என் ஜீவன் நீயே_11_ஜான்சி

0
61

அத்தியாயம் 11

சில மாதங்கள் கடந்திருந்தன

ஜீவன் தற்போது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி தங்களது வீட்டிற்கு வந்திருந்தான், முன்போல அவனது உடல் நிலை மாறாவிட்டாலும் தனது வேலையை தானே செய்யும் நிலைக்கு வந்திருந்தான். தலையில் பட்ட அடி ஆழமாக இல்லாதிருக்க ஓரளவிற்கு நலமானவன், கால்களில் விழுந்த அடியால் தான் தடுமாறினான்.

முன்புவாக்கர் உதவியுடன் நடந்துக் கொண்டு இருந்தவன் இப்போது மெட்டல் ஹேண்ட் வாக்கருடன் நடக்க பழகி இருந்தான். மனம் மட்டும் எப்போதும் இரைச்சலாய், உதடுகள் மட்டும் இறுக்கமாய். தற்போது எண்ணி எண்ணி பேசும் நிலைக்குவந்திருந்தான்.

குறைப்பிரசவக் குழந்தை போல ஆளாளுக்கு நொடிக்கு நொடி அவனை தாங்கிக் கொண்டு இருந்தாலும், அவனது தன்னம்பிக்கை மட்டும் கூடியது போலில்லை.

ஆசையாசையாக அவன் வாங்கிய டெண்டருக்கான ஆர்டரை முடிக்க ரூபன் உண்ணாமல் தின்னாமல் அலைந்து அலைந்து உழைக்க வேண்டியது இருந்தது.

அதுமட்டுமல்லாமல் பெரியதாக செய்ய வேண்டி எண்ணியிருந்த அனிக்காவின் வளைக்காப்பு நிகழ்வை மிகச் சின்னதாக வீட்டிற்குள்ளாகச் செய்து, சில நாட்கள் மட்டும் தங்கள் வீட்டிற்கு மகளை அழைத்துச் சென்று மறுபடி அவளை அங்கே கொண்டு விட்டிருந்தார்கள்.

மகளை பிரசவ நேரம் தங்களோடு வைத்து பார்த்துக் கொள்ள எண்ணினாலும் சூழ்நிலை காரணமாக அனிக்காவின் வீட்டினர் ஒன்றும் சொல்லவில்லை. இரண்டு தொழிற்சாலைகளிலும் கூடுதலாக சில நிர்வாகிகளை சேர்த்திருந்தாலும் கூட மேற்பார்வையிடாமல் முடியாது அல்லவா? எனவே அனிக்காவின் தேவை அங்கே இருந்தது.

குழந்தை பிறக்கப் போகும் நேரம் கணவனும் மனைவியுமாக இன்பமாக கழித்திருக்க வேண்டிய நேரம், இவனால் தனித்தனியே வேலை வேலை என பரபரக்க வேண்டியதாயிற்றே? தனது நிதானமின்மையால் பிறரை வதைக்க நேரிட்டு விட்டது குறித்து அவனுக்கு பெரிய குற்றவுணர்ச்சி.

அனிக்காவும் ரூபனும் கூட தங்களது வீட்டில் அல்லாமல் அங்கேயே வந்து விட்டிருந்தனர். அனைவரும் ஒரே இடம் இருப்பதுவும் கூட நல்லதுதான். கலந்துரையாட, தங்களுக்குள்ளாக அடுத்தடுத்த செயல்களை விவாதிக்க அவர்களுக்கு வசதியாக இருந்தது.

ஒருவருமே ஜீவனது முகம் கோண அனுமதிக்கவில்லை. இப்போதெல்லாம் அனிக்காதான் அவனை சீண்டுகிறாள் ஆனால் அவன் அதற்கு சிரித்தால்தானே?

அன்று இரவு உணவு நேரத்திற்கு பின்னர் பெரியவர்களோடு சற்று பேசியவாறு அமர்ந்திருக்க, சட்டென்று அனிக்காவிற்கு வலி எடுத்தது. ரூபன் இன்னும் வேலையில் இருந்து வந்திருக்கவில்லை. பொறுத்து பொறுத்து பார்த்தவள் இந்திராவிடம் சொல்ல அவர் பரபரத்தார்.

ராஜ் வண்டி எடுக்க புறப்பட்டார், இந்திரா அனிக்காவோடு பின் சீட்டில் அமர்ந்துக் கொள்ள அந்த நேரம் கதவை பூட்டி விட்டு ஹேண்ட் வாக்கரோடு ஜீவன் வருவதை பார்க்கவும் எழுந்துச் சென்று மகனை அழைத்து முன்னிருக்கையில் வைத்து வண்டியை எடுத்தார்.

ஜீவன் முன்னிருக்கையில் இருந்தவன் ரூபனுக்கும், அனிக்காவின் அன்னை சாராவுக்கும் தகவல் தெரிவித்தான்.

மருத்துவமனை இருக்கையில் அமர்ந்து எங்கோ வெறித்த வண்ணம் அமர்ந்திருந்தான் ஜீவன்.

“ஜீவா” அவனுக்கு மிகவும் பரிச்சயமான அந்த கரம் அவனது கையை பற்றிக் கொண்டது.

எதிர்பாராத விதமாக அவனை அங்கே காண நேர்ந்ததில் திவ்யா நெகிழ்ந்திருந்தாள். சுற்றும் முற்றும் கூட்டமாய் கசகசவென இருந்தாலும் கூட யாருமற்ற வெளியில் இருவரும் தனித்து இருப்பது போலொரு பரவசம்.

அவனது முகத்தை அவள் வருடினாள், தழும்புகளை பார்வையிட்டாள். விடாமல் கண்ணீர் மட்டும் பொழிந்துக் கொண்டே இருக்க, “இப்ப பரவாயில்லையா ஜீவா? நீ என் மெசேஜீக்கு ரிப்ளையே செய்ய மாட்டேங்குற ஏன்?” என்றாள்.

அவளை உணர்வற்று வெறித்தவனாக பார்த்துக் கொண்டு இருந்தவனை அணைத்துக் கொள்ள மனம் பரபரத்தது. ஆனால், பொதுவெளியில் என் செய்வதாம்? செயலற்று நின்றாள்.

ரூபன் விரைந்து வருவதைக் கண்டதும் எதிர்கொண்டு விசாரித்தாள்.

“நல்லா இருக்கியாமா?”

“ஆமாண்ணா…”

“இந்த நேரம் எப்படி?”

“எங்க மாமாக்கு உடம்புக்கு சரியில்லை, இரவு சாப்பாடு கொடுக்க வந்தேண்ணா.

“இதோ வரேன்மா” மனைவியை விசாரிக்கச் சென்றவன் பிரசவத்திற்கான தயாரிப்புகள் நிகழ்ந்துக் கொண்டு இருக்க, தானும் உடன் உள்ளே செல்வதற்கான ஏற்பாடுகளில் இறங்கினான்.

“யாருக்கு சுகமில்லை ஜீவா?”

“அனிக்கு டெலிவரி இருக்கும் போல…” முனகினான்.அனிக்காவின் அன்னை சாராவும், அண்ணி பிரபாவும் அவர்களை கடந்து சென்றனர். அனிக்காவின் தந்தை தாமஸீம் கிறிஸ்ஸீம் வெளியே நின்றனர். கிறிஸ்ஸின் மகளை வழக்கம் போல தீபனின் மனைவி ப்ரீத்தியிடம் விட்டு வந்திருந்தனர்.

“அப்படியா? அச்சோ அது தெரியாம அண்ணாவை நிறுத்தி பேசிட்டு இருந்திட்டேன்.”

“…”

“பேச மாட்டியா ஜீவா?

“நல்லா இருக்கியா?”

“ம்ம்… ஏதோ…” அவள் சொல்லும் முன்பாக முணுக்கென்று கண்ணீர் வழிந்தது அசைவற்று பார்த்திருந்தான்.

“சாரி”

“எதுக்கு?” கண்களை துடைத்துக் கொண்டாள்.

“உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்னு நினைக்கிறேன்.”

“அதெல்லாம் ஒன்னுமில்ல, அது என்னமோ அப்ப அப்படி….அதை விட்டுரு ப்ளீஸ்.”

யூ மூவ் ஆன் திவ்யா

“நீ ஒரு வருசம் காத்திருக்கச் சொன்னல்ல…”

“அதுக்குள்ள நான் பழையபடி ஆவேனான்னு தெரியலையே…” தனது கால்களை காட்டினான்.

“அதெல்லாம் முன்னை விடவும் நல்லா ஆகிடுவ பாரு, நான் உனக்காக வாராவாரம் கோவிலுக்கு போறேன், விரதம் வைக்குறேன்… தெரியுமா? நீ முழுசா நல்லா ஆகிடுவ.”

“ஆகலைனா?”

“ஆகலைனாலும் கூட நீ தான் என் புருசன்

“அதெல்லாம் பேசறதுக்குதான் நல்லா இருக்கும், நடைமுறைக்கு சரிவராது.”

“ஜீவா, இப்படி பேசாத ஜீவா…”

உன் வாழ்க்கையை பார்த்துக்கோ திவ்யா, என்னால நிறைய பேருக்கு கஷ்டம். இப்ப உன் வாழ்க்கையையும் கெடுத்து வச்சிருக்கேன்னு நினைக்கிறப்ப வெறுப்பா இருக்கு.”

ப்ளீஸ் டா இப்படி பேசாதே யாருக்குதான் கஷ்டம் வரலை?, இதெல்லாம் வாழ்க்கையில் சகஜம் தான்... கஷ்டம் வந்ததும் உங்க வீட்ல யாரும் கழண்டுக்கலை தானே? அப்ப நான் மட்டும் கழண்டுக்கணும்னு நினைக்கிறது என்ன நியாயம்?”

“…..”

“வேணும்னா நாம ரெஜிஸ்டர் மேரேஜ் செய்துக்கலாமா?”

“அர்த்தமில்லாம பேசாத திவ்யா, நீ உங்கம்மா அப்பாவோட ஒத்தைக்கோர் பொண்ணு. அவங்களை தள்ளி வச்சுட்டு வரேன்னு சொல்லுற?”

“அப்புறம் நீ உன்னை தள்ளி வைக்கணும்னு சொல்லுறியே?”

“….”

“ஒரு வருசம் நீ சொல்லிருக்க, ஒரு வருசத்தில நீ வர என்னை கட்டிக்குற ஆமாம்.

ஏறிட்டவன் அழுது சிவந்திருந்த அந்த முகத்தை காண முடியாமல் திரும்பினான்.

எதிரில் ரூபன் வந்தான், “பொண்ணுடா” குழந்தை பிறந்து விட்டதை சொல்லவும் ஜீவனும் திவ்யாவும் வாழ்த்துக்கள் கூறினர்.

திவ்யாவிற்கு அழைப்பு வர, “வந்துட்டே இருக்கேன்மா” என்றாள்.

இன்னும் இவள் செல்லவில்லையா? என அண்ணனும் தம்பியும் அவளை பார்த்தாலும் எதுவும் கூறவில்லை.

“பாப்பாவை பார்க்க நானும் வரவா அண்ணா?”

“வாம்மா” அவர்கள் முன்னே செல்ல கைத்தாங்கியின் உதவியோடு ஜீவன் மெதுவே அவர்களை பின் தொடர்ந்தான்.

அந்த டெலிவரி அறையில் இப்போது அனிக்கா இல்லை குழந்தையை மட்டுமே ஒரு சிறு படுக்கை போன்ற அமைப்பில் கிடத்தி இருக்க, ரூபனின் மகள் புதிய உலகை கண்ட உவகையில் கைகால்களை அசைத்துக் கொண்டு குட்டிக் கண்களை விரித்து ஏதோ பார்த்திருந்தாள்.

வெளியில் நின்று பார்த்திருந்தமூவர் முகங்களிலும் பரவசம்.

“குட்டிம்மா சித்திடா” என்றாள் திவ்யா

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here