என் ஜீவன் நீயே_19_ஜான்சி

0
75

அத்தியாயம் 19

திருமணமாகி ஒரு மாதம் கடந்தும் ஜீவனின் நிலையில் மாற்றம் இல்லாது இருக்க,திவ்யா நிஜமாகவே பொறுமையின் விளிம்பில் இருந்தாள் எனலாம்,

கலகலவென பேசுகின்றவன் களையில்லாமல் இருக்க ஜீவனுக்கு மண்டையில் அடிப்பட்டதில் பாதிப்பு ஏற்பட்டு விட்டதா என்ன?’ எனக் குழம்பினாள்.

ரூபனிடம் அவனது உடல் நிலை சார்ந்த விபரங்கள் கேட்கப் போக, அவனோ அவ்விபத்திற்கு அப்பால் ஜீவன் மன அழுத்தத்தில், தாழ்வுணர்ச்சியில் சிக்கித் தவித்ததையும் அவனுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டதையும் குறித்துஅவளுக்கு தெரிவித்தான். ஜீவனின் இயல்பு மாறி அவன் அமைதியாக இருப்பதைக் குறித்து தனது அத்தையிடம் சொன்னது போலவேரூபனிடமும் சொல்லி உதவி கேட்டாள்.

ரூபனோ அவளிடம் ஜீவன் எதையோ மனசுல வச்சு இருக்கானோ என்னமோ? நீ பேசிப் பாரும்மா” என்றான். கணவன் மனைவிக்குள்ளாக இதற்கு மேல் எதையும் அவனால் செய்ய முடியாது அல்லவா?

“சரிங்கண்ணா நான் பார்த்துக்கிறேன்” என்றவளாகஇவளும் அழைப்பை துண்டித்தாள்.

பேசி பார்க்கணும்’ என எண்ணியவளுக்கு வருகின்ற சனிக்கிழமை தொழிற்சாலை விடுமுறை அன்று, தாங்கள் இருவரும் அலுவலக கணக்கு வழக்கு பார்க்கவென தொழிற்சாலை செல்லும் நாள்தான் மனம் விட்டு பேச உகந்த நாளென தோன்றிற்று. அந்த நாளுக்காக காத்திருந்தாள்.

சனிக்கிழமையும் வந்தது, கடந்த சில நாட்களைப் போலவே அன்றும் ஜீவன் ஊன்று கோலின் உதவியின்றி வெளியே வந்தான்.தனக்கு முழுமையும் சரியாகும் வரை தனது காருக்கு ஓட்டுனரை நியமித்து இருந்தான்.

அவனுக்கு பின்னாக வீட்டிலிருந்துபடபடவென்று வெளிவந்த திவ்யாவின்கையில் டிஃபன் பாக்ஸ் இருந்தது.அவள் பின்னிருக்கையில் விரைந்து வந்து அமரவும் வாகனம் புறப்பட்டது.

‘கொஞ்சம் அமைதியாக வந்தால் தான் என்ன?’ என ஜீவன் எண்ணிக் கொண்டாலும் வாய் திறந்து சொன்னானில்லை. அன்று அலுவலகத்தில் அவர்கள் பார்க்க வேண்டிய கணக்கு, தீர்க்க வேண்டிய கணக்கு வேறாக இருந்தது. அது அவர்களின் வாழ்க்கை கணக்கு.

ஜீவன் காலையில் தொழிற்சாலையை வந்தடைந்ததுமே வழக்கம் போல பார்வையிட்டு வந்தான். தொழிற்சாலையில் வேலையே நிகழாவிடினும் கூட எந்திரங்களை மேற்பார்வை இடுவது அவனது வழக்கம் தான். அங்கு நிகழும் சின்னச் சின்ன விஷயங்களையும் கூட தனது கண்பார்வையில் வைத்துக் கொள்வதுஅவனது வெகு நாளைய பழக்கம்.

தனது வாழ்க்கையை தவிர்த்து, எல்லாவிடமும் தனது கவனம் இருந்திருந்தது என எண்ணிய போது அவனது உதடுகளில் இகழ்ச்சியான முறுவல் ஒன்று தவழ்ந்தது.

அங்கிருந்து திரும்ப வந்தவன் அவர்களது அலுவலக அறையில் அடுத்த முக்கால் மணி நேரம் தனது வேலையில் அமிழ்ந்தான். நடு நடுவில் அங்கிருந்த ஓரிரு கோப்புகளை பார்வையிட மட்டும் எழுந்தானே அன்றி மற்ற நேரங்களில் எல்லாம் அவனது கவனம் மடிக்கணிணியில் மட்டும் தான் இருந்தது. அதாவது அப்படியாக முழுமையுமாக சொல்லவும் முடியாது தன்னோடு வந்தவள் என்ன செய்கிறாள் என்பதையும் தான் வழக்கம் போல கண்காணித்துக் கொண்டு இருந்தான்.

வந்த நேரம் முதலாக ஒரு வேலையுமே செய்யாமல் தனது எதிர் இருக்கையில் அமர்ந்துக் கொண்டு, தன்னை பார்த்துக் கொண்டு அமர்ந்து இருக்கின்றவளை என்ன செய்யலாம்? என இவனுக்கு சுருசுருவென வந்தது.

அவளது பார்வையின் தீர்க்கத்தில் அவனால் தனது வேலையில் கவனம் செலுத்தவே முடியவில்லை. நிமிர்ந்தவன்,

“என்ன திவ்யா?” எனக் கேட்டான்.

“எனக்கு ஒரு விஷயம் கேட்கணும், சில விஷயங்கள் சொல்லணும்.” என்றாள்.

“என்ன கேட்கணும்?” என்றதும்

“நீங்க அடிக்கடி என்னை பார்க்கிறீங்க உங்க முகத்தில் ஒரு கேள்வி ஓடிக்கிட்டே இருக்கு. அது என்னன்னு புரியவில்லை. அது என்ன?” எனக் கேட்டாள்.

சற்று நேரம் அமைதியாக இருந்தவன்….

“நான் எதையாவது கேட்டு, உன் மனசை நோகடிச்சுருவேனோன்னு தான் விலகி விலகி போறேன். நீயா வந்து கேட்கிற…. என்ன செய்யலாம்?”

“புண் பழுத்திடுச்சுன்னா வெட்டி விட்டுரணும்,அப்போதைக்கு அது வலிக்கும் ஆனா கொஞ்ச நாளில் ஆறிடும். நம்மளதும் அப்படித்தான்… நீங்க சொல்லுங்க எவ்வளவு வலிக்குதுன்னு பார்ப்போம்?” என்றாள்.

“நீ என்னை கல்யாணம் செய்துக் கிட்ட பின்ன நிஜமாவே மகிழ்ச்சியா இருக்கிறியா? இல்லை நடிக்கிறியான்னு சந்தேகமா இருக்கும். அதனாலதான் அடிக்கடி பார்ப்பேன்.”

“நான் ஏன் நடிக்கணும்?”

“உனக்கு எங்க வீட்டில யாரையும் பிடிக்காது, இப்ப எப்படி எல்லார் கூடவும் சகஜமா பழகுற, சிரிக்கிற? எனக்கு நம்பவே முடியலை அதனாலத்தான் அந்த கேள்விக்குறி?

அவன் கூறியதை கேட்டதும் அவளுக்கோ‘இவனுக்கு தனது மனம் அன்றும் புரியவில்லை. இன்றும் புரியவில்லை, இனி புரியவும் புரியாது… சொல்லிச் சொல்லி புரிய வைத்து ச்சைக் இதென்ன வாழ்க்கை என்றிருந்தது.

“ஓ” என்றவள் கண்களில் கண்ணீர் தழும்பி நின்றது.

“என்னமோ சொல்லணும்னு சொன்ன?” அவன் கேட்க தயாராக இருந்தாலும் கூட இவள் சொல்லத் தயாராக இல்லை. அவளது பார்வை இப்போது அவனை குற்றம் சாட்டியது. வழக்கம் போல அவளது விழிகளின் மொழி புரியாமல் அவன் தவித்தான்.

‘இந்த பெண்களின் மனதை அறிய ஏதாகிலும் கருவி கண்டு பிடித்து தொலைங்களேன்டா’ என மனதிற்குள்ளாக அவன் கூப்பாடு போட்டது அவனுக்கு மட்டுமே தெரியும்.

மதிய உணவு வேளை அமைதியாக கழிந்திருந்தது, எனினும் காலை வந்ததற்கு இருவரிலும் ஒரேயொரு வித்தியாசம் தான். அவன் அப்படியே தான் இருந்தான், திவ்யாவின் முகம் அதுவரையிலும் அழுதழுது தக்காளிப் பழமாக சிவந்திருந்தது. அவளது முகத்தை பார்த்த நேரம் முதலாக ஜீவன் பயந்தான்.

இவ நம்ம கலர்ல இருந்தா பரவால்ல அடி வாங்கினாலும் கூட மத்தவங்களுக்கு புரியாது. இத்தனை நிறமா இருந்துட்டு கன்னமும், கண்ணும் சிவக்க வீட்டுக்கு போனா நாந்தான் இவளை அடிச்சேன்னு கூட என் அம்மாவே என்னை அடி வெளுத்துருவாங்க’ என மானசீகமாக தனது தலையில் அடித்துக் கொண்டான்.

“திவ்யா இப்ப என்னாச்சுன்னு இப்படி இருக்க?” உணவு வேளைக்குப் பின்னாக அவனாகவே அவளிடம் இறங்கிப் போனான். காரணம்முன்னர் எண்ணியது போல பயமெல்லாம் இல்லை அவளின் கண்ணீர் அவனை அவ்வளவாக வருத்தப்படுத்தி இருந்தது.

“ம்ம் ஒன்னுமில்ல” முனகினாள்.

“சொல்லு”

“இவ்வளவு நாள் நான் பேச வந்தேன், நீங்க பேசினீங்களா இல்லை. இப்ப மட்டும் நீங்க கேட்கவும் நான் சொல்லணுமா?” அத்தனை நேரம் பொழிந்தது போதாதென்று அவள் கண்களில் இன்னுமாக நீர்மணிகள் உருண்டு விழுந்தன.

“எனக்கு சத்தியமா என்னச் செய்யணும்னு புரியலைடா. அன்னிக்கு நீ அழுதல்ல முதல்ல ஆஃபீஸ்ல, அப்புறமா கார்ல. சத்தியமா சொல்றேன் அதுக்கப்புறமா நான் உன்னை நோகடிக்கிற விதமா அப்படி என்ன செய்தேன்னு புரியாம என்னால யார் கூடவும் சாதாரணமா பேசவும் கூட முடியலை. நாம பேசறது யாரையும் ஹர்ட் பண்ணிருமோ? ஒருத்தி என்னை தொடாதே நான் செத்தே போயிடுவேன்னு சொல்லுற அளவுக்கு நாம கொடுமை படுத்தி இருக்கிறோம்னா நாம என்ன மனுஷன்னு எனக்கே என் மேல வெறுப்பாகிருச்சு.

அவனை வெறித்தவாறு பார்த்திருந்தாள்.

உன் அழுகையில் பாதி செத்தே போயிட்டேன். யார் கிட்டேயும் விளையாட்டா பேசறதென்ன? சாதாரணமா பேசக் கூட பயம். உன்னை எனக்கு எத்தனை வருசமா தெரியும் இல்லியா? நீ சிரிச்சுதான் நான் பார்த்திருக்கிறேன். உன்னை முதல் முதல் அழ வச்சதே நான் தான்னு நினைக்கிறப்ப எனக்கே என்னைப் பற்றி கேவலமா இருந்துச்சு.

அவன் பேசிக் கொண்டிருக்க இவளுக்குள் ஏதோ மாற்றம்.

நாணயத்தின் இருபக்கங்களில் எது சரி? எது தவறு? இவர்கள் இருவரும் அவர்களது காதல் எனும் நாணயத்தின் இருபக்கங்கள். ஒருவர் உணர்வதை நிச்சயமா மற்றவரால் உணர முடிவதில்லை. அதெப்படி சொல்லாமலே ஒருவர் உணர்வை மற்றவர் அறிய முடியும்?

அவனாக சொல்லும் வரையிலும் அவனது பயத்தை நான் அறியாதது போலவே, நானாக சொல்லாத வரையிலும் என் உணர்வுகள் அவனுக்கு எப்படி புரியும்?

அவனது வலியை நான் உணராத போது எனது உணர்வை அவன் நான் சொல்லாமலே உணர்ந்துக் கொள்ள வேண்டும் என எதிர்பார்த்தது எத்தனை தவறு? என அந்த நொடியில் திவ்யா புரிந்துக் கொண்டாள்.

“ஜீவா நான் உன் கிட்ட பேசணும்” கண்களை துடைத்தவண்ணம் அவனருகில் அமர்ந்தவள். “பொறு வர்றேன்” எனச் சொன்னவளாக தனது முகத்தை கழுவி துடைத்து வந்தாள்.

ஜீவா நீ என்னை எப்படி நினைச்சாலும் சரிதான்.முதலில் ஒரு சில விஷயங்களை சொல்லிடறேன். என்னதான் நமக்கு நிச்சயம் ஆனாலும் கூட நம்ம குடும்பத்தோட அத்தனை நெருக்கமா பழகுற வாய்ப்பு எனக்கு அமையலை. அதனால எனக்கு அவங்களை பிடிக்காதுன்னு அர்த்தம் இல்லை… நெருக்கமில்லை அவ்வளவுதான். அனிக்கா ஓரளவு நல்ல பழக்கம் என்றாலும் எனக்கு அவள் மீதும் எந்த மோசமான சிந்தனையும் கிடையாது. எனக்கு எனக்கு நீ மட்டும் தான் நீ மட்டும்தான் எல்லாரையும் விட முக்கியமா இருந்த…”

“…”

“உனக்காக நான் என்ன வேணா செய்யலாம் என நினைக்கிற அளவுக்கு எனக்கு உன் மேல பைத்தியம்… அது கல்லூரி காலத்தில இருந்தே அப்படித்தான்.அப்புறம் சரிப்பட்டு வராதுன்னு நினைச்சு நானாகவே மனசை மாத்திக்கிட்டேன். என்னவோ நாம நம்ம ரீயூனியன் பிக்னிக் அப்ப சந்திச்சுக்கிட்டோம். அப்புறமா தொடர் சந்திப்புகள் ரூபன் அண்ணா ஃபேக்டரியில் வேலை செய்யறப்ப நானே எதிர்பாராம நீயே என்னை வெளியே அழைச்சுட்டு போன, காதல் சொன்ன. முதலில் தயங்கினாலும் எத்தனை நாள் ஏங்கின காதல் கிடைக்கும் போது அதை தள்ளி விட முடியுமா? நான் ஏத்துக்கிட்டேன். உன்னை மட்டுமில்ல நீ சொன்ன அத்தனை விஷயத்தையும் நானா தான் ஏத்துக்கிட்டேன்.”

“…”

“எனக்குன்னு சரி தப்பு எதுவுமே நான் ஒருபோதும் யோசிச்சதே இல்லை ஜீவா. நம்ம நிச்சயத்துக்கே எவ்வளவு கஷ்டப்பட்டு சம்மதம் வாங்கினேன் தெரியுமா? எத்தனை ஏச்சுப் பேச்சு.” அவள் கண்களில் துளிர்த்த கண்ணீரை அவன் தனது கைக்குட்டையில் சேமித்தான்.

“அப்புறமா ஒரு கட்டத்தில் நான் உனக்காக செய்த அத்தனையையும் உன் கிட்ட இருந்து எதிர்பார்க்க ஆரம்பிச்சேன். அங்கே தான் எல்லா தப்பும் நடந்தது.” கண்ணீர் வடித்தவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.

“வீட்டில கல்யாணம் ஏன் லேட்டாகுதுன்னு எனக்கு குடைச்சல் கொடுத்தாங்க, நான் வந்து உன்னைக் கேட்டா நீ அனிக்கு குழந்தை பிறக்குறதை காரணமா சொன்ன…”

ஜீவனுக்கு ஏதோ புரிகின்றார் போல இருந்தது.

“நீ நம்ம கல்யாணம் எதற்காக தாமதமாகுது என்பதற்கு காரணமா நாம இரண்டு பேரும் சம்மந்தப்பட்ட எதையாவது சொல்லி இருந்தா ஏற்றுக் கொண்டு இருந்திருப்பேன். நீ அனி பேரை சொல்லவும்… நம்ம வாழ்க்கையில் எப்படி ஜீவன் முதல் இடமோ அப்படி ஜீவனோட வாழ்க்கையில் நாம முதலாவதா இல்லைனு என் மனசில திடமா தோணிடுச்சு…”

அழுகையில் துடித்த அவளது இதழ்களை தன்னிதழ்களுக்குள்ளாக அவன் அடக்கிக் கொண்டான்.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here