என் ஜீவன் நீயே_22_ஜான்சி ( நிறைவு அத்தியாயம்)

0
119

அத்தியாயம் 22

அடுத்தடுத்த நாட்களில் ஜீவன் மற்றும் திவ்யாவின் உள்ளார்ந்த நெருக்கங்கள், புரிதல்கள் பலப்பட்டுக் கொண்டே சென்றன. தனது தொழிற்சாலை வேலைகளை அதன் தன்மை கொண்டு இரண்டு பகுதியாக பிரித்தவன் ஒரு பகுதியை திவ்யாவை நிர்வகிக்கச் செய்தான்.

அவளது சுயத்தை தெரிந்தோ தெரியாமலோ கூட நசுக்கி விடக் கூடாதெனும் முனைப்பை அதிகமாக காட்டினான். அவர்களுக்கு இடையேயான அத்தனை வெளியிலும் ஒருவருக்கு ஒருவர் அத்தனையாக நெருக்கமாக இருந்த போதிலும் கூட, தனிப்பட்டவர்களாகவும் அவர்கள் ஒருவரை ஒருவர் நசுக்காமல் சுயமாக வாழ அனுமதித்தனர். கிடைத்த வாய்ப்பில் ஆசைப்பட்ட விதமாக சில வாரங்கள் தேனிலவிற்கு பயணமாகி வந்தனர்,

தங்களுக்கான நட்பு வட்டங்கள், தங்களுக்கான விடுமுறை கொண்டாட்டங்கள் எல்லாவற்றிலும் இருவரது விருப்பமும், இருவரது தெரிவுகளும் முக்கியத்துவப் படுத்தப் பட்டன.

ஜீவன் தனக்கு கிடைத்த புது டெண்டருக்கான வேலையை திறம்பட முடித்து பாராட்டை பெற்றிருந்தான்.அத்தனையிலும் அவன் குடும்பத்தின் துணையும் இருந்தது என்பதை மறுக்க முடியாதே?

டெல்லியில் அவனை தாக்கிய நபர்கள் ஜெயிலில் போடப்பட்டு இருந்தாலும், தற்போது பல்வேறு காரணங்களோடு ஜாமீனில் வெளியே வந்து இருந்தனர். இவர்கள் போட்டிருந்த வழக்கை எத்தனை முடியுமோ அத்தனை தாமதமாக்க படேல் அண்ட் க்ரூப் முயன்றுக் கொண்டு இருந்தது.

ரூபனோ மற்ற எதுவானாலும் கூட பரவாயில்லை ஆனால் தனது தம்பியின் உயிருக்கே பாதிப்பு வரும் அளவு அவனை தாக்கிய வகையில் அந்த வழக்கில் இருந்து எந்த சூழ் நிலையில் இருந்தும் தான் பின் வாங்குவதாகவே இல்லை.

ஜீவன் தரப்பில் இருந்த அத்தனை சாட்சியங்களும் வலுவாக இருக்க, வழக்கின் தீர்ப்பு தாமதமானாலும் கூட நியாயம் கிடைத்தே தீரும் எனும் நிலை இருந்தது.எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற் போல அந்த அலுவலகத்தின்அடுத்த டெண்டரும் மறுபடி ஜீவனது தொழிற்சாலைக்கே கிடைத்து இருந்தது. தம்பியின் வெற்றியில் அண்ணன்களுக்கு மிகுந்த பெருமை. குடும்பத்தினர் அனைவரும் மிகவும் மகிழ்ந்து இருந்தனர்.

அன்று ஜீவன் ஏற்பாடு செய்த விழாவில் பங்கேற்க உறவினர்கள் அனைவரும் வந்திருந்தனர். விழாவிற்கு இன்னதுதான் காரணம் என்று இல்லாமல் அனைவரையும் ஒன்று கூட்டவென்றே அன்று அவன் அனைவரையும் அழைத்து இருந்தான்.

ஜீவனும் திவ்யாவும் வருகின்ற உறவினர்களை எல்லாம் வரவேற்றுக் கொண்டு இருந்தனர்.

“திவ் நம்ம கல்யாணத்துக்கு மிக முக்கியமான காரணமானவங்க வர்றாங்க, அவங்களை நல்லா கவனிக்கணும். என்ன புரியுதா?” எனவும் அவள் எட்டிப் பார்க்க அங்கே தனது முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கசந்திரிகா அக்காதான் எதிரில் வந்துக் கொண்டு இருந்தாள்.

“குசும்புதானே?” என திவ்யா கணவனை முறைத்தாள்.

அவனோ அங்கிருந்து சிரித்தவாறு நகர்ந்து விட்டான். தனது கலகலப்பான இயல்பான சுபாவத்திற்கு திரும்பிய ஜீவனை பார்க்க பார்க்க அவளுக்கு தெவிட்டவில்லை.

‘இவன் இப்படி இருந்தால்தான் அழகு’ என்றவளாக மனதிற்குள்ளாக எண்ணிக் கொண்டாள்.

“என்ன திவ்யா? உன் புருசன் உன்னை கவனிக்கிறாரா இல்லையா? வேலை வேலைன்னு இருந்தா புள்ள எப்ப பெத்துக்கிறது? முதலில் இருந்த வேலையே அதிகம்னு சொல்லுவ, இப்ப இன்னொரு கம்பெனியும் வாங்கினா எப்ப உங்க குடும்பம் செழிக்கிறது?” எனவும் யாருக்கும் சொல்லாத புது இடம் வாங்கும் தகவல் இவளுக்கு மட்டும் எப்படி தெரிந்ததோ என திவ்யா திகைத்தாள்.

“என்ன அக்கா நான் இப்ப மூணு மாசம், அம்மா சொல்லலையா?” என இவள் எதிர் கேள்வி கேட்கவும் பதிலறியாமல் திருதிருத்த அக்காவை பார்க்க பார்க்க இவளுக்கு சிரிப்பாக வந்தது.

‘அக்கா பிறர் நலம் நாடும் நல்ல குணம் தான், ஆனால் என்ன கொஞ்ச வாய் அதிகம்’ என எண்ணியவள் அன்பாகவே உபசரித்தாள்.

“மாசமான பொண்ணு நல்லா சாப்பிடணும் என்ன?” இன்னும் என்னென்னவோவாக சந்திரிகா அவளுக்கு அறிவுரை மழை பொழிந்தே அங்கிருந்து நகர்ந்தாள். திவ்யாவின் திருமணத்தில் நிகழ்ந்தவைகளை இன்னும் தனக்கு அவமானமாக எண்ணிக் கொண்டிருந்த சந்திரிகாவின் கணவரோ அங்கே வந்திருக்கவில்லை.

உறவுகள் சூழ அந்த இடமே ஜேஜேவென இருந்தது. ஆனால், முன்பொரு முறை திவ்யா தனியளாக உணர்ந்தது போல இப்போது உணரவில்லை. அவளுக்கு இவர்கள் எல்லாரும் என் குடும்பம் எனும் பெருமிதம் எழுந்தது. திவ்யாவின் பெற்றோரும் அந்த விழாவில் இருந்து மகளை மகிழ்வோடு பார்த்துக் கொண்டு இருந்தனர்.

ஜீவன் விழாவில் ஏதோ அறிவிப்பு கொடுக்க வேண்டும் என மத்தியில் நின்றுக் கொண்டு இருந்தான். அங்கு நின்றுக் கொண்டு இருந்தவனதுகண்கள் னைவியை தேடி அலைபாய இவளை ஓரிரு நொடிகளில் கண்டுக் கொண்டான். அவனது கையசைவை பார்த்தவள் அவன் அழைத்த இடத்திற்குச் செல்ல அந்த கூட்டத்தை தாண்டி நகர்ந்துக் கொண்டிருக்க, அங்கிருந்த ஒவ்வொருவரும் இவள் கையை பற்றி நலம் விசாரிப்பதுவும், கன்னத்தை பற்றி பேசுவதுமாக அடுத்த பதினைந்து நிமிடத்தில் அத்தனை பேருக்கும் புன்னகைத்து, பதில் சொல்லி எனகடந்து அவனிடம் சென்று நின்றாள்.

மைக்கில் ஏதோ விட் அடித்தவனின் பேச்சில் அனைவரும் சிரித்துக் கொண்டிருந்தனர். அருகில் வந்த திவ்யாவை தனது கை வளைவிற்குள் நிறுத்திக் கொண்டவாறு மைக்கில் அன்றைய விழாவின் காரணத்தை தெரிவித்துக் கொண்டு இருந்தான். தங்களது தொழில் விரிவாக்கத்தை ஜீவன் விவரித்துக் கொண்டு இருக்க, அரங்கத்தில் இருந்தவர்கள் கைத்தட்டி தங்களது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டிருந்தனர்.

திவ்யாவின் கண்கள் மட்டும் ஜீவனின் முகத்தில் படிந்திருந்தன. அவளால் அவனை பாராமல் இருக்கவே முடியவில்லை. தனக்குள்ளாக மெலிதாக வாய்விட்டு சொல்லிக் கொண்டாள்.

“என் ஜீவன் நீயே”

அந்த இரைச்சலிலும் கூட எப்படியோ அவளின் ஆன்மாவின் அழைப்பை உணர்ந்தார் போல ஜீவன் திவ்யாவை நோக்கி திரும்பி புன்னகைத்தான்.

இருவரது பார்வையின் சந்திப்பில் அந்த காலம் ஒரு நொடி நின்று நகர்ந்தது.

சுபம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here