என் ஜீவன் நீயே_8_ஜான்சி

0
60

அத்தியாயம் 8

ரூபனும் திவ்யாவும் கஃபேடேரியாவில் இருந்து திரும்புகையில் விசிட்டர்களுக்கான இடத்தில் ஜாக்குலின் கணவர் ராஜாவோடு வந்து நிற்பது தெரிந்தது.

ரூபனை கண்டதும் அவள் காய்ந்தாள்,

“என்ன ரூபா நான் இங்கே தான் இருக்கேன், இப்படி விஷயம்னு எனக்கு கொஞ்சம் முன்னதான் சொல்லுற? ஜீவன் இங்கே வரும் போதே திவ்யாவோட வர்றதால உடனே ரிடர்ன் ஆகிடுவேன்னு சொல்லி இருந்தான். அவன் இந்நேரம் வீட்டுக்கு போயிருப்பான்னு நினைச்சுட்டு இருக்கப்ப உன் போன் வருது.” கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.

அக்காள் கணவரை விசாரித்தவன் ஜாக்குலினை சென்று அணைத்துக் கொண்டான்.

“சாரிக்கா…. எத்தனை பாதுகாப்பு செய்தும்…. இப்படி ஆகும் என்று நினைக்கலை. அனி பயந்திடுவான்னு அவ முன்னால நான் யாருக்குமே போன் செய்யாம அவளை அத்தை வீட்டில விட்டுட்டு கொஞ்சமா அங்கேயும் விபரம் சொல்லி, அப்புறம் அம்மா அப்பாக்கு சொல்லி, புறப்பட்டு அவசரமா ஃப்ளைட் பிடிச்சு வந்துன்னு மூளையே வேலை செய்யலக்கா… சாரிக்கா.”

“சரி விடு” அவனை தேற்றியவளின் கண்களில் கண்ணீரின் தடங்கள்.

“…”

“சரியாகிரும்டா விடு” தனக்குள்ளேயே நொந்துக் கொண்டு இருக்கின்றவனை அவள் தான் தேற்ற வேண்டியதாயிற்று.

“தீபன் வர்றானா?”

“அங்கேயும் ஒருத்தர் இருக்கட்டும்னு … நான் போகவும் தான் அண்ணனை இங்கே வரச் சொன்னேன்.” எனவும் அவன் அலைபேசி இசைத்தது.

“இப்ப அவன் தான் அழைச்சுட்டு இருக்கிறான்.” என்றவன் தீபனின் அழைப்பை ஏற்க வெளியே செல்லவும் தான் ஜாக்குலின் திவ்யாவை கவனித்தாள்.

என்னமோ போல நின்று இருந்தவளை காணக் காண ஜாக்குலினின் மனம் பிசைந்தது. அவளருகே சென்று அணைத்துக் கொண்டவள்,

“திவ்யாமா… அவன் சரியாகிருவான். கவலைப் படக் கூடாது என்ன?.”

“சரிங்கண்ணி…”

“…”

“எனக்கு ஜீவா எங்கே இருக்காங்கன்னு பார்க்கணும் அண்ணி”

“வா” என்றவளாக அழைத்துச் சென்றவள் அந்த ஐசியூ அறையின் கண்ணாடிக் கதவில் நிறுத்தி பார்க்கச் சொன்னாள்.

ஜீவன் பல்வேறு உபகரணங்கள் நடுவில் தலையில் கட்டுப் போடப்பட்டு மயக்கத்தில் இருந்தான்.

“டாக்டர் என்னச் சொன்னாங்க அண்ணி?”

“சீக்கிரம் சரியாகிடுவானாம்…” ஜாக்குலின் வலிந்து புன்னகைத்தாள்.

“ம்ம்…”

“நீ ஏதாச்சும் சாப்பிட்டியா?”

“ம்ம் ஆமா” தலையசைத்தாள் திவ்யா.

“நாம நம்ம வீட்டுக்கு போகலாமா? இரவு அங்கே தூங்கி எழுந்து காலையில் வந்து பார்ப்போம்.

“நான் இங்கேயே தான் இருப்பேன் அண்ணி.”

“…”

தன்னுணர்வு இல்லாதவள் போல பேச்சை தொடர்ந்தாள்.

“ஜீவனும் நானும் எங்க கல்யாணத்துக்கு அப்புறம் டெல்லிக்கு வந்து, நம்ம வீட்டில ஒரு வாரம் டேரா போட்டு, டெல்லியில் எல்லா இடமும் சுத்தணும்னு எல்லாம் நாங்க நிறைய பேசி இருக்கோம். அதனால நான் கல்யாணத்துக்கு அப்புறமாதான் ஜீவா கூட வருவேன்” எனப் பேசிக் கொண்டிருந்தவளை அணைத்துக் கொண்ட ஜாக்குலின்

“நிச்சயமா… இரண்டு பேரும் கல்யாணத்துக்கு அப்புறமாவே வாங்க” என்றாள், அவளது கண்கள் அவ்வப்போது கலங்கிக் கொண்டே இருந்தன.

ரூபன் அவர்கள் தங்குவதற்காக அருகிலிருந்த ஹோட்டலில் அறையை ஏற்பாடு செய்து விட்டிருந்தான். அம்மாவும் பிடிவாதமாக அங்கே தங்குவதாகச் சொல்ல, ஜாக்குலின் தானும் திவ்யாவும் அங்கு நின்றுக் கொள்வதாகச் சொல்லி அம்மா அப்பாவை தனது வீட்டிற்கு கணவனோடு அனுப்பி வைத்தாள்.

மயக்கத்தில் இருந்த போதும் ஜீவனின் உடல்நிலை சீராக இருந்தது ரூபன் அங்கேயே இருந்துக் கொண்டான், காலையில் தீபன் வருவதாக ஏற்பாடு அதன் பின்னர் இவன் திரும்பச் செல்ல வேண்டும்.

தன்னோடு அறையில் இருக்கும் திவ்யா இரவு மணி இரண்டாகியும் எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்க அவளை பார்க்கப் பார்க்க ஜாக்குலினுக்கு மனம் என்னவோ போலிருந்தது.

“என்னாச்சுமா? ஜீவனை உன் முன்னால அடிச்சதை பார்த்ததில பயந்திட்டியா?”

“….”

“உங்க வீட்டில கோபமா இருப்பாங்கன்னு பயப்படறியாடா? நானும் உங்க அண்ணனும் வந்து பேசுறோம் சரியா? இப்ப இராத்திரி ஆகிருச்சு. நாளைக்கு காலையில் உங்கம்மா அப்பாக்கு நான் போன் போட்டு பேசறேன்.”

“வேண்டா அண்ணி, உங்களை ஏதாச்சும் சொல்லிட்டா…”

“சொன்னா சொல்லிட்டு போறாங்க, கேட்டுக்கிறேன். இப்ப என்ன குறைஞ்சு போயிரும்? உங்கம்மா அப்பான்னா எங்கம்மா அப்பா மாதிரிதான். திட்டு வாங்கினா நான் ஒன்னும் குறைஞ்சிட மாட்டேன்.”

“அண்ணி…” விசும்பினாள்.

“ஒன்னும் இல்லடா”

“அண்ணி இதெல்லாம் என்னாலதான்… என்னாலதான்.”

‘எதெல்லாம்?”

“ஜீவனுக்கு அடிப்பட்டது?”

“….”

“நான் தான் கொஞ்ச நாளா அவனை ரொம்ப இம்சை பண்ணிட்டேன். மத்த நேரம்னா அவன் சுதாரிச்சிருப்பான். நான் கொடுத்த குடைச்சல்ல அவன் ரொம்ப குழம்பிட்டான். இல்லைன்னா அந்த நேரம் அங்கே நின்னு அவங்க கிட்ட அடி வாங்கற ஆளா அவன்? ஸ்கூல்லயே ரன்னிங்க் ரேஸ்ல எப்பவும் முதல் இரண்டு இடத்தில வருவான் தெரியுமா?”

“அவன் ஓடாம அங்கே நின்னான்னா அதுக்கு ஏதாவது காரணம் இருந்திருக்கும்…. அவன் முழிச்சதும் அவன் கிட்ட என்ன காரணம்னு கேளு… அதை விட்டுட்டு அவனை அடிக்க ஆள் அனுப்பினதே நான்தான்னு சொல்லுறது போல என்னாலதான் என்னாலதான்னு உன்னை நீயே குழப்பிக்காதே… என்ன புரியுதா?”  

மலங்க மலங்க முழித்தவளை படுக்க வைத்தாள். பேச்சுக் கொடுத்து அவள் மனதில் இருந்தவைகளை தெரிந்துக் கொண்டாள்.

“நான் செய்தது தப்பா அண்ணி?”

“…”

“தப்புதானே?”

“நீ என்ன நினைக்கிற?”

“ஜீவனுக்கு அடிபடுற வரைக்கும் நான் செய்தது எல்லாம் சரின்னு தோணுச்சு. அப்புறமா தப்புன்னு தோணுச்சு. அதான் குழப்பமா இருக்கு.”

“இப்ப உனக்கு தேவையானது நல்ல தூக்கம், தூங்கு.”

“குழப்பமா இருக்கே”

“நான் அதிகமா பேசி உன்னை குழப்ப மாட்டேன் சரியா? …சுயமா இருக்கணும் என்று நீ உனக்காக போராடுன இல்லியா? அது சரிதான்.”

“…”

“ஆனால், அவனை பிரிஞ்சிடலாம்னு சுலபமா நினைச்சு முடிவெடுத்த பாரு, அது…”

“ம்ம்ம்” சொன்னவளின் கண்கள் சொக்கி இப்போது தூங்கிக் கொண்டு இருந்தாள்.

“இரண்டுல ஒன்னாவது முதிர்ச்சியா இருந்திருக்கலாம். இரண்டும் அவரவர் வீட்டுல செல்லப்பிள்ளைங்க… இவங்க காதல் பண்ணினா இப்படித்தான்…”

தன்னையறியாமல் முறுவல் எழ அவளும் தூங்கிப் போனாள்.

அதிகாலையில் முழிப்பு வந்த போது திவ்யா அதற்குள்ளாக எழுந்து குளித்து புறப்பட்டு நின்றாள். மனதிற்குள்ளாக ஏதோ பிரார்த்தனை செய்த வண்ணம் நின்றிருந்தாள்.

அதே நேரம் ஜாக்குலினுக்கு ரூபனின் அழைப்பு வந்தது.

“அக்கா ஜீவனுக்கு கொஞ்ச கொஞ்சமா முழிப்பு வந்திட்டு இருக்கு. போய் பார்த்தேன்…. அவன் திவ்யாவை தான் தேடுறான். இரண்டு பேரும் வாங்க.”

“என்னண்ணி?”

“ஜீவனுக்கு முழிப்பு வந்திருச்சாம்.”

“எனக்கு தோணுச்சு.” முகம் விகசிக்க நின்றிருந்தவளின் கண்களில் தான் எத்தனை ஒளி!

“அவன் உன்னை தான் தேடுறானாமாம்.”

“வாங்க அண்ணி போகலாம்.”

“சரி வா” இருவரும் உடனே புறப்பட்டு அடுத்த பதினைந்து நிமிடத்தில் மருத்துவமனையில் இருந்தனர்.

ரூபன் இவர்களை எதிர்கொண்டான்.

“வா திவ்யா” அவளை அழைத்துக் கொண்டு சென்றான்.

அண்ணனும் தமக்கையும் வெளியே நிற்க, மருத்துவர் சொன்ன பாதுகாப்பு முறைகள் அத்தனையும் பின்பற்றி இவள் தயங்கி உள்ளே சென்றாள்.

டாக்டர் அவளை ஜீவனின் படுக்கை அருகில் அமரச் சொன்னார், அவனிடம் பேச்சுக் கொடுக்கச் சொன்னார். அவள் அவனது கரத்தை பற்றினாள்.

“ஜீவா, நான் திவ்யா.”

“திவ் ஆர் யூ சேஃப்?”

“யெஸ் யெஸ் ஐயம் சேஃப் ஜீவா?”

“திவ் யூ சேஃப்”

“ஜீவா?”

“ஜீவா”

அவன் பதிலே அளிக்கவில்லை எனவும் இவள் கலங்கினாள்.

“நீங்க பத்திரமா இருக்கிறீங்கன்னு அவங்களுக்கு எப்படியாவது உணர்த்துங்க…” செவிலியர் ஊக்கினார்.

“ஜீவா, ஜீவா” ஒன்றும் புரியாமல் மலங்க மலங்க விழித்தவள்.

மருத்துவரிடமும் செவிலியரிடமும் ஏதோ அனுமதி கேட்டவளாக வெளியே வந்தாள்.

“அண்ணி அந்த ப்ளாஸ்டிக் பை இருக்கில்ல?”

“இதோ”

அந்த பையில் இருந்து ஏதோ ஒன்றை எடுத்தாள். அவளிடம் இருந்த மல்லிகை மணம் வீசும் பெர்ஃப்யூமை தனக்கு அடித்துக் கொண்டாள். விபரம் ஒன்றும் சொல்லாமல் மறுபடியும் ஐ சி யூவில் நுழைந்தாள்.

“ஜீவா, இங்க பாரு நான் கோவிலுக்கு போயிட்டு வந்தேன்.”

சாதாரணம் போல பேசியவளாக தனது கையில் இருந்த விபூதியை எடுத்து அவனது கட்டுகளுக்கு மேலாக பூசி விட்டாள். அவனது கண்கள் திறக்க சிரமப்பட்டன. சின்னதாக கண்கள் திறக்க எதையோ கிரகிக்க முயன்றான்.

“திவ் … திவ்…”

“ஜீவா…”

“கோவிலுக்கு…ஃப்ரைடே”

“ம்ம் ஆமா கோவிலுக்கு போயிட்டு வந்தேன்.”

“ம்ம்”

அடுத்து மறுபடி மயக்கத்தில் ஆழ்ந்தவன் குறித்து மருத்துவர்கள் அவன் ஓரிரு நாட்களில் முழுமையாக விழிப்பிற்கு வந்து விடுவான் எனக் கூறினர்.

ஜீவனின் பெற்றோரும் வந்து விட மயக்கத்தில் ஆழ்ந்திருப்பவனை ஒவ்வொருவராக சென்று பார்த்து வந்தனர்.

தான் சொன்னதைப் போல ஜாக்குலின் திவ்யாவின் பெற்றோருக்கு அழைத்துப் பேசுகையில் தான் பிரளயம் வெடித்தது.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here