என் ஜீவன் நீயே_16_ஜான்சி

0
47

அத்தியாயம் 16

சந்திரிகாவிற்கும் அவள் கணவருக்கும் மனதே ஆறவில்லை. அழைத்து வைத்து பேசியதும் இவர்களது பேச்சிற்கு மதிப்பே இல்லாமல் ரேவதியும், கார்த்திகேயனும் மாப்பிள்ளை வீட்டின் பக்கம் சாய்ந்து விட்டதை அவர்களால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

முக்கியமாக அந்த அனிக்கா நிச்சயத்தை முறித்துக் கொள்வதாக அனைவரையும் அழைத்து வரச் சொல்லி பேசி விட்டு அப்படியே பேச்சை திருமணத்திற்கு கொண்டு வந்து விட்டாளே? வெகு சமார்த்தியம்தான் மூக்கறுபட்ட கோபத்துடன் அவர்கள் வீடு வந்து சேர்ந்தனர்.

நிகழ்ந்தவைகளை கணவனும் மனைவியுமாக எத்தனை முறைகள் புலம்பி தீர்த்து இருப்பார்கள் என்றே கணக்கில்லை.

பெண் வீட்டினர் அனைவரும் அந்த அறைக்குள் சென்ற போது அங்கே ஏற்கெனவே ஒரு சிலர் இருந்ததை கண்டனர். அனைவரும் உள்ளே வரவும் ஜீவனின் பெற்றோரும், அண்ணன்கள், உறவினர்களும் என நெருக்கமான உறவுகள் அனைவரும் அங்கே இருந்தனர்.

“நீங்க பொண்ணு வீட்டுக்காரங்க இந்த நிச்சயத்தை முறிச்சுக்கலாம்னு சொன்னதால இன்னிக்கு இந்த ஏற்பாடு நடத்திருக்கிறோம். ஆனால், இந்த நிச்சயம் ஜீவனும் திவ்யாவும் விரும்பி செய்த ஏற்பாடு அவங்களோட நிச்சயத்தை நிறுத்துகிற முடிவு அவங்களுக்கு மட்டும் தான் இருக்கு. இருந்தாலும் நீங்க பெரியவங்க முதலில் எதற்காக இந்த முடிவுன்னு சொன்னீங்கன்னா நாம அதற்கு ஏதாவது தீர்வு இருக்கான்னு பார்க்கலாம்” என்றான் தீபன்.

பிரச்சனை என்றால் பார்த்துக் கொள்ளலாம் என்று திவ்யாவின் ஒன்று விட்ட அண்ணன்மார்கள் உறவினர்கள் எல்லாரும் வந்திருந்தனர். அவர்கள் நேரடியாக ஒருபோதும் மாப்பிள்ளை வீட்டாருடன் பழகி இராத காரணத்தால் சந்திரிகா மற்றும் குழுவினர் சொன்னவைகளை கொண்டு அவர்களை குறித்து கணித்து இருந்தனர்.

இப்போது தீபன் கனிவாக பேசவும் அவர்களும் கூட தணிவாக பேச வேண்டிய நிலை. ராஜ், தாமஸ் மற்றும் இவர்கள் தரப்பு பெரியவர்களும் கனிவாகவே பேச நிச்சயத்தை நிறுத்தாமல் இருக்க அவர்கள் முயலுகிறார்கள் என்பது புரியவரவும்,ஒரு வகையில் ரேவதிக்கும் கார்த்திகேயனுக்கும் திருப்தியே.

மண்டபத்திற்கு வரும் வரையிலும் கூட திவ்யாவின் பெற்றோருக்கு நிலைமையின் தீவிரம் புரியவில்லை. ஆனால், இங்கு வந்த பின்னர் அத்தனை உறவினர்களை பார்த்த பின்னர் அவர்கள் உள்ளம் நடுங்கியது.

சந்திரிகா பேச்சைக் கேட்டு வந்தது தவறோ? சபையை கூட்டி நிச்சயத்தை மறுப்பது மகளை அவமானப் படுத்தும் விதமாக அல்லவா ஆகி விடும்?’ என்றெல்லாம் மனம் அலைபாய ஆரம்பித்தது. மகள் விரும்பிய வாழ்க்கை மகள் விரும்பியது போல அமையட்டும் என்பதாகவும் தோன்ற ஆரம்பித்து இருந்தது.

“பையனுக்கு உடல்நிலை சரியில்லாத போது எப்படிங்க எங்க வீட்டு பொண்ணை உங்களுக்கு கட்டி தர்றது?”என்றவரது கையில் ஜீவனின் மெடிக்கல் ரிப்போர்ட்டுகள் கொடுக்கப்பட்டன.

அருகில் இருந்த ஜீவனுக்கு சிகிச்சை கொடுத்த டாக்டரை அறிமுகப் படுத்தினர். டாக்டர் ஜீவனின் உடல் நிலை குறித்து விபரங்கள் தெரிவிக்க திவ்யாவின் மாமா ஒருவர் மருத்துவராக இருக்க அவரும் அதனை படித்து அவங்க சொல்கிற விபரம் சரிதான் என்று உறுதி படுத்தினார்.

“இன்னும் சில மாதங்களில் பையனுக்கு முழுக்கவே நல்லா ஆகிவிடும், அதன் பின்னே நாங்கள் வந்து பெண் கேட்பதாக இருந்தோம்.பெண்ணோட அக்கா நிச்சயத்தை முறிச்சுக்க கேட்டதாலத்தான் இந்த அவசர ஏற்பாடு.” எனவும் அனைவரது பார்வையும் சந்திரிகா பக்கம் திரும்பியது.

“நல்லதுக்கே காலம் இல்லை போ” எனும் விதமாக அவர்பார்த்திருக்க, வந்திருந்த மருத்துவர் விடைப்பெற்று சென்றார்.

“பொண்ணை கட்டித்தரவங்க கேட்கிறது நியாயம் தான்னு போன வாரம் கூட முழுசா செக்கப் எடுத்திருந்தோம். இது அந்த சர்ட்டிபிகேட்.” என மற்றதையும் கொடுத்தார்.

“பையனுக்கு கெட்ட பழக்கம் எதுவும் கிடையாது, சொந்தமா தொழில் நடத்துரான்.” என இந்திரா ஆரம்பிக்க, சொத்து விபரங்களை உறவினர் ஒருவர் சொல்ல

“உங்களுக்கு இப்ப கூட ஏதாவது ஆட்சேபணை இருந்தா சொல்லுங்க” என கேட்டனர்.

“எப்படியும் மாப்பிள்ளையோ பொண்ணோ நிச்சயத்தை முறிச்சுக்க விரும்ப மாட்டாங்க என்பதுதான் எங்களோட அனுமானம்…” என ஒருவர் இழுத்தார்.

“பெரியம்மா மாப்பிள்ளை வீட்டுக்காரங்க நல்லவங்களாதான் தெரியுறாங்க. எதுக்கு பிரச்சனை?” என ஒருவன் ரேவதியை கேட்க மற்றவர்களும் அதே ரீதியில் பேச ஆரம்பித்தனர்.

சந்திரிகா மட்டும் தனது ஆட்டத்தை கலைத்த அனிக்காவை என்ன செய்யலாமென பார்த்துக் கொண்டு இருந்தாள்.

சொந்த பந்தம் எல்லாரும் ஒன்னு கூடி இருக்கிறீங்க, நீங்க விரும்பினா ஜீவன்திவ்யா கல்யாணத்தை இந்த மேடையிலேயே வச்சு பிரமாதமா நடத்திக்கலாம். இல்லை இன்னொரு நாள்தான் திருமணம் நடத்தணும் என்றுச் சொன்னாலும் எங்களுக்கு சரிதான். உங்களுக்குள்ள பேசி ஒரு முடிவெடுத்துட்டு வாங்க.” என்றவர்களாய் ஜீவனின் குடும்பத்தினர் அங்கிருந்து நகர்ந்தனர்.

இப்படியாக அந்த திருமணம் நடந்திருந்தது. சந்திரிகாவும் அவர் கணவரும் பொருமிக் கொண்டு இருந்த அந்த தருணத்தில் தான் பெண் மற்றும் மாப்பிள்ளை வீட்டார் கலகலப்பாக அந்த திருமண விழாவை சிறப்பித்துக் கொண்டு இருந்தனர்.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here