என் ஜீவன் நீயே_3_ஜான்சி

0
310

அத்தியாயம் 3

ரூபனின் மாளிகை:

இரவாகி இருந்தது சற்று முன்பு தொழிற்சாலையிலிருந்து வந்து உடைமாற்றி மனைவியோடு உண்டு சற்று நேரம் டிவியில் எதையோ பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்த ரூபன் எழுந்து சோம்பல் முறித்தான். அனிக்கா தூங்கி இருப்பாள் என்றால் அவளோ படுக்கையறை வாசலிலேயே இரு கைகளையும் நீட்டிய வண்ணம் நின்றிருந்தாள்.

“என்ன அனி”

“தூக்குங்க அத்தான்”

“ஏன் இப்ப என்ன உனக்கு? தூங்கிருப்பன்னு நினைச்சேன். இப்படி வந்து நிக்கிற?” கேட்டாலும் அவளை தூக்க தயாரானான்.

“முத ராத்திரி அன்னிக்கு நான் கேட்காமலே தூக்கினீங்கல்ல, இப்ப எதுக்கு இத்தனை விசாரணை?”

“மன்னிச்சுருங்க மேடம், தெரியாம கேட்டுட்டேன்” விளையாட்டாய் சொன்னவன்…

“இப்ப முன்ன மாதிரியா? புள்ளைய சுமந்திட்டு இருக்க, கவனமா இருக்கணும்ல”

“இப்ப நான் என்னை தூக்கச் சொன்னது எனக்காக இல்லை உங்களுக்காக தெரியுமா?”

“ஓ அப்படியா?”

“ம்ம், கொஞ்ச நாளா எக்சர்சைஸ் நீங்க செய்யலில்ல, அதான் பாவம் பார்த்து சான்ஸ் கொடுத்தேன்” திமிறும் கணவனின் புஜங்களை வருடிப் பார்த்தாள்.

“கல்லு மாதிரி இருக்கு”

சொன்னவளிடம் புன்னகைத்தான்.

“என்னாச்சு ருட்டீன் வொர்க் எதுவும் சரியா செய்யாம யோசனையில் அலையிறீங்க, ஏதும் டென்ஷனா?”

“எல்லாம் ஜீவன் விஷயம் தான், நான் சொன்னேனே அந்த டெண்டர் விஷயத்தில் ரொம்ப துணிஞ்சு நிக்கிறான், பயமா இருக்கு. செக்யூரிட்டி போடலாமான்னு கேட்டா அவனுக்கு கோபம் வருது. ஏதாச்சும் செய்யணும்.”

கடந்த காலத்தில் கணவனோடு பணிபுரிந்த போது கண்டுணர்ந்த விஷயங்களால் நம்பிக்கைக் கொண்டிருந்தவள் “ம்ம்… அதெல்லாம் ஏதாச்சும் சூப்பரா ப்ளான் செய்வீங்க…அந்த நம்பிக்கை இருக்கு.” கணவன் மண்டையை சுட்டிக் காட்டி விரல்களைக் கோர்த்து சூப்பர் எனச் சொல்லி கண்ணடித்தாள்.

“அப்படியும் அவன் கேட்கலைன்னா என் கிட்ட சொல்லுங்க, நான் அவனை கண்டிச்சு வைக்கிறேன்”

“எதுக்கு? இரண்டு பேரும் சண்டை போட்டு முட்டிக்கிடறதுக்கா?”

“ஹி ஹி”

“அந்த திவ்யா புள்ள அவனை கண்டிச்சி வச்சிருக்கோ, அவன் வாலை சுத்தி வச்சிருக்கானோ? இல்லைனா உங்க இரண்டு பேர் சண்டைல என் புள்ள சேட்டை செய்யுறதா தான் பொறக்கும்”

“இப்ப கூட அதுக்கு சான்ஸ் இருக்குத்தான்”

“இருக்கு இருக்கு, அம்மா அப்படியாச்சே?” பேச்சின் நடுவிலும்

மிக மிக மென்மையாக அவளைச் சுமந்து, அடி மேல் அடி வைத்து அதனினும் மென்மையாக அவன் அவளைப் படுக்க வைக்க அவள் சட்டென்று எழுந்து அமர்ந்தாள்.

“இப்ப அடிக்க போறேன் உன்னைய. எதுக்கு இப்படி சட்டுன்னு எழும்புற?  நீ புள்ளை பெத்துக்கிறதுக்கு முன்னாடி என் பிளட் பிரஷர் கூடிரும் போலிருக்கு.”

“ஹி ஹி அதென்னமோ அத்தான் நாம பாப்பா பத்தி பேசிட்டே இருந்தாலும் கூட எனக்கு பாப்பா என் வயித்துல இருக்கிறது அடிக்கடி மறந்து போயிடுதே.”

கடுப்பாக தன்னைப் பார்த்தவன் நாடியை தடவி சமாதானம் செய்தாள்.

“கோபப் படாதீங்க அத்தான் நான் கவனமா இருப்பேன்”

“நல்லது”

“அத்தான், நம்ம குட்டிப் பாப்பா நல்லா ஹெல்தியா பொறக்கும்ல, ஆளாளுக்கு மாமா மகனை ஏன் கட்டுன? இப்ப உங்க இரண்டு பேருக்கும் பொறக்குற குழந்தைக்கு ஏதாச்சும் ஜெனடிக் டிசர்டர் இருந்திரப் போகுதுன்னு பயம் காட்டுறாங்க”

“அப்படின்னா மாமா மகனை கட்டிக்காம இருந்திருக்க வேண்டியது தானே?” கணவன் முகபாவனையில் கோபத்தில் இருக்கின்றானா இல்லையா? எனப் புரியாமல் அசட்டுச் சிரிப்பு சிரித்தவள்…

“எனக்கு என் மாமா மகன் தானே பிடிச்சிருந்தது… ஹி ஹி… லவ் யூ அத்தான்”

“அனி ஆயிரம் முறை சொல்லிட்டேன், நல்லதா யோசி நல்லது நடக்கும்னு, இனி இப்படி ஏதாச்சும் உளறுனா உனக்கு அடிதான்”

“……”

“மறுபடி சொல்றேன் கேளு, அன்னிக்கு டாக்டர் சொன்னாரில்ல… நம்ம அம்மா அப்பா எந்த வகையிலும் ரிலேஷன் கிடையாது அசல்… அவங்க புள்ளைங்க நாமதான் மேரேஜ் செஞ்சிருக்கிறோம், அதனால் அப்படி எந்த கெட்டதும் நடக்காது ஓகே”

“அப்படின்னா நம்ம பாப்பாக்கு சொந்தத்துக்குள்ள மேரேஜ் ஆகாம பார்த்துக்கணும்ல அத்தான்” இன்னும் பிறந்திராத குழந்தைக் குறித்துப் பேச அவன் விழி பிதுங்கி நின்றிருந்தான்.

அதே ட்யூசன் பயின்ற காலத்திற்கு திரும்பியவள் போல கையில் எதையோ எண்ணியவள். “அண்ணி இப்ப தூங்கிருக்க மாட்டாங்கள்ல அத்தான்” என்றாள்.

‘இரவு பத்தரை மணிக்கு தன் சகோதரியை இவள் எதற்கு தேடுகிறாள்?’ என்பதற்கான காரணம் புரியாமல் திருதிருவென முழித்து அவன் அலைபேசியை எடுத்துக் கொடுக்க அவள் டெல்லியில் இருக்கும் ரூபனின் அக்காவிற்கு அழைத்தாள்.

“அண்ணி உங்களை டிஸ்டர்ப் செய்யலியே?”

“இல்ல அனி, நம்ம வீட்டில தூங்கிறதுக்கு பணிரெண்டு மணியாகும், இன்னும் உங்க அண்ணா வரலை”

“ஓ”

“என்னாச்சு? உடம்பு நல்லா இருக்கா? தம்பி உன்னை நல்லா பார்த்துக்கிறானா?”

கணவனை ஆராய்ச்சியாய் பார்த்தவள்,

“நல்லாதான் பார்க்குறாங்க அண்ணி, ஆனா ரொம்ப திட்டுறாங்க.கேட்டு கேட்டு என் காதே வலிக்குதுன்னா பார்த்துக்கங்க”

தன்னை அக்காவிடம் போட்டுக் கொடுப்பவளை கடுப்பாக பார்த்தவன், “இங்க தா நீ” அலைபேசியை பிடுங்கி ஸ்பீக்கரில் போட்டிருந்தான்.

எதிரில் ஜாக்குலின் சிரித்துக் கொண்டிருக்க,

“அக்கா இவ சொன்னதுக்கு இவ்வளவு சிரிக்காத, இங்க என் பொழைப்புதான் சிரிப்பா சிரிக்குது” மனைவியைக் குறித்த குறைகளை அவன் அடுக்க கலகலப்பாக சில நிமிடங்கள் கழிந்தது.

“அண்ணி இப்ப உங்களுக்கு போன் போட்டது யாரு?”

“நீதான் வேற யாரு?”

“அப்ப நான் சொல்ல வரதை கேளுங்க”

“சரிங்க மேடம் சொல்லுங்க”

“எங்க பாப்பாவை நான் நம்ம பிரின்ஸீக்கு எல்லாம் கட்டித் தர மாட்டேன், அதைச் சொல்லத்தான் கூப்பிட்டேன்”

ஒரு நிமிடம் அக்காவும், தம்பியும் சிலையாய் சமைந்து மறு நொடி ஆர்ப்பாட்டமாய் சிரித்தார்கள்.

தாங்கள் ஜெனடிக் டிஸார்டர் குறித்து பேசியதை தமக்கைக்கு ரூபன் விளக்கிக் கொண்டு இருந்தான்.

“அப்படின்னா நான் சொன்னது சரிதானே அண்ணி”

“அதெல்லாம் விட முடியாது, என் மருமக எனக்குத்தான் சொல்லிட்டேன்”

“அப்படியும் என் பாப்பா விட பிரின்ஸ் ரொம்ப வயசு வித்தியாசம், அவனுக்கு சீக்கிரம் கல்யாணம் கட்டி வச்சிருங்க அண்ணி. நான்லாம் என் பாப்பா கட்டித் தர மாட்டேன்.”

“பண்ணிரண்டு வயசெல்லாம் ஒரு வித்தியாசமா? என் மருமகளுக்கு பிரின்ஸின்னு பெயர் வை என்ன புரியுதா? பிரின்ஸ் பிரின்ஸின்னு பெயர் அவ்வளவு பொருத்தமா இருக்கும் தெரியுமா? என் மருமக கொஞ்சம் வளர்ந்ததும் நான் இங்கே டெல்லிக்கே தூக்கிட்டு வந்திருவேன்.  அப்புறம் என்ன ஜாம் ஜாம்னு…”

மனைவியும், தமக்கையும் மாற்றி மாற்றி சண்டையிட்டுக் கொள்ள ரூபன்

தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

“அத்தை” எதிரில் இருந்து பிரின்ஸ் வந்து போனில் இடையிடவும்,

“பிரின்ஸ் நல்லா இருக்கியாமா?” அனிக்கா

“நல்லா இருக்கேன் அத்தை, நான்லாம் உங்க பாப்பாவ கட்டிக்க மாட்டேன், ஏன்னா எனக்கு ஏற்கெனவே இரண்டு கர்ள் பிரண்ட் இருக்காங்க. அம்மா தர்ற டிஃபனை அவங்களுக்கு கொடுத்துட்டு நானே அவங்க கொண்டு வரதை தான் சாப்பிடுவேன்” என்றுச் சொல்ல அங்கு ஜாக்குலினின் “அடப் பாவி” எனக் கேட்க இருபக்கமும் சிரிப்பு தொடர்ந்தது.

அவர்கள் பிரச்சனைக்கு நடுவில் தலை விட்டவன் “ராபின் பர்த்டேக்கு எப்ப வார அக்கா?” பேசி அலைபேசியை துண்டித்து மனைவியை தூங்க வைத்தான்.

**********

வழக்கம் போல அமைதியாக இருந்தது திவ்யாவின் வீடு. ஞாயிற்றுக் கிழமை என்பதால் அம்மாவிற்கு சமையலிலும், அப்பாவிற்கு தோட்டத்திலும் உதவிக் கொண்டு இருந்தாள் திவ்யா. அம்மா ரேவதி குடும்பத்தின் தூணாகிய தலைவி, அப்பா கார்த்திகேயன் தனியார் வேலையில் பணிபுரிபவர் அலட்டல் இல்லாத எளிமையான மனிதர்கள் அவர்கள்.

தங்கள் ஒரே ஒரு மகள் காதல் என்று வந்து நின்ற போது முதலில் வெகுவாக கலங்கினர். உடன் பிறந்தவர்கள் என யாரும் இல்லாமல் ஒற்றையாய் மிகுந்த செல்லமாய் வளர்ந்தவள் அவள். சட்டென்று யாருடனும் கலந்து விடுபவள் அல்ல என்ற போதிலும் பழகி விட்டால் தனக்கு நெருக்கமானவர்களுக்கு வெகுவாய் அன்பை அக்கறையை அள்ளிக் கொட்டுவாள் அது போலவே இருமடங்காய் எதிர்பார்ப்பாள்.

எதிர்பார்ப்புக்கு மாறாக எதுவும் நிகழ்ந்தால் சட்டென்று உடைந்துப் போவாள். இப்படி கண்ணாடி மனம் கொண்டவள் மதம் மாறி, பழக்க வழக்கங்கள் மாறி வேறு குடும்பத்தில் திருமணம் செய்வது எப்படி சரி வரும்? என்பதே அவர்களது தயக்கமாக இருந்தது.

ஜீவன் தன்னைக் காதலிப்பதாகச் சொன்ன அன்றைய தினமே தம் வீட்டில் வந்து அவள் சொல்லி விட்டிருந்தாள். அவள் முகத்தின் பொலிவிலேயே அவளுக்கு அது எவ்வளவு விருப்பம் என அவர்களுக்குப் புரிந்தது.

ஜீவன் வந்து அவர்களிடம் பேசிய பின்னரே அவர்களுக்கு ஆசுவாசமானது. அவன் அவளை விடவும் பார்வைக்கு நிறம் சற்று மட்டு ஆகினும் அவளுக்கு இணையாக பொருத்தமான ஜோடி என்றுச் சொல்லும் படி இருந்தான், அவனது கண்களில் மகளுக்கான காதலைப் பார்த்தப் பின்னர் அவர்களுக்கும் மறுக்கத் தோன்றவில்லை. ஒரு வருடத்திற்குள்ளாக அவனது குடும்பத்தினரும் வந்துப் பேச, முடிவுச் செய்தபடி நிச்சயத்தை வெகு விமரிசையாக நடத்தி இருந்தனர்.

ஆனால் என்ன? அதன் பின்னர் உடனே திருமணம் வைக்காமல் நாட்கள் இழுத்துக் கொண்டே சென்றன. நிச்சயம் ஆகிற்று எப்போது திருமணம்? என்றுக் கேட்க முடியாமல் ஒரு தவிப்பு அவர்களுக்குள்ளேயே ஓடிக்கொண்டு இருந்தது.

மதியம் நன்கு தூங்கி எழுந்து மூவரும் அமர்ந்திருந்தனர் அம்மா சமையலறைக்குச் செல்வதைப் பார்த்து தடுத்தாள் அவள்.

“சண்டே கிச்சன் என்னுது… நீங்க இங்க இருங்க பார்ப்போம்”

“போடி, கல்யாணம் முடிஞ்சு போய்ட்டீனா நீயா வந்து சமைப்ப? நான் தான் சமைச்சாகணும்”

“அதெல்லாம் ஓடி வந்திருவேன் இல்லைனா உங்களை அங்கே கூப்பிட்டுக்குவேன்”

“அதெல்லாம் கேட்க நல்லாயிருக்கும், சரிவராது. சரி சந்திரிகா ஒரே கேள்வியா கேட்கிறா? உனக்கும் வயசு கூடுதில்ல… கல்யாணத்துக்கு எப்ப பார்க்கிறாங்களாமாம்”

சந்திரிகா ரேவதியின் அக்கா மகள் திவ்யாவின் மீது மிகுந்த அன்புக் கொண்டவள். அவளது திருமண விஷயம் வரும்வரையில் நன்கு பேசிக் கொண்டிருந்தவள் இப்போதெல்லாம் முகம் கொடுத்தே பேசுவதில்லை. வெடுக் வெடுக்கென்று நோகும்படி எதையாவது பேசி விடுகின்றாள். அக்காவை எண்ணியபடியே தாய்க்கு பதில் கொடுத்தாள்.

“அனிக்கு டெலிவரி ஆனதுக்கு அப்புறமாம்…”

“அவளுக்கும் உன் வயசுதான், அவ கல்யாணம் முடிஞ்சு புள்ளயும் பொறக்கப் போகுது, அவளுக்காக உன் கல்யாணத்த தள்ளிப் போடுறாங்களாமா? இது எந்த ஊரு நியாயம்? பொறு நான் வந்து பேசுறேன்”

“ரேவதி கொஞ்சம் பொறுமையா இரு, அது பொண்ணு வாழப் போற வீடு, அநாவசியமா பேசக் கூடாது. மாப்பிள்ளை வந்து பேசும் போதே புது பிசினஸ் செட்டில் ஆனதும் தான் திருமணம் இருக்கும் என்றுச் சொல்லத்தானே செய்தார். அதற்கு ஒப்புக் கொண்டு தான் நாம காத்திருந்தோம்… பொதுவா வீட்டில் புள்ளத்தாச்சிய வச்சிட்டு கல்யாணம் வைக்க மாட்டாங்கதானே? அதனால இன்னும் கொஞ்சம் மாசம் பொறுமையா இருப்போம்” என அறிவுறுத்தினார்.

“என்னமோ போங்க, ரொம்ப கடுப்பா வருது, நம்ம ஆட்களா இருந்தால் பரவாயில்ல இவங்களுக்கு எப்படி சொல்லி புரிய வைக்குறதுன்னு தெரியலை. நிச்சயம் முடிஞ்சதும் உடனே கல்யாணம் வச்சாதான் என்ன? இப்பவும் வேலை வேலைனு பாதி நாள் அங்கே தானே இருக்கிறா? கல்யாணம் முடிஞ்சும் அப்படித்தான் இருந்திட்டுப் போறா? பிசினஸாம் பிசினஸ்… ஊர் உலகத்தில யாரும் செய்யாத பிசினஸ்…. “

“…….”

“அவங்க வீட்டுக்காரங்களுக்கும் சொல்லாமல் தானாக புரியாதா? பொண்ணை பெத்துட்டோம்ல பொறுமையாதான் போகணும். இவங்க கிட்ட நமக்கு எதை எல்லாம் விளக்கிச் சொல்லுறதுன்னு ஆத்தாமையா இருக்கு” பொறுமினார்.

அம்மாவிற்கு ஆறுதலாக ஏதோ பேசியவாறு சமையலறைக்கு அழைத்துச் சென்று காஃபி தயாரித்துக் கொடுத்து அமைதியாக்கினாள் திவ்யா. அடுத்து, தீபனின் அழைப்பிற்கெற்ப ராபினின் பிறந்தநாள் விழாவிற்கு புறப்பட்டனர்.

ஊருக்கு சற்று வெளிப்புறமாக அமைந்திருந்த அந்த ரிசார்ட் களைக் கட்டியிருந்தது.ராபினின் பிறந்த நாளுக்காகவே மிக விசேஷமாக தயார்படுத்தப் பட்டு ஜெகஜோதியாக மிளிர்ந்துக் கொண்டிருந்தது.

குடும்பத்தினர் அனைவருமே ஒன்று கூடியிருக்க கலகலப்பிற்கு குறைவில்லை. திவ்யாவும் தன் பெற்றோர்களுடன் சரியான நேரத்தில் வந்து விட்டிருந்தாள்.

தம்பியின் மகன் பிறந்தநாள் விழாவிற்கென்றே ஜாக்குலின் தன் மகன் மற்றும் கணவரோடு டெல்லியிலிருந்து வந்திருந்தாள். ப்ரீத்தாவின் குடும்பத்தினர், அனிக்காவின் குடும்பத்தினர் என உறவினர்கள் அனைவரோடும் ஜீவன் மாற்றி மாற்றி பேசிக் கொண்டிருந்தவன் திவ்யாவை விட்டு சற்று தூரத்தில் நின்றுக் கொண்டிருந்தான்.

அதுவரையிலும் அவர்களோடு கூட திவ்யாவும் அமர்ந்திருந்தாள் தான். வெகுபல நாட்களுக்கப்பால் ஜாக்குலின் வந்திருக்க அவர்கள் உறவினர்கள் எல்லோரும் அவளை சூழ்ந்துக் கொள்ள அது போலவே ப்ரீத்தா, அனிக்கா என அவ்வீட்டு மருமகள்கள் குடும்பத்தினர் எல்லோரும் ஒன்றுக்குள் ஒன்றாக உறவினர்களாக, தெரிந்தவர்களாக இருக்க எல்லோரும் அவளிடம் வந்து பேசினாலும் கூட ஒரு அளவிற்கு மேல் அனைவருடனும் நெருங்க முடியாமல் அவள் அன்னியப்பட்டுப் போனாள். இப்போது தன் பெற்றோர்களோடு கூட வந்து அமர்ந்துக் கொண்டாள்.

அதென்னவோ தெரியவில்லை, ஆரம்பத்திலிருந்தே திவ்யாவின் மனம் ஜீவனைக் குறித்து எப்போதும் ஒரு வித அச்சத்தோடும் பாதுகாப்பின்மையோடே இருக்கும். இவ்வளவிற்கும் அவனது கலகலப்பும் பேச்சும் எல்லோருக்கும் உரியதாயினும் அவளுக்கும் அவனுக்குமான உறவு எவ்வளவு நுணுக்கமானது என்று அவள் அறிந்தவள்தான்.

அவள் மட்டுமல்லாது ஜீவனின் குடும்ப விழாக்களில் அவளது பெற்றோர்களும் அவ்வளவாக ஒன்ற இயலாமல் இருப்பதை அவள் கண்டிருக்கிறாள். மகள் காதலை அவள் பிடிவாதத்திற்காக ஏற்றுக் கொண்ட அன்பான பெற்றவர்கள் அவர்கள். இன்றைக்கும் அவளது காதல் காரணமாக தங்களது வீட்டு விழாக்களில் பல்வேறு இடிப்பேச்சைக் கேட்டுக் கொண்டு இருப்பவர்கள்.

“நம்ம ஜாதி ஜனத்தில இல்லாத ஆம்பளையா? போயும் போயும் வேத்து ஊர்காரனுக்கு பொண்ணைக் கட்டிக் கொடுக்கிறீங்களே?” என்று நேரடியாக எத்தனையோ பேரின் பேச்சுக்கு ஆளாகிவிட்டனர்.

“நீங்க வேணும்னா பாருங்க, அந்த பையன் பணக்காரன், வெள்ளையும் சொள்ளையுமா இருக்கிறான்னு மயங்கிட்டீங்க, ஆசைக் காட்டிட்டு அவன் அவங்க ஜனத்துல யாரையாவது கட்டிட்டு ஏமாத்தப் போறான், நீங்களும் ஏமாந்து நிக்க போறீங்க” சாபம் விடாத குறையாக பல பேர் பேசிய பேச்சைக் கேட்டாயிற்று.

ஜீவன் திவ்யா இருவரின் நிச்சயம் சிறப்பாக நடந்ததினால் திவ்யா குடும்பத்தின் உறவினரின் வாயை அடைக்கச் செய்ததுதான், ஆனால் திருமணம்? அதன் பேச்சையே அதன் பின்னர் யாரும் எடுக்கவில்லையே?

ஜீவனின் பெற்றோர் ராஜ் இந்திரா தம்பதியினரைப் பொறுத்தவரையில் ஜீவன் திவ்யாவிற்கான திருமணமானது தங்களது மற்ற பிள்ளைகளின் திருமணம் போல் நன்கு பரிச்சயமான உறவுகளில் அல்லாது அவ்வளவாக பழகி அறியாதக் குடும்பத்தோடு நடக்க இருப்பதால் அவர்களது விருப்பத்திற்கு விட்டுவிட்டனர்.

எதையாவது வெளிப்படையாக பகிரப் போய் காதலுக்கு எதிர்ப்புக் காட்டுவதாக அவர்கள் தவறாக நினைத்து விடக் கூடாதென்பதற்காக அவர்கள் ஜீவனுக்கும் திவ்யாவிற்கும் தளைகள் இடாமல், தடைச் சொல்லாமல் விலகி நின்றது ஒரு வகையில் திவ்யாவின் பெற்றோரின் மனதில் ஒட்டுதல் கொண்டு வரவில்லைப் போலும்.

ஜீவன் தான் திருமணம் குறித்து திவ்யாவிடம் பேசிக் கொள்வதாகச் சொல்ல, ஜீவனின் பெற்றோர் அவன் முடிவில் தலையிடவில்லை. ஒருவேளை அவர்கள் திவ்யாவின் பெற்றோரிடம் பேசி இருந்திருக்க வேண்டுமோ?

ஜீவனோ தனது மனதில் நினைப்பதை திவ்யாவிடம் சொல்வதோடு சரி அதிகமாய் திவ்யாவின் பெற்றவர்களிடம் உரையாட நேரிட்டதில்லை. இப்படி அங்கே தொடர்புகள் பலவீனப்பட்டு இருக்க அதனால் உறவுகள் இறுகி இருக்கவில்லை.

வெவ்வேறு மதங்கள் காரணமா? அல்லது பள்ளி முதல் பழகிய நட்பு வட்டத்தில் அப்போது சமமாக இருந்தாலும் தற்போது ஜீவன் குடும்பத்தினர் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையில் இருப்பதன் காரணமா? எதுவோ ஒன்று ஜீவன் குடும்பத்தினர் எவ்வளவு மரியாதையாக நடந்துக் கொண்டாலும் கூட, திவ்யாவின் பெற்றோருக்கு அந்தக் குடும்பத்தோடு அவ்வளவு ஒட்டுதல் இன்னும் வரவில்லை.

சுற்றம் சூழ அத்தனை விளையாட்டுக்கள் நடந்துக் கொண்டு இருந்தன. பிண்ணனியில் பாடல்கள் இரைச்சலில் ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் நடத்துபவர் ஒவ்வொரு விளையாட்டை முன்னெடுத்து நடந்துக் கொண்டிருக்க, அனிக்காவின் அண்ணன் மகள் ஹனி அவளை விளையாட வரச்சொல்லி நச்சரித்துக் கொண்டு இருந்தாள் போலும். அனிக்கா திவ்யாவை நோக்கி எதையோ சொல்லி கையை காட்டிக் கொண்டு இருந்தாள்.

திவ்யா அதைக் கவனித்து என்னவென்று அனிக்காவிடம் சைகையில் விசாரித்தாள்.

திவ்யாவை நோக்கி பட்டாம்பூச்சியாக துள்ளிக் கொண்டு வந்தாள் ஹனி, “அட்ட ( ஹனிக்கு ‘த’ வோடு தகராறு) என் கூட வாங்க” அவள் இழுத்த இழுப்பிற்கு போய் நின்றாள். அங்கே குழுப் போட்டியில் தன்னோடு அவளை நிறுத்திக் கொண்டாள் சின்னவள்.

அனிக்கா விளையாடச் செல்லாததால் ரூபனும் அவளருகே அமர்ந்திருந்தான். தன்னை விளையாட அழைத்த ஹனியிடம் அனிக்கா தனக்குப் பதிலாக திவ்யாவை அழைக்கச் சொல்லி இருந்தாள். அந்த விழாவில் அனிக்கா ரூபனைப் போல ஒரு சிலரே விளையாடச் செல்லாமல் அமர்ந்திருந்தனர். அவர்களுள் திவ்யாவின் பெற்றோர்களும் உண்டு.

அழகான சல்வாரில் எளிய ஒப்பனையோடு எதிரில் அதுவும் எதிரணியில் நின்றுக் கொண்டிருந்த திவ்யாவைக் கண்ட ஜீவன் உடனே உற்சாகமாகி கண்ணடித்தான். அவன் செயலால் தானாகவே முகம் சிவந்து நின்றாள் திவ்யா…

“அட்ட முகம் பாரேன் ரெட்டா இருக்கு” அருகில் இருந்த ராபினுக்கு அவளைக் காட்டினாள் ஹனி.

“என்னாச்சு சித்தி? அவளது கையைப் பிடித்துக் கேட்டான் ராபின். ஆம் பிறந்த நாள் கொண்டாடும் ராபின் உட்பட அனைவரும் அங்கே குழுமி இருந்தனர்.

“ஒன்னுமில்லடா தம்பி” பதிலளித்தவள் அவன் சிகையை வருடி விட்டாள்.

“சித்தி” தலையை மறுபடி சிலுப்பிக் கொண்டவன்… “என் ஹேர்ஸ்டைலை மாத்தாதீங்க” தன் குட்டிக் கைகளால் கோதிக் கொண்டான். அவன் செய்கையில் பெரிதாக புன்னகைத்து நின்றவளை ஜீவன் தன்னை மறந்துப் பார்த்து நிற்க, “டேய் ஜீவா, இப்ப அவங்க நம்ம எதிர் பார்ட்டி… நோ ஜொள்ளு. வாய மூடுறா” உறவினர் ஒருவர் அவனை கிண்டலடித்து வாயை மூடவும் அருகில் இருந்தவர்கள் சிரித்து வைத்தனர்.

அது “இசை நாற்காலி” விளையாட்டைப் போன்றதொரு விளையாட்டு ஆனால், பெரிய குழுக்கள் சேர்ந்து விளையாடும் வண்ணம் அமைந்துள்ள் ஒன்று, அந்த நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தவர் ஏற்கெனவே அமைத்தபடி அந்த அரங்கின் நான்கு ஓரங்களிலும் ஒவ்வொரு இடத்தின் பெயர் அட்டையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஒரு இடம் மும்பை, மற்றது சென்னை ஏனையவை டெல்லி மற்றும் கல்கத்தா எனப் பெயர்கள் எழுதப்பட்டு இருந்தன. இசை ஒலிக்கவும் அனைவரும் அந்த இடத்தில் வட்டமாக சுற்றி வர வேண்டும்.

இசை நின்றதும் அவரவர் நிற்கும் இடத்தில் ஒன்று கூட வேண்டும். ஒவ்வொரு முறையும் குலுக்கல் முறையில் நான்கு பெயர்களுள் ஒன்று தேர்ந்தெடுக்கப்படும். எந்த பெயர் வருகின்றதோ அந்த குழுவே மொத்தமாக அவுட்டாகி விடும்.

பாடல் ஒலிக்க ஆரம்பித்தது…

ஆளுமா டோலுமா
ஐசாலங்கடி மாலுமா 
தெறிச்சு கலீச்சுனு 
கிராக்கிவுட்டா சாலுமா 

அறிக்கல்லு கரிக்கல்லு 
கொத்துவுட்டா கலக்கலு 
பளுச்சினு பளபளக்குது 
மிட்டா மேல Local-u 

டமுக்குனா டுபுக்குனா 
டோலக்கதாம் குமுக்குனா 
டுபுக்குனா டுமாங்கோலி 
எப்டி போனா எனகென்னா 

கருக்குனா முறுக்குனா 
தவுட்டையதான் எறக்குனா 
இருக்குனா சரக்குனா ………..

சட்டென பாடல் நின்றுப் போக அவசர அவசரமாய் அவரவர் அருகே இருக்கும் குழுவில் இடத்தை நெருக்கிப் பிடிக்க ஹனி, ராபின், ப்ரீத்தா மற்றும் திவ்யா அனைவரும் சென்னை அணியில் நின்றனர்.

“அம்மா… அம்மா… அங்கே பாருங்க… அப்பா மும்பைல இருக்காங்க… ஹாய் அப்பா… நாங்க சென்னைல இருக்கோம்… நீங்க மும்பை”

குதூகலித்தான் ராபின். அங்கிருந்து தீபன் மகனுக்கு கைக்காட்டினான்… ஜீவன் எதிரில் கல்கத்தா அணியில் நின்றான். அங்கிருந்து சென்னைக்கு திவ்யாவிற்கு கைக்காட்ட அங்கே சிரிப்பும் கலகலப்பும்.

“எங்க அம்மா அப்பா டெல்லி க்ரூப் ஹே ஹே” ஹனி கிறிஸ் மற்றும் பிரபாவைப் பார்த்து குதுகலித்தாள்.

நிகழ்ச்சியை நடத்துபவர் வந்து “இப்ப இதில் ஒரு க்ரூப் அவுட்டாகப் போகிறது என்றதும் அனைவரும் திகிலாகப் பார்த்துக் கொண்டிருக்க நான்கு சீட்டுக்களில் ஒன்று எடுத்து….

“மும்பை” என வாசிக்க அந்த குழுவில் இருந்த முப்பது சொச்சம் நபர்களும் அவுட்டாகி வெளியேறினர்.

“அம்மா நம்ம அவுட்டாகலை அப்பா அவுட் அப்பா அவுட்” உற்சாகமாய் துள்ளினான் ராபின்.

அடுத்தச் சுற்றில் பாடல் இசைத்து முடிய அடித்துப் பிடித்து அனைவரும் மாற்றி மாற்றி அருகில் இருக்கும் இடத்தின் அருகே தஞ்சம் கொள்ள இதுவரைக்கும் ராபின் இருந்த பகுதி அவுட்டாகாமல் தப்பித்துக் கொண்டே இருந்தது.

சட்டென்று அவர்கள் குழுவில் ஒரு புது வரவு முழு கவுனில் சற்று அதீத அலங்கரிப்போடும் பளிச் பளிச்சென தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் முனைப்போடும் வந்து நிற்க “சித்தி” குரல் கொடுத்தான் ராபின்.

“ஷைனி இப்பதான் வர்றியாக்கும்?”

“ஆமாக்கா, புறப்படுற நேரம் என் மவ அழுகை அப்புறம் டயப்பர் மாத்திட்டு வர இவ்வளவு நேரமாச்சு”

அவள் கைக்காட்டிய தூரத்தில் ஒரு ஆண்மகன் குழந்தையோடு நின்றுக் கொண்டிருந்தான். அவளது நாசூக்கானப் பேச்சில், குழந்தையை ஏந்திக் கொண்டிருந்தவர் மறுகையில் தொங்கிய பையைப் பார்க்கையில் டயப்பர் மாற்றியது யாராக இருக்கும் என்று புரிந்து விட்டிருந்தது.

“ஏ அக்கா, அந்த குவைத் பொண்ணு விபரம் கொடுத்து விட்டிருந்தேன்ல? உன் மாமியார் வீட்ல கேட்டியா? அவங்க நல்ல வசதி”

அருகில் நின்றதால் திவ்யாவிற்கு இசைச் சத்தத்தை இரைச்சலைத் தாண்டியும் அவர்கள் பேச்சுக் கேட்டது. மற்றபடி ஷைனியின் அலட்டலான குரல் எங்கிருந்தாலும் கேட்டு விடும் என்பதுவும் உறுதிதான்.

“அதான் நிச்சயம் ஆகிடுச்சுன்னு சொன்னேன்ல?”

“காதல் கீதல் எல்லாம் சுத்த வேஸ்டுக்கா… இப்ப இந்த பொண்ணுக்கு மட்டும் சரின்னு சொல்லட்டும் கோடிக்கணக்கா பணம் இன்வெஸ்ட் செய்வாங்க, ஜீவன் அப்படியே டாப்ல இருப்பான். எப்பவும் அண்ணனுக்கு கூஜா தூக்கிட்டே இரண்டாவதா இருக்கணுமா என்ன?” விஷத்தைக் கக்கவும் தான் அருகில் இருந்த திவ்யாவிற்கு அவளைப் பற்றியே அந்த பெண் பேசுகிறாள் எனப் புரிய வந்தது.

ப்ரீத்தாவோ ‘அருகில் திவ்யாவிற்கு தன் தங்கை பேசுவது கேட்டுவிட்டால் என்னவாகும்? தங்களைப் பற்றி என்ன நினைத்துக் கொள்வாளோ?’ என்று எண்ணி பதறி எத்தனை தடுத்தாலும் ஷைனியின் வாயை அவளால் அடக்கவே முடியவில்லை.

இரைச்சலில் விட்டு விட்டுத்தான் ஷைனியின் குரல் கேட்டதெனினும் செய்தியின் சாராம்சத்தை உள்வாங்கிய திவ்யாவிற்கு சட்டென்று மனக்கிலேசம் ஏற்பட்டது. அதிலிருந்து உடனே காப்பான் என எதிரில் குழுவோடு நிற்கும் ஜீவனைப் பார்த்தாள் அவள். இவள் மன நிலை அவனுக்கு அவள் சொல்லாமல் எப்படித் தெரியும்? ஏனைய நாட்களில் வேலை வேலை என ஓடுகின்றவன் தற்போது இலகுவாய் இருக்கும் நேரம் என கலகலத்துக் கொண்டு இருக்கின்றான் அல்லவா?

சுற்றிலும் உறவினர்கள் இருக்க, எல்லோருக்கும் செல்லப் பிள்ளையான அவன் வாய் துடுக்குத்தனத்தால் அந்த இடத்தை கலகலக்கச் செய்துக் கொண்டு இருந்தான். அவனைச் சார்ந்தவள் கலங்கிப் போயிருக்க இவன் மற்றவர்களின் மனதை மகிழ்வித்துக் கொண்டிருந்தான்.

திவ்யாவின் கண்கள் தன்னையறியாமல் தன் கணவனாகப் போகின்றவனின் அண்ணன்கள் மீது கவனத்தை மாற்றினாள். அவர்களது நிச்சய நாளுக்கு அப்பாலிருந்தே அந்த ஒப்பிடல் அவளது மனதிற்குள் எப்படியோ வந்து விட்டிருந்தது.

சற்று முன்பு விளையாட்டிலிருந்து வெளியே சென்றிருந்த தீபன் பிறரை வரவேற்று நின்று பேசுகையிலும் தூரத்தில் திவ்யாவின் அருகே இருக்கும் ப்ரீத்தாவின் மீது ஒரு பார்வை வைத்திருப்பதை கவனித்தாள். அவ்வப்போது கணவன் மனைவி ஒருவருக்கொருவர் கையசைத்துக் கொண்டும் இருந்தனர். அடுத்து தானாகவே ரூபன் அனிக்கா பக்கம் கண்கள் செல்ல அவளிடம் குனிந்து ஏதோ விசாரித்துக் கொண்டு இருந்தான் ரூபன். மறுபடியும் ஜீவனிடம் கண்கள் செல்ல அவன் இவளைக் கண்டுக் கொள்ளாமல் யாரிடமோ சிரித்துப் பேசிக் கொண்டிருந்தான்.

கலங்கிய குளமானது அவள் மனது. விளைவுகள்?

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here