என்றும் நீதானே!?_10_ஜான்சி

0
426

அத்தியாயம் 10

செல்வன் வீட்டை விட்டுச் சென்றதில் இருந்தே காயத்ரிக்கு மனக்குழப்பம் தான். தன் கைக்குள் வைத்து வளர்த்தவனுக்கு இத்தனை தைரியமா? மனம் கொதித்தது.

மகன் எங்குச் சென்றிருப்பான்? என முதல் இரு நாட்கள் தேடி ஓய்ந்த பின்னர் தான் தான் தேட வேண்டியது அவன் மனைவி இருக்கும் இடம் என அவருக்குப் புரிந்தது. முதலில் மகளின் நலம் அறிய வேண்டி இருந்ததால் மகளது வீட்டிற்குச் சென்றார். நல்ல வசதியான குடும்பமாயிற்றே அவ்வீடு பளபளத்தது.

திருமணத்தன்று ஒரு மரியாதைக்கு கூட அவரை அழைக்காதிருக்க அவரும் மகளை கொண்டு விடச் செல்லவில்லை. ‘தன்னந்தனியே சிரமப்பட்டு வளர்த்ததற்கு தனக்கு பிள்ளைகள் தரும் பரிசா இது?’ என அவர் உள்ளம் கசந்துப் போனது.

மகள் வருவதாகச் சொல்லி வேலைக்காரம்மாள் இவரை முன்னறையில் அமர்வித்து காஃபி கொடுத்துச் செல்ல உள்ளம் தீயாய் எரிந்தது.

செல்வன் 12 வயதாக இருக்கும் போது அவனின் அப்பா தவறி இருக்க, 6 வயது மகள் கையில் வைத்துக் கொண்டு இளவயதில் அவர் அடைந்திராத துன்பம் என்று ஒன்றுமில்லை.

பெரியவர்கள் என்று துணைக்கு யாருமில்லாதிருக்க, கணவனை இழந்தவள், வறுமையில் வாடுகின்றவள் மற்றும் துணையற்றவள் ஊராருக்கு வேரில் பழுத்த பலாவாகத் தெரிந்ததில் வியப்பெதுவுமில்லை. தினம் தோறும் போராட்டமே… அதிலும் மகனையும் மகளையும் படிக்க வைக்க அவர் செய்தவைகள் எல்லாம் கணக்கில்லாதவைகள்.

மகன் விஷயத்தில் தான் செய்ததில் தவறு எதுவும் இருந்ததாக அவருக்குத் தெரியவில்லை. இத்தனையையும் யோசித்துக் கொண்டு இருந்த போது அந்த வரவேற்பரையில் தாயின் எதிரில் வந்து கிருபாசினி அமர்ந்தாள். அவளது முகத்தில் புதுமணப்பெண்ணுக்கே உரியதான பொலிவும் அழகும் மிகுந்திருந்தன. கடந்த நாட்களில் அவளுக்குரியவன் அவளை மனைவியாக ஏற்றுக் கொண்டதான நிமிர்வு அவளது தோற்றத்தில் இருந்தது.

மகளின் தோற்றத்தில் காயத்ரியின் மனம் அடிவாங்கியது… ‘அதெப்படி எனக்காக இவள் கவலையே படவில்லை? அப்படியென்றால், நான்? என்னைக் குறித்தெல்லாம் மகளுக்கு கவலையே இல்லையா?’ மகள் கவலையற்ற வாழ்வு வாழ வேண்டும் என முன்பு பல்லாயிரம் முறைகள் கடவுளிடம் மன்றாடிக் கேட்டிருந்தவருக்கு தன் வேண்டுதல் நிறைவேறப்பெற்ற உணர்வு இல்லை… ஏமாற்றமே கவிந்தது.

“அம்மா வாங்கம்மா சாப்டலாம்”

பெண் கொடுத்த சம்பந்தியை வீட்டின் பெரியவர்கள் வந்து மரியாதைக்கேனும் அழைக்கவில்லை. அப்படி இருக்க இவள் வீட்டில் நான் கை நனைப்பதா? எனும் வீம்பில், “நான் சாப்பிட்டுட்டு வந்திட்டேன்” எனும் பொய் வெளிவந்தது.

மகளிடம் “மறுவீட்டுக்கு எப்ப வரீங்க?” என்றார் விரைப்பாக,

“அம்மா அவங்க வீட்டில எல்லாரும் இன்னும் கோபமாதான் இருக்காங்க, அவங்க கிட்ட நான் போய் எப்படி கேட்கிறது? சந்தர்ப்பம் கிடைச்சதும் சீக்கிரம் கேட்டுச் சொல்றேன்மா” என்றவளை இவர் முறைத்துக் கொண்டிருந்த நேரம்…

“கிருபா… வெளியே போகணும்… நேரமாகுது” சந்தோஷின் குரல் கேட்டது. கணவனின் குரல் கேட்டதும் இவள் பதறினாள்.

“அம்மா நான் உங்களுக்கு போன் செய்யறேன்” என்றவாறு படபடத்து எழுந்து உள்ளேச் செல்ல அதற்குள்ளாக காயத்ரி எழுந்து மடமடவென்று வெளியே வந்திருந்தார். மகளின் செய்கையில் மனம் எரிந்து சாம்பலாகி இருக்க அதன் பின்னர் அவர் தேடிச் சென்று நின்றது கிருத்திகா பணிபுரியும் பேக்டரியில் தான். இங்க அடிச்சா அங்க வலிக்கும்… என மனம் மகனை பழி வாங்க திட்டம் போட்டது. மனம் பொருமியது நன்றிக் கெட்டப் பயலுவளா?

***

அன்றுக் காலையிலேயே வழக்கம் போல கிருத்திகா எழுந்து டீ போட செல்வன் காலை உணவு வாங்கி வந்திருந்தான். தூரமாக படுத்த போதும் இன்று காலையும் கணவனின் கைகளுக்குள் தன் கால்கள் இருந்தது குறித்து சிந்தனை வயப்பட்டு இருந்தாள். “அதெப்படி?’ என்ன யோசித்தும் அதன் காரணம் தெரியவில்லை.

செல்வன் வாங்கி வந்த அந்த உணவுப் பொட்டலத்தை திறந்துப் பார்த்தபோது அதில் ஆப்பம் இருந்ததைக் கண்டு அவள் நாவூறியது.

‘அவன் வந்ததிலிருந்து தனக்கு நாக்குக்கு ருசியாக வகை வகையாக பிடித்ததெல்லாம் கிடைக்கின்றதே?’ என நினைக்கையிலேயே இன்று மூன்றாவது நாள்… அவன் திரும்பச் செல்லும் நாளாயிற்றே? … தன்னிடம் விடைப்பெற்றுச் செல்வான் என எதிர்பார்த்திருக்க, உன் எண்ணங்களுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல செல்வன் குளித்து முடித்து டிசர்ட்டும் லுங்கியுமாக வீட்டில் இலகுவாக அமர்ந்திருந்தான். இவள் எண்ணியதெல்லாம் அவனுக்கெங்கே தெரியும்?

‘செல்வன் போய் விடுவான், போய் விடுவான்’ என இதையே நினைத்துக் கொண்டு இருந்தால் வேலைக்காகாது என எண்ணியவளாக வழக்கம் போல வேலைக்கு புறப்பட்டுச் சென்றாள். அவளுக்கு மதியம் வரையிலும் வேலை வழக்கம் போலவே சென்றது. இன்றைய தினமும் லாவண்யா வராதிருக்க இரவு அவளுக்கு அழைத்து பேச வேண்டும் என எண்ணிக் கொண்டாள்.

“கிருத்தி உன்னைத் தேடி யாரோ வந்திருக்காங்க பாரு” என செக்யூரிட்டி சொல்லிச் சொல்ல, இதுவரை அங்கு தன்னை பாக்டரியில் யாரும் தேடி வந்ததில்லையே? எனும் எண்ணத்தில் அவள் வெளியே வந்தாள்.

தன்னைத் தேடி வந்தது காயத்ரி என்றதும் ஒவ்வாமை உணர்வுடன் சற்று தள்ளி நின்றவண்ணம் பார்த்தாள். ஆம், சிலரது எண்ணங்கள், பேச்சுக்கள் செயல்பாடுகள் ஒவ்வாமை உணர்வை ஏற்படுத்துவதுண்டே?

‘இங்கு அவர் எதற்காக வந்தார்? என்னச் சொல்லப் போகிறார்?’ என ஒன்றும் புரியாமல் நின்றவளிடம் காயத்ரி…

“என்ன எங்க வச்சிருக்க அவனை? உனக்கு சாதகமா எல்லாத்தையும் மாத்திட்டியே…நான் அவ்வளவுச் சொல்லியும் உனக்கு திமிர் கூடிப் போச்சில்ல?”

“நான் என்ன செஞ்சேன்… நான் ஒன்னும் செய்யலை”

“நீ தகவல் கொடுக்காமலா அவனுக்கு தெரிஞ்சிருக்கப் போகுது?”

“என் கிட்ட ஏது அவங்க நம்பர், நான் அவங்க கிட்ட பேசலை… ஒன்னும் சொல்லலை.”

“கைகாரிடி நீ, ஆள் மயக்கி அதனாலத்தான் சும்மா வந்தவன் கையால தாலியை வாங்கிட்டு இரண்டு வருசம் நல்லா வீட்டில இருந்து அனுபவிச்ச நீ…”

“அசிங்கமா பேசாதீங்க” ஆட்கள் கூடிவிட, அவளோடு பணிபுரிகின்றவர்கள் என்ன நடக்கின்றது எனக் காண முற்பட அவமான உணர்வில் அவளுக்கு குரலே எழும்பவில்லை.பதில் பேசாமல் திரும்பிச் செல்லவும் முற்படவில்லை.

“என்னடி என் மகனை வளைச்சுப் பிடிச்சிட்டோம்னு திமிரா?” எனும் அடுத்த வாக்கியத்திலேயே… ‘இதென்ன அசிங்கமான பேச்சு?’ என திகைத்து அவளது கண்கள் நிலைக்குத்தி நிற்க காயத்ரி தன் மன வெறுப்புக்கள் அத்தனையையும் அழுக்காய் அவள் மேல் வாரி இறைத்தார். அவளை தரமற்ற பற்பல வார்த்தைகளைச் சொல்லி திட்டியதோடு நில்லாது, கோபத்தில் முடியை பிடித்திழுத்து முகமெங்கும் அறைந்து வைக்க அத்தனையையும் வாங்கிக் கொண்டு சிலையாய் சமைந்தாள் அவள்.

இப்போது அவர்களைச் சுற்றி இன்னும் அதிகமாக கூட்டம் சேர்ந்திருந்தது, இவளது பாக்டரியிலிருந்து மேனேஜர் வெளியே வந்திருக்க, அவர் சொன்னபடி சிலர் வந்து காயத்ரியிடமிருந்து அவளை பிரித்து விட்டார்கள்.

 ‘லீவு எடுத்துக்க, நாளைக்கு வா” எனச் சொல்லி யாரோ அவளது கைப்பையை அவளது கையில் திணித்தார்கள்.

 “போயிடுவல்ல… ரிக்ஷா பிடிச்சுத் தரவா?” அக்கரிசனையான குரல் யாருடையதோ எனினும் அவள் மேல் அது அமிலம் ஊற்றினாற் போலிருந்தது. கேள்விக்குப் பதிலாக “வேண்டாம்” என்று தலையசைத்தவள் தனது கால் போன போக்கில் நடந்தாள்.

‘மரியாதையான வாழ்க்கை தானே வாழ ஆசைப்பட்டேன், என் பொழைப்பில மண்ணள்ளிப் போட்டுட்டியே, என்ன பேச்சு? எத்தனை அசிங்கமான பேச்சு? எல்லாரும் என்னைப் பற்றி என்ன நினைச்சாங்களோ? இனி இந்த இடத்துக்கு நான் எப்படி வருவேன்? எப்படி வேலை பார்ப்பேன்?’ அவள் மனம் கதறியது.

வழியில் ஒரு மருந்தகம் காணப்பட கிருத்திகாவிற்கு தீர்வு கிடைத்தாற் போலிருந்தது, தீர்வை வாங்கிக் கொண்டாள். அது பையில் அடங்கி விட்டிருந்தது. ரோட்டில் அவளருகில் வழக்கமாக அவள் பயணிக்கும் பேருந்து ஒன்று அவளை கடந்துச் சென்றது.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here