என் ஜீவன் நீயே_5_ஜான்சி

0
63

அத்தியாயம் 5

“நீ வந்தின்னா நான் என்னமாச்சும் செஞ்சுக்குவேன்…சத்தியமா என்னமாச்சும் செஞ்சுக்குவேன்…”

எத்தனை மணி நேரமாக ஜீவன் வெறுமையாக சுவற்றை வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தான் எனத் தெரியவில்லை. என்னச் செய்வதென்றே புரியாத நிலையில் இருந்தான்.

‘திவ்யாவிற்கு இப்படியெல்லாம் பேசத் தெரியுமா? என்றே ஜீவனுக்கு வியப்புத்தான். எல்லாம் நன்றாகத்தானே சென்றுக் கொண்டு இருந்தது. நடுவில் என்ன பிரச்சனை வந்தது?’ கடந்த நாட்களில் நிகழ்ந்தவைகளை எல்லாம் எத்தனை முறைகள் மறுபடியும் யோசித்துப் பார்த்தும் அவனுக்கு காரணம் எதுவுமே புரிபடவில்லை.

அவனது அலைபேசியில் தகவல் வரவும், எடுத்து வாசித்தான். அது திவ்யாவும் தானுமாக பயணிக்க விருக்கும் புது தில்லி பயணம் குறித்த விமானச் சீட்டு குறித்த நினைவூட்டல் தகவல்.

அடுத்த இரண்டு நாட்களில் தில்லி பயணம் இருக்க, ஜீவன் என்ன செய்வதென்றே புரியாமல் திணறிக் கொண்டு இருந்தான்.

எத்தனை எத்தனை முறை திவ்யாவிற்கு அழைத்துப் பார்த்தான், எத்தனை எத்தனை தகவல்கள் அனுப்பி பார்த்தான். அவள் எதற்கும் அசைந்தாள் இல்லை. இதோ கிடைத்தது வாய்ப்பு என இந்த பயணத்தை காரணமாக வைத்து அவளிடம் பேசலாம் எனும் முடிவிற்கு வந்தான்.

கடந்த நாட்களில் யார் மூலமாகவும் எந்த செய்தியும் வராததில் இருந்து இன்னும் இவர்களது பிரச்சனைகள் அவர்களுக்குள்ளாகத்தான் இருந்ததே அன்றி வேறு யார் வரையிலும் செல்லவில்லை என்பதை புரிந்துக் கொண்டான்.

திடீரென தனக்கு உரிமையான ஒரு உறவை சந்திக்க காரணம் தேவைப்பட்டது குறித்து ஆதங்கமாக உணர்ந்தான்.

அங்கே திவ்யா ஒரு வார காலமாக வீட்டில் இருந்து, கண்ட கண்ட விஷயங்களையும் ஏற்று தன்னைத் தானே குழப்பிக் கொண்டதுதான் அதிகம்.

தனக்கு என்ன வேண்டுமென்றே அவளுக்கு புரியவில்லை. ஜீவன் தனக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென எண்ணுகிறாள் தான். அவன் தினம் தோறும் எழுதி அனுப்பும் தகவல்களை வாசிக்கிறாள்தான். ஆனாலும் தனக்கு என்ன வேண்டும் என அவளுக்கு ஒன்றுமே தெளிவாக புரியவில்லை.

அவனிடமிருந்து தூரமாக இருந்தால் தெளிவு கிடைக்கும் என தான் எண்ணியது முட்டாள்தனம் என புரிகின்றது. கிட்டே இருந்தால் மட்டும் என்னவாம்? அப்போதும் அதே குழப்பம் தான்… ம்ப்ச்ச்.

தன்னைத் தேடி வந்தால் ஏதாவது செய்துக் கொள்வேன் எனச் சொல்லி அவனை மிரட்டி வந்தவள் தான் அவன் இன்னும் தன்னை ஏன் தேடி வரவில்லை எனவும் எதிர்பார்த்தாள்.

அவனுக்கு தான் முக்கியமானவளாக இல்லாதபோது அவன் மட்டும் தனக்கு ஏன் இவ்வளவு முக்கியமானவனாக இருக்கிறான்? என தன் மனதை எத்தனை நொந்துக் கொண்டாலும் கூட அவளுக்கு புரியவில்லை.

“வாங்க மாப்பிள்ளை” அம்மாவின் சத்தம் கேட்டது.

முன்னறையில் யாரோ வந்திருப்பார்கள் போலும்? மாப்பிள்ளைனா சந்திரிகா அக்கா வீட்டுக்காரரோ? என எண்ணியவளுக்கு அடுத்த தகவல் பறந்தது.

“திவ்யா மாப்பிள்ளை வந்திருக்கார் வா”

தனது அறையில் இருந்து வந்தவளை ஜீவன் ஏறிட்டுப் பார்த்தான், அவளது முகம் வாடி இருந்தது. இவள் எதற்காக தன்னைத்தானே இத்தனை வதைத்துக் கொள்கின்றாளோ? என்றிருந்தது.

“நாளன்னிக்கு டெல்லி போகணும்னு சொல்லிக்கிட்டிருந்தா” கார்த்திகேயன் சொன்னார்.

“ஆமாம் மாமா அதற்கான வேலையாதான் வந்தேன்.”

“டெல்லி போயிட்டு அன்னிக்கு இராத்திரியே வந்திருவீங்க தானே?” ரேவதி கொடுத்த காஃபியை சுவைத்தவாறே,

“ஆமாம் மாமி போகறது அதிகாலை ஃப்ளைட், பதினோரு மணிக்கெல்லாம் ப்ரோசீஜர்ஸ் முடிஞ்சிரும். எப்படியும் ராத்திரி திரும்ப வந்திருவோம்.”

“அப்புறம் மண்டபம்லாம் பார்க்க வேண்டாமா? கல்யாணம் எப்பன்னு நீங்க சொல்லவே இல்லை.” மனப்புழுக்கம் தாளாமல் ரேவதி கேட்டுவிட்டு இருந்தார்.

“அடுத்த மாசம் அப்பா அம்மாவை வந்து பேசச் சொல்லுறதா இருந்தேன் மாமி, அடுத்த மாசம் வேலைகள் ஆரம்பிச்சா தானே அனி டெலிவரிக்கு அப்புறமா திருமணம் முடிக்க வசதியா இருக்கும்.”

மறுபடி அனி டெலிவரியை குறிப்பிட்டுச் சொல்லி திவ்யாவின் பற்களின் நறநறப்பை வாங்கிக் கொண்டது அறியாதவனாக தொடர்ந்து பேசிக் கொண்டு இருந்தான்.

“வா திவ், தில்லி போக தேவையான கொஞ்சம் பொருட்கள் வாங்கிக்குவோம்.”

‘ஒரு நாள் பயணத்துக்கு என்ன தேவையான பொருட்கள் இருக்கக் கூடும்?’ என திவ்யாவின் அப்பா கார்த்திகேயன் யோசித்தாலும் கூட மகளின் திருமணம் சில மாதங்களில் இருக்கும் என ஜீவன் சொன்னதை எண்ணியவரது கவனம் அதில் சென்று விட்டது.

காரில் ஏறி அமர்ந்தவள் எதிர்பார்த்ததைப் போல சீறினாள். காரை அருகில் இருந்த பார்க்கிற்கு விட்டவன், இறங்காமல் உள்ளேயே அமர்ந்திருந்தான். இருவரும் பேசுவதற்கு இதைவிடவும் தனிமையான இடம் இப்போது கிட்டவில்லை.

“உனக்கென்ன திமிர்? வீட்டுக்கே வந்திட்ட”

“……..”

“டெல்லிலாம் நான் வர்றதா இல்லை, நான் அங்க வந்து ஆகறதுக்கு எதுவும் வேலை இல்லை.”

“நாம ஏற்கெனவே திட்டமிட்டதுதானே திவ், வா போயிட்டு வரலாம்.”

“நீ என்னை பேசி ஏமாத்த பார்க்கிற…”

 

“உன் கிட்ட எனக்கு ஏமாத்துறதுக்கு எதுவுமே இல்லை திவ், உனக்கும் எனக்கும் நடுவில் எந்த ஒளிவும் மறைவும் கூடத்தான் இல்லை.”

 

‘இல்லை, உன் மனதில் எனக்கு இடமே இல்லை’ எண்ணியவளின் கண்கள் நிறைந்து விட்டிருந்தன.

 

“சரி வரேன், ஆனால் டெல்லியில் இருந்து வந்தது நம்ம மேரேஜ் நடக்காதுன்னு வீட்ல டிக்ளேர் செய்யணும். இதுக்கு ஒத்துக்கிறீங்கன்னா வரேன்.”

 

ஜீவன் வெகுவாக அதிர்ந்தவனாக அவளை பார்த்திருந்தான்.

 

“ஏன் திவ்?”

“அப்படித்தான்… எனக்கு இந்த ரிலேஷன் சுமக்க முடியலை. ரொம்ப பாரமா இருக்கு… முடியவே முடியலை. என்னை விட்டுருங்க.”

தேம்பித் தேம்பி அழுதவள் அவனை தன் அருகே கூட வரவிடவில்லை.

“தொடாதே நான் செத்தே போயிருவேன்… ஐ ஃபீல் லைக் ஐ லாஸ்ட் மைசெல்ஃப். ஆல் பிகாஸ் ஆஃப் திஸ் லவ். திஸ் ஸ்டுப்பிட் லவ்.” ( நான் இந்த மடத்தனமான காதலால் என்னை நானே இழந்து விட்டதாக உணர்கிறேன்) முகத்தை அறைந்துக் கொண்டாள்.

“திவ் திவ்… திவ்யா ப்ளீஸ் ஸ்டாப்.”

அலறியவன் கண்களிலும் கண்ணீர்தடம்.

“இப்ப உனக்கு என்ன என் கூட பிரேக்கப் செய்யணும், வெளியில வேலை பார்க்கணும் அவ்வளவுதானே?”

“முதலாவது மட்டும் தான் நீ செய்யணும், எனக்கு வேலை தேடுறது எல்லாம் நான் பார்த்துப்பேன்…. நீ என் வாழ்க்கையில் இருந்து போயிடணும் அவ்வளவுத்தான்…. அவ்வளவுத்தான் வேணும்.”

முகம் சிவந்து, உதடுகள் நடுங்க தன்னிடம் புலம்புகின்றவளை எப்படி ஆறுதல் படுத்தவென புரியாமல் மனம் பதறினான்.

“சரி சரி…. ரிலாக்ஸ் ரிலாக்ஸ்”

“எனக்கு தெரியும், எனக்கு நல்லா தெரியும்… உனக்கு எப்பவுமே உன் பிசினஸ் தான் முக்கியம் நானில்லைனு எனக்கு தெரியும். பார்த்தியா டெல்லி ட்ரிப்காக என் கூட பிரேக்கப் செய்யறதுக்கு கூட நீ தயாராகிட்ட….” என்றவளை அயர்ந்து பார்த்திருந்தான்.

“நான் வெறும் லக்கி சார்ம் தானே உனக்கு… நான் மனுஷி இல்ல…. எனக்குன்னு உணர்வில்ல… ஆசையில்ல… ஒன்னுமில்ல…” புலம்பியவளை நெஞ்சில் இரத்தக் கண்ணீர் வடிய பார்த்திருந்தான்.

அதற்குப் பிறகு எப்படி அவள் தனது வீடு சேர்ந்தாள் என அறியாள். எதற்கும் உடன் படாமல் திமிறிக் கொண்டு தன்னை எதிரியாய் பார்க்கின்றவளை என்னச் செய்வதென அவனுக்கும் புரியவில்லை.

அவனது கை வசம் இருந்தது அந்த டெல்லி பயணம் மட்டுமே. அந்த பயண நேரத்தில் எப்படியாவது அவள் மனதில் இருப்பது என்ன? என்பதை அறிந்துக் கொண்டு அதற்கேற்ப அவளுக்கு தன்னை புரிய வைக்கலாம் என்று எண்ணினான்.

அந்த அதிகாலை நேரம் டெல்லிக்கு புறப்பட்ட இருவரையும் வழியனுப்பிய திவ்யாவின் பெற்றோருக்கு அவர்கள் சென்ற வண்ணம் திரும்ப வரப் போவதில்லை என்பது தெரிந்து இருக்கவில்லை.

நின்ற இடத்தில் நிற்க வைத்து

உலகை சுழல வைப்பன

அலைகள் போன்ற

மனித எண்ணங்கள்

எண்ணங்களே வார்த்தை

வார்த்தைகளே வாழ்க்கை

வீண் அலைகளினின்று

விலகி வந்தால் பிழைப்பாய்

மாட்டிக் கொண்டால்

சுழல்வாய்

விதி இருந்தால் மட்டும்தான்- நீயும்

மீண்டு வருவாய்.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here