என் ஜீவன் நீயே_1_ஜான்சி

0
229

அத்தியாயம் 1

உன் முக தரிசனம் கிட்டாத

கொடிய நாட்களை

நாட் காட்டியினின்றே

அழித்திடப் போகின்றேன்.

எந்தன் வாழ்வின்

ஜீவனற்ற அந்த நாட்களை

எதற்கு அநாவசியமாய்

பத்திரப் படுத்திக் கொண்டு? …

ஜீவன் இண்டஸ்ட்ரி

தனது தொழிற்சாலையின் பணி நேரம் ஆரம்பிக்க இன்னும் சில மணித்துளிகள் இருக்க, வழக்கம் போலவே அதிகாலை நேரம் தனது தொழிற்சாலைக்கு வந்துச் சேர்ந்து இருந்தான். செக்யூரிட்டி கேட் தாண்டி உள்ளே ஓட்டி வந்த காரை ஏற்கெனவே பார்க் செய்த போதும் தொழிற்சாலையின் உள்ளே செல்லாமல் வெளியே நின்று அதிகாலை விடியலை இரசித்துக் கொண்டு இருந்தான்.

அன்றைய காலை மிகவும் இனிதாக விடிந்திருந்தது, அந்த இனிய காற்றின் ஸ்பரிசம் அவன் முன்னுச்சி கேசத்தை உரிமையாய் கலைத்து, உடலை வருடி சிலிர்க்கச் செய்தது. மாசு சூழாத அதிகாலைக் காற்றை உள்ளூற இழுத்து ஆழ சுவாசித்தான்.

இயற்கையே அனைத்திற்கும் ஆதார சக்தி, தாய்ப் பாலைப் போல இயற்கைக் காற்று தூயதும், நலம் மட்டுமே பயப்பதுவும் அல்லவா? காற்றிற்கென எத்தனை மிண்ணனு சாதனங்கள் வந்தாலென்ன? அவை எல்லாம் இயற்கை காற்றுக்கு இணை ஆகுமா?

நாம் பார்க்க இயற்கையில் கண் மூடி இலயித்து ஆழ்ந்திருக்கின்றவன் பெயர் ஜீவன் வரும் மாதம் 26 வயது நிறைவை எட்டப் போகின்றவன், அவன் தொழிற்சாலை ஒன்றின் முதலாளி என்று ஏற்கெனவே அறிந்துக் கொண்டோம். காற்றில் அசைவாடும் தன் அடர்ந்த சிகையைக் கோதிக் கொள்ளுகையில் உங்களுக்கு அவனது ஆண்மை ததும்பும் தோற்றம் புலப்பட்டிருக்குமே?

அலட்சியமான முக பாவனைகள் கொண்ட அந்த வசீகரன் உயரமோ ஆறடியை தொட்டு நின்றது. அவன் கோதுமை நிறத்தினன். தனது தொடர்ந்த உடற்பயிற்சிகளால் முறுக்கேறியிருக்கும் அவனது கரங்களின் திரட்சியானது அன்று அந்த ப்ளையின் ஸ்லிம் பிட் காட்டன் ஷர்ட்டில் மறைவுறாமல் வெளிப்பட்டன. ஜீவன் ‘மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர்’ என்று தன்னுடைய தொழில் மற்றும் நட்பு வட்டத்தில் அழைக்கப் படுகின்றவன்.

யாரிடமும் எளிதில் பேசி பழகும் இனிமையானதொரு சுபாவத்தோடு கூட காணும் மறுநொடியே எதிரில் நிற்பவரை அளவிட்டு கணிக்கும் இலாவகம் அவனில் இருந்தது. தனக்கு பிடித்தவருக்காக உயிரையும், உழைப்பையும் அர்ப்பணிக்க தயங்காதவன், அதே நேரம் தனக்கு தீமை செய்ய எண்ணுபவருக்கோ தயவு தாட்சன்யமின்றி எதிர் நடவடிக்கை எடுப்பவன். அப்படிப்பட்ட தருணங்களில் பொறுமை என்றால் என்ன விலை? என்று கேட்கின்றவன்.

தனக்கு மனதிற்கு சரியென பட்டதை பட்டவர்த்தனமாக பேசும் துணிச்சலும், தைரியமும் அவனுக்கு வாய்த்திருந்தது.அதுவே அவனைப் பற்றி பிறர் வியக்கவும் வழி வகுத்தது. அவனுடைய தொழில் குருவான அண்ணன் ரூபனுக்கும் அவனுக்கும் ஏதாவது ஒன்றில் கருத்து மாறுபடுமானால் அது இது குறித்தாக மட்டுமே இருக்கும்.

“உன்னைப் போலெல்லாம் மனசில நினைக்கிறதை சொல்லாம, செய்யாம எல்லாம் என்னால் பொறுமையாக இருக்க முடியாது. நான் நினைச்சதை உடனே செஞ்சாதான் எனக்கு திருப்தி”, என்று வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று அவனிடமே பேசி விடுவான்.

தனிப்பட்ட கொள்கைகளை பொறுத்தவரை தான் வலிமையானவனாக இருப்பது காப்பதற்கே அன்றி அழிக்கவன்று எனும் கொள்கை கொண்டவன்.வீட்டின் பெண்களிடம் மட்டுமன்று வெளியிலும் அதே கொள்கையை பின்பற்றுவதனால் ஆண், பெண்கள் பேதமற்ற ஏராளமான நட்புக்களை வரமாய் பெற்றவன்.

எங்கு சென்றாலும் சிரிக்கவும், சிலிர்க்கவும் அவனோடு கூட ஒரு கூட்டம் இருக்கும். வேலை நேரத்தில் எவ்வளவு ப்ரொபஷனலோ வார இறுதிகளில் அவ்வளவு விளையாட்டுப் புத்தி. இன்னமும் கூட தன்னுடைய இயல்பை தன்னுடைய தொழிலுக்கு காவு கொடுக்காதவன்.

சொந்த தொழிற்சாலை என்றதும் கோடீஸ்வர குடும்பத்தின் வளர்ப்பு என்று எண்ணுதல் அவனை பொருத்தமட்டில் பொருந்தாது. அவர்கள் நடுத்தர மக்களாக இருந்து, தற்போது தொழிலதிபர்களாக உயர்ந்த குடும்பமாகும், அவர்களின் உற்றார் உறவினர்களின் கூற்றுப் படி புதுப்பணக்காரர்கள்.

குடும்பத்தில் வீட்டில் தாய் இந்திராவுக்கு அவன் கடைக்குட்டி செல்லப் பிள்ளை, அப்பா ராஜீக்கும் கூட அவன் அப்படித்தான். எந்த வீட்டிலெல்லாம் தமக்கை எனும் உறவு உள்ளனவோ அந்த குடும்பத்தின் இளைய வாரிசுகளுக்கு அம்மா தவிர இன்னொரு தாயும் உண்டுமாம். அது போல ஜீவனின் இரண்டாம் தாயும், தமக்கையுமான ஜாக்குலினுக்கும் அவன் இன்றும் சிறு பிள்ளைதான்.அவளோ திருமணமாகி கணவர் ராஜா மற்றும் மகன் பிரின்ஸோடு டெல்லியில் குடித்தனம். ஆனால், அலைபேசி, முக நூல் என்று எல்லாவித சமூக வலைதளங்களாலும் அக்காவும் தம்பியும் தூரத்தை நொடியாய் கடக்க தெரிந்தவர்கள்.

ஜீவனின் இரண்டு அண்ணன்களும் அவனை தோள் அணைத்து நட்பாய் நடத்துவார்கள் எனினும் அவர்கள் மனதளவில் அவன் இன்னும் குட்டி தம்பிதான்.

மூத்த அண்ணன் தீபன் பிரபல சி ஏ வாக லட்சங்களில் சம்பளத்தை அள்ளிக் கொண்டு, மனைவி ப்ரீதா மற்றும் மகன் ராபினோடு அருகிலுள்ள பிளாட் ஒன்றில் சில வருடங்கள் முன்பு குடி பெயர்ந்திருந்தான்.

இரண்டாவது அண்ணன் ரூபன், தன்னுடைய அத்தை மகளை மணந்துக் கொள்ளவென்று, தன் வாழ்க்கை தரத்தை உயர்த்த பிஸினஸ் எனும் முயற்சியை அறிந்தே இராத அந்த குடும்பத்தில் தன் வெறித்தனமான உழைப்பினால் கார்களின் சிறு சிறு பகுதிகளை தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை நிறுவியவன்.

தன்னை பொருளாதாரத்தில் அத்தை கணவர் தாமஸ் மதிக்கும் விதமாக ஸ்திரப்படுத்தி, தன் நேசத்திற்குரிய அத்தை மகள் அனிக்காவையும் மணந்துக் கொண்டு, தற்போது கர்ப்பிணியாக இருக்கும் அவளோடு கூட சில நாட்கள் தான் புதிதாக கட்டி இருக்கும் வீடு, அல்ல அல்ல அந்த மாளிகையிலும், மீதி பல நாட்கள் தங்களுக்கென அப்பா இழைத்து இழைத்துக் கட்டி இருக்கும் மூன்று அறைகள் கொண்ட அவர்கள் அன்பு இல்லத்திலும் கழித்துக் கொண்டிருந்தான்.

ரூபனுக்கும் அனிக்காவிற்கும் குழந்தை பிறந்து, கொஞ்சம் வளரும் வரையிலும் பெரியவர்கள் கண்காணிப்பில் இருக்கவென்றே இங்குமங்குமான அவர்கள் இருப்பும், பயணமும்.மொத்தத்தில் பெரியவர்களை மதிக்கும் சிறியவர்கள் என அன்பு பேணும் நற்குடும்பம் அவர்களுடையது.

தன் அண்ணன் ரூபன் தன்னை ஒரு தொழிலதிபனாய் நிலை நாட்ட வெறித்தனமாக உழைத்துக் கொண்டிருந்த நாட்களில் தானும் அதே தொழிலால் கவரப்பட்டு அதற்கான படிப்பையே கற்று, எந்த ஒரு எதிர் நோக்கும் இன்றி ஜீவன் அவனுக்கு தோள் கொடுத்திருந்தான்.

ரூபனுக்கான ஜீவனது இரவு பகல் பாராத உழைப்பானது அண்ணனுக்காக மட்டுமானதல்ல, அவனது உயிர்த்தோழி அனிக்காவுக்கானதும் தான். முதலில் தன் அண்ணன் தன் தோழி அனிக்காவை காதலிப்பதை அறிந்து அது சரி வராது என எதிர்த்து நின்றான் தான். ஆனால், என்று தன் அண்ணனின் காதலை உணர்ந்தானோ? அன்றே அவன் காதல் வெற்றிப் பெற அத்தனையிலும் உதவிட அவனே முன் நின்றான்.

ஜீவனிடமிருந்த எந்த ஒரு வேலையாயினும் அதில் அவன் காட்டும் அர்ப்பணிப்பையும்,அத்தனையையும் திறமையாய் நடத்தும் ஆளுமைகளையும் அறிந்துக் கொண்டு அவனுக்கு என்றே ஒரு தொழிற்சாலை அமைய கிட்டத்தட்ட சில வருடங்களாக தோள் கொடுத்து நின்றான் அவன் அண்ணன் ரூபன். அங்கே ஒருவருக்காக ஒருவர் என்று தோள் கொடுக்கும் உடன் பிறப்புகளால் குடும்பமே வளர்ச்சியை அடைந்துக் கொண்டது.

ஜீவன் அதிகாலை புத்துணர்ச்சியோடு தொழிற்சாலையின் முன் வாயிலை நோக்கி பயணித்தான். செக்யூரிட்டியின் காலை வணக்கத்திற்கு, பதில் வணக்கம் சொல்லி, செக்யூரிட்டி அவனுக்காக திறந்துக் கொண்டு நின்றிருந்த கதவின் வழியாக உள்ளே நுழைந்தான்.

“ம்ஹா…”” மெஷின்களின் வாசனையும் கூட அவன் உதிரத்தோடு கலந்து விட்டிருந்தன போல, அதனை சுவாசித்து மறுபடி ஒருமுறை புத்துணர்வுக் கொண்டான்.

அங்கே இருக்கும் ஒவ்வொரு எந்திரமும் அவனோடு உரையாடும் போலொரு உணர்வு பிணைப்பு அவனுக்கு உண்டு. ஆசையாய் தாம் கற்றுக் கொண்ட தொழிலோ, வேலையோ எத்தனை பேருக்கு அமையும்? அந்த அளவில் அவன் மிகவும் அதிர்ஷ்டத்திற்கு உரியவனே. ஒவ்வொன்றாய் அருகே சென்று கவனித்தும் கவனியாமல் வந்து அமர்ந்தான்.

முதலாளியின் நேரடியான கவனிப்பு இருக்க அங்கு சுணக்கம் தான் ஏது? உரிய நேரத்தில் மெஷின்கள் இயங்க துவங்கின. அதே தயாரிப்புப் பிரிவின் ஓரத்தில் இருந்த இடம் அது மற்றவர்கள் அவனை கவனிக்க இயலாவிடினும் அவன் ஒட்டுமொத்த தொழிற்சாலையையும் கவனிக்கும் வண்ணம் அமைந்த இருப்பிடம். எளிதில் பார்க்கும் வண்ணம் அமைந்திருந்த இடத்தின் சின்ன தடுப்பின் பின்னே இருந்து தன் வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தான் அவன்.

அவனது மூத்த அண்ணனும் சார்ட்டட் அக்கவுண்டண்டுமான தீபன் ஆண்டிறுதிக்கான கணக்குகளில் சிலவற்றை சரிபார்க்கச் சொல்லி அனுப்பி இருந்தான். ஆம், தம்பிகளின் நிறுவனத்திற்கு தணிக்கை செய்ய வேறு ஒருவர் இருந்தாலும் தீபன் அவற்றில் தலையை நுழைக்காமல் இருக்க மாட்டான். உரிய ஆலோசனைகளை சொல்லி அவர்களை அவன் வழி நடத்துவான்.

அத்தனை வேலை மும்முரத்திலும் கூட மனதிற்குள்ளாக ஜீவன் தன்னவளை மிக தேடினான்.

“எங்கே போய்விட்டாள் திவ்யா? அவள் இருந்தால் இன்னும் சீக்கிரமாக இந்த வேலைகளை முடிக்கலாமே? …”

என மனதிற்குள் எண்ணிக் கொண்டான்.  வேலைகளுக்காக தான் அவளை தேடுகின்றானா?  அல்லது கடந்த ஒருவாரமாக அவளை காணாத  ஏக்கத்தின்  காரணமாக தேடிக் கொண்டிருக்கின்றானா? என்பது கடவுளுக்கே வெளிச்சம்.

திவ்யா வேறு யாருமல்ல அவனுடைய ஃபியான்சி அதாவது மனைவியாகப் போகின்றவள். இருவருடைய காதல் பல்வேறு பிரச்சனைகளை தாண்டி நிச்சயதார்த்தம் முடித்து, தற்போது அவர்கள் தங்கள் திருமணத்திற்காக காத்திருக்கின்றனர்.

பிறர் காண பொது வெளியில் தங்கள் காதலை இவர்கள் அவ்வளவாய் காட்டிக் கொள்ளாத போதும், அவர்களுக்கு இடையேயான பிணைப்பு அது மிகவும் ஆத்மார்த்தமானது.

சில முக்கியமான டாகுமெண்ட்களை பார்வையிட வேண்டுமென எண்ணியவன் தொழிற்சாலை பகுதியில் இருந்து எழுந்து லேப்டாப்பை கையோடு தூக்கிக் கொண்டு சற்றுத் தள்ளியிருந்த கேபினுக்குள் செல்ல ஆரம்பித்தான். அந்த இரும்புக் கதவைத் தாண்டிச் சென்றால் தொழிற்சாலையின் சப்தமற்றப் பகுதி. க்ளையண்ட் சந்திப்பு, முக்கியமான சந்திப்புகள் எல்லாம் நிகழ்வது அந்த கேபினில் தான்.

ஏற்கெனவே ஜீவனின் அண்ணன் புழங்கிய தொழிற்சாலை ஆதலால் எல்லாம் மிகவும் நேர்த்தியான அமைப்புக் கொண்டது. கேபினுள் உள்ளே விவாதிக்கப் படும் கருத்துக்களை யாரும் அறிய நேரலாம் எனும் முன்னெச்சரிக்கையில் அந்த கேபினில் அருகில் இருந்த அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்ட் இடத்தை மட்டும் அவன் இப்போது மாற்றி இருந்தான். அதனால் அந்த இடம் முழுக்க இரகசிய உரையாடல்களுக்கு ஏற்றதாக மாறி இருந்தது.

இரும்புக் கதவுகளுக்கு அப்பால் செல்ல, அது வேறு ஒரு சப்தங்களற்ற உலகம். குட்டியான எட்டுக்களோடு இரு பாதங்கள் அவனை பின் தொடர்ந்தன. மல்லிகை மணமும். கொலுசொலி சப்தமும் தனக்குப் பின்னால் கேட்க,

‘ஆஹா வந்து விட்டாள் போலிருக்கிறது?’ என ஜீவன் உற்சாகமாய் திரும்பினான். வழக்கமாய் வெஸ்டர்ன் ட்ரெஸ்களில் கலக்கும் அவனுடைய காதலி, அன்று காட்டன் சேலையில் மிகவும் பாந்தமாய் இருந்தாள்.

திவ்யாவைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால், சுண்டி விட்டால் ரத்தம் வந்து விடுமோ? எனும் ஐயம் ஏற்படுத்தும் நிறம். ஐந்தேகாலடி உயரம், துறுதுறு கண்களும், குழி விழும் மோவாயுமாய் கண்ணை பறிக்கின்றவள். அவளது. சுருட்டை முடி அவ்வப்போது முகத்தில் வந்து விளையாடும். இன்றோ இன்னும் அழகாய், புதிதாய் பூத்த பூவாய் அவன் கண்ணை பறித்தாளவள்.

மல்லிகைப்பூ சூடியிருந்தாள் நெற்றியில் கோயிலுக்கு சென்று வந்த அடையாளமாக குங்குமம் மற்றும் விபூதி இருந்தன. ‘’ஓ இன்றைக்கு அவளோட ஸ்பெஷல் டே போலிருக்கு, வெள்ளிக் கிழமையா?’ மனதிற்குள் எண்ணிக் கொண்டான் ஜீவன்.

அங்கு நின்றவள் தனக்கு அண்ணார்ந்துப் பார்க்கும் உயரத்தில் இருப்பவனை அங்கிருந்த சேர் ஒன்றில் அமரச் சொல்லி விரல்களாலேயே வழி நடத்தினாள்.

வாரமொன்று கழிந்து அவளைப் பார்க்கும் ஆவலில், அதுவும் சேலையில் மனம் மயக்குகின்ற பாவையாக எதிர் நிற்பவளைக் காண தெவிட்டாத நிலையில் அவள் சொல்லுக்கு அவன் அப்படியே அடி பணிந்தான்.

எதிரில் அமர்ந்து இருப்பவனுக்கு குனிந்து அவன் நெற்றியில் கவனமாய் விபூதி வைத்து விட்டாள், அவளது கைகள் செல்லும் பாதையில் கருவண்டுக் கண்களும் பயணிப்பதை தன் கண்களுக்குள் இவனோ நிரப்பிக் கொண்டான்.

அவனுக்கு விபூதி வைத்தவள் அந்த கேபினில் அமர்ந்திருந்த இயேசு மற்றும் மரியாள் படத்தின் முன் நின்றும் சென்று நின்று ஏதோ வேண்டி வந்தாள்.

திரும்ப வந்தவளிடம் அமர்ந்து இருந்தவாறே,

“ஊரிலருந்து திங்கட்கிழமை தான் வருவேன்னு நினைச்சேன் திவ்?”

ஆச்சரியத்தில் மொழிந்தான் ஜீவன்.

“நான்கூட திங்கள் கிழமை வருவதாகத்தான் நினைச்சேன். ஆனா எங்க பாஸ் எப்ப பாரு லீவு கொடுக்க மூக்கால அழுவாரா? அதான் எதுக்குப் பிரச்சனைன்னு இன்னிக்கே வந்திட்டேன்”கண் சிமிட்டினாள்.

‘அவனைப் பாராமல் இன்னும் மூன்று நாட்களா?’ என்று அவள் மனம் துடித்ததை எல்லாம் விலாவரியாக அவனிடம் சொல்லிக் கொண்டிருக்க முடியுமா என்ன?

“வேணும்னா சொல்லு, உன் பாஸை மாத்திடலாம், இல்லேன்னா அவன் கையை காலை முறிச்சு….”

சொல்ல விடாமல் இடைமறித்தவள்…

“பொழைச்சு போகட்டும் அந்த பாஸ், நல்லா இருந்துட்டு போகட்டும் விடுங்க…”

விளையாட்டாய் சொல்லி நிமிர்ந்தவள் தன் இரண்டு கைகளையும் அவளுக்காக விரித்துக் கொண்டு புன்முறுவலோடு நின்றுகொண்டிருந்த அவனருகே சென்றாள்.

அருகே சென்றதும், “என்ன?”  என அவனிடம் திவ்யா புருவம் தூக்கி கேட்க,

“ஒரே ஒரு ஹக் டி ப்ளீஸ்”…. என்று அவளது அணைப்பை வேண்டி நின்றான்.

“இப்ப என்னவாம்?”  அவனது கொஞ்சலாம் கெஞ்சலில் இவளுக்கு திமிரேற கெத்தாக கேட்க,

“ஒரு வாரம் நீ இல்லாம ரொம்ப மிஸ் பண்ணேன் ப்ளீஸ்” என மறுபடி கெஞ்சினான்.

“நாம ஆபீஸ்ல இருக்கிறோம் அதாச்சும் ஞாபகம் இருக்கா உங்களுக்கு?” முகம் சிவந்தாள்.

“இது ஓரத்தில இருக்கிற கேபின் இங்க யாரு வரப்போறா? இந்த கண்ணாடியில வேற வெளியே யாருக்கும் உள்ளே யார் இருக்கான்னு ஒன்னும் தெரியாது.”

“ம்ஹீம்…” மறுப்பாக தலையசைத்தாள்.“யாராவது வந்தா மானமே போயிடும்…”, முகத்தில் கலவரம்.

“என்னை இப்படி கெஞ்ச விடறே இல்ல, பொறு உன்னை இதெல்லாம் கணக்கு வச்சு கல்யாணத்துக்கு அப்புறம் பார்த்துக்கறேன்…” என்றான்.

அவனது குரலில் இருந்த கோபம் கண்களில் இல்லை, மனமோ எப்படியாவது சில நொடிகள் அவளை அணைத்துக் கொள்ள வேண்டும் என யோசித்துக் கொண்டிருந்தது.

“ஒரு ஐடியா…”

என்றவனாக கேபினின் கதவருகே சென்று கதவோடு சேர்ந்து சாய்ந்து நின்றுக் கொண்டான்.

“இப்ப வா, யார் வந்தாலும் நான் இங்க நிக்கிறதனால உடனே கதவை திறக்க முடியாது …”

அவனது முன்னெச்சரிக்கையை பார்த்து அவளறியாமல் சிரிக்க, அவள் மோவாய்க் குழியில் மற்றொரு முறை விழுந்து எழுந்தான் ஜீவன்.

சிரித்தவாறெ அவன் கரங்களுக்குள் புகுந்தாள் திவ்யா.

அவனது காமமற்ற அணைப்புக்குள் அமிழ்ந்தாள். எப்போதுமே ஜீவன் அவளை இவ்வாறுதான் தேடுவான். கைகளை அவள் தோளை சுற்றி போட்டு இருந்தவன், குனிந்து அவள் நெற்றியை முட்டி தலையில் முத்தமிட்டான்.

அவள் தலையில் சூடியிருந்த மல்லிகை பூவில் மூக்கை உரசி “ம்ஹா” மூச்சை இழுத்தான்.

அவனது இதயத்துடிப்பில் தலை சாய்த்து அவனது இதமான, வெம்மையான அணைப்பில் கட்டுண்டு இருந்தவளுக்கு அவன் மேல் அளவில்லா காதல் பெருகியது. அவனது இடையில் கோர்த்திருந்த தன் கைகளை இறுக்கினாள்.

“ஏ ஜீவா… என் பூ வாசத்தை எல்லாம் எடுத்துட்டியா? போச்சு போச்சு என் பூ வாசமெல்லாம் போச்சு…”

“போடி ஒரு வாரம் கண்ணுல படாம இருந்துட்டு வந்து ஓவரா மிரட்டுற?”  தன்னோடு இறுக்கி அணைத்துக் கொண்டான் ஜீவன்.

அவன் அணைப்பிற்குள் இருக்கும் ஒவ்வொரு நேரமும் தான் உணரும் பெருமித உணர்வை அப்போதும் உணர்ந்து கொண்டு இருந்தாள். ‘அவளுக்கு அவன் காதல் கிட்டுமா?’ என்று தவமாய் தவமிருந்த காலம் ஒன்று உண்டு. மற்ற பெண்களை அவன் காணும் போதெல்லாம், அவர்களோடு அவன் பேசும் போதெல்லாம், ஏக்கமும் பொறாமை உணர்வும் அடைந்திருந்ததும் உண்டு. ‘இன்று, இதோ வைத்துக் கொள் என்று முழு மொத்த அன்பையும் சுமந்துக் கொண்டு அவனே அவளுக்காய் இறைவன் தந்திருக்க… எவ்வளவு பெரிய வரம்?’

“மிஸ் யூ” எனும் அவனது நெற்றி மற்றும், உச்சந்தலை முத்தங்கள் தொடர, அவள் அவளாகவே இல்லை. அவளுடைய காதலன், காவலன், அன்பை நிறுத்தாமல் பொழியும் வருணனின் வருடலில், முத்தங்களில் கால நேரம் மறந்து லயித்திருந்தாள் திவ்யா.

ஒற்றை தீண்டலில்

இரு காயங்கள்.

ஒரு அழுத்தத்தில் வெட்டுண்டு போகும்

இரு உடல்கள்.

ஒரே உயிர் கூட்டில் வசிக்கும்

இரு உயிர்கள்,

காதல் என்பது

இருபக்கம் கூர் தீட்டியதொரு

வாளன்றி வேறில்லை.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here