என் ஜீவன் நீயே_17_ஜான்சி

0
77

அத்தியாயம் 17

ஜீவனுக்கும் திவ்யாவுக்கும் இடையே ஆயிரம் பிரச்சனைகள் இருந்தன இருந்தாலும் அவர்களுக்கு அந்த விழா மிக முக்கியமான ஒன்று. தங்களது திருமணத்திற்கான கனவுகளில் பலதும் இந்த திருமணத்தில் இல்லை. இருந்தாலும் என்ன? பிரிந்து விடுவோமோ என எண்ணி தவித்துக் கொண்டிருந்த மனதிற்கு இதுவே அதிகம் என்று இருந்தது.

வாழ்வின் வண்ணப் பக்கங்களில் எந்த பக்கத்தில் கரி அள்ளி பூசப்படும் என யார் அறிவர்? வண்ணமயமான ஜீவனின் வாழ்வில் இத்தனை பெரியதொரு விபத்தும், திவ்யாவின் வீட்டினரின் இத்தனை பெரியதொரு எதிர்ப்பும் இருவரும் எதிர்பாராத ஒன்று தானே?

அத்தனை தாண்டியும் இருவரும் ஒன்று சேர்ந்தது தான் மகத்துவமானது. இருவரும் அந்த மகத்துவமான தருணத்தை அனுபவித்துக் கொண்டு இருந்தனர்.

அந்த வென்யூ, அவர்களது ஆடைகள், அணிகலன்கள் இவை எதுவுமே அவர்கள் திட்டமிட்டுஅமைத்தவை அல்ல. ஆனால், அத்தனையும் சிறப்பாக இருந்தது. அத்தனையும் அருமையாக அமைந்து இருந்தது. எங்கும் எந்தக் குறையும் காணப்படவில்லை.

“மூவ் ஆன் திவ்யா” என தன்னை அடிக்கடி கடந்து போகச் சொன்னவனின், தான் திருமணம் செய்ய கேட்டபோதுமறுத்தவனின் முகத்தில் இன்னும் அந்த மறுப்பு தென்படுகின்றதா? என அடிக்கடி பார்க்க முயன்ற திவ்யா அளவிற்கு கூட ஜீவன் அவளை ஏறிட்டுப் பார்க்கமுயற்சிடுத்து இருக்கவில்லை.

இருதரப்பு நபர்களும் வந்து வாழ்த்து சொன்னபோதெல்லாம் அவளை பார்த்தும் பாராமல் தலையசைத்துக் கொண்டான். அத்தனை உறவினர்களிடமும் கலகலத்து பேசினான்.அவ்வப்போது திவ்யா திவ்யாவென இவளை அழைத்து தனது உறவினர்களுக்கும் அறிமுகப் படுத்திக் கொண்டான், அவனின் திவ் எனும் பிரத்யேக அழைப்பு மட்டும் எங்கோ காணாமல் போயிருந்தது.

ஜீவன் மற்றும் ரூபனின் அலுவலக தொழிலாளர்களும் பணியாளர்களும் கூட அங்கே வந்திருந்தனர்.இருதரப்பு உறவினர்களும் அந்த திருமணத்தில் ஒன்றிணைந்து செயல்பட்டனர். ஒரு சிலர் முணுமுணுத்தாலும்பெரியதாக எந்த பிரச்சனையும் நிகழாமல்இரு தரப்பு பெரியவர்களும் பார்த்துக் கொண்டனர்.

திவ்யாவின் பெற்றோர் ரேவதி மற்றும் கார்த்திகேயன் நிகழ்ந்துக் கொண்டு இருக்கின்றவைகள் கனவோ இல்லை நினைவோ எனும் எண்ணத்தில் திகைத்து இருந்தார்கள். திருமணத்தை மற்றொரு நாள் கூட வைத்திருக்கலாம். ஆனால், அதற்குள்ளாக இன்னும் என்னென்ன பிரச்சனைகள் முளைக்குமோ? எனும் பயம் எழுந்திருந்ததால் தான் அவர்களும் கூட அந்த திருமணத்திற்கு சம்மதம் சொல்லி இருந்தனர்.

விடைபெறும் முன்பாகவும் கூடசந்திரிகா அவரது மனதில் விஷம் கலக்க முயன்று இருந்தாள். அவள் சென்று சிறிது நேரமாகியும் கூட ரேவதியின் மனம் கலங்கிய குளமாக இருந்த போதும் மண மேடையில் நிற்கும் மகளின் மகிழ்ச்சியை பார்த்ததும் மனம் உடனே சமாதானமாகிற்று.

அங்கே இருந்த ஜாக்குலின், சந்திரா மற்றும் பெரியவர்கள் எல்லாரையும் பார்த்த போது ‘ஐயோ இவர்களை எப்படி எல்லாம் பேசி இருக்கின்றோம்?’ என அவருக்கு தோன்றியது.மாப்பிள்ளை வீட்டினர் தாங்கள் முன்பு பேசியவற்றை மனதில் வைத்துக் கொள்ளாமல் சாதாரணம் போல பேசியது அவரது மனதிற்குள்ளாக முள்ளாக நெருடியது.

இனி தனது மகள் அவர்கள் வீட்டில் தானே வாழ வேண்டும்?’ என எண்ணியதுமே மனதில் ஒரு கலக்கம் தோன்ற, இந்திராவிடம் சென்றவர், “சம்பந்தி நான் உங்களைமுன்னால பேசினதை எல்லாம் மனசில வச்சுக்காதீங்க” என்றவராக கையைப் பற்றி கேட்டுக் கொண்டார்.

“நீயும்தான்மா, அன்னிக்கு ரொம்ப பேசிட்டேன்” என ஜாக்குலினிடமும் கேட்டுக் கொண்டார்.

“அதெல்லாம் ஒன்னுமில்லை, நாங்க எதையுமே மனசில வச்சுக்கலை. அந்த சூழ் நிலையில் உங்களுக்கு எது சரின்னு தோணுச்சோ அதை செய்தீங்க. ஒருவேளை உங்க நிலையில் நாங்க இருந்தாலும் அதைதான் செய்திருப்போமாக இருக்கும்” என்பதாக அவரை இந்திரா சமாதானப் படுத்தினார். ஜாக்குலினுமே சமாதானமாக புன்னகைத்தாள்.

ஜீவன் எங்களுக்கு ரொம்ப செல்லம், அவன் மனைவியும் கூட எங்களுக்கு அப்படித்தான். நீங்க கவலையே பட வேண்டாம் மாமி” என்றவளாக அவர் கேட்காததற்கும் சேர்த்து பதிலளித்தாள்.

ரேவதிக்கு மனதிற்கு நிறைவாக இருந்தது. மணக்கோலத்தில் இருந்த திவ்யா பெற்றோர்கள் அருகாமையில் இருக்க, தனது உறவினர்களெல்லாம் தன்னை வாழ்த்திச் செல்லவும் இன்னுமாய் மகிழ்ந்திருந்தாள். அந்த அங்கீகாரம், அந்த மகிழ்ச்சியை தானே அவள் எதிர்பார்த்தது. இவ்வாறாக அன்று அந்த திருமணம் வெகு மகிழ்ச்சியாக நடந்து முடிந்திருந்தது.

எதிர்பாராமல் நிகழ்ந்த திருமணம் என்பதால் திவ்யாவின் வீட்டில் காலை நேரமே ஓரிரு உறவினர்கள் சென்று எல்லாவற்றையும் அவசர அவசரமாக ஏற்பாடுகள் செய்து இருந்தனர். திடீர் திருமணம் குறித்து கேட்டறிந்த அக்கம் பக்கத்தினர் ஆச்சரியப்பட்டனர்.

புதுமணத் தம்பதியர் முதலில் பெண்ணின் தாய் வீட்டிற்கு சென்றதும் பெண் வீட்டினர் செய்ய வேண்டிய சில நடைமுறைகளை சிறப்புற நிறைவேற்றினர். மணமக்களோடு கூட வருகை தந்த மாப்பிள்ளை வீட்டினரை குறையின்றி உபசரித்தனர். அதன் பின்னர் அவர்களும் புதுமணமக்களோடு புறப்பட்டு மாப்பிள்ளை வீட்டிற்கு வந்தனர்.  

திவ்யாவின் வீட்டிலிருந்து தம்பதியர் மணமகன் வீட்டிற்கு வர சாயங்காலம் ஆகி இருந்தது. அன்றைய தினம் காலை முதல் சாயங்காலம் முதல் நின்றுக் கொண்டிருந்ததில் ஜீவனின் கால் கடுத்துக் கொண்டு இருக்கவும், தான் ஓய்வெடுக்கப் போவதாக கூறியவன் தனது அறைக்குச் சென்று ஓய்வெடுத்தான்.

மற்றொரு அறையில் திவ்யாவை ஓய்வெடுக்க அனுப்பி வைத்தனர். இப்போது தாயின் மடியில் படுத்துக் கொண்டிருந்த திவ்யாவின் முகம் பொலிவாக இருந்தது.

“உங்களுக்கு என் மேல எதுவும் கோபமா அம்மா?” எனும் நேரம் அவள் அப்பாவும்அறையின் உள்ளே வர எழுந்து அமர்ந்தாள்.

“எங்களுக்கு உன் மேல கோபம் எதுவும் இல்லை, ரொம்ப சந்தோஷம்” என மகளுக்கு அப்பா பதிலளித்தார்.

“ஜீவா சீக்கிரம் நல்லா ஆகிடுவார்பா” என்றவளது கூற்றை அவர்களும் ஆமோதித்தனர். பல நாட்கள் கழித்து பெற்றோருடனான சகஜமான சில வார்த்தைகள் அவளுக்கு பெரும் பலம் தந்தது.

அவளது உறவினர்கள் பலரும் கூட வந்து அவளுடன் பேசிச் செல்ல, இனிமையாக நேரம் கழிந்தது. இரவு விருந்திற்கு அப்புறமாக பெற்றோர்கள் அவளை மாமியார் வீட்டில் ஒப்படைத்துச் செல்ல, ஒரு வகையில் தனிமையாய் உணர்ந்தாலும் பல நாட்களாக அவளிடம் இருந்த அலைப்புறுதல்கள் மாயமாகி இருந்தன.

“இங்க பாரு, உங்களுக்குள்ள என்ன பிரச்சனை இருந்தாலும் சேர்ந்து அதை தீர்த்துவாழ பழகுங்க. எங்களால முடிஞ்சது கல்யாணம் செய்து வச்சாச்சு. மீதி உங்க பாடு

என அனிக்கா நண்பனுக்கு சொல்லி நகர, ஜாக்குலினும் அதே விஷயத்தை தனது புன்னகையால் திவ்யாவிற்கு கடத்தி விட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

“ரொம்ப அலட்டிக்காத அனி, நீ இல்லைன்னாலும் என் கல்யாணத்தை எனக்கு நடத்திக்க தெரியும்.” என ஜீவன் கெத்தாக சொன்னான். சென்றவள் திரும்பி வந்து,

“அதுக்கெல்லாம் உனக்கு திறமை பத்தாது ராஜா… வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை” என அனிக்கா பதிலுக்கு பதில் பேசினாள்.

“தங்கச்சி என்னை கூப்பிட்டியா?” என்றவாறு ஜாக்குலினின் கணவர் ராஜா அங்கே வர அனிக்கா தனது நாக்கை கடித்துக் கொண்டாள்.

“உங்களை இல்லைண்ணா” எனவும் அங்கிருந்தவர்கள் சிரித்துக் கொண்டனர்.

“பொறு ஜீவா உனக்கு வேற டயலாக் மாத்திச் சொல்லுறேன். அதுக்கப்புறம் ஃபர்ஸ்ட் நைட் கொண்டாடப் போ. உனக்கு தெரிஞ்சதெல்லாம் நேர்மை, கருமை, எருமை அதனால நீ உன் கல்யாணத்தை தானே நடத்திட முடியும்னு கெத்தா பேசாத சரியா? எனவும் திவ்யா சிரித்து வைக்க, ஜீவன் தனது பற்களை கோபத்தில் கடித்து வைத்தான்.

அந்த நேரம் அனிக்காவை தேடி வந்த ரூபன் அழுதுக் கொண்டிருந்த மகளை அனிக்காவின் கையில் கொடுத்தான்.

உங்க தம்பிக்கு கொஞ்ச நேரம் பிள்ளையை பார்க்கத் தெரியாது அண்ணி” என அனிக்கா இப்போது கணவனை சீண்ட

ரூபனோ அவளிடம் “புள்ளைக்கு பசிக்குதுடி” எனவும் அதில் குழந்தைக்கு நானா பால் கொடுக்க முடியும்?’ எனும் கருத்து ஒளிந்திருக்க ஜீவன் அவளைப் பார்த்து கிண்டலாக சிரித்தான்.

“இரண்டு பேரும் மாத்தி மாத்தி வம்பிழுத்தது போதும்… போங்க” என்பதாக ரூபன் அவர்கள் அனைவரையும் ஜீவனின் அறையின் பக்கத்திலிருந்து அகற்றினான். ஜீவனையுமே அவனது அறைக்குச் செல்ல விரட்டினான்.

“நேரத்துக்கு தூங்க போகாம என்ன வாய் உனக்கு? உடம்பு என்னத்துக்காகும்?” என ரூபன் அனிக்காவை அதட்டிக் கொண்டு செல்ல, இவனுக்கு அதைப் பார்த்து இன்னுமே சிரிப்பு வர, தனது கதவை தாளிட்டான்.

அங்கே தனது உடையை மாற்றி இருந்த திவ்யா இரவுடையில் கட்டிலில் அமர்ந்திருந்தாள்.

“ரொம்ப டயர்டா இருக்கு தூங்கு திவ்யா” என்றவனாக ஜீவன் படுக்கையில் நீட்டி நிமிர்ந்து படுத்துக் கொண்டான்.

“மாத்திரைலாம்?”

“எடுத்துக்கிட்டேன்” என்றவன் சலனமில்லாமல் உறங்க ஆரம்பித்தான். எங்கோ ஆரம்பித்து எங்கோ முடிந்த அந்த நாளின் மகிழ்ச்சியான முடிவை சிலாகித்தவாறு திவ்யாவும் அவன் அருகில் படுத்தாள். அருகில் பார்த்தால் கனவல்ல நிஜமாக அவன், அவளது ஜீவன். புன்முறுவல் பரவ கண்ணயர்ந்தாள்… அந்த இரவு அவர்களது களைப்பை தீர்க்கும் வண்ணம் நீண்டு கிடந்தது.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here