என் ஜீவன் நீயே_21_ஜான்சி

0
71

அத்தியாயம் 21

ஜீவன் மற்றும் திவ்யா இருவரும் தங்கள் மனதில் இருந்தவை எல்லாம் பகிர்ந்துக் கொண்ட பின்னர் அவர்களுக்கு இடையேயான பனித்திரைகள் எல்லாம் அகன்று அன்பு வெட்டவெளிச்சமாக புலப்பட ஆரம்பித்து இருந்தது. எத்தனை நாட்கள் தான் இருவரும் தமது மனதில் இருக்கும் அன்பை மறைப்பதாம்? சட்டியில் இருப்பது அகப்பையில் வந்துதானே ஆக வேண்டும்?

திவ்யா கடந்த மாதங்களில் தனது பிறந்த வீட்டிற்கு கணவனோடு ஓரிரு முறைகளும், தனியாக பலமுறைகளும் சென்று வந்திருந்தாள். அவளது பெற்றோருக்கு மகளின் முகத்தில் தெரியும் மகிழ்ச்சியே போதுமானதாக இருந்தது. திருமணத்திற்கு அடுத்த வாரமே மகளுக்கான சீர் வரிசைகள் எல்லாமும் அவர்கள் ஜீவன் வீட்டில் கொண்டு போய் சேர்ப்பித்து இருந்தார்கள்.

நாட்கள் வாரங்களாகி, மாதங்களாக தாங்கள் பயந்தது போலவெல்லாம் இல்லாமல் மகள் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்கின்றாள் என்பதை புரிந்துக் கொண்ட நாள் முதலாக அவர்களுக்கு பெருத்த நிம்மதி. பெண்களை பெற்றவர்களுக்கு இதைவிடவும் வேறு என்னதான் வேண்டும்?

ஜீவனும் திவ்யாவும் முன்பு பேசிக் கொண்டதை போல, டெல்லியில் ஜாக்குலின் வீட்டில் பத்து நாட்கள் டேரா அடித்து, ஊர் சுத்த பயணமானார்கள். ஜாக்குலினுக்கு தனது தம்பியை முன்பு உணர்வற்று பார்த்ததும், திவ்யாவின் நிலையும் என்னென்னமோவாக நினைவுக்கு வந்து கலங்கடித்தாலும் தற்போது அவன் நலமாக இருப்பதை எண்ணி கடவுளுக்கு நன்றிச் சொன்னாள். விருந்திற்கு வந்த தம்பியையும் தம்பி மனைவியையும் விழுந்து விழுந்து கவனித்தாள். மிகவும் இனிய அந்த பயண நாட்களை கடந்து திரும்ப வந்த தம்பதியர் மறுபடியும் தங்களது வழக்கமான வாழ்க்கை முறைக்கு திரும்பினர்.

அன்று தொழிற்சாலை விடுமுறை தினம் என்பதால் இருவரும் அதிக பரபரப்பின்றி புறப்பட்டு அந்த ஆர்த்தோ சர்ஜனுடனான ஜீவனது செக்கப்பிற்குவந்திருந்தார்கள்.கடந்த மாதங்களில் ஜீவனது பெரும்பாலான உடல் நிலை பாதிப்புகள் முழுமையாக குணமடைந்திருந்தன. தற்போது ஒரு சில பிரச்சனைகள் மட்டுமே அவனுக்கு இருந்தன.

அவர் சொன்ன மருந்து விபரங்களை எல்லாம் திவ்யாவும் குறித்துக் கொண்டாள். அங்கிருந்து வெளியே வரவும் சில அலைபேசி அழைப்புக்களில் பேசியவன் அடுத்தும் சில மருத்துவர்களிடம் தான் சென்று வர வேண்டி இருப்பதாகச் சொல்லி திவ்யாவை வீட்டிற்கு தனியாக காரில் அனுப்பி வைத்து விட்டான்.

அப்படி தனக்குத் தெரியாமல் மருத்துவரிடம் என்ன இரகசியமாக பேச வேண்டுமோ? என திவ்யா அங்கலாய்த்துக் கொண்டவாறு வீட்டிற்கு திரும்பினாள்.

ஜீவன் வீட்டிற்குதிரும்ப வரும் போதே வெகு உற்சாகமாக இருந்தான். உணவு வேளையில் இந்திரா மகனிடம் விபரம் கேட்க, தாம் முழுமையாக நலமாகி விட்டதாக மருத்துவர் சொன்னதாக அவன் கூறவும் பெற்றோர்கள் மகிழ்ந்தனர். மகனது உடல் நலம் முன் போலவே ஆகிக் கொண்டு இருப்பதையும், அவன் முன் போல சோர்வாக இல்லாமல் உற்சாகமாக அலுவலகம் சென்று வருவதையும் அவர்களும் அவதானித்துக் கொண்டு தான் இருந்தார்களே?

ஜீவன் சொன்னதை கேட்ட திவ்யாவோ ‘இல்லையே மருத்துவர் இன்னும் கொஞ்சம் நாட்கள் ஆகும் எனச் சொன்னாரே?’ என தனக்குள்ளாக குழப்பிக் கொண்டாள். அவன் சொன்ன மருத்துவர் வேறு என்பதை அவள் உணர்ந்தாளில்லை.

உணவு உண்டு சற்று நேரம் அளவளாவிய பின்னர் ஜீவன் அவளிடம்,

“வாயேன் திவ் வாக் போகலாம்” எனக் கேட்டான். அதிசயமாக அவனே அழைக்கவும் அவளும் மகிழ்ச்சியாக இணைந்துக் கொண்டாள். பெரியவர்கள் தூங்கச் சென்றிருக்க, கதவை பூட்டி சாவியை எடுத்துக் கொண்டான்.

காரில் அவளை அழைத்துக் கொண்டு சென்றவன் அந்த பரபரப்பான சாலையை கடந்து கடற்கரைக்கு அழைத்துச் சென்றிருந்தான்.

“யாராவது இவ்வளவு தூரம் வாக் போக வருவாங்களா?” திவ்யா புன்னகைத்தாள்.

“யார் என்ன வர்றது? நாம வருவோம்”

“ம்” புன்னகைத்தவாறு அந்த சிலுசிலு காற்றில் நடை பயில ஆரம்பித்தனர். ஜீவனின் செயல்களில் நெருக்கம் கூடி இருந்தது.

“பப்ளிக், பப்ளிக்… இது பப்ளிக் ப்ளேஸ்” திவ்யா கண்டித்தாள்.

“இல்லியே இது பப்ளிக் ப்ளேஸ் இல்லை.என் பொண்டாட்டி இடுப்பு.” சொன்னவனிடம்

“இது அரத பழசு ஜோக்… சிரிப்பே வரலை” எனவும் இன்னும் பரவசமாக சிரித்தான். தன்னை கண்ணெடுக்காமல் நோக்குகின்றவளிடம்

“என்ன பார்வைடா இது?” எனக் கேட்டான்.

“நீ இப்படி சிரிச்சு எத்தனை நாளாச்சு?” தன்னையறியாமல் வியந்தாள்.

எத்தனை நேரம் மனனம் செய்து இருந்தானோ? “நாம வாழ்க்கையோட அடுத்த கட்டத்துக்கு நகரலாமா திவ்?” என அனுமதி கேட்டவனாக நின்றான்.

முதலில் திகைத்தவளாக அவனை பார்த்தவள், “என்னது?” புரியாமல் வினவினாள்.

அவளுக்கு புரியும்படி அவன் மறுபடியும் சொல்ல, அவளுக்கு ஏற்பட்ட இன்பகுறுகுறுப்பில் அவளால் அவனை எதிர்கொண்டு பார்க்கவே முடியவில்லை. மனதிற்குள்ளாக ஐயோவென்றிருக்க திரும்ப வீட்டிற்கு வரும் வரையிலும் கூட அவனை அவள் ஏறிட்டு பார்த்தாளில்லை.

திவ்யா வீட்டிற்குள் வரவும் அவசரமாக மற்ற அறையினுள் நுழைந்தாள். வழக்கம் போல அவன் தனதறையில் குளித்து உடை மாற்றி வெளியில் வர அவனது மனைவி அவன் கேட்ட கேள்விக்கு பதிலாக ஆயத்தமாகி படுக்கையறையில் அமர்ந்து இருந்தாள்.

அந்த அழகான சேலையும், திருத்தமான பின்னலும் அதில் எப்போதும் அவளுக்காக குளிர்சாதனப் பெட்டியில் இருக்கும் மல்லிகைப் பூச்சரத்தின் பெருமளவு பூக்களுமாக அவள் தன்னையே பெருமளவு தயாரித்து இருக்க, அவளை பார்த்ததும் அவனுமே திரும்பச் சென்று புத்தாடை அணிந்து வந்தான்.

இருவருக்குள்ளும் பேச முடியாத மௌன நேரங்கள் கடந்துக் கொண்டு இருந்தன.படுக்கையில் அமர்ந்தவன் மனைவியை தூக்கி தனது மடியில் வைத்துக் கட்டிக் கொண்டான்.

“நம்ம கல்யாணத்தை பற்றி எனக்கு நிறைய கனவுகள் இருந்தன திவ்யா, சட்டுன்னு அந்த எதிர்பாராத விபத்து, அதற்கப்புறம் எல்லாமும் கனவாகவே மாறிடப் போகுது என்று நினைச்சப்ப ஒரு வெறுமை. நீ என்னை விரும்பின காரணத்துக்காக என்னிடம் குறை இருந்தாலும் நீ என்னை ஏத்துக்கணும் என நினைத்தால் அது என்னோட சுயநலமாகத்தான் இருக்கும்.அதனாலதான் நான் விலகி போனேன். ஆனால், நீ இல்லாத என் வாழ்க்கை எவ்வளவு சூன்யமா இருக்கும் என்று முழுதாக உணர்ந்துக் கொண்டேன். நீ இல்லாம எனக்குன்னு எதுவும் வாழ்க்கை இல்லைடா.”

அவனது மெல்லிய முத்தங்கள் எல்லை கடந்து வன்மையாகிய போது அவளும் அவன் முகம் பற்றி முத்தங்களிட்டாள். அவர்கள் வார்த்தைகளால் கடத்த இயலாத நேசத்தை பறிமாறிக் கொள்ள அந்த இரவு அவர்களை அழைத்தது. அந்த அழைப்பை அப்படியே பற்றிக் கொண்டவனும் கொண்டவளும் அதனை துளிக் குறையாமல் அள்ளிப் பருகினர்.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here