என் ஜீவன் நீயே_4_ஜான்சி

0
289

அத்தியாயம் 4

இது காதலா?

இல்லை பரீட்சைக் கூடமா?

ஒவ்வொரு முறையும்

உண்மையா உண்மையாவென்று

பரீட்சித்துக் கொண்டே இருக்க…

இது காதலா?

இல்லை பரீட்சை பாடமா?

ஒவ்வொரு முறையும்

உணர்வுகளுக்கு மதிப்பெண்கள் கொடுக்க

இது காதலா?

இல்லை பரீட்சை பாடமா?

வார இறுதி அன்றைய காலை திவ்யாவிற்கு வெகு சலிப்பாக இருந்தது. அவளது நாட்கள் எல்லாம் வர வர மிகவும் சோர்வளிப்பதாகவே மாறிக் கொண்டு இருந்தன.முன்பெல்லாம் உற்சாகமாக வளைய வந்த திவ்யாவை அவள் மிகவுமே தேடினாள். தனது இயல்பை மறந்து திரிகின்றோமோ? என அவளுக்கு தோன்றலாயிற்று.

“டெமோன்” அவளது பட்டப் பெயர் அதுதானே? முன்பெல்லாம் அவள் அப்படித்தானே திரிவாள். இப்போது என்னவாயிற்று அவளுக்கு? ஏன் இத்தனை சிந்தனைகள்? ஏன் இத்தனை பாதுகாப்பின்மை? எதற்காக இத்தனை மனச் சோர்வுகள்?

வாட்சப் க்ரூப்பில் தோழிகள் அவுட்டிங்க் செல்வதாகச் சொல்லவும் எப்போதும் தவிர்ப்பவள் “நானும் வரேன்” என தகவலை தட்டி விட்டாள்.

“இது நம்ம திவ்யா தானா?” அனைவரும் வியப்பை எழுப்ப இவளுக்கே என்னமோ போலானது.

வெகு நாட்களுக்கு அப்புறம் மகள் உற்சாகமாக வெளியே புறப்பட்டு நிற்க அம்மாவிற்கும் அவளை பார்த்து மகிழ்ச்சியே.

அந்த பிரபல மல்டிப்ளெக்ஸ் தியேட்டருக்கு வந்திருந்தாள்.

“ஹேய்…” ஒருவரை ஒருவர் பார்த்ததும் ஆரவாரித்து அணைத்துக் கொண்டனர். “இன்னும் திருமணம் ஆகவில்லையா?” எனும் கேள்வி யாராவது கேட்டு விடுவார்கள் என அஞ்சியே இத்தனை நாட்கள் யாருடனும் பழகாமல் இருந்தது எத்தனை பெரிய முட்டாள்தனம்?” என எண்ணினாள்.

படம் முடிந்து அந்த ரெஸ்டாரெண்டில் தங்களது மதிய உணவை முடித்துக் கொண்டு இருந்த போதுதான் அவர்களது சொந்தக் கதைகள் பேச ஆரம்பித்து இருந்தனர்.

வருணிக்கு அடிக்கடி போன் அழைப்பு வந்துக் கொண்டே இருந்தது. அவளுக்கு இரண்டு வயதில் மகள் உண்டு. ‘பரவாயில்லையே மகளை கூட வீட்டில் விட்டு விட்டு வந்து தனியே நண்பிகளுடன் சுற்றுகின்றாளே?’ என எண்ணிக் கொண்டாள்.

“லவ் யூ பேபி, டாடி கிட்ட நீ சமத்தா இருப்பியாம். மம்மி உனக்கு வரும் போது சாக்லேட்ஸ் வாங்கிட்டு வருவனாம்

” கொஞ்சினாள்.

அழைப்பை வைத்ததுமே, “இன்னிக்கு அவர்தான் வெளியே சுத்திட்டு வா நான் பாப்பாவை பார்த்துக்கிறேன்னு சொன்னார்” என்றவள் இன்னும் பெருமிதமாக எதை எதையோ சொல்லிக் கொண்டு இருந்தாள்.

‘தான் மட்டுமே இல்லாத விஷயத்தை எல்லாம் பெரிதாக்கிக் கொண்டு இருக்கின்றோமோ?’ என திவ்யாவின் மனதில் தோன்றாமல் இல்லை.

அவர்களின் பேச்சுக்களின் நடுவே இவளது திருமணம் எப்போது எனக் கேட்க இவளும் பட்டும் படாமல் விரைவில் எனச் சொல்ல “ஓ” என்றதோடு அவர்களது பேச்சு நின்று விட்டிருந்தது.

‘இதற்கு பயந்தா நான் வெளியே எங்கும் செல்லாமல் இருந்தேன்?’ என திவ்யாவிற்கே ஏதோ போல் ஆகிற்று.

பானுப்பிரியா மட்டும் அடிக்கடி தனக்கு வந்துக் கொண்டிருந்த போன்கால்களை வெட்டி விட்டுக் கொண்டு இருந்தாள்.

“எடுத்து பேச வேண்டியதுதானே?”

“இல்லடி நொய்யி நொய்யின்னு எதையாச்சும் கேட்டுட்டே இருப்பான். நிம்மதியா சாப்பிடக் கூட முடியாது.”

“உன் பாய்ப்ரெண்ட் தானே?”

“ஆமா அவன் தான்.எங்க போனாலும் இவனுக்கு கணக்கு கொடுக்கணுமா என்ன?” என அவள் சொல்ல திவ்யா இங்கு வரும் முன்பாக ஜீவனுக்கு அனுப்பி இருந்த செய்தி நினைவிற்கு வந்தது.

வாட்சப் சென்று அதை எட்டிப் பார்த்தாள். ஜீவன் அதை இன்னும் வாசித்து இருக்கவும் இல்லை. வார இறுதிகளில் அவன் தூங்குவதிலேயே அதிக நேரம் செலவழிப்பான் என்பதால் அவளது செய்தியை வாசிக்காமல் இருந்திருக்கலாம். அல்லது அவனது நேரம் ஒருவேளை வாட்சப் உள்ளே நுழையாமல் கூட வெளியில் இருந்து வாசித்து இருக்கலாம் எனத் தோன்ற திடீரென ஏதோ ஒரு எண்ணத்தில் அந்த செய்தியை “delete for everyone” கொடுத்து அழித்தாள்.

‘தானும் கூட வெளியே வர யாரிடமும் சம்மதம் கேட்கவோ, அனுமதி பெறவோ தேவையில்லை’ எனும் சுதந்திர உணர்வு தோன்றியது. அது ஒரு வகையான மன நிம்மதியை தந்தது.

அன்றைய சந்திப்பு அவளுக்கு தன்னுடைய மனதின் ஏதோ ஒரு புழுக்கமான அறையை திறந்துப் பார்க்க வழிவகை செய்தது. ‘மனிதனானவன் தனது எண்ணங்களால் தனக்கு விலங்கிட்டுக் கொண்டு வாழ்கிறான்’ என்பது தான் உண்மை. இந்த எண்ணங்கள் எனை சிறைப்படுத்துகின்ற எண்ணங்களை நான் சிதறடிக்க வேண்டும் என மனதிற்குள்ளாக எண்ணிக் கொண்டாள். அவள் மனதிற்குள்ளாக டெமோன் விழித்திருந்தது.ஆக, மனம் விழித்திருக்க உடல் சுறுசுறுப்படைந்த உணர்வு.

அவர்களறியாமலேயே திவ்யாவிற்கு உதவி செய்த தனது தோழிகளை நன்றிப் பெருக்குடன் பார்த்துக் கொண்டாள்.

“திவ்யா, முன்னைப் போல இல்லை. ரொம்பவே அமைதி ஆகிட்டா இல்ல?” அவர்களுக்குள்ளாக பேசிக் கொள்ள இவள் புன்னகைத்தாள்.

அப்போதிலிருந்து தன்னைத் தானே கண்டு பிடிக்கும் முயற்சியில் இறங்கினாள். வீட்டில் வந்து இறங்கியதும் சந்திரிகா அக்காவின் பிள்ளைகள் இரண்டும் “சித்தி” என இவளது கால்களை சுற்றிக் கொண்டனர்.

அம்மாவும் அக்காவுமாக இவளுக்கு இன்னும் திருமணம் ஆகாமல் இருப்பதைக் குறித்தே புலம்பலாக பேசிக் கொண்டு இருந்தனர். வழக்கமாக அவர்களது பேச்சு அவளை பாதிக்கும் அளவிற்கு இன்று பாதிக்கவில்லை.

வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து, கண்ட கண்ட சீரியல்களைப் பார்த்து அக்கா டிப்பிகல் குடும்ப ஸ்திரியாக மாறி விட்டிருக்கின்றாள் எனப் புரிந்தது. அம்மாவை பற்றி என்ன? அவர் தான் படிக்கும் போது புலம்பாமல் இருந்தாரா? இல்லை இவளுக்கு திருமணம் ஆகி விட்ட பின்னால் மட்டும் புலம்பாமல் இருக்கப் போகின்றாரா?

அவருக்கு தான் ஒற்றைக் குழந்தையாக தான் இருக்க, தன்னை அன்றி வேறு எதையுமே சிந்தித்தது கிடையாதே? படிக்கும் போது தனது மார்க்குகள் குறித்து, அதன் பின்னர் தனக்கு கல்லூரி சீட் கிடைப்பது குறித்து, அதன் பின்னர் தனக்கு வேலை கிடைப்பது குறித்து, இப்போது இவளுக்கு திருமணமானாலும் கூட அவளுக்கு குழந்தை பிறக்கும் மட்டுமாக குழந்தை குறித்து புலம்புவாராக இருக்கும். அதன் பின்னர் தனது குழந்தைக் குறித்து புலம்புவது என இது ஒரு தொடர்கதையாக நீளத்தான் போகின்றது.

இவர்கள் எல்லோரும் எனக்கு மனரீதியாக தரும் அழுத்தத்தில் இருந்து விடுபடவே வேண்டும். இந்த மனப்புழுக்கத்தோடு என்னால் வாழ முடியாது. நானும் என் உணர்வுகளும் இவை தனிப்பட்டவைகள். ஒருவர் மீது நேசம் கொண்ட காரணத்தாலேயே ஒன்றையும் கண்டுக் கொள்ளக் கூடாது அல்லது அத்தனையையும் அர்ப்பணித்து வாழ வேண்டும் என எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்?

தனது காதலன் மாற்று மதம் என்பதற்காக இவள் எத்தனையாக தனது குடும்பத்தினரோடு போராடினாள்? என்பது அவளே அறிவாள். எப்போதுமே சமுதாய அழுத்தம் என்பது பெண் சார்ந்தது தானே? பெண் மட்டும் சார்ந்ததுதான். அவனுக்கென்ன அவன் வீட்டினர் ஒரு நொடி கூட யோசிக்காமல் சம்மதம் சொல்லி இருந்தனர்.

அவளுக்கு அவனது வீட்டினர் மீது எந்த விதத்திலும் கோபமில்லை. அந்த பிறந்த நாள் விழாவின் பொழுது ஜீவனுக்கு பணக்கார பெண்ணை கட்டி வைக்கச் சொன்ன ஷைனி மீதும் கூட கோபமில்லை. ஏன் ஜீவன் மீதும் கூட வருத்தங்கள் தானே தவிர கோபங்கள் அதிகமில்லை. அவளுக்கு தன் மீது கோபம், ஆதங்கம், வருத்தம் எல்லாமும். தன் சுயம் தொலைத்த வருத்தம், இப்பவே இப்படி என்றால் பின்னால் என்னவாகும்? எனும் ஆதங்கம். காதல் முக்கியம் தான் ஆனால், அதற்காக எதற்காக இத்தனையாய் தன்னை இழந்தோம் எனும் கோபம். தன்னை மீட்டாக வேண்டும்…எப்படி? எண்ணிக் கொண்டு இருந்த போதே அலைபேசி இசைக்க எடுத்து பேசினாள். ரமேஷ் எனும் அவள் நண்பனின் அழைப்புதான் அது.

“….எனும் எங்கள் கம்பெனியில் ….பதவிக்கு ஆட்கள் வேண்டும் அதுவும் அவசரமாக ஓரிரு வாரங்களில் சேர வேண்டுமாம். உனக்கு யாரையாவது தெரியுமா?”

“தெரியும், பொறு உன் மெயில் ஐடிக்கு ரெஸ்யூம் அனுப்பி வைக்கிறேன்.”

“சரி…”

அழைப்பை வைத்திருந்தவன் அடுத்த மூன்றாவது மணி நேரம் பதட்டமாக அழைத்தான்.

“என்ன திவி? உன் ரெஸ்யூம் அனுப்பி இருக்க?”

“ஆமாம், என்னோடது தான் உங்கள் கம்பெனியில் நான் வேலை செய்ய வந்தால் வரவேற்க மாட்டாயா என்ன?”

“அதற்கு இல்லை, முன்பு பலமுறைகள் கேட்ட போது ஜீவனின் அலுவலகத்தில் பணி புரிவதால் வரமுடியாது என்று சொல்லி இருந்தாயே?”

“ம்ம்… அப்படி சொல்லி இருந்தேன் தான்.”

“பின்னே இப்போது மட்டும் எப்படி?”

“என்னுடைய தகுதி என்ன? என தெரிந்துக் கொள்ள முயற்சிக்கின்றேனே ரமேஷ்.”

“ம்ம்ம்… பிரச்சனை எதுவும் இல்லையே? இதனால் உங்களுக்குள்ளாக பிளவு எதுவும் வந்துவிடக் கூடாதெனும் கவலை எனக்கு.”

“இந்த சின்ன விஷயத்தில் பிளவு வருகின்ற அளவிற்கு மிக பலவீனமான உறவென்றா நினைக்கிறாய்?” என்று அவனிடம் கூறியவள் ‘அதையும் தான் பார்த்து விடலாமே?’ என மனதிற்குள்ளாக எண்ணினாள். 

“அப்படின்னா ஓகே திவி, ஷார்ட்லிஸ்ட் ஆனால் இண்டர்வியூ இருக்கும், தயாராக இரு.”

“ம்ம் சரி ரமேஷ்”

இனி உடனே ரமேஷ் முதன்முதலாக ஜீவனுக்குத்தான் இந்த தகவலை தெரிவிப்பான் என எண்ணியவாறு முறுவலித்தாள். ஒரே பள்ளியில் ஒரே வகுப்புகளில் படித்ததில் பெரும்பாலான நட்புக்கள் இருவருக்கும் பொதுவானவர்கள் தான். எதையும் எதிர்கொள்ள ஆயத்தமானாள்.

திங்கள் கிழமை அலுவலகத்திற்கு புறப்பட்டு வந்தாள் திவி, தனது போக்கில் வேலைகள் நடந்துக் கொண்டு இருந்தன. சில நாட்களில் டெல்லி பயணம் இருக்க அதன் முன்பாக அந்த இண்டர்வ்யூ இருந்தால் நன்றாக இருக்கும் என்றிருந்தது.

“விட்டு விடுதலையாகிநிற் பாயிந்தச்

சிட்டுக்குருவியைப் போலே”

பாரதியார் வரிகளை தனது டைரியில் எழுதியவள் அதன் அழகை உணர்ந்தாள். மனம் வெகு இலகுவாய் இருந்தது. காலையில் இருந்தே அவள் ஜீவனை பார்த்திருக்கவில்லை. தொழிற்சாலை பகுதியில் இருந்து அலுவலக பகுதிக்கு அவன் இன்னும் வந்திருக்கவில்லை.

அந்த கனத்த கதவு திறந்த சப்தம் கேட்டது. கதவு திறந்து மூடும் வரையிலான தொழிற்சாலையின் இரைச்சல் சப்தம் கண நேரம் ஒலித்து தேய்ந்து, இல்லாமல் போயிற்று.

வழக்கம் போல இந்திரா அவளுக்கும் சேர்த்து காலை உணவை அனுப்பி இருந்தார். இருவரும் துளி சப்தமில்லாமல் உணவை உண்டு முடித்தனர்.

“வெளியில் வேலை தேடுறியாம்.”

“ம்ம் ஆமாம்.”

“ஏன் திவி?”

“சும்மாதான் என் தகுதி என்னன்னு தெரிஞ்சுக்கத்தான்.”

“வாட் ரப்பிஷ் இஸ் திஸ் திவி? (என்ன மடத்தனம் இது?) உன் தகுதி என்னன்னு உனக்கு தெரியாதா என்ன?”

“ஆமாம், தெரியலை அதனாலத்தான் தெரிஞ்சுக்க நினைக்கிறேன்.”

“திஸ் இஸ் டூ மச் திவி?” (ரொம்ப அதீதம் திவி)

“எது என் விருப்பத்துக்கு நான் செயல்பட நினைக்கிறதா? எப்பவுமே உன் பின்னாடி நான் வாலாகவே சுத்தணுமா? எனக்குன்னு சுயம்னு ஒன்னுமே இருக்கக் கூடாதா? நீ இப்படி சொல்லுற பாரு… நீ இப்படி நினைக்கிற பாரு இதுதான் ரப்பிஷ்… இது மட்டும் தான் ரப்பிஷ்.”

“உனக்கு என்னாச்சுடா திவி?”

“ஒன்னுமாகலியே… புத்தி தெளிஞ்சிருச்சு… கங்க்ராஜிலேட் மீ” (எனக்கு வாழ்த்து தெரிவி) எழுந்து சென்று விட்டாள்.

ஜீவன் மிக குழம்பினான். அவனுக்கு தான் எங்கே பிழை விட்டோமென தெரியவில்லை. ஒன்றும் சரியில்லாதது போல மிகக் குழப்பமாக உணர்ந்தான். பெரிய பெரிய பிரச்சனைகளை சமாளிக்கின்றவனுக்கு அவளை எப்படி சமாதானப்படுத்துவதென தெரியவில்லை.

திடீரென டெல்லியில் இருந்து வந்த மெயில் அவர்களது சந்திப்பு இன்னும் ஒரு வாரம் கழித்து தள்ளி வைக்கப் பட்டு இருப்பதாக வந்தது. அதற்கான டிக்கெட் புக்கிங்க் மாற்றத்தை செய்து மின்னஞ்சல் மூலமாகவே திவி அவனுக்கு தகவல் அனுப்பி இருந்தாள்.

அவர்களுக்கிடையேயான சாதாரண பேச்சுக்கள் முற்றிலும் நின்று விட்டிருந்தன. ஜீவன் பலமுறைகள் அவளிடம் பேச முயன்றும் முடியாமல் தோற்றான். தீ ஜ்வாலையாய் தகிக்கின்றவளிடம் என்ன பேச?

அடுத்த நான்கு நாட்களில் அவளே அவனிடம் பேச வந்தாள். பேச அல்ல சண்டையிட வந்திருந்தாள். வேலைக்கு விண்ணப்பம் அனுப்பி இருந்த இடத்தினின்று அவளது ப்ரொஃபைல் தெரிவு செய்யப் படவில்லை என மின்னஞ்சல் வந்திருந்தது.

“உன் கூட சேர்ந்து ரமேஷ் என்னோட ரெஸ்யூம் ஷார்ட்லிஸ்ட் ஆக விடாம பண்ணிட்டான்ல. இதுக்கு பின்னால நீதான் இருப்பன்னு எனக்கு நல்லாவே தெரியும்.”

“என்ன பேசுற திவி? நான் ஏன் இதெல்லாம் செய்யப் போறேன்?”

“நீ செஞ்சிருப்ப… நீ நிச்சயமா செஞ்சிருப்ப… உனக்கு நான் என்றாலே இளக்காரம் தான். இப்ப இல்ல எப்பவும் அப்படித்தான்… இப்பவாவது உன்னைப்பற்றி தெரிஞ்சுக்கிட்டேன்ல நல்லதா போச்சு.”

“என்ன பேசுர திவ்? கொஞ்சமாவது யோசிச்சு பேசு.”

“உண்மைதானே உனக்கு உங்க வீட்டுக்காரங்க, அனி இவங்க எல்லாரும் தான் எப்பவும் முக்கியம். நான் என்னிக்கு உனக்கு முக்கியமா இருந்திருக்கேன்? நான் செகண்டரி நோ நோ…. நான் அது கூட இல்லை. நான் எங்கேயோ லாஸ்ட்ல… குப்பை மாதிரி கவனிக்காம சும்மா உன் லைப்ல எங்கேயோ கட்ட கடைசில…. அப்படி ஏன் கஷ்டப்பட்டு உறவை பேணணும் சொல்லு… வேணாம் இதெல்லாம் வேணாம்… விட்டுரு என்னை. என்னால இது முடியலை… ரொம்ப ஸ்ட்ரெஸா இருக்கு…. வேணாம் விட்ரு என்னை.” கதறியவள் அவனை தனது அருகிலும் விடவில்லை.

“திவ் என்னடா இது?”

“….”

“திவ்”

“நான் இனி இங்கே வர மாட்டேன், நீயும் என்னை பார்க்க வரக் கூடாது.”

“திவி…”

“நீ வந்தின்னா நான் என்னமாச்சும் செஞ்சுக்குவேன்…சத்தியமா என்ன்மாச்சும் செஞ்சுக்குவேன்…” விரல் நீட்டி அவனை மிரட்டினாள். கலங்கி நின்றான் ஜீவன்.

ஒரு வாரம் அவளின்றி கடந்திருந்தது.அந்த க்ரே கலர் டஸ்டர் ப்ளஸ்ஸை பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தினான் ஜீவன். 

அன்று விடுமுறை நாள் ரூபனும் அனியும் அவர்கள் வீட்டில் இருப்பார்கள் என நிச்சயமாக அவனுக்கு தெரியும். அதனால் தான் ஏதோ துரத்துகின்ற உணர்வில் தங்கள் வீட்டிலிருந்து புறப்பட்டு வந்திருந்தான்.

அவன் முகத்தில் களையே இல்லை, கடந்த சில நாட்களில் தன் இயல்பை தொலைத்து குறும்பு தெறிக்கும் வார்த்தைகளை இழந்து மௌனமாகி இருந்தான்.

அவனது கோதுமை நிறத்திற்கும், பருமனற்ற உடல் வாகிற்கும் அவன் உடுத்திருந்த அந்த ப்ராண்டட் சர்ட் கம்பீரமாய் பொருந்தி இருந்தது.முகத்தில் மீசை அவ்வளவாய் பொருந்தி அவனிடம் இருக்கும் துறுதுறுப்பு பையன் சற்றே மறைந்து ஆண்மை ததும்பும் தோற்றத்தில் இருந்தான்.முகத்திலும் சிந்தனைக் கோடுகள் மன முதிர்ச்சியை காட்டிக் கொண்டு இருந்தது.சிரிக்கும் போது தவழும் வசீகரம் அது மட்டும் சற்றுக் குறைந்து இருந்ததோ?!

முன் சிகை காற்றில் பறக்க அவற்றை அலட்சியமாய் விலக்கிக் கொண்டு டக் டக்கென வீட்டின் முன் நின்று கதவை நோக்கி கை நீட்டவும் கதவு தானாக திறந்தது.

“வாடா…”

தம்பியை அழைத்தவாறு ரூபன் எதிரில் நின்றான்.

“கார் பார்க் செஞ்ச சத்தம் கேட்டதும் நினைச்சேன் நீயாதான் இருப்பேன்”னு என்றவாறு தோளில் கைப்போட்டு தம்பியை அணைத்தவாறு வந்தவன், உள்ளறையில் சோபாவிற்கு அருகில் வந்ததும் வாயில் கையை வைத்து அமைதி எனச் சொல்லிக் காட்டினான்.

அங்கே கர்ப்பிணிகளுக்கேயான இலகுவான உடையில் தன் ஆறு மாத வயிற்றில் கை வைத்துக் கொண்டு ரிக்லைனரில் ஓரமாய் ஏதோ ஒரு வாகில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தாள் அனிக்கா.

அந்த குழந்தைத்தனமான, மாசு மருவற்ற முகம் மாறாமல் அப்படியே இப்போதும் கூட இருந்தது. குழந்தை தரித்ததில் இருந்து தொடர்ந்த கவனிப்பால் கொஞ்சம் எடை கூடி இருந்தாள். 

“ராத்திரி தூங்கலை …அதான் இப்ப தூங்கிட்டு இருக்கா…”

“ஓ..”

தன் தோழியும் அண்ணியுமானவளைப் பார்த்த போது தன்னாலே ஜீவன் முகத்தில் முறுவல் வந்தமர்ந்தது. எத்தனை எத்தனை சண்டைகள் போட்டிருப்போம்…அவனுக்கும், அவளுக்குமான உறவு மிகவும் இறுக்கமானது. சொந்தம் எனும் ஒரு பிணைப்பு, அதன  அடுத்து நட்பு எனும் இறுகிய பிணைப்பு, அண்ணி எனும் கூடுதல் பிணைப்பு.

யார் சொன்னாலும் சொல்லாவிட்டாலும், ஏன் அவனே அவளை அதட்டினாலும் அனிக்கா அவனுக்கு மிகவும் ஸ்பெஷல் உறவு. அவளிலும் ஸ்பெஷல் அவனுடைய அவள் அல்லவா? இதை திவ்யா எப்படி உணராமல் போனாள்? தலையை உலுக்கி சிந்தை தெளிவித்து அமர்ந்தான்.

“எடுத்துக்கோடா …” ரூபன் ஏதோ சில ஸ்னாக்ஸ்களை கொண்டு வந்து அவன் முன் வைத்தான்.பெர்முடாஸில் ரிலாக்ஸ் மூடில் இருந்தான்.

மெதுவாகவே பேசிக் கொண்டனர். மேல் மாடியிலுள்ள குட்டித் தோட்டத்தை அவர்கள் பார்வையிட்டு வந்த போது அனிக்கா விழித்திருந்தாள்.

“ஏ…அனி…மெதுவா எழும்பு…” விட்டால் துள்ளலோடு குதித்து நிற்பாள் எனும் பயத்தில் அவளருகே விரைந்தான் ரூபன்.

“வா ஜீவா…” கணவனின் கைப் பிடித்து நேராக எழுந்து அமர்ந்தவள் தூக்க கலக்கத்தில்,

“பொறு நான் உனக்கு ஜீஸ் கொண்டு வாரேன்…”

“நீ இரு தாயே…உனக்கு வேணும்னா நான் கொண்டு வாரேன்.”

சென்றவன் ப்ரிட்ஜில் இருந்த ப்ரெஷ் ஜீஸ்களை மூவருக்கும் கொண்டு வந்து பரிமாறினான்.

“இப்பவே நல்லா வேலை செஞ்சு பழகுடா…”

நண்பனின் திருமணத்தை குறித்து கிண்டலடித்தாள் அனி.சோபையாய் புன்னகைத்தான் ஜீவன்.

“திவ்யாவை அழைச்சிட்டு வந்திருக்கலாம்ல?” .கேட்டவள் அதுவரை குடிக்காமல் வைத்திருந்த பழச்சாறை ஒரு வாய் உறிஞ்சவும்…

“அச்சோ…”, என்றாள்.

“என்னாச்சு?..”

“இந்தக் குட்டிதான் ஜீவா…எப்ப பாரு உள்ளேயே ஆட்டம்…”

ஹா ஹாவென மனம் விட்டுச் சிரித்தான் ஜீவன்.குழந்தையின் அசைவை உணர தன் கையை அவள் வயிற்றில் வைத்தான் ரூபன்.

“உன் குட்டில்ல உன்னை மாதிரி தான் துறுதுறுன்னு இருக்கும்” சிரித்தான் ஜீவன்.

“ஏ அனி…பாப்பாவ நான் தொட்டுப் பார்க்கட்டுமா?” தயங்கியே கேட்டான்.

“பாரேன்” அவன் கையை தன் வயிற்றில் வைத்தாள் அனி. அவன் விரல்களுக்குள் ஏதோ குறுகுறுப்பு.

“உன் சித்தாடா…சித்தப்பா”, குழந்தையிடம் சொல்லிக் கொண்டிருந்தவள் குரலில், குழந்தையின் அசைவில் தன்னை அழுத்திக் கொண்டிருந்த ஏதோ ஒன்று விலகி…எல்லாம் சரியாகி விடும் எனும் மலை போல நம்பிக்கை வந்தமர்ந்தது ஜீவனுக்குள்.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here