என் ஜீவன் நீயே_13_ஜான்சி

0
49

அத்தியாயம் 13

அனிக்காவின் பிரசவத்தின் நாளன்று ஜீவனையும் அவன் வீட்டினரையும் திவ்யா சந்தித்து வந்தது மற்றும் அடுத்த நாளன்று அலுவலக இடைவெளியில் வீட்டில் சொல்லாமல் திவ்யா அனிக்காவை பார்த்து வந்தது குறித்து திவ்யாவின் வீட்டில் யாரோ சொல்லி இருக்க மறுபடி அவளது உறவினர்கள் பிரச்சனையை பூதாகரமாக்க தொடங்கி இருந்தனர்.

அதென்னமோ தாங்கள் அந்த நிச்சயம் செல்லாது என பையனின் வீட்டில் சொல்லி இருந்தும் கூட இவளாக அங்கே அவர்களை சந்திக்கச் சென்றது தலையிறக்கமாக இருந்தது.

தன்மானமில்லாமல் அப்படி என்ன காதல்?” என அவளது பெற்றோருக்கும் கூட மகளின் செயல் சலிப்புத் தட்டியது.

அதனால் தான் தனது தம்பிக்கு திவ்யாவை பார்க்கலாம் என சந்திரிகாவின் கணவர் சொல்லவும் இவர்கள் திட்டமிட்டு திவ்யாவையும் சம்பத்தையும் சந்திக்க வைத்தனர்.

என்னாகுமோ? ஏதாகுமோ? என பயந்தது போலவே ஆகி விடவும் என்ன செய்வதென புரியாமல் இருந்தனர். தனது மகளின் வாழ்க்கை கேள்விக் குறியாகிப் போனதாகவே ரேவதியும் கார்த்திகேயனும் நினைத்தனர். அவர்களை மனக்கலக்கம் சூழ்ந்திருந்தது.

அனிக்காவின் தாய் வீடு

அனிக்கா தனது மகளுக்கு பாலூட்டி தோளில் சாய்த்துக் கொள்ள சின்னவள் ஏப்பமிட்டாள்.

அவளை படுக்க வைக்க வேண்டி சாரா அவளை தூக்கிக் கொண்டார்.

அப்போது அந்த அறைக்கு வந்த ஜீவன் அத்தை பாப்பாவை என் கிட்ட தாங்க என்றவனாக தனது வாக்கரை நிறுத்தி வைத்து விட்டு இருக்கையில் அமர்ந்தான்.

அனிக்கா நண்பனை பார்வையிட்டாள், அவன் அவள் பார்வைக்கு முழுமையானவனாகவே தெரிந்தான். தோற்றம் சரி ஆனால் மனம் தான்

குழந்தையை வருடிக் கொண்டு பார்த்திருந்தவன் அவள் தூக்கத்திற்கு நெளிக்கவும் சாரா தூக்கிக் கொண்டார் தொட்டிலில் விட்டு லேசாக ஆட்டி விட்டார்.

கொஞ்ச நாளாக வீட்டில் எல்லாரும் அந்த அறையே கதியாக கிடந்தனர். சாராவும், பிரபாவும், ஹனி பாப்பாவும் முழு நேரம் அங்கேதான் என்றால் கிறிஸ்ஸீம் ராஜீம் வேலை முடிந்தது முதல் அங்குதான் இருந்தனர். ரூபன் வேலை முடிந்து வீட்டிற்கு போய் சுத்தம் செய்து விட்டு இங்கு வந்துதான் திரும்பச் செல்வான். அவனது வீட்டினரும் வருவதும் செல்வதுமாகவே இருப்பர். ஜாக்குலின் குடும்பத்தோடு வந்து பார்த்து சென்றிருந்தாள்.

சின்னவளுக்கு ஒரு கப்போர்ட் வாங்கும் அளவிற்கு அங்கே அவளுக்கு உடைகளும் பரிசுப் பொருட்களும் சேர்ந்திருந்தன.

மகள் தூங்கிக் கொண்டு இருக்க, அனிக்கா அடுத்த அறைக்கு தன் நண்பனை அழைத்துக் கொண்டு சென்றாள்.

“நாளையில் இருந்து ஆஃபீஸ் போறியா ஜீவா?”

“ஆமாம் அனி, வீட்டில இருந்தும் கடுப்பாகுது. போய் பார்க்கிறேன், உடம்புக்கு முடியலைனா திரும்ப வந்திருவேன்.”

“நீ நல்லாதான் இருக்கடா, கொஞ்ச கொஞ்சமா போய் வா. எல்லாமே சரியாகிடும், முன் போல ஆகிடும்.

“….”

“நம்புடா”

“ம்ம்”

“திவ்யா வீட்டுக்கு போய் நாங்க பேசி வரவா?

“முதல்ல உன் உடம்பை பாரு, டிஸ்சார்ஜ் ஆகி ஒரு வாரம் ஆகலை… அலட்டிக்காதே.”

“நான் நல்லாதான் இருக்கேன்… நான் கேட்டதுக்கு பதில் சொல்லு பேச்சை மாத்தாதே…

“அதை விட்ரலாம் அனி”

“எதை? யாரை திவ்யாவையா?”

“…”

“உன்னை கொன்னு போட்டுருவன்டா”

ஹே ஈசி”

“என்ன ஈசி… என்னை உங்கண்ணன் விட்டுடரேன்னு சொன்னா நீ விடுவியா? அவ்வளவு ஈசியா போச்சுல்ல?”

“கோபப்படாத அனி உன் உடம்புக்கு நல்லதில்லை.

“என் உடம்புக்கு ஒன்னுமில்லை…. அடுத்த இரண்டு மாசத்தில கல்யாணத்தை பேசி முடிக்கிற நீ சொல்லிட்டேன்.

“நான் இப்படி இருக்கிறப்ப எந்த மூஞ்சிய வச்சுட்டு பொண்ணு கேட்பேன்?”

“இப்ப உனக்கு என்னவாச்சு? நல்லா இருக்க, சீக்கிரம் நல்லா ஆகிடுவ. ரொம்ப நல்லவன் மாதிரி சீன் போடாதே சொல்லிட்டேன்.”

அழைப்பு வரவும் அதை ஏற்றாள்.

“அத்தான்”

“…”

“சும்மா ஜீவாகிட்டதான் பேசிட்டு இருக்கேன்

பேசி முடித்து வைத்தவள் ஜீவனை முறைத்தாள்.

“எதுக்குடா என் புருசனுக்கு கோள் மூட்டுற?” எனவும் சிரித்தான்.

“இப்ப மட்டும் நல்லா சிரி போடா…பாப்பா தூங்கும் போதே நானும் தூங்கணுமாம் ஹைகோர்ட் ஆர்டர். நான் போறேன்… ஒரு நாள் இல்லை ஒரு நாள் நீ என் கையில மாட்டாமயா போயிடுவ?” என்றவாறு அறைக்குச் சென்றவள் படுத்து சற்று நேரத்தில் கண்ணயர்ந்தாள்.

சந்திரிகா கடந்த ஒரு மாத காலமாக ஜீவனை தொடர்புக் கொள்ள முயன்று தோற்றிருந்தாள். அவனது அலுவலகம் வீடு எங்கு அழைத்தாலும் அவனை தொடர்புக் கொள்ள முடியவில்லை.

அவர்கள் வீடு அனிக்காவின் பேறுகால பரபரப்பில் இருக்க ஜீவனுக்கு செய்திகள் கிடைக்கவும் இல்லை. வேண்டுமென்றே தன்னை தவிர்ப்பதாக எண்ணிக் கொண்ட சந்திரிகா தனது முயற்சியை கைவிடவே இல்லை. எப்படியாவது தனது தங்கையின் வாழ்க்கையை காப்பாற்றியாக வேண்டும் என்பதே அவளது அக்கறையாக இருந்தது.

ஜீவனை அவளுக்கு ஆரம்பம் முதலாகவே பிடிக்கவில்லை, பிடிக்கவில்லை என்பதைவிட மனதிற்குள்ளாக தங்கையின் வாழ்க்கை நிலைக்குமா? என்றொரு பாதுகாப்பின்மை. தங்களுக்கு அறியாத மற்றவரோடு உறவு பாராட்ட பெரும்பான்மையானோர் விரும்புவதில்லை.

‘எந்த புற்றில் எந்த பாம்போ?’ எனும் மனநிலையோடு தான் சந்திரிகா ஜீவன் மற்றும் அவனது குடும்பத்தினரைக் குறித்து எண்ணியது அது போலவே நிச்சயத்திற்கு அடுத்து திருமணம் நடக்க தாமதமாகவும் 25 வயதை கடந்த தங்கையின் வாழ்க்கை என்னாகும் எனும் அவரின் அக்கறையினால் தங்கள் சித்தப்பா மகளின் வாழ்வை காப்பாற்ற அத்தனை முயற்சியும் எடுத்துக் கொண்டு இருந்தார்.

ரூபன் அத்தையின் வீட்டிற்குள் நுழையும் போது இரவு மணி ஒன்பதரை. பிரபாவின் மடியில் ரூபனின் மகள் இருக்க, ஹனி அவளோடு ஏதோ விளையாடிக் கொண்டு இருந்தாள்.

“வாங்க தம்பி” பிரபா அழைக்க அளவளாவினர்.

மகள் அவனை பார்த்ததும் கைகளை ஆட்டி ங்காவென சமிக்ஞைகள் கொடுக்க “அடடே டேனிகா குட்டி (Denika= Morning Star) உங்க அப்பா உங்களுக்கு அடையாளம் தெரியுதாக்கும்?” எனக் கேட்க கிளுக்கிச் சிரிக்க ரூபனிடம் மகளை கொடுத்தாள்.

கணவன் வந்த சப்தம் கேட்கவும் அவனுக்கென்று தண்ணீரோடு வந்தவள் அவனிடமிருந்து டேனிகாவை வாங்கிக் கொண்டாள்.

“சாப்பிடுங்க அத்தான்”

“இல்ல அனி வீட்டில போய் சாப்பிட்டுக்கிறேன், இதோ…”

அவன் கொடுத்ததை வாங்கி சரி பார்த்தாள். அப்புறம் என்னச் சொன்னாங்க?” கணவனிடம் சிலதை கேட்டு தெரிந்துக் கொண்டாள்.

மகளை கையில் ஏந்தியவண்ணம் அவள் கேட்டவைகளுக்கு எல்லாம் பதிலளித்துக் கொண்டு இருந்தான். ஜீவன் விஷயத்தில் அவர்கள் செய்ய வேண்டியவை சில இருந்தன.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here