என் ஜீவன் நீயே_6_ ஜான்சி

0
70

அத்தியாயம் 6

ஜீவனும் திவ்யாவும் விமான நிலையம் செல்லும் வரையிலும் எதையும் பேச முற்படவில்லை. திவ்யாவின் மனநிலை இன்னும் குழப்பமான நிலையை அடைந்திருந்தது. தான் கேட்டதும் பிரிவிற்கு ஒத்துக் கொண்ட ஜீவனை குறித்த அதிருப்தியில் அவள் மனமெங்கும் கசந்து வழிந்தது.

ஜீவன் அப்படி ஒன்றை சொல்லவே இல்லை என்பதை அவள் உணர்ந்தாளில்லை. தனக்கு கிடைத்த வாய்ப்புக்களில் எல்லாம் தன்னை நெருங்க ஜீவன் முயற்சி செய்வான் என்பதையும், எப்படியாவது அவளை அவளுடனான தனது உறவை சீர்ப்படுத்தவே மெனக்கெடுவான் என்பதையும் அவள் உணரவில்லை.

ஜீவனின் மனநிலையும் சீராக இல்லை, ஏதோ ஒன்று அவளை மிகவாய் பாதித்து இருக்கின்றது. அது தனது செய்கையாகவும் இருக்கலாம் என்பதை உணர்ந்தவனுக்கு தன் மேலேயே அதிருப்தி.

அவன் திவ்யாவை பள்ளிக் காலத்தினின்று அறிவான். உற்சாகமான பெண்ணவள், மனதில் எதையும் வைத்து அறியாதவள். நான் டெமோன் என தன்னைத் தானே சொல்லிக் கொள்ளும் குறும்பு தேவதை அவள்.

அவளது காதலை அவன் உணரும் முன் வரையிலும் அவள் அவனுக்கு சிரிப்பு மூட்டும் பபூனாகத்தான் இருந்தாள். உணர்ந்த பின்னே அவனது எல்லாமுமாக மாறிப் போனாள். அவளுக்கு அவன் காதலனாகவோ என்னமாகவோ இருந்திருக்கலாம். அவனுக்கு அவள் அவனது மனைவிதான், வேறு எதுவாகவும் அவளை அவன் எண்ணி இருக்கவில்லை.

அவளது கதறலில் அவன் நொறுங்கிப் போய் விட்டிருந்தான்.என்னுடனான உறவு அவளுக்கு இத்தனை சிரமம் தருகின்றதா? தான் அவள் காதலுக்கு தகுதி இல்லையோவென அவனது மனதில் கலக்கம் சூழ்ந்திருந்தது.

அவன் தன்னால் இயன்ற எல்லா வகையிலும் தனது காதலை திரும்பப் பெற முயல வேண்டும் என தீர்மானித்துக் கொண்டான். எல்லா வகையிலும்…

விமானம் காலை எட்டரைக்கு டெல்லி விமான நிலையத்தை வந்தடைந்தது அடுத்த சில மணி நேரங்களில் ட்ராஃபிக்கில் இருந்து நீஞ்சி தாங்கள் செல்ல வேண்டிய அலுவலகத்திற்கு சென்றடைந்தனர்.

தாங்கள் அங்கே சமர்ப்பிக்க வேண்டிய படிவங்கள், விபரங்கள் எல்லாம் தெரிந்திருந்தும் தெரியாதது போல ஜீவன் திவ்யாவிடம் ஒவ்வொன்றாக கேட்டுக் கொண்டான். அவன் தன்னுடன் பேச முற்படுகின்றான் எனத் தெரிந்தும் கூட திவ்யா அவனிடம் ஒரு வார்த்தைக்கு அரை வார்த்தையில் பதில் சொல்வதும், பல நேரங்களில் பதில் சொல்லாமல் தவிர்ப்பதுமான முயற்சிகளில் இருந்தாள்.

அவர்களுக்குள்ளாக காலை உணவும், மதிய உணவுமான இரு நேரங்களிலும் கூட அதே அமைதி நிலவியது. மதிய உணவு நேரம் கழிந்த பின்னர் இரண்டரை மணி அளவில்தான் அவர்கள் வந்த வேலை முடிந்தது.

காலையிலேயே முடிந்திருக்க வேண்டிய வேலை இத்தனை தாமதமாக முடிந்தது குறித்து ஜீவனுக்கு மனச் சஞ்சலம் தான். ரூபன் சொன்னதை போல இவற்றில் பட்டேல் அண்ட் க்ரூப் தலையீடு எதுவும் இருக்குமோ?

எப்படியோ தாங்கள் வந்த வேலை முடிந்தது என இருவரும் புறப்பட்டனர். நியாயமாகப் பார்த்தால் தங்களது காண்டிராக்ட் சார்ந்த அனுமதி கிடைத்து விட்டது. இனி உரிய காலத்தில் கொடுக்கப்பட்ட கான்டிராக்டை திறம் பட செய்து கொடுக்க வேண்டும் எனும் மன நிறைவுதான் எழுந்திருக்க வேண்டும். ஆனால், அப்படி எல்லாம் அவர்களால் திருப்தியாக எண்ண முடியவில்லை.

இதோ திவ்யா தன்னிடம் சொன்னபடி இன்று வரை மட்டுமே அவனோடு அவள் இருக்கப் போகிறாள் என்ற எண்ணம் ஜீவனை பாதித்துக் கொண்டு இருந்தது. அவள் கேட்டது போல எல்லாம் அவன் தங்களது திருமணத்தை முறித்துக் கொள்ளப் போவதில்லை. ஆனால், தன்னைத் தானே ஏதாவது செய்துக் கொள்வேன் என்று மிரட்டினால் அவனால் என்னச் செய்ய முடியும்? அவளை அவளது புதுப் புது பரிமாணங்களில் மிரண்டு திகைத்து தவித்தான். இந்த குழப்பங்களினால் அவனால் வழக்கமான கவனத்தோடு இருக்க முடியவில்லை. தன்னைச் சுற்றி நிகழ்கின்றவைகளை உணர முடியவில்லை. இது எங்கே கொண்டு போய் விடும்?

அந்த அலுவலகத்தினின்று வெளியே வந்த நேரம் முதலாக திவ்யாவின் மனதிலும் சொல்லொணா துயரம் எழுந்தது. இந்தப் பிரிவு இந்த முடிவு அவளாக கேட்டுக் கொண்டது. ஆனால் அது அவளுக்கு உவகை அளிப்பதாக இல்லையே? தனது உடலினின்று உறுப்பு ஒன்றை தனியே பிய்த்து எடுத்து வைப்பது போன்று துயரமாக இருந்தது.

அவனோடு இருப்பதுவும் துயரம், பிரிவதுவும் துயரம் எனில் என்னதான் தீர்வு?

மின் தூக்கியின் உதவியால் அந்த பற்பல மாடிகள் கொண்ட நிறுவனத்தின் கீழே வந்தவர்கள் நெடிய மரம் சூழ்ந்த அந்தப் பாதையை பார்த்துக் கொண்டு நின்றனர்.

காரில் ஏறி விமான நிலையம் சென்று விட்டால் இரவு வீட்டை அடைந்து விடலாம். அதன் பின்னர் ஒருவரை ஒருவர் எப்போது சந்திக்கவாம்? தங்களது பொருளற்ற சிந்தனைகளால் எழுப்பிக் கொண்ட திரையை தாங்களே கிழித்தெறிய இயலாதவர்கள் போலவும், என்னமோ இனி இந்த உலகம் தாண்டி இருவரும் பிரிந்து வேறொரு உலகம் செல்வதைப் போலவும் இருவருக்குள்ளும் வெகுவான அபத்தமான சிந்தனைகள்.

திடீரென்று ஜீவன் என்ன நினைத்தானோ திரும்பச் செல்ல காரை புக் செய்யாமல் திவ்யாவிடம்

“திவ் கொஞ்ச நேரம் இந்த வழியோரம் நடந்து போயிட்டு அப்புறம் கார் பிடிப்போமா?” என்றான்.

அந்த பாதை மஞ்சள் பூச்சொரிந்த வண்ணம் மிக அழகாக மனோ இரம்மியமாக இருந்தது. பதில் சொல்லாதவள் அவன் சொன்னதற்கு ஏற்ப அந்தப் பாதையில் நடை பழகலானாள்.

இருவரும் இடைவெளி விட்டு மௌனமாக அந்த வழியில் நடந்து கொண்டிருந்தனர். கீச் கீச் என்ற இனிய குரல்கள் அவர்கள் மனதை கலைக்கவில்லை. சுற்றிலுமிருந்த இரம்மியமான சூழ்நிலை அவர்களை ஒன்றுமே பாதிக்கவில்லை. இருவரும் அவரவர் சிந்தனையில் ஆழ்ந்து இருந்தனர்.

அந்த நேரம் எதிர்பாராத வண்ணம் அங்கே திடீரென எங்கிருந்தோ ஒரு வண்டி அவர்கள் அருகில் வந்து நின்றது. அதில் இருந்து சில ஆஜானுபாகுவான மனிதர்கள் தடதடவென இறங்கினர். அவர்கள் கையில் ஆபத்தான தாக்குதல் கருவிகள் இருந்தன.

திவ்யா அந்த சப்தங்கள் கேட்டு திரும்பிப் பார்க்கையில், ஜீவன் அவளுக்கும் சில அடிகள் பின்னால் நின்று கொண்டிருப்பதையும் அவனைச்சுற்றி அந்த ஆயுதம் தாங்கிய ஆட்கள் நிற்பதையும் கண்டாள்.

இப்போது என்ன செய்வது என்று புரியாமல் அவளது கால்கள் வேரோடி இருந்தன. ஏதோ ஒன்று தவறாக நடக்க போகின்றது என்று அவள் மனதுக்குப் புரிந்தது. மிகுந்த படபடப்பில் மூளை செயல்படாமல் இருக்க என்ன செய்வது என்று புரியாதவளாய் நின்றாள்.

தனது கைப்பையில் இருந்த அலைபேசியை எடுத்து யாரிடமும் உதவி கேட்க கூட அவளால் முடியவில்லை. சட்டென்று அங்கு ஆரம்பித்தது ஒரு களேபரம். திவ்யாவை அந்த நபர்கள் கண்டுகொள்ளவே இல்லை எல்லோரும் ஜீவனை தாக்கத் தொடங்கினார்கள்.

சுற்றிலும் இரத்த  பூக்கள் தெரித்தன …ஜீவன் எத்தனையோ முயற்சி செய்தும் பதிலுக்கு தாக்க முயன்றும் அவர்கள் அத்தனை பேரின் தாக்குதலில் இருந்து தன்னை காத்துக் கொள்ள முடியவில்லை.

அந்த நேரம் அவன் தலையில் பொட்டென்று ஒரு ஆயுதம் தாக்க சடாரென தரையில் சரிந்து விழுந்தான். சில நொடிகளில் அனைத்தும் நிகழ்ந்து இருக்க பின் இருந்து திமு திமுவென யாரோ சிலர் ஓடி வர, ஜீவனை தாக்கிக் கொண்டு இருந்தவர்கள் அனைவரும் தாங்கள் வந்த வண்டியிலேயே அவசரமாக ஏறி திரும்பிச் சென்றனர்.

 ஜீவனை சுற்றி ரத்தம் குளமாக கட்ட ஆரம்பித்தது. திவ்யா அவனிடம் அலறியவாறு ஓடி வந்து அவனை தூக்க முயன்றாள். அந்த இரண்டாவது குழுவினர் ஜீவனை பத்திரப் படுத்தினர். அந்த வண்டி ஜீவனுடன் திவ்யாவையும் ஏற்றிக் கொண்டு மருத்துவமனை புறப்பட்டது.

உணர்வற்று கிடக்கும் ஜீவனையே வெறித்துப் பார்த்தவண்ணம் திவ்யா அமர்ந்திருந்தாள்.

“ஜீவா… முழிச்சிர்றா… எனக்கு உன் கிட்ட பேசணும்” அவள் மனம் அவளை கூறு போட தொடங்கியது.

இரத்தம் தோய்ந்த அவள் கரத்தில் இப்போது அலைபேசி திணிக்கப் பட்டது.

“திவ்யாமா… நான் ரூபன் பேசறேன்… ரூபன்…. நான் இன்னும் கொஞ்ச நேரத்தில் அங்கே இருப்பேன். தைரியமா இருக்கணும் சரியா… தைரியமா இருக்கணும்.”

நடுங்கிய விரல்களால் அலைபேசியை பற்றிக் கொண்டவள் கண்ணீர் ததும்பும் குரலோடு கேட்டாள்.

“ஜீவனுக்கு ஒன்னும் ஆகாதுல்ல அண்ணா?”

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here