என் ஜீவன் நீயே_12_ஜான்சி

0
42

அத்தியாயம் 12

ஏற்கெனவே நேரம் இரவு பத்தரையை தொட்டிருக்க அதற்குமேல் அங்கே நிற்க முடியாது என புரிந்ததும் திவ்யா,

“அண்ணா அனியை நான் விசாரிச்சேன்னு சொல்லுங்க.” என்றதோடு ஜீவனின் கரம் பற்றியவள்,

“நான் வாரேன் ஜீவா, உடம்பை கவனிச்சுக்கோ.” என்றவளாக விடைப் பெற்றாள்.

அடுத்த நாள் மதியம் அலுவலகத்தில் இருந்து அனுமதி பெற்று மருத்துவமனைக்கு வந்தவள் குழந்தைக்காக மற்றும் அனிக்காக ஏதேதோ வாங்கி வந்திருந்தாள்.

திவ்யா குழந்தையை சற்று நேரம் மடியில் வைத்திருக்க, அங்கு அப்போது இருந்த சாராவிடம் அளவளாவினாள். ஜீவன் அங்கில்லை குடும்பத்தில் எல்லோருக்கும் எல்லாமும் தெரிந்துதான் இருந்தது இருந்தாலும் யாரும் எதையும் காட்டிக் கொள்ளவில்லை. ஜீவனின் உடல் நிலை சரியானதும் திருமணப் பேச்சை ஆரம்பிக்கலாம் என அவர்கள் எண்ணி இருந்தார்கள். தனது திருமணத்திற்கு ஜீவனே தடையாக இருப்பான் என்றெல்லாம் அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

சற்று நேரத்தில் எல்லாம் அனியிடம் விடைப் பெற்றுச் சென்றாள்.

சில வாரங்கள் கடந்திருந்தன.

அன்று தனது அலுவலக வேலை முடிய அரக்கப்பறக்க புறப்பட்டுக் கொண்டு இருந்தாள் திவ்யா. சந்திரிகா அக்கா ஒரு முக்கியமான பொருளை ஒருவரிடம் கொடுக்கச் சொல்லி இருந்தாள். அதை அங்கே போய் சேர்ப்பித்து வரவேண்டும்.

புறப்பட்டவாரே தான் கொண்டு வந்த பொருளை மறக்காமல் எடுத்து வைத்து சரிபார்த்துக் கொண்டாள்.

அது கொஞ்சம் பெரிய பார்சல்தான், எதற்காக இந்த பார்சலை சந்திரிகா அக்கா தனது கணவன் மூலமாக கொடுக்காமல் தன்னை கொடுக்கச் சொல்கின்றாள் என பலமுறை யோசித்தும் அவளுக்கு புலப்படவில்லை.

அலுவலகத்தை விட்டு வெளியே வந்த நேரம் அவளுக்கு அழைப்பு வந்தது. எடுத்து பேசினால், அவள் யாருக்கு அந்த பார்சல் கொடுக்க வேண்டுமோ அந்த நபரின் அழைப்புதான் அது.

“ஓ சரி” பேசி முடித்து அழைப்பை துண்டித்தாள்.

அந்த நபர் தனக்கு அனுப்பி இருந்த விலாசத்தை பார்க்க அது ஒரு பிரபல உவகத்தின் விலாசம்.

ரிக்ஷாவில் போய் இறங்கியவள் எதிர்கொண்டு வந்து பார்சல் வாங்கிச் செல்லக் கூடும் எனும் எண்ணத்தில் அங்கு நின்று சுற்றும் முற்றும் பார்க்க அவளுக்கு மறுபடி அழைப்பு வந்தது.

அலைபேசியில் நபர் சொன்ன உடை அடையாளத்தை தேடி பார்க்கையில் அந்த நபர் உணவகத்தின் உள்ளே இருந்து இவளுக்கு கையை காட்டினார், உள்ளே வரச் சொன்னார்.

‘இதென்ன பொருளை வாங்கிச் செல்லாமல் தன்னை உள்ளே அழைப்பது?’ இவள் மனம் மறுபடியும் நெருடியது.

பார்சலை தூக்கிக் கொண்டு உள்ளே சென்றாள். அவன் இருந்த இருக்கையின் எதிரே அமர்ந்தாள். அருகில் வந்து பார்க்கவும் தான் அது சந்திரிகாவின் உறவினர் மகன் என புரிந்துக் கொண்டாள். யாரோ எவரோ என எண்ணி இருக்க, தெரிந்த நபர் அதுவும் அவர்கள் இருப்பதுவும் சந்திரிகாவின் வீட்டிற்கு சற்று தூரத்தில் தான் என்றிருக்க எதற்காக இந்த நாடகம்? மனம் இடித்துரைத்தது.

“ஐயாம் சம்பத்” நீட்டிய கைப்பற்றி குலுக்கினாள்.

“திவ்யா” என்றவள் பார்சலை காட்ட அதை தனது பக்கம் வைத்துக் கொண்டவன் அவளை அமரச் சொன்னதோடு பேரரை அழைத்து சில டிஃபன் வகைகளை கொண்டு வரச் சொன்னான்.

அவன் அவசர கதியில் சொன்ன விதத்திலேயே அவனும் பதட்டமாக இருக்கின்றான் என அவள் புரிந்துக் கொண்டாள். இவளை விட ஓரிரு வயதுகள் அதிகமாக இருக்கக் கூடும் கண்ணியமான உடை அணிந்து இருந்தான். படித்த களை முகத்தில், நடை உடை பாவனைகளில் தெரித்தது.

தன்னை இருத்தி வைத்து பேச முயலும் முனைப்பு அவனிடம் காணப்படவும் அவளும் அமர்ந்தாள்.

“சொல்லுங்க சம்பத்” பேச்சையும் அவளே ஆரம்பித்து வைத்தாள்.

“நான் பிரைவேட் கம்பெனில வேலை பார்க்கிறேன், ஜெனரல் மேனேஜேர்மாசச் சம்பளம் அறுபதாயிரம்…”

“….”

“சொந்தமா வீடு இருக்கு, ஊரில தோப்பு துரவுலாம் இருக்கு.

 “…..”

“கல்யாணத்துக்கு அப்புறம் நீங்க வேலைக்கு எல்லாம் கூட போக வேணாம், நானே எல்லாம் பார்த்துக்குவேன்.”

“…”

“எனக்கு இரண்டு அக்கா, அவங்களை கட்டிக் கொடுத்தாச்சு. அம்மா அப்பா என் கூடதான் இருப்பாங்க.”

“….”

“உங்களோட திருமணம் நின்னு போச்சுன்னு சொன்னாங்க, அதெல்லாம் எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லைங்க திவ்யா.

“….”

“உங்க போட்டோ பார்த்திருந்தேன், பிடிச்சிருந்தது. அதனால நாம பேசி முடிவெடுக்கிறதுக்காக இன்றைக்கு …”

“நானா வரமாட்டேன்னு பார்சல் கொடுத்து வர வைச்சிருக்காங்க.”

“…..”

“இதிலயே உங்களுக்கு என்னைப் பற்றி புரியலையா சம்பத்?”

“…”

“யாரோ சொன்னதுக்காகவெல்லாம் கல்யாணம் செஞ்சுக்கிட்டா கல்யாணம் நிலைக்காது, சம்பந்தப்பட்ட இரண்டு பேர் சம்மதம் இருந்தாதான் கல்யாணம் இரசிக்கும். இது படிச்சு நல்லா வேலையில் இருக்கிற உங்களுக்கே புரியலையா?

“இல்லை… நீங்க ஏதோ குழப்பத்தில இருக்கிறதாகவும், பேசி புரிய வச்சா புரிஞ்சுக்குவீங்கன்னு அண்ணி சொன்னாங்க… அதான்” என சந்திரிகாவை குறித்து அவன் பேசவும் இவள் வெற்றுச் சிரிப்பு சிரித்தாள்.

“குழப்பத்தில யாரு? நானா?”

“…”

“விடுங்க சம்பத்…” ஏதோ சொல்ல நினைத்தவள் அந்த நேரம் ஆர்டர் செய்த உணவு வகைகள் வரவும்,

“சாப்பிடலாம், எனக்கும் பசிதான்”, என்றவாறு உண்ண ஆரம்பித்தாள்.

உணவு வேளை முடியவும், “உங்களை சந்தித்ததில் ரொம்ப ரொம்ப சந்தோசம்” என்றவாறு புறப்பட்டாள்.பில்லில் இருந்த விலையை பார்த்து தான் உண்டவைகளுக்கான பணத்தை கொடுத்து விட்டே அங்கிருந்து நகர்ந்தாள்.

சம்பத் அவளையே பார்த்தவாறு அங்கு நெடு நேரம் அமர்ந்திருந்தான்.

வீட்டிற்கு வந்தவள் யாரிடமும் எதையும் கூறவில்லை, அடுத்த நாளும் கூட அலுவலகம் செல்லும் வரையிலும் நேரம் அமைதியாகவே கழிந்தது.

மாலை வீட்டிற்கு வரும் போது வாசலில் கூடுதலான சில செருப்புக்களை காணவும் மனதை திடப்படுத்திக் கொண்டாள். சந்திரிகா அக்காவும் அம்மா ரேவதியும் எதையோ புலம்பி தீர்த்துக் கொண்டு இருக்க, அதிசயத்திலும் அதிசயமாக அவளது கணவரும் அன்று வந்திருந்தார்.அவர் கார்த்திகேயனுடன் அமர்ந்து அளவளாவிக் கொண்டு இருந்தார்.

இருவருக்கும் முகமன் கூறி உள்ளே சென்ற திவ்யா முகம் கால் கை கழுவியவள் டீயையும் பிஸ்கிட்டையும் உண்டு எழுந்தாள். ஹாலுக்கு இவள் வரவும் விசாரணை ஆரம்பித்தது.

“இப்ப என் தம்பிக்கிட்ட என்ன குறை கண்டுட்டன்னு அவன் கிட்ட முடியாதுன்னு சொல்லிட்டு வந்திருக்கம்மா திவ்யா?”

“நியாயமா பார்த்தா நான் தான் உங்க கிட்ட வருத்தப் படணும் மாமா, எனக்கு ஏற்கெனவே இன்னொருத்தரோட நிச்சயம் ஆகி இருக்கிறப்ப நான் இன்னொருத்தரோட கல்யாணம் செய்யணும் என்று எப்படி எதிர்பார்க்கிறீங்க?”

“அந்த நிச்சயம் செல்லாதுன்னு ஏற்கெனவே சொல்லிட்டமே?

“யார் சொன்னா?”

“நாங்க எல்லாரும்”

“என் நிச்சயம் செல்லாதுன்னு சொல்ல நீங்க எல்லாரும் யாரு?” இவள் கேட்கவும் அவர் திமிறிக் கொண்டு எழுந்தார்.

“என்னையே யாருன்னு கேட்டுட்டா… இனி இந்த வீட்ல ஒரு சொட்டுத் தண்ணி படக் கூடாதுன்னு சொல்லிட்டேன்… எழுந்துர்றி…” மனைவியை கர்ஜித்தார்.

“ஐயோ மாப்ள” திவ்யாவின் பெற்றோர் அவரை சமாதானப் படுத்தினர்.

“சரி அப்ப நிச்சயம் செல்லாதுன்னு சொல்ல யார் வேணும்?” சந்திரிகாதான் வந்து கேட்டாள்.

“நிச்சயம் நடந்தது எனக்கும் ஜீவனுக்கும், ஒன்னு நிச்சயம் செல்லாதுன்னு நான் சொல்லணும் அது நான் ஜென்மத்துக்கும் சொல்ல மாட்டேன். இரண்டாவது ஜீவன் வந்து இந்த நிச்சயம் செல்லாதுன்னு சொல்லட்டும் அவன் சொன்னா நான் இந்த நிச்சயம் செல்லாதுன்னு ஏத்துக்கிறேன்.”

“சரி ஜீவனை நான் சொல்ல வைக்கிறேன்” சந்திரிகா வைராக்கியமாக பேச திவ்யா களைத்துப் போய் பார்த்திருந்தாள்.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here