என் ஜீவன் நீயே_9_ஜான்சி

0
41

அத்தியாயம் 9

 

கடந்த நாட்களில் திவ்யாவின் வீட்டினர் படாத பாடு பட்டு விட்டிருந்தனர்.அப்பப்பா எத்தனை எத்தனை பேச்சுக்கள்?

“அதெப்படி கல்யாணம் ஆகிறதுக்கு முன்னமே பொட்டப்பிள்ளையை ஊர் மேய விட்டிருக்கீங்க?”

“என்னதான் நிச்சயம் ஆனாலும் நமக்குன்னு வரைமுறை இருக்கில்ல?”

“அந்த பையன் நிலைமை என்னமோ ஏதோ? நோயாளியை கட்டிக்கிட்டு நம்ம பிள்ளை அவஸ்தை படறதுக்கா? எத்தனை பேர் கல்யாணத்தையே இரத்து பண்ணுறாங்க இங்கே நிச்சயம் மட்டும் தானே நடந்திருக்கு. பேசாம அத்து விட்டுருங்க.”

“ஒரே பேச்சா உடம்பு சரியில்லாத பயலுக்கெல்லாம் கட்டிக் கொடுக்க முடியாதுன்னு சொல்லிடுங்க.”

“இங்க கிடக்குது டெல்லி, போய் ஓங்கி ஒரு அறை அறைஞ்சு இழுத்துட்டு வர்றதை விட்டுட்டு, அவ அழுதான்னு விட்டு வச்சிருக்கீங்க. நீங்க எல்லாம் என்ன அம்மா அப்பா?”

“ச்ச உங்களைப் பார்த்து எங்க வீட்டிலயும் இப்படி பொண்ணுங்க பொறப்பட்டுட்டாங்கன்னா பிரச்சனை. இதுக்குத்தான் நீங்க முதலிலேயே இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சு இருக்கக் கூடாதுங்கிறது.”

“ச்சே ரொம்ப அவமானமா இருக்குப்பா”

“ஆளாளுக்கு ஒவ்வொன்னு பேசும் போது உடம்பே கூசிப் போகுது. உன்னை பேசினா என்ன? என்னை பேசினா என்ன? எல்லாம் ஒன்னுதானே? என்ன சொல்லுற?”

வெளியில் தலைக்காட்ட முடியவில்லை, அந்த அளவிற்கு பேச்சுக்கள். அவர்களுக்கு ஜீவனுக்கு அடிப்பட்ட விபரம் ரூபன் தான் தெரிவித்தான். இந்த சூழ் நிலையில் மகள் அங்கே இருக்கின்றாளே? என புரியாமல் என்னச் செய்யலாம் என சந்திரிகாவிடம் விபரம் கேட்க அவள் மூலமாக உறவினர்களுக்கெல்லாம் ஓரிரு மணித்துளிகளில் விபரம் தீயாய் பரவ ஏற்கெனவே இந்த கலப்புத் திருமணத்தில் விருப்பம் இல்லாமல் இருந்த குடும்பத்தினர் ஒவ்வொருவரும் ஒவ்வொன்றாக பேச திவ்யாவின் பெற்றோர் குழம்பி தவித்தனர்.

ரூபன் தனது பெற்றோருடன் டெல்லி போய் சேரவும் திவ்யாவின் பெற்றோரிடம் இருந்து வந்திருந்த தவறிய அழைப்புகளை கண்டவன் திரும்பி அழைக்க திவ்யாவின் அன்னை மகளை திரும்பக் கொண்டு விடுமாறு கூறினார். சந்திரிகா அதே அழைப்பை வாங்கி பேசியவள் இனி இந்த சம்பந்தம் தொடராது என்பதைப் போல பற்பல பேசி வைத்து விட்டிருந்தாள்.

ஜீவனுக்கு அடிப்பட்டு இருந்தால், திவ்யாவிற்கும் அடிப்பட்டு இருக்குமோ? என பற்பல குழப்பத்தில் அவளது அலைபேசிக்கு அழைத்தால் அவர்களுக்கு பதிலே கிடைக்கவில்லை. அது வேறு ஒரு பக்கம் அலைப்புறுதலாக இருந்தது.

சில மணி நேரங்கள் கழித்து மகள் அலைபேசியை எடுத்த போது தாயும் தகப்பனும் கெஞ்சிக் கொண்டு இருக்க மகளோ தான் ஜீவன் சரியாகி வரும் வரையிலும் திரும்ப வரவியலாது என அழுதாள்.

ஊர் உலகத்தை பார்க்கவா? மகளின் கண்ணீரை பார்க்கவா? அவள் பெற்றோர்கள் சோர்ந்து போயினர்.

மகள் டெல்லிக்கு சென்ற மறுநாள் ஜீவனின் அக்காவின் அலைபேசி அழைப்பு வந்தது.

“இதுவே உங்க வீட்டுப் பொண்ணா இருந்தா இப்படி செய்வீங்களாம்மா?” திவ்யாவின் அன்னை குமுறி விட்டார்.

“அவ இப்பவும் எங்க வீட்டுப் பொண்ணுதான் மாமி. நானும் கேட்டுப் பார்த்துட்டேன் அவளுக்கு ஜீவனை ஊருக்கு ஷிப்ட் செய்யற வரை அவளும் இங்கேயே இருக்கணும்னு எண்ணம். அவளை நாங்க எப்படி கட்டாயமா அனுப்பி வைக்க முடியும்?”

“உங்க பையனுக்கு கைகால் இல்லாம போனா வேற யார் கட்டிப்பாங்கன்னு தானே எம்பொண்ணை கட்டாயமா அங்கே நிறுத்தி வச்சிருக்கீங்க? உங்க தம்பிக்கு சேவகம் பண்ணவா நாங்க புள்ளையை பெத்து வளர்த்து வச்சிருக்கோம்?”

“அப்படி இல்லம்மா அவனுக்கு நல்லா ஆகிரும்னு சொல்லி இருக்காங்க, அவன் முழுசா நல்லா ஆனதும் தான் கல்யாணம்.”

“எம்பொண்ணுக்கு இருபத்தியாறு வயசாச்சு, இத்தன நாளா கல்யாணத்தை தள்ளிப் போட்டுட்டு இருந்தப்ப யாருக்கும் கல்யாணம் நடத்தணும்னு கண்ணு தெரியலை. யாரும் கண்டுக்கவே இல்லை. இப்ப உசிருக்கு போராடிட்டு இருக்கிறவனை பத்தி கல்யாணம்னு கதை பேசறீங்க. எங்களை பார்த்தா ஏமாந்த சோணகிரினு நினைக்கிறீங்களா?”

“அப்படி இல்லிங்க மாமி, நான் கூட கேட்டேன். அனி டெலிவரிக்கு அப்புறம் கல்யாணம் வச்சுக்கிறதா அவன் தான் சொன்னான். ஏதோ காரணமாதான் சொல்லிருப்பான்னு நானும் அதுக்கு மேல கேட்டுக்கலை. எப்படியும் இந்த வருசம் கல்யாணம் நடக்குறதா தானே ப்ளான் இருந்தது.”

“இப்ப இந்த கதையெல்லாம் எனக்கு வேண்டாம். என் பொண்ணை கொண்டு வந்து இங்க எங்க வீட்டில விட்டுருங்க உங்களுக்கு புண்ணியமா போகும்.”

“சரி மாமி, பொண்ணை பெத்தவங்க உங்க மனநிலை எப்படி இருக்கும்னு எனக்கு புரியுது. திவ்யாவை நானே அழைச்சுட்டு வந்து விடறேன் கவலைப் படாதீங்க.”

“அப்புறம் இந்த கல்யாணம் நடக்காது, நிச்சயம் முடிஞ்சது முடிஞ்சதுதான்.”

“இந்த கல்யாண விஷயத்தில் முழுக்க முழுக்க அவங்க இரண்டு பேர் மட்டும் தான் சம்பந்தப்பட்டு இருக்காங்க. இதை நடத்துறது, நிறுத்துறது குறித்து பேசுகிற உரிமை உங்களுக்கோ எனக்கோ நிச்சயமா கிடையாது மாமி. அதைக் குறித்து அவங்க இரண்டு பேருமே தீர்மானிக்கட்டும். திவ்யாவை அழைச்சுட்டு வந்து விட்டுடறேன். கவலைப் படாதீங்க… மாமாவை நான் விசாரிச்சதாகச் சொல்லுங்க.”

அன்று இரவே ஜீவன் முழுமையான விழிப்பிற்குள்ளாக வந்தான். நடந்தவைகளை போலீசார் வாக்குமூலமாக பெற்றுக் கொண்டனர். தீபன் காலையில் அங்கே வந்ததும் ரூபன் அங்கிருந்து புறப்பட்டு இருந்தான்.

டெல்லியில் இருந்து தம்பியை தங்களது இடத்தில் மருத்துவமனைக்கு மாற்ற தேவையானவைகளை அவன் மேற்கொள்ள வேண்டியது இருந்தது.

ரூபனும், ஜீவனும் இல்லாத நேரம் அவர்களது தொழிற்சாலை சம்பந்தப் பட்ட வேலைகளையும் மேற்பார்வை பார்க்க வேண்டியது இருந்தது.வேலைகள் கழுத்தை நெருக்கிப் பிடிக்க  எப்படி எல்லாமோ சமாளித்தான்.

ரூபன் இங்கே இருந்த தருணம் தாமஸ், சாரா, கிறிஸ்ஸீம் ஜீவனை சென்று பார்த்து வந்தனர். ஜீவன் அடுத்த நாள் பிறரிடம் பேசும் நிலைக்கு வந்த பின்னர் தான், ரூபன் அனிக்காவிடம் சற்று விபரம் கூறினான். முதலில் பயந்தாலும் இப்போது அவன் நலமாக இருப்பதாகச் சொல்லவும் ஆசுவாசமானாள்.

ஜீவன் அடுத்த நாள் ஐ சி யூவில் இருந்து மாறி சாதாரண வார்டுக்கு வந்ததும் மருத்துவரிடம் அனுமதி பெற்று தான் நலமாக இருப்பதாக அவன் சொல்லும் சின்னதான காணொளி ஒன்றை திவ்யா எடுத்து அனுப்பினாள்.

கண்கள் மல்க அதை பார்த்துக் கொண்டு இருந்தவளிடம், “அவன் நல்லா இருக்கான் மா” என்றான் ரூபன்.

“ம்ம்” என்றவளால் ஜீவனை அந்த நிலையில் பார்க்கவும் ஜீரணிக்க முடியவில்லை.

“நீ இப்ப கவலைப்படக் கூடாதுன்னு தான் உன் கிட்ட விபரம் சொல்லலை புரியுதா?”

கணவனிடம் புரிகின்றதென தலையாட்டினாள்.

“என்னால போய் பார்க்க முடியலையே?”

“நாளைக்கே அவனை இங்கே அட்மிட் செய்யறதா இருக்கோம்மா.”

“ராஜேஷ் அண்ணா ஹாஸ்பிடல்லயா?”

“ம்ம்… எப்படி தெரியும்?”

“நீங்க பேசிக்கிட்டு இருந்தீங்கல்ல?”

“ம்ம்”

“அப்படின்னா இங்கே வந்ததும் ஜீவனை பார்க்க என்னை அழைச்சுப் போவீங்க தானே?”

“ஆமாம்டா” ரூபன் புன்னகைத்தான்.

டெல்லி

கடந்த மூன்று நாட்கள் எப்படி கழிந்ததென தெரியாமல் கழிந்திருந்தன.ஐசியூவில் இருந்து மாறி தனி அறைக்கு வந்ததில் இருந்து திவ்யா ஜீவன் அருகிலேயே அமர்ந்திருந்தாள். அன்றிரவு அவர்கள் டெல்லியில் இருந்து புறப்படுகின்றனர்.

திவ்யா அவள் வீட்டிற்குச் சென்ற பின்னர் மறுபடி அவனை சந்திக்க வர முடியுமோ? என்னமோ? என அவள் மனம் சஞ்சலமாக இருந்தது.

ஜீவனின் பார்வை அவளையே வருடிக் கொண்டு இருந்தது. கடந்த நாட்களில் நிகழ்ந்தவைகளில் அலையில் அகப்பட்ட துரும்பாக மாறி இருந்த அவளது தோற்றம் முன் போல இல்லை என அப்பட்டமாக புரிந்தது.

திவ்யா மற்றவர்கள் இல்லாத தனியாக இருந்த ஒரு தருணத்தில் அவன் கரத்தை பற்றினாள்.

“இப்ப சூழ்நிலை சரியில்லை ஜீவா, ஊருக்கு போனதும் ஒருவேளை என்னால உன்னை பார்க்க வர முடியாம போனாலும், நீ எங்க வீட்டுக்கு வரணும். என்னை பெண் கேட்டு கட்டிக்கணும். நான் உனக்காக காத்துக்கிட்டே இருப்பேன்” என்றாள்.

பதிலே சொல்லாமல் பார்த்திருந்தவன் அவள் கரத்தை வருடினான்.

“நீ எனக்காக ஒரு வருசம் ஒரே ஒரு வருசம் காத்திரு?”

“…” புரியாமல் பார்த்திருந்தவளிடம்,

“நீ அதுக்கு முன்ன மூவ் ஆன் ஆகினாலும் கூட நான் வருத்தப்பட மாட்டேன்.”

“ஜீவா…” சொன்னது நீதானா என்பதைப் போல அதிர்ந்து பார்த்திருந்தவளை கண்டுக் கொள்ளாதது போல தொடர்ந்தான்.

“ஒரு வருசத்துக்குள்ள நான் வருவேன்னு நினைக்கிறேன், வரலைனா எனக்காக காத்திருக்காதே.”

அவளது கண்ணீர் வடிந்துக் கொண்டிருக்கும் கண்களை உணர்வற்றவன் போல பார்த்திருந்தான்.

“எனக்கொன்னு ஆகி இருந்தாலும் நீ இப்படித்தான் செய்திருப்பியா? ஒரு வருசமாம்…”

“என் விஷயம் வேற திவ்…”

“என்னை பெத்தவங்க, சொந்தக்காரங்க இவங்க எல்லாரும் என் மனசோட விளையாடுனது போதாதுன்னு நீயும் விளையாடுற இல்ல?” புறங்கையால் தனது கண்ணீரை துடைத்தாள்.

“நாம ஆரம்பத்தில கல்யாணத்துக்கு சம்மதம் வாங்குறப்ப எல்லார் விருப்பத்தோட கல்யாணம் செய்துக்கொள்ளணும் என்று பேசிக்கிட்டோமில்ல…”

அவன் கேட்கவும் திவ்யாவிற்கு தாங்கள் இருவரும் பாடாய் பட்டு வாங்கின சம்மதம் நினைவிற்கு வந்தது.

‘அத்தனை சிரமப்பட்டு சம்மதம் கிடைத்ததும் நிச்சயம் வைத்ததற்கு பதிலாக அப்போதே திருமணம் செய்திருக்கலாம்’ என அவளுக்கு பெருமூச்செழுந்தது.

‘பட்டு அனுபவித்த பின்னர்தானே புரிகின்றது’ தன்னைக் கேளாமல் சுரந்த கண்ணீரை துடைத்து பார்க்க ஜீவன் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்தான்.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here