என் ஜீவன் நீயே_7_ஜான்சி

2
113

En Jeevan Neeye

அத்தியாயம் 7

“அதெல்லாம் ஜீவனுக்கு ஒன்னும் ஆகாது”

“ஒன்னும் ஆகாதில்லண்ணா.”

“இல்லம்மா”

“அவன் மயங்கிட்டான் அண்ணா” அழுதாள்.

“சரியாகிடுவான்மா”

“எல்லாத்துக்கும் நான் தான் காரணம்ணா…”

“அப்படி இல்லம்மா, நீ கவலைப் படாதேமா… நான் வரேன்மா.”

அலைபேசி துண்டிக்கப் பட்ட பின்னரும் அதையே பார்த்திருந்தாள்.

அவளருகில் இருந்தவர்கள் ஜீவனின் இரத்தப் போக்கு கட்டுப்பட ஏதேதோ செய்தவர்கள் அவனை விழிப்பில் கொண்டு வர முயன்றுக் கொண்டு இருந்தார்கள்.

“வேக்கப் ப்ரோ, வேக்கப்”

“திவ்…” ஜீவன் முனக

“ஜீவா” கதறியவளாக அவன் அருகில் சென்றாள். அவனை மடி ஏந்திக் கொண்டாள்.

“ஜீவா எழுந்திரு ஜீவா… உனக்கு சரியாகிரும் ஜீவா…” அழுகையின் கம்பலையுமாக கதறியவள் முகத்தை வெகு பிரயத்தனப்பட்டு கண்களை திறந்து பார்த்தான்.

“யூ சேஃப் திவ்? …” நா குழறியது.

“ஐயாம் சேஃப்… எனக்கு ஒன்னுமில்ல… நீ எழுந்திர்றா…” உலுக்கினாள்.

“மேம் ப்ளீஸ் அவனை எப்படியாவது விழிப்பிலே வச்சிருக்கப் பாருங்க, இல்லைனா கோமா ஸ்டேஜீக்கு போக வாய்ப்பிருக்கு…இதோ இப்ப கொஞ்ச நேரத்தில் ஹாஸ்பிடலுக்கு போயிரலாம்… அது வரைக்கும் ப்ளீஸ் மாம்.”

தன்னிடம் கெஞ்சியவனின் குரலில் ஏதோ புரிந்தவள் போல

“ஜீவா எழுந்திரு ஜீவா… வா நாம ஊருக்கு போகணும்டா… ஃப்ளைட் மிஸ் ஆகிடக் கூடாதில்ல… எழுந்திருடா…”

“டே ஜீவா” அக்கம் பக்கம் பாராமல் வெறித்தனமாக அவன் முகத்தில் முத்தமிட்டாள்.

“எழுந்திர்றா…ஹக் மீ ப்ளீஸ் ஜீவா.”

“நான் உன்னை ஹர்ட் செய்ய மாட்டேன்… நீ என்ன சொன்னாலும் கேட்பேன்… முழிடா…” உலுக்கினாள்.

அவன் கைப் பற்றினாள், வருடினாள் என்னென்னமோ செய்தாள்.

மருத்துவமனை வந்ததும் அவளை அங்கே அமர வைத்தவர்கள் அவனை அட்மிட் செய்ய தேவையான அத்தனையும் செய்தனர். இவளிடம் வந்து நீட்டிய ஃபார்ம்களை எல்லாம் உணர்வு மரத்தவளாக கையெழுத்திட்டு கொடுத்தாள்.

முகமும், கைகளும் உடையும் என இரத்தக் களறியாக பார்வையாளர் பகுதியில் இருந்தவளை பலமுறை கேட்டும் அவள் தன்னை சுத்தம் செய்ய மறுத்து விட்டாள்.

மணிக்கணக்காக அங்கே கண்கள் வெறித்த வண்ணம் காவல் இருந்தவளை நெருங்கி அணைத்துக் கொண்டது இரு கரங்கள். நிமிர்ந்துப் பார்த்தாள், இந்திரா நின்றிருந்தார்… தனது மகன் உயிருக்கு ஊசலாடும் நேரத்திலும் கூட கண்கள் சிவக்க உறுதியாக  நின்றுக் கொண்டிருந்த அவரைப் பார்க்க திவ்யாவிற்கு ஓவென்றிருந்தது.

இவளை அணைத்திருந்த அந்த வலக்கரத்தில் ஜெபமாலை உருண்டுக் கொண்டு இருந்தது. அடுத்து அங்கே யார் வந்தார் யார் இல்லை என்று உணராமல் அவரது அணைப்பிற்கு உள்ளாக அவள் அத்தனையையும் செய்து முடித்திருந்தாள்.

அவளை குளிக்க வைத்து, உடைகளை மாற்ற வைத்து தலையை வாரிப் பின்னி தன்னுடன் இருத்திக் கொண்டார். அவரது கையின் நடுக்கத்திற்கு இப்போது இவள் ஆறுதல் கொடுக்க வேண்டி இருந்தது.

“அத்தே…” அவரை அணைத்துக் கொண்டாள். சத்தமின்றி பெண்கள் இருவரும் கண்கள் உகுத்து நிமிர அரை மணி நேரம் கடந்திருந்தது.

இருவரும் வெளியில் வர அப்போதுதான் அந்த மருத்துவமனையை அவள் கவனித்தாள். எல்லா வசதிகளும் கொண்ட மிகப்பெரிய மருத்துவமனை அது.

மலங்க மலங்க விழித்தவாறு வந்த அவளை ராஜ் எதிர்கொண்டார்.

“உனக்கொன்னும் படவில்லை தானே?” மகனைப் போல தகப்பனும் விசாரிக்க இவள் கண்கள் ததும்பி விட்டன.

இல்லை என்றவளாக தனது தலையை ஆட்டி வைத்தவள் கண்களின் நீர் மணிகள் அவள் அனுமதி இன்றி பொலபொலவென உதிர்ந்தன.

தலையில் கை வைத்தவர், “அவனுக்கு ஒன்னுமில்ல, இப்ப சரியாகிடுவான் மா” என்றார்.

சரியென தலையசைத்தவள் இந்திரா மற்றும் ராஜை அங்கேயே விட்டு விட்டு ரூபன் நின்றுக் கொண்டிருந்த இடத்தை நோக்கி விரைந்தாள்.

ரூபன் தம்பியின் பாதுகாப்பிற்காக அவனுக்கு தெரியாமல் ஏற்பாடு செய்திருந்த செக்யூரிட்டிகள் ஜீவனும் திவ்யாவும் நடை பயில ஆரம்பிக்கவும் சற்று தொலைவில் நின்று இருந்திருக்கின்றனர்.

ஏற்கெனவே தாக்குதலை எதிர்பார்த்து அது நிகழாது இருந்திருக்க, அசட்டையாக இருந்த தருணம் ஜீவன் மேலான தாக்குதல் நிகழ்ந்து இருக்கின்றது.

ஒரு குழுவினர் அவனையும் திவ்யாவையும் பத்திரப்படுத்த, மற்றொரு குழு தாக்குதல் நிகழ்த்திய நபர்களை பின் தொடர என ஜீவனை தாக்கியவர்கள் அனைவரையும் கைது செய்து கஸ்டடியில் வைத்து விசாரிப்பது குறித்து மும்முரமாக பேசிக் கொண்டிருந்தான்.

எத்தனை முன் ஏற்பாடுகள் செய்தும் கூட தம்பிக்கு அடிப்பட்டு விட்டது குறித்து மனக்கிலேசமாக இருந்தான்.

“அண்ணா”

“திவ்யா, உனக்கு ஒன்னுமில்லையே?” கேட்டவனாக திரும்பினான்.

“இல்லைணா…” சொல்லுகையிலேயே மறுபடி கண்ணீர் தனது இருப்பை உணர்த்த…

“ரிலாக்ஸ்மா… ஜீவனுக்கு ஆபத்தில்லை இப்ப அவன் பரவாயில்லைமா…”

“அண்ணா எல்லாம் என்னால் தான்…” எதையோ சொல்ல முயன்று முடியாமல் தனது உதடுகளை கடித்து வார்த்தைகளை விழுங்கினாள்.

அவளது அலைபேசியின் அழைப்பு கேட்டு உணர்வு வந்தவளாக திரும்பினாள். அந்த நீண்ட அழைப்பு ஒலித்து முடிந்தது. யாரோ வந்து ஒரு பாலிதீன் கவரின் இவளது கைப்பையில் இருந்த பொருட்களை கொண்டு வந்து தந்தனர். அதன் உள்ளே இவளது அலைபேசியும் இருந்தது.

இரத்தம் தோய்ந்த அனைத்தையும் அவர்கள் ஏற்கெனவே சுத்தம் செய்து பாலித்தீன் கவரில் போட்டு இருந்தனர்.

ரூபன் அங்கிருந்தே தாய் தந்தைக்கு கையை காட்டியவன் திவ்யாவை அழைத்துக் கொண்டு அருகில் இருந்த கஃபேடேரியாவிற்கு சென்றான்.

எளிமையாக சிற்றுண்டியும் காஃபியும் வாங்கினான்.

“அண்ணா வேணாம்.”

“கொஞ்சமாச்சும் சாப்பிடும்மா… உன் கிட்ட முக்கியமா சிலது பேசணும்.”

“ம்ம்” வலிந்து சிலவற்றை வயிற்றுக்குள் தள்ளினாள். விண் விண்ணென தெரித்துக் கொண்டிருந்த தலைவலி குறைந்தார் போல இருந்தது. கண்கள் தெளிவாகி கொஞ்சம் சிந்தனை தெளிந்தாற் போல இருக்க அலைபேசி மறுபடி அடித்தது. யாரென்று பார்க்க அவளது வீட்டில் இருந்துதான் அழைப்பு வந்திருந்தது. அதற்கு முன்பாக இன்னும் நூற்றிற்கும் மேலான அழைப்புகள், அம்மா, அப்பா, சந்திரிகா அக்கா, அவள் கணவர் இன்னும் உறவில் இருந்த யாரெல்லாமோ?

கிட்டத்தட்ட நான்கைந்து மணி நேரங்கள் யாரைக் குறித்தும் எண்ணாமல் பிரக்ஞையற்றவளாக இருந்திருக்கிறாள் என எண்ணிய போதே என்னமோ போலிருந்தது.

இப்போது மறுபடியும் அழைப்பு வரவும், அதனை எடுக்காமல் நிமிர்ந்தவள்…

“சொல்லுங்க அண்ணா”

“அடுத்த ஃப்ளைட்ல அம்மா கூட நீ நம்ம ஊருக்கு போயிடுறியா?”

“ஜீவன்?”

“அவனுக்கு கொஞ்சம் ஸ்டேபிளானதும் நம்ம ஊர் ஹாஸ்பிடலுக்கு மாத்திடலாம் மா.”

“அப்ப அவங்க சாரி அவன் இப்ப ஸ்டேபிளா இல்லைனுதானே அர்த்தம்ணா?” தண்ணீர் தம்ளரில் கண்ணீர் சொட்டு விழுந்து கலங்கியது.

‘அச்சோ இவளை எப்படி தேற்றுவது?’ எனப் புரியாமல் ரூபன் விழித்தான்.

அந்நேரம் ரூபனுக்கு அழைப்பு வரவும் எடுத்து பேசிக் கொண்டு இருந்தான்.

“அவன் இப்ப தூங்கிட்டு இருக்கான் டா… எழும்பினதும் பேச வைக்கிறேன். நீ சாப்பிட்டு தூங்குமா… நான் நைட் வரேன்.”

“அண்ணா” தன்னிடம் அலைபேசியை கேட்டவளிடம் கொடுத்தான்.

“அனி வீ ஆர் சேஃப்” எதிர்முனையில் அனிக்கா இருப்பதை உணர்ந்து அவளுக்கு தெம்பூட்டும் விதமாக பேசும் திவ்யாவை, ரூபன் மலைத்துப் போய் பார்த்துக் கொண்டு இருந்தான்.

“ஆமா அனி, அவன் ஒரு லூசு… ஒரு பேச்சு கேட்கிறதில்லை… இப்ப கொஞ்சம் சிராய்ப்பு தான். சரியாகி வரட்டும் நாம இரண்டு பேரும் அவனை நல்லா மொத்துவோம் சரியா?”

“…”

“ஹா ஹா… அவனுக்கு பெரிய ஹீரோன்னு நினைப்பு, அண்ணா சொல்லும் போது பேச்சுக் கேட்கலை இப்ப ஊசிப் போட்டுட்டு தூங்கிட்டு இருக்கான்… ஓவர் ஸ்மார்ட்.”

“….”

“யூ ஆல்சோ டேக் கேர் அனி, குட்டிப் பிள்ளைக்கு சித்தியோட கிஸ்ஸஸ் கொடுத்திடு… ம்மா… ஹா ஹா” சிரித்தவளாக இவனிடம் அழைப்பை நீட்டினாள்.

“ம்ம்… ம்ம்… இப்ப நம்புனியா? நான் சொன்னா கேட்க மாட்டியே?”

“….”

“ம்ம் ப்ரே பண்ணிக்கோ… இவனை எப்ப டிஸ்சார்ஜ் தராங்கன்னு பார்த்து அழைச்சுட்டு வரேன் ஓகேவா?”

“…”

“குட் நைட் அனிம்மா… டேக் கேர் டா”

மனைவியின் அழைப்பை துண்டித்தவன் “தேங்க்ஸ்மா…” என்றான்.

“அவளுக்கு இந்த நேரம் ஸ்ட்ரெஸ் கொடுக்கக் கூடாதில்ல அண்ணா, பாப்பாக்கு கஷ்டமாகிரும்.”

“ஆமாம்மா”

“அப்படியும் ஜீவன் முழுக்க சரியாகி நாம அவனை இங்கே இருந்து அழைச்சுட்டு போகத்தான் போறோம்.” அவள் குரலில் எஃகின் உறுதி.

“நிச்சயமா திவ்யா”

“எங்க வீட்ல என்னச் சொன்னாங்கண்ணா?”

“அது…” தடுமாறினான்.

“எனக்கு வந்த மெசேஜ்லாம் இப்பதான் வாசிச்சேன்… அம்மா அப்பாவை ப்ரெயின் வாஷ் பண்ணிருப்பாங்கண்ணா… அவங்க இப்ப பேசினதை பெரிது படுத்தாதீங்க.”

“அவங்க சொன்னதில் தப்பில்லைமா.”

“ம்ம்… ஆனால் இது என் வாழ்க்கை… நான் தானே தீர்மானிக்கணும்.”

“ம்ம்”

“இதுவே இவங்க திட்டமிட்ட படி மூணு மாசம் முன்ன எங்களுக்கு கல்யாணம் ஆகி இருந்தா இந்த நிலையில் என் புருசனை விட்டுட்டு வரச் சொல்வாங்களா?”

“…”

அவள் ஏற்காமல் தவிர்த்துக் கொண்டிருந்த அழைப்புக்களில் இப்போது தாயின் அழைப்பு வரவும் அதனை ஏற்றாள்.

“…”

“அம்மா நான் நல்லா இருக்கேன்மா”

“….”

“ஜீவன் என்னிக்கு ஊருக்கு திரும்ப வருவாங்களோ அன்னிக்குத்தான் நானும் வருவேன், அன்றைக்கு வரைக்கும் நான் இங்கேதான் இருக்கப் போறேன்.”

“….”

“எதே இத்தனை வருசம் அந்த மனுசனை தான் புருசன்னு நினைச்சுட்டு இருக்கேன். ஒரு பிரச்சனை வந்ததும் நான் பின் வாங்கணுமா?”

“……”

“நான் செய்யறது எதுவுமே தப்பில்லைனு எனக்கு நல்லா தெரியும் அம்மா… அப்பாக்கு ஒன்னுன்னா நீங்க என்ன செய்வீங்களோ நானும் அதைத்தான் செய்யப் போறேன். உங்களோட வளர்ப்பு நான்… உங்களை போலத்தான் இருப்பேன்மா…”

“…….”

“அப்பா நான் இங்கே கொஞ்ச நாள் இருந்துட்டு வரேன்பா… என்னால அங்கே உடனே எல்லாம் வர முடியாது புரிஞ்சிக்கோங்கப்பா ப்ளீஸ்.”

“….”

“அம்மா எனக்கு இப்ப இங்கே ஜீவன் உடல் நிலை என்னன்னு பார்க்கிறதுதான் முக்கியம். தினம் உங்களுக்கும் அப்பாவுக்கும் மூணு வேளை அழைச்சு பேசுறதுக்கு மட்டும் மொபைலை ஸ்விட்ச் ஆன் செய்வேன். மத்த நேரம் போன் அணைச்சு வச்சிருவேன். நம்ம குலதெய்வத்துக்கிட்ட எனக்காகவும் ஜீவனுக்காகவும் வேண்டிக்கோங்கம்மா ப்ளீஸ்.”

“….”

“மத்தவங்க சொல்லுறதை காதில் போட்டுக்காதீங்கம்மா… ப்ளீஸ்மா என்னைப் பத்தி மட்டும் யோசிங்கம்மா”

“….”

“ப்ளீஸ்மா அழாதீங்கம்மா எனக்கும் வருத்தமா இருக்கு” தேம்பித் தேம்பி அழுதாள்.

“…”

“ப்ளீஸ்மா”

“…”

“வைக்குறேன்மா”

அலைபேசியை அணைத்து அந்த பாலித்தீன் பையில் போட்டாள்.

“திவ்யா உங்கம்மா அப்பா மனம் நோக வேணாம்… நீ வீட்டுக்குப் போம்மா… நாங்க ஜீவனை அழைச்சுட்டு வந்து அவனுக்கு நல்லா ஆனதும்..”

“நான் இங்கே இருந்தா உங்களுக்கு கஷ்டமாண்ணா?”

சற்று நேரம் பேச்சற்றவனாக இருந்தவன்

“இல்லையே… எனக்கென்ன கஷ்டம்?”

“அப்படின்னா நான் இங்கே தான் இருப்பேன்.”

“ம்ம்”

எழுந்து நடந்தவன் பின்னே நடந்தாள்.

ஜீவன் எங்கே இருப்பான்? , எப்படி இருக்கின்றான்? என்றறிய அவனது ஒவ்வொரு அணுவும் துடித்தது.

தொடரும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here