என் ஜீவன் நீயே_10_ஜான்சி

0
38

அத்தியாயம் 10

ஜீவனை டெல்லியிலிருந்து அழைத்து வந்து டாக்டர் ராஜேஷ் மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்த்து இருந்தனர். அவன் இளவயதின் காரணமாகவும், நல்ல உடல் நிலை காரணமாகவும் விரைவாக குணமடைந்துக் கொண்டு இருந்தான்.

அனிக்கா ரூபனின் தொழிற்சாலையை மேற்பார்வையிட்டு கவனித்துக் கொள்ள, ரூபன் ஜீவனின் தொழிற்சாலையை கவனித்துக் கொண்டு இருந்தான். ஜீவனை தாக்கிய வழக்கில் அவ்விடத்தில் இருந்த கேமராக்களில் பதிந்து இருந்த காணொளிகள் ஒரு வகை சாட்சி எனில், பிடிப்பட்ட குற்றவாளிகள் மற்றொரு வகையில் சாட்சியாக இருக்க படேல் அண்ட் க்ரூப்பிற்கு எதிராக ஜீவன் சார்பில் ரூபனால் வழக்கு போடப்பட்டு இருந்தது.

அனிக்கா அவனை வந்து நலம் விசாரித்துச் சென்றாள். குடும்பத்தினர் ஒவ்வொருவராக வந்துச் செல்லவும் மனம் இலகுவாகுவதற்கு பதிலாக கனத்தது என்னமோ உண்மை. சுற்றிலும் நிகழ்வன ஒவ்வொன்றாக புரிய வர, ஜீவன் வழக்கத்திற்கு மாறாக மிகவும் அமைதியாக இருந்தான்.

“என்னடா?” மதிய உணவை கொண்டு வந்திருந்த ரூபன் தம்பியின் மௌனம் பொறுக்காமல் கேட்டான்.

“உங்க எல்லாரையும் கஷ்டப்படுத்துரேனில்ல.”

“இதென்ன பேச்சு, உன்னால இங்கே யாரும் கஷ்டப்படலை. எனக்கொன்னுன்னா நீ பார்க்க மாட்டியா? அப்ப நான் இப்படி கேட்டா உனக்கு எப்படி இருக்கும்?”

“…”

“நீ கொஞ்ச நாளில் நல்லா ஆகிடுவ பாரு.”

“நல்லா ஆகிடுவேன்ல அண்ணா?” தன்னம்பிக்கை இழந்தவனாக பேசுகின்றவனை காணக் காண ரூபனின் மனம் பொறுக்கவில்லை.

“நூறு சதம்”

“அடங்காம ரொம்ப ஆடிட்டேனில்ல, நீ சொன்னதை கேட்டிருக்கணும்.”

“சும்மா இருடா… இப்ப எதுக்கு இந்த பேச்செல்லாம்?”

“நீ ஆள் வச்சது எனக்கு தெரியாது, தெரிஞ்சிருந்தாலும் உன்னை திட்டி இருக்கத்தான் செய்வேன். அப்ப நான் அப்படித்தான் இருந்தேன். திமிரா…” அவன் உதடுகளில் கசந்த முறுவல்.

“அது தப்பில்லடா ஜீவா… அது உன்னோட தன்னம்பிக்கை.”

உணவை உண்டு முடித்தவன் தட்டில் கை கழுவியதும் ரூபன் தட்டை கழுவிக் கொண்டு வைத்தான். ஜீவன் படுக்கையில் இருந்து எழுந்து நடக்க முயற்சித்தான்.இப்போதெல்லாம் அவனால் சின்னச் சின்ன எட்டுகள் எடுத்து நடக்க முடிந்தது.

அந்த காரிடாரில் அண்ணனும் தம்பியும் தோளோடு தோள் சேர்த்து மெதுவாக நடந்துக் கொண்டு இருந்தனர். ஜீவன் களைப்பாக உணரவும் அவனை படுக்கையில் அமர வைத்தான்.

“நீ மட்டும் ஆள் அனுப்பலைன்னா இந்நேரம் எனக்கு விசேஷம் கழிச்சிருப்பாங்கல்ல அண்ணா?” (விசேஷம்- இறந்து போனவர்களுக்காக மரணத்திற்கு அடுத்து ஒற்றைப் படை நாள் ஒன்றில் நடத்தும் சம்பிரதாயம்)

“ஜீவா…” ரூபனின் குரல் உயர்ந்து விட்டிருந்தது.

“இப்படி எல்லாம் பேசாதடா… உன் தன்னம்பிக்கை எல்லாம் எங்கே போச்சு சொல்லு?”

“ம்ம்… முயற்சிக்கிறேண்ணா”

செவிலியர் தந்த மாத்திரைகளை உண்டவன் மறுபடியும் தூக்கத்தில் ஆழ்ந்தான்.

தனக்குள் குழம்பிக் கொண்டு படுத்து இருக்கின்றவனின் சிகையை வருடிக் கொண்டு இருந்தான் ரூபன்.

அடுத்த நாள் முதலாக அவனுக்கு மனநல மருத்துவரின் கவுன்சலிங்க் ஆரம்பிக்கப்பட்டது.

உடலிலும், மனதிலும் அடிப்பட்டு நொந்து நூலாகி, நம்பிக்கை இழந்து, அடுத்து என்ன எனத் தெரியாமல் சிகிச்சைக்கு நடுவில் தன்னை மீட்டுக் கொள்ளப் பாடுபடும் ஜீவன் ஒருபுறம் என்றால் மனதளவில் சிதிலமாகி சிகிச்சைதான் இல்லை எனினும், அவளை மீட்டுக் கொள்ள அக்கறையும் காட்டாத சுற்றமும் உறவுகளுடனான திவ்யாவின் பெரும் போராட்டம் மறுபுறம்.

ஜாக்குலினும், ராஜாவும், ராஜ், இந்திரா தீபனுமாக திவ்யாவை அவள் வீட்டிற்கு விட சென்று இருந்தார்கள். அவளது விருப்பத்தை அங்கே யாரும் மதிப்பதாகவே இல்லை. கிடைத்தது வாய்ப்பென்று ஜீவனின் உடல் நிலையை காரணம் காட்டி அவளது பெற்றோரும் உறவினர்களும் அவளது நிச்சயத்தை முறிப்பது ஒன்றே வேலையாக இருந்தனர்.

அந்த திருமணத்தில் அனைவருக்கும் ஆரம்பம் முதலே இருந்த ஒவ்வாமை உணர்வு இப்போது பூதாகரமாகி நின்றது. வந்தவர்களை வரவேற்கவும் இல்லை, அமரச் சொல்லவும் இல்லை. மகனை மருத்துவமனையில் சேர்ப்பித்து விட்டு மருமகளை அவளது வீட்டில் விட்டு வர வந்தவர்கள் எந்த மன நிலையில் இருப்பார்கள் என்றே புரிந்துக் கொள்ளாமல்,

“நாங்க எங்க பொண்ணுக்கு வேற மாப்பிள்ளை பார்த்து கட்டி வைப்போம். நடுவில நீங்க யாரும் வரக் கூடாது.” பெரியவர் ஒருவர் அழுத்தம் திருத்தமாகச் சொல்ல யாருமே பதில் எதுவும் சொல்லவில்லை.

“வரோம் மா திவ்யா, உடம்பை பார்த்துக்க. மனசை போட்டு குழப்பிக்காத” திவ்யாவிடம் சொன்ன ஜாக்குலின் அனைவரையும் புறப்படச் சொல்லி தானும் புறப்பட்டாள்.

வீட்டில் இருந்தவர்களை திரும்பி பார்த்த திவ்யா தனது கையில் இருந்த பையை காட்டி, “இதை கொடுத்திட்டு வரேன்” என்றவளாக வாசல் நோக்கி விரைந்தாள். மற்றவர்கள் அவளை தடுக்க முடியாமல் பார்த்து நின்றனர்.

இந்திரா அருகில் சென்றவள் அவர் கையில் அந்த பையை கொடுத்ததை அவள் வீட்டினர் பார்த்துக் கொண்டு இருந்தனர்.ஆனால், சற்று தொலைவு என்பதால் பேசியவை எதையும் கேட்க முடியவில்லை.

திவ்யா பையை கொடுத்ததோடு இந்திராவின் அருகில் நெருங்கியவள், “அத்தே, உங்க மூணாவது மருமக நான் தான்.” என்றாள்.

“ஆமாம், பின்ன நீ இல்லாம யாரு? நீதான் என் புள்ள ஜீவாவோட பொண்டாட்டி” என்றவர் புன்னகைக்க முயன்றார்.

எல்லோரையும் சுற்றிப் பார்த்தவள் “அவங்க பேசினத மனசில வச்சுக்காதீங்க, எனக்காக அவங்களை மன்னிச்சுக்கோங்க” என்றாள்.

“திவ்யா எத்தன நேரம் மன்னிப்பு கேட்ப? விடுமா” ஜாக்குலின் இடைமறித்தாள்.

“ஜீவா சீக்கிரம் சரியாகிடுவான்… நான் தினம் அவனுக்காக வேண்டிக்கிறேன். சீக்கிரமா வந்து என்னை ஜீவாக்காக பொண்ணு கேட்டு கட்டிட்டு போகணும் சரியா? நான் உங்களுக்காக காத்திருப்பேன்” சொன்னவள் விருட்டென திரும்ப வீட்டிற்கு சென்று விட்டிருந்தாள்.

அடுத்த ஒரு வாரம் தன்னைத்தானே சிறைவாசம் வைத்துக் கொண்டாள் என்றுத்தான் சொல்ல வேண்டும். தங்களை மீறி அவள் செல்லப் போவதில்லை எனத் தெரிந்ததும் உறவினர்களின் தலையீடு குறைந்தது. ஒரு காலத்தின் அந்த வீட்டின் செல்லப் பெண்ணாக அவள் வலம் வந்தவள் எனச் சொல்ல முடியாதது போல இன்று அவளது நிலை இருந்தது.

‘உன்னை முடிவெடுக்க விட்டதால் தானே?’ என்பது போல அவளது அத்தனை முடிவுகளையும் அவர்கள் எடுக்க ஆரம்பித்து இருந்தனர்.

ரூபனுக்கு திவ்யாவின் அக்கா கணவர் கொடுத்த குடைச்சலில் அடுத்த பத்து நாட்களில் திவ்யாவின் எக்ஸ்பீரியன்ஸ் சர்ட்டிபிகேட்டும் அதனோடு கூட அவளுக்கு வந்து சேர வேண்டிய சம்பளப் பணம் முதலான அத்தனையும் கணக்குப் போட்டு செக் அனுப்பி இருந்தனர்.

வீட்டில் இருந்தால் ஆகாது எனும் நிலைக்கு வந்திருந்த திவ்யா சம்பளம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை எனும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டவளாக புதியதொரு வேலையில் சேர்ந்தாள்.

‘இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலக்குமாரி?!’ என அவள் மனம் அவளை கொக்கரிக்கையில் எல்லாம் ஆற்றுவார் தேற்றுவாரின்றி மனதிற்குள்ளாக அழுது புலம்பியே சோர்வாள்.

அவளது ஜீவனை இனி அவள் எப்படி கண்டெடுப்பாள்?

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here