என் ஜீவன் நீயே_2_ஜான்சி

0
246

அத்தியாயம் 2

உரிமை எனும் போர்வையில்

வார்த்தைகளால் அம்புகளை

எறிகின்றாய்.

எந்தன் காயங்களின் வலிகள் குறித்த

அனுமானங்கள் இல்லாதவனாக

இளைப்பாறவும் செய்கின்றாய்

நானோ பொறுத்திருக்கிறேன்

நம் காதலின் எல்லை மட்டும்

உந்தன் அலட்சியத்தை

சகித்திருக்கிறேன்.

இது தியாகம் அல்ல

நம் காதலுக்காக

தகித்துக் கொண்டே இருக்கும்

எந்தன் யாகம்.

மதியம் மணி இரண்டு, இயந்திர கதியில் தொழிற்சாலையில் வேலை நடந்துக் கொண்டிருந்தது. கூடிய விரைவில் தொழிற்சாலையை விரிவுப் படுத்த வேண்டும் எனும் சிந்தனையில் ஜீவனின் கைகள் லேப்டாப்பில் வந்த மின்னஞ்சலையேச் சுற்றி வட்டமடித்துக் கொண்டிருந்தது.

புது டெண்டருக்கான செய்தி வந்ததும் அவன் சொன்னபடியே ப்யூன் வாங்கிக் கொண்டு வந்த இனிப்புப் பெட்டியிலிருந்து ஒரு துண்டு இனிப்பை திவ்யாவுக்கு வாயில் கொடுத்தவன். இன்னொரு விள்ளலை எடுத்து தானும் வாய்க்குள் போட்டுக் கொண்டான்.

அதுவரை அவனது மகிழ்ச்சியின் காரணம் புரியாதவளாக நின்றவளுக்கு அப்போதுதான் புது டெண்டர் கிடைத்த மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டு இருந்தான்.

அவனது மகிழ்ச்சியைக் கண்டு திவ்யாவுக்கு மிகவும் உற்சாகமாக இருந்தது. தன் அருகே இருந்த அவனது இடக்கைக்குள் தன் இடக்கையைச் சேர்த்துப் பூட்டிக் கொண்டாள். உலகத்தையே வென்ற உற்சாகத்தில் இருந்த ஜீவன் அவளைப் பார்த்து பெரிதாய் சிரித்து வைத்தான்.

“என்னா பெரிய ஸ்மைல்…” அவனது புன்னகை அளவிற்கு முகவாய் குழிய சிரித்து வைத்தாள் திவ்யா. அந்த மோவாய்க் குழியைக் கண்டதும் ஜீவனின் வலக்கை விரல்கள் தன் கட்டுப்பாடின்றி அவளது முகவாயை வருடின.

அவன் கைகள் முகவாய் அடுத்து முகத்தை அளக்க துவங்கவும் தன் வலக்கையால் அவன் கையைப் பற்றிக் கொண்டவள்.

“ஜீவா ஒரு விஷயம் சொல்லணும்பா… மறுபடி மறுபடி ஒவ்வொரு ஞாயித்துக் கிழமையும் அக்காவும், அத்தானும் வீட்டுக்கு வந்து என் மேரேஜ் பத்தியே கேட்கிறாங்கப்பா? உன்னோட ப்ளான் என்னன்னு சொல்லு?”

அவளையே மௌனமாய் பார்த்துக் கொண்டிருந்தான் ஜீவன்…

“அதுதான் நீங்க நினைச்ச மாதிரியே ஃபேக்டரி கடன்லாம் ஏறக்குறைய திருப்பிக் கொடுத்தாச்சே. அப்படியே கடன் இருந்தாலும் அடைச்சுக்கலாம்…இதுக்காகவெல்லாம் இனியும் கல்யாணத்தை தள்ளி போடாதே… சொல்லு… அடச் சொல்லுடா டேய்…”

அவளைப் பார்த்து ஹா ஹாவென சிரிக்க ஆரம்பித்து விட்டான் ஜீவன்.

“….சிரிக்காதீங்க…” கோபத்தில் அவனை அவள் உலுப்பினாள்.

“அதான் உனக்கு என்னை மரியாதையா கூப்பிட வரலில்ல?, அப்புறம் எதுக்கு வராததை இழுத்துப் பிடிச்சு தொல்லைப் பண்ணுற?, அம்மா என்ன சொல்லுவாங்க?, அத்தை என்ன சொல்லுவாங்கன்னு?… ஒரு முறை நீன்னு சொல்ற, ஒரு முறை நீங்கன்னு சொல்லுற சும்மா கிடந்து குழப்பி அடிக்கிறதுக்கு, எப்பவும் போல நீ வான்னே சொல்லு…”

அவனை முறைத்தவள்… “நான் என்ன பேசறேன், நீ என்ன சொல்லுற பார்த்தியா? முக்கியமான விஷயம் பேசுனா எப்படி பேச்சை திருப்பற? நான் உன்னை மரியாதையா கூப்பிட முயற்சி செஞ்சிட்டு இருக்கிறேன். அதை முடிஞ்சா பாராட்டணும், இல்லைன்னா சும்மா இருக்கணும்… கெக்கே பிக்கேன்னு சிரிப்பு…”

“சத்தியமா மிடிலடி…உனக்கு என் மேல கோபம் வந்தா மரியாதையெல்லாம் காத்துல பறந்திடுது. இதில இவங்க எனக்கு மரியாதை கொடுக்கிறாங்களாம்” மறுபடி வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தான். சிரித்து கண்களில் கண்ணீர் வரவும் நிமிர்ந்தவன் எதிரில் காளி அவதாரத்தில் இருந்தவளைப் பார்த்து சுதாரித்தான்.

“சரி சரி… பொறு உனக்கு பதில் சொல்றேன்”, அவள் கைகளைப் பற்றிக் கொண்டான். ஈயென சிரிப்பு மூஞ்சை அவளிடம் காட்ட, அவளோ கடுப்பில் இருந்தாள். அசடு வழிந்தவாறே அவள் கைகளில் முத்தமிட்டவன்…

“சும்மா சோட்டு… உன் கிட்ட விளையாடாம நான் யார் கிட்ட விளையாடுவேன் சொல்லு?… நம்ம வீட்ல நீதானே எல்லாரையும் விட சின்னவ? …”

“ஆமா, உன்னை விட ஏஏ..ஏ.. ஏழு மாசம் சின்னவ… அனியை விட ஒன்றரை மாசம் சின்னவ… ரொம்ப பெரிய வித்தியாசம்தான்.”

“சரி சரி இப்ப திவிக்குட்டி சாந்தமான மூடுக்கு மாறிட்டு இருக்காளாம். நான் சொல்லுறதைக் கவனமா கேட்பாளாம்.”

“ம்ம் சொல்லுங்க…”

மறுபடி அவளிடம் மரியாதைப் பன்மை வந்திருக்க இப்போது சிரித்தால் பொலிப் போட்டு விடுவாள் எனப் புரிந்ததால் தன்னை அடக்கிக் கொண்டான்.

“இந்த வருஷமே நம்ம மேரேஜ் இருக்கும் திவ், நீ சொல்ற மாதிரி மத்த பேங்க் லோன்கள் எல்லாம் பெரிய பிரச்சனையே இல்ல. இந்த டெண்டரும் கிடைச்சிடுச்சு. முதல் முறை நமக்கு இவங்க வேலை தர்றதினால கொஞ்சம் இவங்க ஹெட் ஆபீஸ் போய் சில ப்ரொசீஜர்கள் முடிக்க வேண்டி இருக்கு அவ்வளவு தான். உடனே வேலை ஆரம்பிச்சிடலாம்.”

“ம்ம்…”

“ஆனால், இன்னும் ஒரு அஞ்சாறு மாசம் கழிச்சு நம்ம மேரேஜ் வச்சுப்போம். இந்த ஒப்பந்தம் ப்ரொசீஜர் முடிஞ்சதும் அடுத்த மாசமே வீட்ல சொல்லி ஏற்பாடு செஞ்சிடலாம். நான் ஏற்கெனவே அம்மாக்கிட்ட இதைப் பத்தி பேசிட்டேன்.”

“ம்ம்…”

“எதுக்கு அஞ்சாறு மாசம் சொன்னேன்னு நீ கேட்கலியே?”

“அம்மா எதுவும் காரணமா சொல்லியிருப்பாங்க…”

“இல்ல அம்மா ஒன்னும் சொல்லலை, அம்மா இந்த வருஷ ஆரம்பத்திலயே கல்யாணம் வச்சிக்க சொல்லி இருந்தாங்க… நான் தான் தள்ளிப் போட்டேன்.”

தான் தன் குடும்பத்தினரால் எத்தகைய நெருக்கடியில் இருக்கிறோம் என்று தெரிந்தும் கூட ஜீவன் தங்கள் திருமணத்தை தானே தள்ளிப் போட்டதாகச் சொன்னதைக் கேட்டதும் அவளுக்கு மிகவாக வலித்தது. ‘வீட்டினருக்கே பிரச்சனை இல்லையென்றால் இவனுக்கென்னவாம்?’

“வயசு கூடிட்டே போகுது இப்ப கல்யாணம் கட்டி எப்ப புள்ளை பெத்துக்குவா உங்க மக?” அவர்கள் குடும்பத்தில் இருபதுகளின் ஆரம்பத்தில் பெண்களுக்குத் திருமணம் செய்து வைக்கும் விதமான நிலை இருக்க தனது காதல் திருமணத்திற்காக காத்திருந்ததில் 25 வயதை தாண்டி விட்டிருக்க இப்போதெல்லாம் தான் உயிராக எண்ணும் தனது சாவித்திரி அக்காவின் வாயிலிருந்தே எத்தனை முறை இதைக் கேட்டுத் துடித்திருப்பாள் இவள்.

அவளது எண்ணப் போக்கை உணராமலேயே ஜீவன் தொடர்ந்தான். அவன் சொன்ன தனது திருமண தாமத்திற்கான காரணத்தில் எங்கும் அவர்கள் இருவரும் இல்லை. அவர்களது திருமணத்தை தள்ளி வைப்பதற்கான அத்தனைக் காரணத்திலும் இருந்தவர்கள் அவனது இரண்டாவது அண்ணன் ரூபன் மற்றும் அண்ணியும் பால்ய நண்பியும், சொந்த அத்தையின் மகளுமான அனிக்காவுமே.

வாழ்க்கைத்துணை எனும் இருவர் நடுவில் அது எத்தனைப் பெரிய உறவானாலும் அதிக முக்கியத்துவம் கொடுப்பது பிரச்சனையில் கொண்டு போய் தான் விடும். அதை உணராமல் ஜீவன் பேசிக் கொண்டு இருந்தான், சுரத்தே இல்லாமல் திவ்யா கேட்டுக் கொண்டு இருந்தாள்.

“அண்ணாவுக்கு உறவிலேயே சொந்த அத்தை மகளையே திருமணம் செஞ்சது மனசுக்குள்ளேயே கொஞ்சம் பயம். பிறக்கப் போற குழந்தைக்கு எந்த குறையும் இருந்திறக் கூடாதுன்னு எத்தனையோ மருத்துவ பரிசோதனை முடிச்சு இப்பதான் அனி கன்சீவ் ஆனா, நாம இன்னும் கொஞ்ச மாசம் அவ டெலிவரி வரைக்கும் மேரேஜ் செஞ்சுக்காம இருக்கலாம் என்று நினைக்கிறேன் திவ்யா. ஒருவேளை அண்ணாக்கு ஒரு உதவி தேவைன்னா சட்டுன்னு போய் நிக்கலாம். நானும் இப்ப மேரேஜ் செஞ்சுக்கிட்டேன்னா என் கவனம் அங்கே இல்லாம போயிடும், அதனாலத்தான்…” என மனதில் இருந்ததை அவளோடு கள்ளமில்லாமல் பகிர்ந்துக் கொண்டிருந்தான் அவன்.

“ஏன் ஜீவா உனக்கு என் மேல அவ்வளவு தான் நம்பிக்கையா? திருமணம் ஆனா நான் உன்னை உன் அண்ணாக்கும் உயிர் தோழிக்கும் உதவியா போகிறதை தடுத்திருவேனா? உன்னோட குடும்பத்தில் ஒருத்தியா ஆனதுக்கு அப்புறம் உன் அண்ணனும் அண்ணியும் எனக்கு மட்டும் வேற்று ஆளா? நான் அவங்களுக்கு உதவியா இருக்க மாட்டேனா? உனக்கு எப்பவுமே அனிக்கா தான் பெரிசுன்னு தெரிஞ்சும் நான் உன் கிட்டே எதிர்பார்த்தது தப்புத்தான்”, மனதிற்குள்ளாக இரணப்பட்டுப் போனாள் திவ்யா.

ஒரு வேளை அவள் தன் எண்ணவோட்டங்களை ஜீவனிடம் சொல்லி இருந்தால், ஜீவன் தன்னுடைய தரப்பு விளக்கங்களை சொல்லியிருக்கக் கூடும். ஆனால், தன்னுடைய காதலனின் மனதில் முதல் இடத்தில் அவன் குடும்பமும், தோழியும் இருக்க இரண்டாவதோ இன்னும் சொல்லப் போனால் இன்னும் கீழே எத்தனையாவதோ இடத்தில் தன்னை வைத்திருக்கும் உண்மை நிலையை உணர்ந்தவளாக, தன் காதலுக்காக எட்டிக்காயாய் விழுங்கினாள். அது கூடிய விரைவில் எரிமலையாய் தன்னை மீறி வெளிவரும் என்றறியாதவளாக அல்லவோ அவள் இருந்தாள்.

“திவ் அந்த ஹெட் ஆபீஸ் போகிறதுக்கு தோதான தேதி, நேரம் பார்த்து நாம ரெண்டு பேருக்கும் டெல்லிக்கு ப்ளைட் டிக்கெட் புக் பண்ணிடேன் ப்ளீஸ், கடைசி நேரம் நாம டிக்கெட் கிடைக்காம முழிக்கிற மாதிரி ஆகிடக் கூடாது.”

“நானா? நாம ரெண்டு பேரா போகணும்? அம்மா விட மாட்டாங்க ஜீவா?”

“ஒரு நாள் வேலைதான்மா ப்ளீஸ், வேணும்னா நான் அத்தைக்கிட்ட பேசறேன். அந்த டெண்டர் எல்லாம் தயாரிச்சவ நீதானே. மை லக்கி சார்ம்…” , அவள் புறங்கையில் முத்தமிட்டான்.

‘உன் அருகாமைக்காக என்றுச் சொல்லாமல் உன் அதிர்ஷ்டத்துக்காகத்தான் கூடவே வரச் சொல்கிறேன்’ எனச் சொல்லி மறுபடி ஒருமுறை தன்னறியாமலே அவள் மனதைக் காயப் படுத்தினான் ஜீவன்.

புன்னகை மாறாமலேயே திவ்யா அங்கிருந்து சென்று தன் கணிணி முன் அமர்ந்தாள்.கைகள் தன்னிச்சையாக வேலையில் ஈடுபட மனதில் பல்வேறு எண்ணங்கள்.

‘ச்சே என்னதான் எதிர்பார்ப்பு வைக்காமல் இருந்தால் ஏமாற்றம் கிட்டாது எனத் தெரிந்திருந்தாலும் கூட மனம் கேட்பதில்லையே? சரி எனக்கும் ஜீவனுக்குமான உறவில் எதிர்பார்ப்பே வைக்காமல் எப்படி இருக்க முடியும்? என்னுடைய வாழ்க்கையில் அவன் எனக்கு எப்படி முதலாவதோ? அப்படியே அவனுடைய வாழ்க்கையில் நானும் முதலாவதாக இருப்பது முடியாதா?’ மனம் அடிப்பட்ட குழந்தையாய் சுணங்கியது.

“மேடம் உங்க பாஸைப் பார்க்க அனுமதிக் கிடைக்குமா?” ஆளுமையான குரலில் சட்டென எழுந்தாள்.

“பாஸ் என்ன பாஸ் இது என்னை மேடம்னு சொல்றீங்க? சட்டென சிரித்து விட்டிருந்தாள் திவ்யா. அங்கு வந்திருந்ததோ ஜீவனின் அண்ணன் ரூபன் சில மாதங்கள் ரூபனது தொழிற்சாலையில் பணி புரிந்தவளை தன் அலுவலகம் ஆரம்பித்த போது ஏதேதோ காரணம் சொல்லி வலுக்கட்டாயமாக ஜீவன் தன்னிடம் வேலை செய்யுமாறு மாற்றியிருந்தான்.

குறுகிய நாட்கள் ரூபனிடம் பணிபுரிந்ததன் காரணமாகவே திவ்யாவின் அந்த பாஸெனும் விளிப்பு. ரூபனின் ஆளுமையும், அமைதியாக வேலை வாங்கும் பண்பும், பொறுமையும் அவளுக்கு மிகவே பிடிக்கும். முக்கியமாக அனிக்கா மீதான அவன் காதல் அவளுக்கு பிரமிப்பை ஏற்படுத்துவதொன்று. தன்னைக் கண்டதும் சிரித்தவளிடம் நலம் விசாரித்தவாறே திவ்யா முன்னேச் செல்ல கேபினிற்குள்ளாக அவள் பின்னே சென்றான் ரூபன்.

“என்னடா ஜீவா?” அண்ணனின் குரல் கேட்டு அவசரமாய் எழுந்த ஜீவன் அவனை மேலும் பேச விடாதவனாக, அந்த ஸ்வீட் பாக்ஸை எடுத்து அவன் வாயில் ஒரு இனிப்புத் துண்டை அழுத்தினான்.

தம்பியின் செய்கையில் சிரிப்பு வரப் பெற்றவன், இரண்டுக் கைகளையும் தூக்கி அவனிடம் சரண்டரானான். அவசரமாய் இனிப்பை விழுங்கியவன்.

“சரிடா நான் ஒன்னுமே சொல்லலை, தயவு செய்து இன்னொரு ஸ்வீட்டை திணிச்சிராதே…”

“அஃது …” என்றவனாய் கெத்தாய் அமர்ந்தான் ஜீவன். அடுத்த இருக்கையில் அமர்ந்தான் ரூபன்.

ஒன்றும் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்த திவ்யாவிடம் …

“பார்த்தீல்ல சாருக்கு தான் முதல்ல டெண்டர் விபரம் போயிருக்கும். பார்க்க அமைதியா இருக்கிற மாதிரி இருப்பான். ஆனா எல்லாம் தெரிஞ்சு வச்சிருப்பான்…”, பல்லைக் கடித்துக் கொண்டே அண்ணன் புகழ் பாடினான் ஜீவன்.

“இப்ப என்னடா? டெண்டர் உனக்கு கிடைச்ச சந்தோஷத்திலத்தான் வாழ்த்திட்டுப் போகலாம்னு வந்தேன்.”

“அப்ப இந்த டெண்டருக்காக நான் முயற்சி செய்யும் முன்னே என்னை இதில இறங்காதேன்னு நீ என் கிட்ட சொன்னது? அதெல்லாம் என்ன? ம்ம் … இப்பச் சொல்லு? இப்பச் சொல்லு?”

“இப்பவும் தான் சொல்றேன், அந்த படேல் & க்ரூப் ரொம்ப மோசமானவனுங்க. வழக்கமா அவனுக்கு கிடைக்கிற டெண்டர் நமக்கு கிடைச்சா அவனால பொறுக்க முடியுமா? நமக்கு எதுக்கு வம்பு? போய் அவன் வேலையில் கையை போடுவானேன்? நமக்கு இதனால வீண் விரோதம் தான் மிச்சம். இதெல்லாம் தெரிஞ்சு தான் நான் இதுவரை இந்த விஷயத்தில இறங்கவில்லை.”

“….”

“இல்லைன்னா நீயே சொல்லு? என்னால இந்த காண்டிராக்ட் முன்னமே எடுத்திருக்க முடியாதுன்னா நீ நினைக்கிற? ஏற்கெனவே நமக்கான எக்ஸ்போர்ட் ஆர்டர் இன்னும் நிறைய வரப் போகுது. நீ அதில கவனம் செலுத்துவன்னு பார்த்தேன். நீ என்னன்னா? …”

“அதெல்லாம் நான் சரியாதான் செஞ்சிட்டு இருக்கேன் அண்ணா, நீ கவலைப் படாதே. எக்ஸ்போர்ட் ஆர்டர் வேலைக்கு தட்டுப் படும்னா பேக்டரியை இன்னும் கொஞ்சம் விஸ்தரிச்சுப்பேன். நான் இப்ப புது புது வேலையை எடுத்துச் செய்யலைன்னா பின்ன எப்பச் செய்யறது?”

அவனது வேலை விஷயம் என்று வந்து விட்டால் அதை யாரும் தடைச் சொல்லுதல் ஜீவனுக்கு பிடிப்பதில்லை. அத்தனை இலகுவாக சிரித்துப் பேசிய மனிதனா இவன்? எனும் படி வெகு கடினமாக மாறி விட்டிருப்பான். கடந்த வருடங்களில் அவனோடு பணி புரிந்ததில் காதலனான ஜீவன் வேறு, தொழிலதிபனான ஜீவன் வேறு என்பதை திவ்யா அறிந்துக் கொண்டு விட்டிருந்தாள்.

அலுவலக வேலைகளில் குறிப்பிட்ட எல்லைகளுக்கப்பால் அவளதுக் கருத்துக்களோ அறிவுரைகளோ எடுபடாது. வேலைக் கற்றுக் கொண்ட தனது குருவையே மதிக்காதவன் தன்னை மதித்து கருத்தைக் கேட்பான் என்பதான ஆசைகளெல்லாம் திவ்யாவிடம் இல்லை. அவனது உக்கிர நேரத்தில் குறிப்பாக புதிய டெண்டர்கள் கிடைக்கும் தருணங்களில் அவனது சிடுசிடுப்பு மனோபாவத்தில் அவள் நாலடி தள்ளியே நிற்பாள். இப்போது புது டெண்டர் விஷயம் தெரிந்ததும் ரூபன் தேடி வந்ததைப் பார்த்த போது என்னவோ விஷயம் இருக்கு என்று தோன்றவே அமைதியாக கவனித்துக் கொண்டு இருந்தாள்.

அருகில் சென்று தம்பியை அணைத்துக் கொண்ட ரூபன் அவன் தோளில் கைப் போட்டு…. “ஏன்டா கடுகுப் போல பொரியுற? சரி வேணும்னா உனக்கு கொஞ்ச நாளைக்கு செக்யூரிட்டி போட்டுக்கலாமா?” அவன் மெதுவாகத்தான் சொன்னான் கேட்ட திவ்யாவுக்கு உள்ளுக்குள் சிலீரென்றது. இருவரும் கேபினிலிருந்து வெளியேறி இருந்தனர்.

ரூபன் அநாவசியமாக பேசுகின்றவன் அல்ல, டெண்டர்களுக்காக நடைப்பெறும் சம்பவங்கள் பல அவள் அறிந்திருக்கிறாளே? ஏதேனும் ஆபத்து நேரும் என்பதற்காகத்தான் செய்தி கிடைத்ததும் உடனடியாக அவன் தன் தம்பியைப் பார்க்க வந்திருக்க வேண்டும்.

 “நாம இந்த டெண்டரை சொன்னபடி வெற்றிகரமா முடிப்போம்னு நம்பிதானே அவங்க நமக்கு தந்திருக்கிறாங்க அண்ணா, அதெல்லாம் விட்டுக் கொடுக்க முடியாது. நீ சொல்லுற மாதிரி எல்லாம் ஒன்னும் நடக்காது. அது யார் என்னை என்ன செய்வான்னு பார்த்துக்கலாம். நீ கவலைப் படாதே அண்ணா…” தனக்கு ஆலோசனை சொல்ல வந்தவனுக்கே ஆலோசனை சொல்லிக் கொண்டிருந்தான் ஜீவன்.

ரூபன் ஒவ்வொரு மெஷினாக சற்று தூர நின்றே பார்வையிட்டுக் கொண்டு இருந்தான். அவன் தொழிற்சாலையின் வாயில் தெரியும்படியான இடத்தில் நின்றுக் கொண்டிருந்தான்.

ஜீவனோ அவனுக்கு எதிரில், அதாவது வாயிலுக்கு முதுகு காட்டியவனாக நின்றுக் கொண்டிருந்தான். தன்னருகில் நின்றுக் கொண்டிருந்த திவ்யாவிடம் சற்றுக் குனிந்தவன்… அவள் காதருகேச் சென்று…

“உனக்கு ஒரு மேஜிக் காட்டணுமா திவ்?” இரகசியமாய் வினவினான்.

‘இவ்வளவு நேரம் தீவிரமாக பேசிக் கொண்டிருந்தவன் இவன் தானா?’ எனும்படி ஆச்சரியமாக அவன் முகத்தில் பார்வை பதித்தாள் அவள்.சட்டென்று கொதிப்பான், சட்டென்று குளிர்வான் அவனைப் புரிந்துக் கொள்ள தனக்கு வாழ்நாள் போதுமா? எனத் தோன்றிற்று.

“இப்ப நான் வாசல் பக்கம் பார்க்கலில்ல?”

“இல்ல”

“ஆனாலும், என்னால திரும்பி பார்க்காமலேயே இப்ப அங்க யார் வந்திட்டு இருக்கான்னு நிச்சயமா சொல்ல முடியும்… என்ன சொல்லட்டுமா? சரியா இல்லையான்னு பார்க்கிறியா?”

உடனடியாக வாயிலைப் பார்த்து திரும்ப முயன்றவளை தடுத்தான்.

“நீ திரும்பாதே …இப்ப நான் சொல்லட்டுமா?”

திவ்யாவுக்கு ஜீவனின் அந்த விளையாட்டின் சுவாரஸ்யம் கூடி விட்டிருக்க, “சரி சொல்லு” என்றிருந்தாள்.

“வாசல்ல அனிக்கா வந்திருக்கா, இப்ப உள்ளே வரப் போறா பாரு.”

அவனது ஆருடத்தைப் பார்த்து, வாயிலை நோக்கிப் பார்த்தவள் வியந்தவளாய்… “அட ஆமா ஜீவா… நீ எப்படி பார்க்காமலே கண்டுப் பிடிச்ச?”

“இங்க எதிர்த்தாலப் பாரு ஒரு ஜொள்ளுப் பார்ட்டி, இவ்வளவுக்கும் காலையிலதான் கொஞ்சிட்டு வந்திருப்பான். ஆனா, பொண்டாட்டியை எத்தனையோ வருஷம் பார்க்காத மாதிரி பார்க்கிறதைப் பாரு…”

எதிரில் மனைவியை எதிர் நோக்கி புன்னகை முகமாய் நிற்கும் ரூபனைக் கிண்டலடித்தான்.உண்மையிலேயே ரூபன் தன் மனைவியை எதிர்பாராத விதமாய் ஜீவனின் தொழிற்சாலையில் கண்டதும் ஜீவன் சொன்னதைப் போலவே சிரிப்பாய், சிலையாய் பரவசமாய் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.

“அதெல்லாம் லவ் செய்யறவங்க ஃபீலிங்க்.உனக்கெங்கே தெரியப் போகுது?” சமயம் பார்த்து சீண்டினாள் திவ்யா…

“ஏய்…”

“என்ன ஏய்ய்…?”

அதற்குள்ளாக அனிக்கா அவர்களருகே வந்திருந்தாள், சுடிதாரையும் மீறி அவளது ஆறு மாதக்கரு நான் உள்ளே இருக்கிறேனாக்கும் என்று வெளிப்படுத்திக் கொண்டு இருந்தது. அவர்களருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தவள் அருகில் இருந்த மின்விசிறியை தன் பக்கம் திருப்பி விட்டாள்.

“என்ன இந்தப் பக்கம் மேடம், அண்ணி அவர்களே…” தோழியைப் பார்த்ததும் ஜீவனுக்கு கிண்டல் பெருக்கெடுத்தது.

“நான் ஒன்னும் உன்னைப் பார்க்க வரலை, என் வீட்டுக்காரர் இங்கே இருக்கார்னு தெரிஞ்சது அதான் வந்தேன்.” திவ்யாவைப் பார்த்து கண்ணடித்து கைக் கோர்த்துக் கொண்டாள் அனிக்கா.

அதற்குள்ளாக அவளுக்கு தண்ணீர் பாட்டிலை கொண்டு வந்திருந்தான் ரூபன்.

“இதைத்தான் பொண்டாட்டிக்கு கூஜா தூக்குவது என்பார்களோ?”

“பொறுடா உனக்கு கல்யாணம் முடியட்டும், கூஜா தூக்கிறியா, இல்லை அவளையே தூக்கிறியான்னு பார்க்கிறேன்.”

“கூஜாவா இவரா? வாய்ப்பில்ல ராஜா, வாய்ப்பில்ல”, பின்னாலிருந்து திவ்யா குரல் கொடுக்கவும் ஒருவரோடு ஒருவர் கைக் கொடுத்து கலாய்த்துக் கொண்டிருந்தனர்.

“இங்கே ஒரு வேலையா வந்தேன்டா ஜீவா… அப்படியே உன்னையும் திவ்யாவையும் பார்த்துட்டு போகலாம்னு வந்தா அத்தானும் இங்கே இருக்கிறாங்க…” இப்போது திவ்யாவின் கையை விடுத்து ரூபனின் கையைப் பற்றிக் கொண்டாள் அனிக்கா.

அவர்கள் பேசிக் கொண்டு நின்றது அதே ஒதுக்கமான பகுதி. அங்கே ஒரு சில இருக்கைகள் எப்போதும் இருக்கும். யாருக்கும் தொந்தரவும் ஏற்படாது. எனவே இவர்கள் அரட்டைகள் யார் கவனத்தையும் ஈர்க்கவில்லை.

“இதென்னடா இன்னிக்கு என்னாச்சு அடியேன் பேக்டரில ஒன்னு மாத்தி ஒன்னு லவ் பர்ட்ஸா வந்துச் சேருது?” அவன் வாய்தான் அப்படி சொல்லிக் கொண்டிருந்ததே தவிர எதிரில் வந்துக் கோண்டிருந்த பெரிய அண்ணன் தீபனையும், பெரிய அண்ணி ப்ரீத்தாவையும் வரவேற்றான்.

“அடே ரூபன் நீயும் இங்கத்தான் இருக்கிறியா? சாயங்காலம் வீட்டுக்கு வர்றதா இருந்தேன். இப்ப போகிற வழியில ஜீவனுக்கு ரிமைண்ட் செய்யலாம்னுதான் வந்தோம்.”

“வருக வருக மூத்த அண்ணி அவர்களே, உங்கள் வரவு இந்த எளியேன் இடத்தில் நல்வரவாகுக” ப்ரீத்தாவிடமும் வம்பிழுக்க,

“போடா வாலு…” என அவளும் அவனை கொசுவைப் பொல துரத்தி விட்டுவிட்டாள்.

“என்ன அண்ணா?”” சேட்டையை விடுத்து பெரிய அண்ணன் தீபனிடம் விசாரிக்க,

“நம்ம ராபின் பர்த்டே இந்த முறை வீட்ல இல்லாம, வெளியே போய் எல்லோரும் சேர்ந்து செலிபிரேட் செய்தால் என்னன்னு ஒரு ஐடியா? எங்க போகலாம்னு ஐடியா சொல்லுங்க…”

“ஹே சூப்பர் …” அனைவரும் மாற்றி மாற்றி உற்சாகமாய் கேபின் சென்று அமர்ந்துப் பேசிக் கொண்டிருக்க, மற்றவர்களைப் போலல்லாது சற்று விலகியே இருப்பது திவ்யாவின் குணமாக இருந்தாதாலேயே அனிக்கா அவளை கைப்பிடியில் வைத்துக் கொண்டு பேசிக் கொண்டு இருந்தாள். அத்தனைப் பேச்சுக்களிலும் திவ்யாவிடம் கருத்துக்களையும் கேட்டுக் கொண்டு இருந்தாள்.

ஒரு வழியாக இடம் முடிவாக தீபன், “திவ்யாமா அம்மா அப்பாவுக்கு வீட்ல போய் சொல்லிடறேன். உனக்கு இப்பவே சொல்லியாச்சு ராபினோட சித்தப்பாவையும் அதான் இந்த பொடிப்பையனையும் கையோட அழைச்சுட்டு வர்றது உன் பொறுப்பு.”

சரியென மகிழ்வாய் தலையசைத்தாள் திவ்யா.

“அண்ணா, என்னை நீ கூப்பிடலை… அதுவும் அவளை என்னை அழைச்சுட்டு வரச் சொல்லுற இதெல்லாம் எனக்கு அவமானம்…” நடிகர் வடிவேலு ஸ்டைலில் பேசி வைக்க…

“உன்னை கூப்பிட வேற செய்யணுமா? ஒழுங்கா மரியாதையா நேரத்துக்கே வந்து பலூன்லாம் ஊதுற, டெகொரேட் செய்ற… என்ன நான் சொல்லுறது?”

“ச்சே ச்சே ஒரு வியாபாரக் காந்தத்தை….”

“என்னாது?” அனைவரும் கோரஸாக கேட்க,

“அதான்மா பிசினஸ் மேக்னெட்…. வீட்ல கடைசிப் பையனா மட்டும் பொறக்கக் கூடாது… ஒரு பய மதிக்க மாட்டான்…” விளையாட்டாய் முணுமுணுத்தான் ஜீவன்.

“நீ இப்ப ஒருப்பய…ன்னு சொன்னது… நம்ம அண்ணனைத் தானே?” ரூபன் போட்டு வாங்க…

“யப்பா சாமி என்னை நீ கோர்த்து விடாதடா சாமி?” ரூபனை நோக்கி கையைக் கூப்பினான் ஜீவன். அங்கே கொல்லென சிரிப்புச் சத்தம் நிறைந்தது.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here