண்டு வருடமாய் இழுத்தடித்து இன்று தான் பூங்காவை கட்டும் வேலையை ஆரம்பித்து இருந்தார்.

“பார்க் எப்ப தான்மா வரும்?”,

நண்பர்களுடன் அதில் விளையாட ஆசைபட்டு கேட்டு கேட்டு அழுத்து போன மகன், இன்று இதைப் பார்த்தும் சந்தோசத்தில் குதிப்பான் என்ற எண்ணிய படியே பள்ளியில் இருந்து திரும்பும் அவனின் வரவை எதிர்பார்த்திருந்தேன்…

“அம்மா…”,

வழமை போல் பார்வை தொடும் முன்னே அவன் குரல் கலந்து செவிகளைத் தீண்ட, வழமை மாறி அதீத அதிர்ச்சி அதில் கலந்திருந்ததில் அது இன்ப அதிர்ச்சியாய் இருக்கும் என்று எண்ணும் வேளையில் கண்களில் நீர் திவள மூச்சிரைக்க ஓடி வந்து கொண்டிருந்தான் விழித் திரையில் அவன் விழுந்த சமயம்!

“அம்மா… ஒரு பிக் ட்ரக் அங்க மரத்தை எல்லாம் காலி பண்றேன்னு அங்க இருந்த உடைஞ்சு… இது கீழ விழுந்து … மம்மி இல்லாம கத்துது… பாவம்மா இது…” கையில் குற்றுயிராய் இருந்த குருவிக் குஞ்சு ஏந்திய படி!

“இதுக்கு வீடும் இல்லை…மம்மியும் இல்லை… அவங்க ஹவுஸ்இருந்த இடத்துல் ஏன் பார்க் வைக்கிறாங்க? பார்க்கே வேண்டாம் எனக்கு”,

அழுகையோடு எனை நோக்கி கேட்க மகனின் நியாயமான கேள்விக்கும் புலம்பலுக்கும் பதில் தெரியாது, ‘கடவுளே, இவன் தலைமுறையிலாவது மனிதத்தை எடுத்துகொள்ளாதே அவர்கள் மனிதர்களாக வளர்ந்த பின்… “ மானசீகமான மனம் வேண்டுதல் வைக்க, வலியில் கண்கள் சொருகி அணத்திய குருவிக் குஞ்சை கண்டு கண்ணீர் உகுத்தது கையாளாகாத என் மனிதம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here