என் ஜீவன் நீயே_20_ஜான்சி

0
54

அத்தியாயம் 20

அக்கணங்கள் நீண்டிருந்தன, அவள் அவனது வாழ்வில் எத்தனையாவது இடத்தில் இருக்கின்றாள் என ஒரு முத்தத்தில் காட்டி விட அவன் யத்தனித்தான் என்பது புலனானது.எத்தனை முறை முயன்றும் அவன் அவளுக்கு அதை புரிய வைத்தானா? என்றறியான்.

முத்தத்திற்கு ஊடாக “திவ்” எனும் அவனது அந்த ஒரு வார்த்தையில் அவளுக்கான பிரத்யேகமான அந்த ஒரு பெயரில் அவள் உயிர்த்தெழுந்தாள். அவர்களுக்குள்ளாக அரூபமாக இருந்த ஏதோ ஒரு திரை அப்போது அகன்று இருந்தது.

அவனது அந்த அழைப்பிற்கு காலம் காலமாய் காத்திருந்தவளைப் போல அவள் அவனைகண் மலர்ந்து பார்த்தாள்.

“நீ இப்பவும், எப்பவும் என்னோட வாழ்க்கையில் முதலாவதுதான்” என்றான். நம்பாமல் விழித்தவளை எப்படியாக நம்ப வைப்பது எனப் புரியாமல் திகைத்தாலும், மனைவியின் மனதில் இருப்பது என்ன? என புரிய வந்த தெளிவில் இருந்தான்.

“வா நேரமாகுது நாம வீட்டுக்குப் போகலாம்” எனச் சொல்லவும் இருவரும் புறப்பட்டனர். நேராக வீட்டிற்குச் செல்லாமல் ஆங்காங்கே சற்று நேரம் செலவழித்து வீட்டுக்கு திரும்பினர். வீட்டிற்கு வந்ததும் சமையலறையில் சென்று பார்க்க, அங்கே அவள் செய்ய எந்த வேலையும் அவளுக்கு மீதமில்லை எனக் கண்டு வந்தாள்.

டேனிகாவை பார்த்துட்டு வருவோமா?” என திவ்யா கேட்டதும் ஜீவன் புறப்பட்டு வந்தான்.

அங்கே சாராவின் வீட்டில் இப்போது டேனிகா திவ்யாவின் மடியில் ருந்தாள். கடந்த ஆறு மாத கால வேலைகளை குறித்து ரூபன் ஏதேதோ விபரங்களைச் சொல்ல ஜீவன் குறித்துக் கொண்டு இருந்தான்.

திவ்யாவிற்கு ஏதோ புரிந்தாற்போல இருந்தது, இன்றிரவே அதனை கேட்டு தெளிவுப் படுத்திக் கொண்டாக வேண்டும். எண்ணியதை போல கேட்டும் விட்டாள்.

“அனிக்காக்கு டெலிவரி ஆனதுக்கு பின்னாடிதான் கல்யாணம் செய்துக் கொள்ளணும்னு எதற்காக சொன்னீங்க?

“இப்ப அது கட்டாயம் தேவையா?” ஜீவன் கேட்க

“ஆமாம் எனக்கு தெரிஞ்சுக்கணும், நான் என்னென்ன பிழை விட்டேன்னு கண்டு பிடிக்கணும், அடுத்த முறை அதை செய்யக் கூடாது இல்லையா? அதற்காக தெரிஞ்சுக்கணும்.

“சரி சொல்றேன், ஆனா மறுபடி உணர்ச்சி வசப்படக் கூடாது.”

“அழுகை வந்தா நான் என்ன செய்வேன்?” முனகினாள்.

அண்ணாக்கும் எனக்கும் ஒரே மாதிரி பிசினஸ் அது உனக்கே நல்லா தெரியும். நினைச்ச நேரம் இழுத்து மூடி, நினைச்ச நேரம் ஓட்ட முடியாது.வேலை நில்லாம ஓடிட்டே இருக்கணும் அப்படி வேலை இது. அது போல இங்கே ரொம்ப கவனமா இருக்கணும். யார் காலை யார் எப்ப வாருவாங்கன்னு எப்பவுமே தெரியாது. அண்ணனுக்கு ஏதாவது ஒரு தேவைனா நான் அவன் வேலையை கவனிச்சுக்குவேன். எனக்கு ஒன்னுன்னா அவன் கவனிச்சுக்குவான் அதுதான் எங்களுக்குள்ள எழுதப்படாத சட்டம்.

“ம்ம்”

“கல்யாணத்துக்கு அப்புறம் நிதானமா ஒரு மாசம் ஹனிமூன் போக நினைச்சிருந்தேன். அப்படின்னா அண்ணன் அந்த நேரம் வேலையில்லாம இருந்தா தானே தொழிற்சாலையை கவனிச்சுக்க முடியும்?”

“…”

“அனிக்கு குழந்தை பிறந்து ஒரு மாசம் ஆச்சுன்னா அண்ணன் கொஞ்சம் ஃப்ரீயா இருப்பான். அவன் தலையில எல்லா பொறுப்பையும் போட்டுட்டு நான் நல்லா சுத்திட்டு வரலாம் என்று நினைச்சேன்.” பெருமூச்செழுந்தது…

“என்னோட புத்திக்கெட்ட தனத்தால இரண்டு பேரும் கஷ்டப்பட்டுட்டாங்க.

“என்னாச்சு?”

நான் முடியாமல் கிடக்குறேன், நான் இழுத்து வச்ச அதிகப் படி வேலைக்கெல்லாம் அண்ணன் அலைய, அண்ணன் ஆஃபீஸ் வேலை மேற்பார்வைக்காக அனி அலைய, இப்படியா அவங்களோட சந்தோசமான நாட்கள் கூட நிம்மதியா இருக்க முடியாம இரண்டு பேரும் இரண்டு பக்கமும் அலைஞ்சு திரிஞ்சு… அனிக்கா பிரசவத்துக்கு அட்மிட் ஆகிற அன்னிக்கு வரைக்கும் கூட ஆஃபீஸ் போயிட்டு வந்திருந்தா… ம்ப்ச்ச்” தனது அன்றைய இயலாமையை இன்று சபித்துக் கொண்டு இருந்தான் போலும்.

“விடுங்க, நான் எவ்வளவு அறிவுக் கெட்டவன்னு புரியுது. எல்லாத்தையும் தப்பாவே எடுத்துக் கிட்டேன்” தனக்குள்ளாக ஏதேதோ புலம்பிக் கொண்டாள்.

“சரி தூங்கு” பலதும் பகிர்ந்த, தெரிந்துக் கொண்ட களைப்பில் இருவரின் கண்கள் சொக்கின.

“என்னாலதானே உங்களுக்கு அடிப்பட்டுச்சு, நான் உங்களை அந்த அளவுக்கு குழப்பி இருக்கக் கூடாது.” மனதிற்குள் இருந்ததை திவ்யா ஒப்புவித்தாள்.

“நோ அப்படியில்ல” என்றவனது கண்கள் தூக்கத்தில் அமிழ்ந்தன.

அடுத்த நாள் ஞாயிற்றுக் கிழமை அன்றைய தினம் சாராவின் வீட்டில் விருந்து இருந்தது.

“அத்தை நான் வெஜ் சாப்பிட்டு சாப்பிட்டு நொந்து போயிட்டேன்.ஏதாச்சும் புதுசா பண்ணுங்க” என ஜீவன் சாராவிடம் கெஞ்சாத குறையாக கெஞ்சி இருந்தான்.

எனவே அன்றைய மெனு முழுக்க வித்தியாசமாக இருந்தது.

மதிய உணவிற்கு பின்னர் ஜீவன் எங்கோ வெளியே சென்றிருக்க சிறுவயது ஆல்பங்கள் எல்லாம் எடுத்து பார்த்துக் கொண்டு இருந்தனர்.பெரும்பாலான புகைப்படங்களில் எல்லாம் ஜீவனும் அனிக்காவும் சேர்ந்து இருந்தனர்.

“எப்படி குச்சி குச்சியா இருக்கான் பார்” அவனை அனிக்கா கிண்டலடித்துக் கொண்டு இருந்தாள்.

திவ்யா புன்னகைத்தாள், ஜீவன் பரிசு வாங்கும் பல புகைப்படங்களும் இருந்தன.

“படிப்பில ஆவரேஜ் தான் ஆனா ஸ்போர்ட்ஸ்ல முன்னால நிப்பான். நாலு எலும்பை வச்சுட்டு ஓடுனான்னா ஓட்டப்பந்தயம் எப்பவுமே முதல் பரிசுதான்.

அனிக்கா சிலாகிக்க அவையெல்லாம் திவ்யாவிற்கும் தெரிந்த விஷயம் தானே? முறுவலித்தாள்.

பெரும்பாலான புகைப்படங்களில் ஜீவன் அனிக்காவின் கரத்தை பற்றியவனாகவே இருந்தான்.

சாரா அங்கே வந்தவர் அனிக்காவிடம் இருந்த குழந்தைக்கு ஏதோ மருந்தை கொடுக்க அவள் சிணுங்கி அழுதாள். திவ்யா குழந்தையை ஏந்திக் கொண்டாள். குழந்தையின் முதுகை நீவி விட்டவளாக அங்குமிங்குமாக நடைபயில, குழந்தை அழுகையை விட்டு அமைதியானது.

“எல்லா படத்திலயும் எப்படி உன் கையை பிடிச்சிருக்கான் பார்” என சாரா அனிக்காவிடம் வியந்தார்.

“உன் புருசன் இருக்கானே…” என திவ்யாவிடம் சொல்ல ஆரம்பித்தார்.

“சின்ன வயசில நம்ம பாப்பாவை நீ கவனமா பார்த்துக்கணும்னு ஒரு வார்த்தைதான் சொன்னேன். இன்னிக்கு வரைக்கும் அவளை அப்படி பார்த்துக்குவான். சின்ன வயசில எங்க போனாலும் அவ கையை பிடிச்சுக்கிறது.ரோட்டு பக்கம் நடந்தாலும் கூட இவளை உள்ளே விட்டுட்டு அவன் தான் ரோட்டு பக்கமா நடப்பான். அத்தனை பொறுப்பு… தங்கமான புள்ள. அவனுக்கு அடிப்பட்டதும் நாங்க எல்லாம் எப்படி கலங்கிட்டோம் தெரியுமா? அவன் மனசுக்கு அவன் எப்பவும் நல்லாதான் இருப்பான்” எனவும் ஜீவன் அங்கே கதவை திறந்து வந்து உள்ளே பிரவேசித்தான்.

“அத்தை இங்க பாருங்க…” சாராவிற்கு பிடித்த இனிப்பொன்றை வாங்கி வந்திருந்தான்.

‘நூறு வயசு’ திவ்யா தனது மனதிற்குள்ளாகச் சொல்லிக் கொண்டாள்.

“இதுக்காகவாடா ஜீவா அலைஞ்ச?”

“எத்தனை நாளா பார்த்து வச்சிருந்தேன் தெரியுமா? வாங்க நேரமில்லாம போச்சு. இன்னிக்குதான்…” அதன் பின் அங்கே நிகழ்ந்த பாசப் பறிமாற்றங்கள் எல்லாவற்றையும் மனதிற்குள்ளாக சேகரித்துக் கொண்டாள்.

அவர்களுக்கா புது உடைகள் மற்றும் சில பரிசுகள் இருக்க அத்தனையும் பெற்றுக் கொண்டு அவர்கள் திரும்ப வந்தனர்.

திவ்யாவிற்கு அன்று ஏனோ மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. தங்கள் அறைக்குள் செல்லவும் ஜீவன் அருகில் சென்று அவளாகவே அவனை கட்டிக் கொண்டாள்.ஆனால், அவனிடமிருந்து எந்த எதிர்வினையையும் கண்டாளில்லை.

இரவு உணவிற்கு பின்னரும் அவன் அப்படியே அமைதியாக இருக்க,

“என்னை பார்த்தா உங்களுக்கு வெறுப்பா இருக்கா ஜீவா?”

“அப்படி இல்லடா…” முகம் பாராமல் தவிர்த்தான்.

“பின்ன….” அவள் கேட்பது என்னவென்று புரிந்தும் சற்று மௌனமாக இருந்தவன். ஒரு தடவை டாக்டர்ட செக்கப் செய்திட்டு வந்து அப்புறமா உன் கிட்ட பேசணும்னு இருந்தேன். கல்யாணத்துக்கு ஒரு வருசம் கேட்டதும் அதுக்குத்தான். அன்றைக்கு அவசரப்பட்டு முத்தம் கொடுத்தது கூட அப்புறமா தப்போன்னு தோணுச்சு.

“இப்ப என்ன செக்கப் செய்யணும் உங்களுக்கு, நல்லாதானே இருக்கீங்க?”

“இல்ல திவ்… திவ்யா நான் திருமண வாழ்க்கைக்கு தகுதியான்னு பார்க்க வேணாமா?”

“ஏய்” அடுத்து என்னச் சொல்ல எனப் புரியாமல் அதிர்ந்தவளாக அவனை பார்த்திருந்தாள்.

“அப்ப அதுக்காகத்தான் என்னை மூவ் ஆன் மூவ் ஆன் சொன்னியாடா ஜீவா.”

அவன் மௌனமே அவனை காட்டிக் கொடுக்க இவளுக்கு பொங்கிக் கொண்டு வந்தது.

“அப்படின்னா எனக்கொரு குறைனா நீ விட்டுக் கொடுத்திருவியா?”

“அப்படில்ல திவ்யா”

“போடா நீ ரொம்ப நல்லவன் அப்படித்தானே? உனக்கு அவார்ட்லாம் தருவாங்க போ… சிலை வைப்பாங்க போடா போடா” குமுறினாள்.

“எப்பவுமே யதார்த்தத்தை பார்க்கணும்டா திவ்யா”

“போதும்பா நீயும் உன் யதார்த்தமும்…”

“…”

“அன்னிக்கு உன்னை அவங்க அடிக்க வந்த போது நீ ஓடி இருக்கலாமில்ல, நீ ஏன் ஓடலை… அப்ப இருந்த யதார்த்தம் அதுதானே?”

“இப்ப அது எதுக்கு?”

“நீ ஓடினா அங்கே நிக்கிற நான் அவங்க டார்கெட் ஆகிடுவேன்னு தானே நீ ஓடலை. அப்படி என்ன உனக்கு என் உசிரு வெல்லம், உன் உசிரு பாகற்காய்?” கண்ணீர் வழிய அவனை கேட்டுக் கொண்டு இருந்தாள்.

அதெல்லாம் போகட்டும் விடு… அழாதே” கண்ணீரை துடைத்தான்.

“அப்படின்னா மருத்துவ சர்டிபிகேட் படி உனக்கு ஏதாவது பிரச்சனை இருந்தா, திவ்யா திவ்யா நீ வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்லிடலாம்னு நீ நினைச்சுருக்க?

அவன் மௌனமே அவனுக்கு மறுபடியும் சான்று கூற, கோபத்தில் அவனை அடித்தாள், கிள்ளினாள், திட்டினாள்.

“எல்லாரும் உன்னை நல்லவன் நல்லவன்னு சொல்றாங்க. ஆனா நீ எனக்கு ரொம்ப கெட்டவன், ரொம்ப ரொம்ப கெட்டவன். நீ சொன்னல்ல என்னை அழ வச்சது நீதான்னு…. ஆமா எப்பவுமே என்னை அழ வைக்கிறவன் நீதான்” கட்டிக் கொண்டு அழுகின்றவளை அவனும் கட்டிக் கொண்டான்.

“உங்களோட சண்டை போட்டேன் தான் பிரிஞ்சிரலாம்னு நினைச்சேன் தான் ஆனால், உங்களை அவங்க எல்லாரும் அடிச்சப்ப அந்த நிமிசம் தான் என் உசிரு உங்க கிட்டதான் இருக்குன்னு பொட்டில் அடிச்சாப்ல புரிஞ்சது. நீங்க இல்லைன்னா என் வாழ்க்கையே இல்லை ஜீவா. நான் முட்டாள் தான், அறிவுக் கெட்டவதான் ஆனா எனக்கு நீங்க மட்டும்தான் வேணும். உங்களுக்கு எந்த குறை இருந்தாலும் சரி இல்லைனாலும் சரி நீங்க மட்டும் தான் எனக்கு…” ஏதேதோ பிதற்றினாள்.

“போதும் திவ்”

“ஒரு நேரம் நீன்னு சொல்றேன்…. ஒரு நேரம் நீங்கன்னு சொல்றேன்ல… ஏன்னா நான் லூசு ஜீவா.”

“அதெல்லாம் ஒன்னுமில்லடா… எப்படி கூப்பிடணுமோ கூப்பிடு.”

உங்க உடல் நிலை எப்படி இருந்தாலும் சரி எனக்கு நீங்கதான் புருசன், உங்களுக்கு நான் தான் பொண்டாட்டி. என்னை விட்டுக் கொடுக்கிறேன்னு இனி ஒரு நிமிசம் நினைக்கக் கூடாது. என்ன புரியுதா?”

தயக்கமாக தலையசைத்தான்.

எங்க என் மேல சத்தியம் பண்ணுங்க”

“சத்தியம்லாம் வேணாம்டா

“ம்ம்… பண்ணுங்க”

“ம்ம் அது தப்பு, என்னை நம்பு உன்னை விட்டு நான் எங்கேயும் போக மாட்டேன். உன்னையும் போக விட மாட்டேன். சரியா?

“இன்னுமே தயக்கமாதான் சொல்லுறீங்க?” உதட்டை பிதுக்கினாள்.

“இல்லடா நிச்சயமா நமக்குள்ள பிரிவெல்லாம் இருக்காது. போதுமா?”

“ம்ம் போதும்”

மறுபடி ஒரு மனம் களைத்த இரவு தூக்கத்தில் அவர்களை அமிழ்த்தி ஆறுதல் அளிக்க முயன்றது.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here