Tsc 83.தந்தையர் தினம் – சித்ரா. வெ

0
344

தந்தையர் தினம் – சித்ரா. வெ.

இன்று தந்தையர் தினமாம், அலுவலகத்திற்கு செல்லும் வழியில் முகநூல் பதிவுகளை பார்க்கும் போது தான் தெரிந்தது. அவரவர் தந்தைக்கு வாழ்த்து தெரிவித்தும், தந்தை இல்லாதவர்கள் அவர்கள் தந்தையின் நினைவு குறித்தும் பதிவு செய்திருந்தனர்.
இப்படி எத்தனையோ தந்தையர் தினங்கள் வந்து போயிருக்க, அப்போதெல்லாம் குறிப்பிட்டு வாழ்த்துகள் சொல்ல வேண்டும் என்று தோன்றாதவளுக்கு இன்று வாழ்த்து சொல்ல வேண்டுமென்று தோன்றியதால், அலுவலகத்திற்கு சென்றவள், மீண்டும் அலுவலகத்திலிருந்து திரும்பி வரும்போது, ஒரு பூங்கொத்தை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு விரைந்தாள்.

வாசலிலேயே தந்தை படுத்திருக்க, அவரை பார்த்துக் கொண்டே வந்தவள், அவரை கடந்து வேகமாக உள்ளே நுழைந்து அன்னை முன் நின்று, “அம்மா இன்னைக்கு தந்தையர் தினமாம்… வாழ்த்துகள் ம்மா…” என்று கூறி, பூங்கொத்தை அவரிடம் கொடுத்து அவர் கன்னத்தில் முத்தமிட,

“போடி உனக்கு வேற வேலையில்லை… இதுக்கு இவ்வளவு காசு கொடுத்து ஒரு பூங்கொத்தை வேற வாங்கிட்டு வந்திருக்க, சரி ரோஜா அழகா இருக்கு தலையில் வச்சுக்க… உன்னோட கல்யாண விஷயமா ஒருத்தரிடம் கடன் கேட்டிருந்தேன் இல்ல… அவங்க இன்னைக்கு வரச் சொன்னாங்க… நான் போயிட்டு வந்துட்றேன்… சாப்பாடு எடுத்து வச்சிருக்கேன் சாப்பிடு…” என்று சொல்லிவிட்டு சென்றார்.

இது எதுவும் தெரியாமல், எந்த கவலையையும் பொறுப்புகளையும் அருகில் சேர்க்காமல் நிம்மதியாக குடி போதையில் உறங்கிக் கொண்டிருக்கும் தந்தையை ஒருமுறை பார்த்து விரக்தியாய் சிரித்தவள்,

பெற்றெடுத்ததிலிருந்து அன்னையின் கடமை மட்டுமல்லாமல் தந்தையின் கடமையையும் சேர்த்து செய்து, பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தது முதல், புத்தகங்கள், சீருடை, பேனா, பென்சில், பண்டிகைக்கு புது துணிமணிகள் எடுத்து கொடுத்து தேவைகளை பூர்த்தி செய்து, இப்போது திருமணம் செய்து வைக்கும் கடமைக்காக கடன் கேட்டு அலைவது என்று ஓயாமல் ஓடிக் கொண்டிருக்கும் அன்னைக்கு அன்னையர் தின வாழ்த்துகள் சொல்வதை விட தந்தையர் தின வாழ்த்துகள் சொல்வதில் தான் அவள் பெருமை கொள்கிறாள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here