என் ஜீவன் நீயே_15_ஜான்சி

0
42

அத்தியாயம் 15

சந்திரிகா அங்கிருந்து எழுந்துச் சென்று சில நிமிடங்கள் தான் ஆகி இருந்தது. இப்போது டேனிகா ஜீவனின் கைகளில் இருந்தாள்.

“பாப்பாக்கு ஊசி போட்டியா?” என ஜீவன் அனிக்காவை கேட்ட விதத்தில் அவள் கொலைக்குற்றம் செய்தது போன்ற குற்றச் சாட்டு இருந்தது.அனிக்கா அவனிடம் பதிலுக்கு நக்கலாக,

“நான் போடலை டாக்டர் போட்டாரு” எனவும் ரூபன் சிரிக்க ஆரம்பித்தான்.

“பாப்பு, பார்த்தியா உங்கம்மா ஜோக் சொல்லிட்டாளாம், உங்கப்பாக்கு சிரிப்பு தாங்கலை” எனவும் சின்னவள் கிளுக்கிச் சிரித்தாள்.

இத்தனை குட்டியா இருக்கப்பவே அழகா சிரிக்கிறா இல்லை” சொன்னவனாக மகளை வருடினான்.

இண்டர்காம் ஒலிக்க ரிசீவரை எடுத்து காதுக்கு கொடுத்தான் ரூபன், பேசி வைக்கவும்,

“என்னண்ணா?”

“ப்ரொடக்ஷன் ஃப்ளோர்ல ஏதோ தெரியணுமாம். நீ இரு, நான் போய் வரேன்.” எனச் சென்றான்.

“ஊசி போட்டதும் வீட்டுக்கு போக வேண்டியதுதானே? எதுக்கு இந்த நேரம் அலைஞ்சுக்கிட்டு?”

“இன்னிக்கு எக்ஸ்போர்ட் இருக்காமே, அதனால அவங்க இங்கே நேரா வந்திட்டு உன்னை திரும்ப போகச் சொல்ல ஐடியா. அதனால பாப்புவும் நானும் வந்துட்டோம். பாப்பு உன் சித்தப்பா நம்மளை எதுக்கு வந்தன்னு கேட்டுட்டான். வாடா நாம வீட்டுக்கு போவோம்.

“ஏ நான் அப்படிச் சொல்லலை” பதறியவன்,உனக்கும் பாப்புக்கும் ரெஸ்ட் வேணும்னு சொன்னேன்.

“ஏண்டா ஒரு சின்ன விளையாட்டு பேச்சுக்கு பதறுற? அதுவும் என் கிட்டயே? என்ன பிரச்சனை சொல்ல மாட்டியா?”

முதலில் தயங்கினாலும் விபத்துக்கு முன்னான தனக்கும் திவ்யாவுக்குமான பிணக்கை அவளிடம் கூறினான். “இப்ப எல்லாம் நான் ஏதோ தப்பு செய்தது போலவே நெருடலா இருக்கு. முன்போல பேச பழக முடியலை உள்ளுக்குள்ள ஒரு மாதிரி… ஏதோ மாதிரி தோணுது. யோசிச்சு யோசிச்சு பேச ஆரம்பிச்சுட்டேன்.”

“ஓ” சில நிமிடங்கள் யோசித்தவள் அவ கிட்ட பேசினாதான் விபரம் என்னன்னே தெரியும். ம்ம்… பெருமூச்சு விட்டவளாக, “ஆனா நீ அவளே வேணாங்கிற முடிவில தானே இருக்க?”

அவளது கூற்றில் மனம் பதறினாலும் பதில் பேசாமல் அமர்ந்திருந்தான்.சற்று நேரம் கழித்து,

“அதென்ன அனி எல்லாரையும் கூட்டி நிச்சயம் முறிக்கிறோம்னு ஈசியா சொல்லிட்ட?”

“அது ஈசிதானே மேன்?”

“இதென்ன புது விதமா…” முனகினான்.

“என்ன புது விதமா? பழைய விதமா? எல்லாரையும் அழைச்சு சாப்பாடு போட்டு யப்பா சாமி நானும் இந்தப் பொண்ணும் கல்யாணம் செய்யப் போறேன்னு சொன்னேல்ல… இப்ப இல்லை இனி அவளும் நானும் யாரோ யாரோ அவளுக்கு வேற மாப்பிள்ளை பார்த்து கட்டிக் கொடுங்க. நானும் வேற பொண்ணை கட்டிக்கிட்டு நிம்மதியா சந்தோசமா இருக்கப் போறேன்.அப்படி சொல்லிட்டு ஒருத்தருக்கொருத்தர் போட்ட மோதிரத்தை கழட்டி கொடுங்க மேட்டர் சால்வ்ட்

அவன் அனிக்காவை பேயடித்தது போல பார்த்துக் கொண்டு இருந்தான். ரூபனின் அழைப்பு வந்ததும் அதை ஏற்றவள், “வா ஜீவா நாம வீட்டுக்கு போகலாம். உங்கண்ணா போகச் சொன்னாங்க”

அவரவர் காரில் அவர்கள் வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றனர். அடுத்த சில வாரங்களில் அனிக்காவிற்கும் திவ்யாவிற்கும் அவள் வீட்டினருக்கும் சில உரையாடல்கள் நிகழ்ந்தன.

வேறு யாரையும் அவள் அதில் கலந்துக் கொள்ள அனுமதிக்கவில்லை. ரூபனும் கூட தலையிடாமல் பின்வாங்கினான்.ஜாக்குலினும் கூட அனிக்காவோடு கை கோர்த்துக் கொண்டாள்.

சந்திரிகா அனிக்கா கூறியதை திவ்யாவின் வீட்டினரிடம் கூறியபோது ‘இது என்ன லூசுத்தனமா? என முதலில் தோன்றினாலும் ஒரு வகையில் தனது மகளின் வாழ்க்கைக்கு வழி கிடைக்காதா எனவும் தோன்றியது.

இவ்வாறாக இரு குடும்பமும் சேர்ந்து ஒரு நன்னாளில்(?) நிச்சயத்தை முறித்துக் கொள்வதாக முடிவானது. இருதரப்பில் இருந்தும் அனைத்து உறவினர்களும் வருவதால் ஜீவன் தரப்பில் இருந்து பெரிய ஹாலை புக் செய்தனர்.விருந்தினர்களின் உணவிற்கும் கூட எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன.

அன்று காலை முதலாக உறவினர்கள் ஹாலில் கூடத் தொடங்கினர்.

“இது என்ன புதுசா ஏதோ நிச்சயம் முறிக்கிற விழாவாம்?” ஒருவரை ஒருவர் கேட்டுக் கொண்டனர்.

“காலம் மாறுதில்ல?” டிக்கெட் போட்டு நீங்க வந்தே ஆகணும்னு சொன்னதுக்கு அப்புறம் வராம இருக்க முடியுமா? பலகால சொந்தம் வேற. பெரியவர்கள் அங்கலாய்ப்பும் ஆச்சரியமுமாக அங்கே அமர்ந்திருந்தனர்.

முகத்தில் முள்ளை கட்டிக் கொண்டு சந்திரிகா & கோ வந்தனர். அவர்கள் அனைவரையும் ஒரு தனி அறையில் அழைத்துச் சென்று அமர வைத்தனர்.

“பொண்ணு வீட்டுக்காரங்க யாருங்க?” எனக் கேட்டுக் கேட்டு அவர்களை எல்லாம் அழைத்துச் சென்று அந்த தனியறையில் அமர்த்திக் கொண்டு இருந்தனர். விருந்து உபசரணைகளுக்கு எல்லாம் குறைவே இல்லை.

சற்று நேரத்தில் அந்த பெண் வீட்டினர் அறைக்குள்ளே சில விவாதங்கள், சத்தங்கள் எல்லாம் கேட்டன. ஆனால், வெளியே இருக்கின்றவர்களுக்கு என்னவென்று புரியாதவண்ணம் கதவு அடைக்கப் பட்டு இருந்தது. அந்தோ பரிதாபம்! வடை போச்சே எனும் விதமாக அனைவரும் உள்ளே நடப்பதை தெரிந்துக் கொள்ள இயலாமல் அமர்ந்திருந்தனர்.

ஆயிற்று மணி பத்து அந்த கதவு இப்போது திறந்தது, ஒவ்வொருவரும் பல விதமான முக பாவனைகளோடு வெளியே வந்தனர். அந்தக் குழுவில் திவ்யாவோ ஜீவனோ இல்லை. அவர்கள் ஏற்கெனவே வெவ்வேறு அறையில் இருந்தனர்.

தங்கள் இருவரைக் கொண்டு என்ன நிகழ்கின்றது என்றே புரியாமல் இந்த இருவரும் இருக்க, இங்கே என்னென்னவோ நிகழ்ந்து இருந்தன.

சட்டென அந்த சூழல் மாறியது.மெல்லிசை ஒலித்துக் கொண்டு இருந்த சூழல் திரையிசையாக மாறியது.

“நூறு வருசம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணுதான் பேரு விளங்க இங்கே வாழணும்” என பாடல் ஒலிக்க சலசலப்பும் பரபரப்பும், வதந்திகளும், கிசுகிசுப்புமாக அரங்கம் கலகலத்தது.

“என்னாங்கடா இது?” அவர்கள் பேசிக் கொண்டு இருக்கையிலேயே ஹாலின் வெளியே திவ்யா வெட்ஸ் ஜீவன் எனும் போர்ட் மாட்டப்பட்டது. உள்ளுக்குள்ளும் திருமண அலங்காரம் படபடவென ஆரம்பிக்க ஸ்டேஜில் தம்பதிகள் அமரும் வண்ணமாக இருக்கை போடப்பட்டது. அடுத்த அரை மணி நேரத்தில் அந்த ஹாலுக்கு திருமணக்களை வந்து விட்டிருந்தது.

தங்கள் இருவருக்கும் கொண்டு வரப்பட்ட திருமண உடைகளை பார்த்து இருவருமே திகைத்தனர் என்றாலும் திவ்யாவிற்கு அன்று தன்னுடைய மணநாளாக இருக்க வாய்ப்புண்டு எனும் அனுமானம் முன்பாகவே இருந்ததால் மிக மகிழ்ச்சியாக புறப்பட்டாள்.

ரேவதியும், கார்த்திகேயனும் வந்து மகளை அணைத்துக் கொண்டனர். அவர்கள் முகத்தில் ஏனோ பெரியதொரு நிம்மதி. பெற்றொர்கள் சம்மதம் கிடைத்து விட்டதா? திவ்யா ஏதோ மலையை சாய்த்த உணர்வில் இருந்தாள். அவள் எங்கே சாய்த்தாள்? சாய்த்தது வேறு சிலர் அல்லவா? மனக்கண்ணில் ஏதேதோ ஓட, ‘அட அவை எல்லாம் எதற்கு இப்போது? இது நான் மகிழ்ந்து இருக்க வேண்டிய நேரம் என எண்ணியவளது முகத்தில் வெட்கம் சூழ்ந்தது. ஆஹா மணப்பெண்ணின் கோலத்தில் அவளது வெட்கம் பேரழகு.

அனிக்கா அப்போதுதான் மகளுக்கு பசியாற்றி இருந்தாள். தூக்கத்திற்கு சொக்கிய மகளை தோளில் போட்ட வண்ணம் மாப்பிள்ளையின் அறையில் நின்று கதவை தட்டினாள். திறந்திருந்த கதவின் வழியே உள்ளே பார்க்க ஜீவனை ஏற்கெனவே அண்ணங்களும் அத்தானும் ஒரு வழியாக்கி புறப்பட வைத்திருந்தனர்.

இவளைக் கண்டதும் ஜீவன் முனகினான், “வந்துட்டா இராட்சசி” மற்றவர்கள் சிரித்தனர்.

“பாப்பு பாரு சித்தப்பா உன்னை என்ன சொல்லுறான் பார்?”

“ஏ அனி நான் பாப்புவை சொல்லலை.” என்றவனை கண்டுக் கொள்ளாமல்,

மாப்பிள்ளை உனக்கு இன்னும் அஞ்சு நிமிசம் தான் டைம், சீக்கிரம் புறப்பட்டு வரணும்” என அதட்டியவளாக புறப்பட்டாள்.

என்னவோ கட்டாயமாக திருமணம் செய்வது போல ஜீவன் காட்டிக் கொண்டாலும் அவன் முகத்திலும் அடக்க முடியாமல் மகிழ்ச்சி தாண்டவமாடியது.

ஜீவன் அனைவரது முன்பாகவும்திவ்யாவிற்கு தாலிக் கட்டி தனது மனைவியாக்கிக் கொண்டான். அதன் பின்னர் மாலையும் மாற்றிக் கொண்டனர். இருவரது குடும்ப முறைகளும் ஆங்காங்கே பின்பற்றப் பட யாரையும் நோகடிக்காத வண்ணம் அனைத்து நிகழ்வுகளும் நடந்தேற, அதன் பின்னர் ரிசப்ஷனும் பலவித நிகழ்வுகளும் வரிசையாக நடந்தேறின.

அது திடீரென நிகழ்ந்த திருமணம் போலல்லாது, பல மாதங்கள் திட்டமிட்ட திருமணம் போலவே இருந்தது. அன்றைய விழாவிற்கு தங்களது சொந்தங்களை எல்லாம் வலிந்து வலிந்து அழைத்து வந்த சந்திரிகா மற்றும் அவரது கணவர் மட்டும் அதனை ஏற்க முடியாமல் திருமண ஹாலில் இருந்து சாப்பிடாமல் கூட திரும்பினர்.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here