என் ஜீவன் நீயே_14_ஜான்சி

0
49

அத்தியாயம் 14

ஜீவன் அலுவலகம் வர ஆரம்பித்து ஒரு மாதகாலம் ஆயிற்று. முதலில் ஓரிரு மணி நேரங்கள் இருந்தவன் அதன் பின்னர் இப்போதெல்லாம் ஐந்தாறு மணி நேரங்களாக அலுவலகத்தில் இருக்கும் வண்ணம் முன்னேறி இருந்தான்.

ரூபனுடைய வேலைச் சுமையை குறைப்பது ஒன்றே அவனது இலக்காக இருக்க அத்தனை மாத்திரைகளை தாண்டியும் கூட அவன் கால் வலி குடைச்சல்தான் அவனை பாடாய் படுத்தி வந்தது. அலுவலகத்தில் எங்கெங்கு கண்டாலும் திவ்யாவின் நினைவும் வர தடுமாறினான்.

கடந்த மாதங்களில் நிகழ்ந்தவைகளை எண்ணுகையில் வியப்பாக இருந்தது. முதலில் அவள் விலக இவன் இறுக்கி பிடிக்க நினைக்க, இப்போது இவன் விலக அவள் இறுக்கிப் பிடிக்க நினைக்க இது என்ன வகையான உறவென்று அவனுக்கு நெருடலாக இருந்தது.

அவனிடம் யாரும் அதிகமாய் எதையும் கேட்டுக் கொள்வதில்லை. திவ்யாவும்  அவர்கள் வீட்டில் யாரையும் அதன் பின்னர் தொடர்புக் கொள்ளவில்லை. முடிவெடுக்க வேண்டியது என்னவோ இவர்கள் இருவரும் தான்.

இவனை தேடி யாரோ வந்திருப்பதாக சொல்லவும், அவர்களை அனுமதிக்கச் சொன்னான். இவனது கேபினில் வந்த அந்த முப்பத்தி சொச்ச வயது பெண்மணியை இவனுக்கு மிக நன்றாகத் தெரியும் திவ்யாவின் சந்திரிகா அக்கா. இவனதும் திவ்யாவின் காதல் திருமணம் பிடிக்காத நபர்களுள் முதலாமவர்.

அவரை சம்மதிக்க வைக்க தான் மிகவும் சிரமப்பட்டதாக திவ்யா அடிக்கடி சொல்லியதுண்டு.

“வாங்க, இருங்க அக்கா” எனவும் அவர் பார்வை அங்கு நிறுத்தி வைத்திருந்த வாக்கரில் நிலைத்து பின்னர் அவன் முகத்தில் நிலைத்தது.

அவருக்கு தண்ணீரும் குளிர்பானமும் வரவழைத்துக் கொடுத்தான்.

“அப்புறம் தம்பி உங்க கிட்ட ஒரு விஷயம் கேட்கணும்.” எனும் போதே அந்த அறைக் கதவு சன்னமாக தட்டப்பட்டு திறந்தது.

எதிர்பாராத விதமாக அங்கு வந்த ரூபனையும் அனிக்காவையும் அவள் கையில் தூங்கிக் கொண்டு இருந்த டேனியாவையும் பார்த்து ஜீவனுக்கு ஆச்சரியம் என்றால் சந்திரிகாவிற்கு முதலில் அதிர்ச்சியும் அதன் பின்னர் ஆசுவாசமும் எழுந்தது.

முதலில் உள்ளே நுழைந்த ரூபன் யாரோ எவரோ என எண்ணி தான் வெளியே இருப்பதாக சொல்லி பின்வாங்க எண்ண,

“வாண்ணா, வா அனி” என அழைத்தான் ஜீவன்.

அவனுக்கும் உதவி தேவைப்பட்டதோ என்னமோ?

இருவரும் வந்து அமரவும் அவர்களுக்கு குடிக்க வேண்டியதை வரவழைத்தான். அனிக்காவிற்கு சந்திரிகா அக்காவை பள்ளி முதலாகவே நன்றாகத் தெரியும் என்பதால் புன்னகைத்தாள்.

“நல்லா இருக்கிறீங்களா அக்கா? திவ்யா நல்லா இருக்காளா?”

“எங்க நல்லா இருக்கிறது?” முகத்தை சுளித்தார் சந்திரிகா.

“என்னாச்சுக்கா?”

“உங்க குடும்பம் வேற, எங்க குடும்பம் வேறன்னு தெரியுமில்ல? அப்புறம் எதுக்கு காதல் எல்லாம்? நிச்சயமாச்சும் பண்ணுனீங்களே காலாகாலத்துல கல்யாணம் செய்தீங்களா? உனக்கு குழந்தை பொறந்தா தான் கல்யாணம்னு இவர் சொல்ல அவளுக்கு மட்டும் வயசாகலியாமா?

அவர் உரத்த சத்தத்தில் போட்ட போட்டில் குழந்தை லேசாக அசைவு கொடுக்க, ரூபன் குழந்தையை தூக்கிக் கொண்டு வெளியே சென்றான். அவனுக்கு அனிக்கா சூழ் நிலையை கையாண்டுக் கொள்வாள் எனும் நம்பிக்கை இருந்தது.

“அது அப்படியில்ல அக்கா…” அனிக்கா ஏதோ சொல்ல வர அவளை பேச விடாமல் தொடர்ந்தார்.

எங்கள்ல எல்லாம் இருபத்திரண்டு வயசிலயே கல்யாணத்தை முடிச்சுருவோம்.உன் வயசு தான அவளுக்கும், உனக்கு குழந்தையே பொறந்திருச்சு. அவளுக்கு இன்னும் கல்யாணமே ஆகலை. ஊர் உலகத்தில கேட்பாங்களா? மாட்டாங்களா? நீயே சொல்லு?”

ஜீவனுக்கு தான் செய்த மடத்தனங்கள் எல்லாம் உரைத்தது, முன்பின் பேசியறியாத தங்களிடம் இத்தனை பேசுகின்றவர் அவளிடம் என்னவெல்லாம் பேசினாரோ?

“அதுக்கென்ன அக்கா, போனதெல்லாம் விடுங்க. இப்ப கொஞ்ச நாளில் அவனுக்கு முழுசும் சரியாகிடும். அப்புறம் கல்யாணத்தை வச்சுக்கலாம்.

“இல்லை வேணாம்… நிச்சயத்தை முறிச்சுக்கலாம்.”

“அதெப்படி அக்கா…”

“திவ்யா பொண்ணு சொல்லிருச்சு, அவர் நிச்சயத்தை முறிச்சுக்கிட்டா நானும் முறிச்சுக்கிறேன்னு சொல்லிருச்சு.” திவ்யா சொன்னதை அப்படியே தனக்கேற்ற விதமாக மாற்றி சொல்லி இருக்க ஜீவனும் அனிக்காவும் திகைத்தது ஒரு நொடிதான் பின்னர் சகஜமானார்கள்.

“சரி அக்கா நிச்சயத்துக்கு உங்க சொந்த பந்தம் எல்லாத்தையும் அழைச்சு இருந்தீங்கல்ல?”

“ஆமா”

“அப்படி எல்லாரையும் அழைங்க, நாங்களும் எங்க சொந்த பந்தத்தை அழைக்கிறோம். எப்படி நிச்சயத்தை நடத்துனோமோ அப்படியே நாம முறிச்சிக்கலாம் சரியா?” சொன்னவளை திகைத்து பார்த்திருந்தான் ஜீவன்.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here