என்றும் நீதானே!?_11_ஜான்சி

0
369

அத்தியாயம் 11

கிருத்திகா எப்படியோ ஒருவாறு தன் வீட்டிற்கு வந்துச் சேர்ந்தாள்.பூட்டியிருந்த வீட்டை தன்னிடமிருந்த திறப்புக் கொண்டு திறந்தாள். சில நாட்களாக அறிந்திராத வெறுமையை அந்த அறை உணர்ந்தது. செல்வன் அவளிடம் சொல்லாமலேயே கூட சென்று விட்டான் போலும்? அவனுக்கென்ன? சில நாட்கள் வந்து தங்கி தனக்கு அவப்பெயர் வாங்கிக் கொடுத்து விட்டுச் சென்று விட்டான்…அனுபவிப்பது என்னமோ அவள் தானே?

இத்தனை பிரச்சனைகளையும், இப்படிப்பட்ட அவமானங்களையும் என்னால் எதிர்கொள்ள முடியாதென்பதால் தானே நான் விலகி வந்தேன். அப்படியும் என்னை பிரச்சனைகள் துரத்தினால் நான் எங்கு போவேன்? அப்பப்பா பெண்ணா அவள் பேய், அவளிடம் பேசி வெல்ல முடியுமா? வார்த்தைகளா அவைகள்? தீக்கங்குகள். தன்னை தரமற்ற, ஒழுக்கமற்றப் பெண்ணாக பிறர் நம்பும் விதமாக எப்படி பேசினாள்? இன்னமும் காதுகளுக்குள் அந்த பேச்சுக்கள் ஒலிப்பதாகத் தோன்றவும் காதுகளை இறுக்கப் பொத்திக் கொண்டாள்.

இனி  அந்த இடத்தில் போனாலும் மற்றவர்களை நான் எப்படி நிமிர்ந்து பார்ப்பேன்? இத்தனை பேச்சுக்களுக்குப் பின்னால் என்னால் அங்கு வேலைக்குப் போக முடியாதே? வேலைக்கு போக முடியாதெனின் வீட்டின் வாடகை இனி எப்படி கட்டுவது?’ மனம் மருட்டியது.

புதிதாக வேறிடம் வேலைக்குச் சென்றாலும் எனக்கு இந்த அவப்பெயர் தொடர்ந்து வருமோ? யார் கவனத்தையும் ஈர்க்காமல் அடக்க ஒடுக்கமாகத்தானே சென்று வந்தேன்… இனி அப்படிச் செல்லமுடியாதோ?

நட்ட நடு ரோட்டில் நின்று அவள் சொன்னதை நம்பி யாரும் தன்னுடன் தவறாக நடந்துக் கொண்டால் என்னச் செய்வது? என மனம் தன்னிடம் எழுப்பிய எந்த ஒரு கேள்விக்கும் அவளிடம் விடையில்லை.

தன்னம்பிக்கை, தைரியம், உறுதி, இவை எல்லாமும் கூட எளியவர்களைப் பொறுத்தவரைக்கும் பெரிய விஷயம் தான். அரவணைக்கப்பட்டு வளருகின்றவர்களிடம் இருக்கும் தன்னம்பிக்கை தனித்து வளரும் அல்லது தனித்து விடப்பட்ட பலரிடத்தில் இருப்பதில்லை.

அதாவது அவர்கள் தம்மை அப்படி துணிச்சலாகக் காட்டிக் கொண்டாலும் கூட மனதளவில் பலவீனமாகத்தான் இருப்பர். சிறுவயதில் இருந்து தாய் தந்தை அரவணைப்பு கிட்டாமல் வளர்ந்த கிருத்திகாவின் நிலையும் அதுவே.

திருமணமான போதும், அந்த வீட்டினின்று துரத்தி விடப்பட்ட போதும் அவள் அவ்வளவாக மனம் கலங்கினாளில்லை. ஆரம்பம் முதலாகவே ‘இந்த நாய்க்கு முழுத் தேங்காய் ஒட்டுமா?’ எனும் மனப்பான்மையில் இருந்ததோ அல்லது கணவன் இயைந்து உரிமையாக பேசி எந்த ஆசையையும் உணர்வையும் ஏற்படுத்தாதோ அல்லது இரண்டு வருடங்களாக சுயமாய் வேலைக்குச் சென்று தன்னம்பிக்கையோடு தனது எண்சாண் உடம்பை வளர்த்து விடலாம் என்பதோ காரணமாக இருந்திருக்கக் கூடும்.

அதிலும் தனது இரகசியம் வெளியே தெரிந்து விடக் கூடாது என்பதற்காக காயத்ரி காதோடு காது வைத்தாற் போல இவளை யார் முன்பும் அவமானப் படுத்தி வெளியே துரத்தாமல் இருந்ததும் காரணமாக இருக்கக் கூடும். இப்போது நூற்றுக்கணக்கான பேர்கள் காண அவமானப் பட்ட பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்த அவளது அத்தனை தன்னம்பிக்கையும் இழந்தாற் போல் ஆனது.

சுவற்றை நோக்கி வெறித்தவளாக அமர்ந்திருந்தவள் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக கொட்டிக் கொண்டு இருந்தன. அவளது சேலை முந்தானை அவளது கண்ணீரை உள்வாங்கிக் கொள்ளத் திணறியது. அவள் மனதிற்குள்ளோ ஏற்கனவே எடுக்கப்பட்ட அந்த தீர்மானம் உறுதிப் பெற்றது.

தனது கைப்பையை பிரித்தாள் அந்த விலைக்குறைந்த வீரியமான எலி மருந்தை எடுத்து வெளியே வைத்தாள். குளிர்பான பாட்டிலையும் எடுத்து வெளியே வைத்தாள். இரண்டையும் கலந்து உட்கொள்ள எண்ணி வாங்கி இருந்தாள். தனது பிரச்சனைகளில் இருந்து தப்ப அவள் யோசித்து எடுத்த அதிபுத்திசாலியான முடிவுதான் அது.

அந்நேரம் அந்தக் கதவு வெளியில் இருந்து திறக்கப்பட்ட சப்தம் கேட்டதும். “அச்சோ யாரது இந்நேரம்?” பதறியவள் உள்ளே மற்ற தாள்களைப் பூட்டாத தனது மடமையை எண்ணி வருந்தினாள்.

கதவை திறந்து புயலென உள்ளே வந்தவன் முதலில் அவளைப் பார்த்து மனம் வருந்தி அருகில் செல்ல, அடுத்து அவளருகாமையில் இருந்தவைகளைப் பார்த்ததும் ரௌத்திரமானான்.

அவசரமாக கதவை அடைத்து விட்டு அருகில் வந்தவன், “இதை இரண்டு கிளாஸ்ல கலக்கிறியா?” என அவளிடம் கேட்டான். .

ஏற்கெனவே தம் கைகள் சில்லிட விதிர்விதிர்த்து அமர்ந்திருந்தவளுக்கு அவனது திடீர் வருகையும், பேச்சும் இன்னமும் நடுக்கமூட்டியது.

“நாம இப்பல்லாம் அப்படித்தானே சேர்ந்து குடிக்கிறது வழக்கம்… 2 கிளாஸ் கொண்டு வரவா?” டீ குடிப்பதைக் குறித்துச் சொல்கிறான் எனப் புரிந்தாலும் கூட குளிர்காய்ச்சல் வந்தவள் போல நடுங்கினாள்.

அவள் முன் இருந்தவைகளை தன் ஆத்திரம் தீர குளியலறை நோக்கி எறிய அந்த குளிர்பானம் புஸ்ஸென உடைந்து வழிந்து சிதறியது.

எதிரில் அமர்ந்திருந்தவளை எழுப்பி, இழுத்து அணைத்துக் கொண்டான். அவனது உடலின் நடுக்கம் இவளுக்குப் புரிந்தது? ‘எனக்காகவா?’ ஆச்சரியப்பட்டாள்.

“கொஞ்சம் கூட நிதானமே கிடையாதா? எதுக்கு பொம்பளைங்க எல்லாரும் இப்படி இருக்கிறீங்க? சிஸ்டர் போன் பண்ணி பிரச்சனைன்னதும் அடிச்சுப் பிடிச்சு வந்து பார்த்தா உன்னைக் காணோம். வீட்டுக்கு வந்துப் பார்த்தா நீ இப்படி? எதுக்கு?” அலறியே பேசினான்.

யாரேனும் லாவண்யாவிற்கு தகவல் தெரிவித்து இருக்க வேண்டும், அவள் மூலம் இவனுக்கு தெரிந்திருக்கும் எனப் புரிந்துக் கொண்டாள். தனக்காக அங்கே வந்தானா? அவளது மனப்புண்கள் ஆறிவிடும் சாத்தியங்கள் இருந்தன. அவனது பிடியில் இருந்து நழுவ முயன்றவளை இழுத்துப் பிடித்து மறுபடி அணைத்தான். ஏதோ ஒரு வேகத்தில் இவளோ,

“எல்லாம் உங்களாலத்தான்… உங்களை … நான்…” அவன் அம்மா சொன்னதை சொல்ல இயலாதவள்… “மொதப் பொண்டாட்டி இருக்கப்ப இரண்டாம் கல்யாணம் செய்ய நினைச்சவர் வந்து எனக்கு பாடம் எடுக்க வேணாம்?” பொரிந்து விட்டிருந்தாள்.

“யாரு நானா? நான் இரண்டாவதா கல்யாணம் செய்யப் போறேன்னு சொன்னேனாடி? யாரோ சொன்னாங்கன்னு எனக்கென்னன்னு என்னை தாரை வார்த்துட்டு வெளிய வந்தது நீயா நானா? என்கிட்ட ஒரு வார்த்தையாவது சொன்னியா? இல்ல கேட்டியா நீ?”

“எப்படி கேக்குறது? இல்ல எப்படி கேக்குறது நான்? புறாவிலயா தூது விடவா முடியும்?”

“நீ எந்த காலத்தில இருக்க? என் கம்பெனி பேர் தெரியும்ல அங்க வந்து கேட்டா கூட யாரும் சொல்லிருப்பாங்க. வீட்டில என் கம்பெனி தாள்கள் எல்லாம் இருந்துச்சே”

“நானே படிக்காதவ… எனக்கு என்னய்யா உங்க இங்கிலிஸ் தெரியும்? உங்க அம்மாவத்தாண்டி உங்க தாளெல்லாம் என் பார்வைக்கு கிடைக்கும்னு நினைக்கிறீங்களா?”

அவள் கேட்டக் கேள்வியில் கூனிக் குறுகி அமர்ந்து விட்டான். ‘தான் பேசியது அதிகமோ?’ என எண்ணியவள் அருகில் அமர்ந்தாள்.

“நான் உன் கிட்ட எதையுமே பேசத் தயங்குனது இதுக்காகத்தான் கிருத்தி. எல்லா தப்பும் என் கிட்ட வச்சுட்டு உன் கிட்ட பேச எனக்கு பயம். என் அம்மாவும் தங்கையும் என்னையே ஏமாத்துனப்ப உன்னை ஏமாத்த மாட்டாங்களா என்ன?”

“…”

“அதுவரைக்கும் எனக்கு கல்யாண ஆசைலாம் இல்ல கிருத்தி. உன்னை அன்னிக்கு அந்த நிலையில் பார்த்துட்டு என்னால திரும்ப வர முடியலை. உனக்கொரு பாதுகாப்பு கொடுக்கணும்னு தோணுச்சு, அது ஏன்னு எனக்குப் புரியலை. ஆனால், நான் உன் வாழ்க்கையில் என்னச் செஞ்சு வச்சிருக்கேன்? னு நினைக்கிறப்ப எல்லாம் எனக்கு குற்ற உணர்ச்சியா இருக்கு…இங்க வந்து எனக்காக ஏற்பாடாகி இருந்த இன்னொரு திருமண அலங்காரம் எல்லாம் பார்த்ததும் மனம் பதறிடுச்சு.”

“…”

“அப்ப கூட உன்னைக் காணோமே? உனக்கு என்னாச்சோ? ஏதாச்சோன்னு மனசெல்லாம் பயம். ஆனால், கூடப்பொறந்தவ வாழ்க்கையும் பார்க்கணுமே?… உன்னை எப்படி தேடப் போறேனோன்னு திக்கு திக்குன்னு அடிச்சுட்டு இருந்த மனசை அடக்கிக்கிட்டு தங்கச்சி வாழ்க்கைக்காக கெஞ்சி கூத்தாடி ஷப்பா அன்னிக்கு என்ன போராட்டம்…”

கணவன் வாயால் நிகழ்ந்தவை கேட்க கேட்க அவன் இன்னும் தன் கணவனாகவே இருக்கிறான் எனும் தகவலில் அவள் உள்ளம் மலர்ந்த விதம் சொல்ல முடியாதது.

“தப்பா பேசிட்டேன் மன்னிச்சுருங்க” தாழ்ந்து போனாள்.

“உனக்கு முதுகெலும்பே கிடையாதா? நீ ஏன் இப்படி இருக்க?… இப்ப கூட உனக்கு என் மேல கோபம் வரணும் ஆனா மன்னிப்பு கேக்குற நீ?”

“நீங்க வருத்தமா பேசினதை பார்க்க முடியலையே? எப்படி நான் கோபப்படுறது?”

கணவனுக்கு இரண்டாம் திருமணம் நிகழவில்லை, இனியும் நிகழாது எனும் ஆசுவாசத்தில் எழுந்த திடீர் கரிசனை அது என்பதை அவள் சொல்லவில்லை. அந்த இரண்டாம் திருமணம் எனும் வார்த்தையே அவளுக்கு கசப்பாக இருந்தது.

“கிறுக்கி, கிறுக்கி…”

அருகில் இருந்தவளை தன் கைகளுக்குள் இருத்திக் கொண்டான். தன்னைப் பெற்றவள் காயப்படுத்திய அவளது கன்னங்களை கைகளால் வருடிவிட்டான்.

“நான் செய்தது எல்லாத்துக்கும் என்னை மன்னிச்சுக்கோடி” கைகள் இணைந்து அவள் பக்கம் நீண்டிருக்க அதை கீழே தட்டி விட்டாளவள்.

“நீ ரொம்ப பழங்காலமோ?”

அவன் மார்பில் சாய்ந்துக் கொண்டவள், “அப்படின்னா?”

“நாதா…ன்னு அழைக்கிற பெண்கள் பழங்காலத்து படத்தில காட்டுவாங்களே, புருசன் என்ன செஞ்சாலும் அது சரின்னு தலையாட்டுவாங்க அப்படி?”

முறுவலித்தாள் “அதெல்லாமில்ல, உனக்கு யாருமே இல்லைனு உலகமே சொல்லுறப்ப ஒரே ஒருத்தர் கிடைச்சா அவங்கள இழந்துறக் கூடாதுன்னு மனம் பதைபதைக்குமே நான் அந்த மாதிரி. நமக்கு வலிச்ச மாதிரி தானே மத்தவங்களுக்கும் வலிக்கும்னு புரியும்ல நான் அந்த மாதிரி.” மறுபடி அவன் இறுகிய அணைப்பில் மூச்சுமுட்ட அசையாது இருந்தாள். முறுவலித்த போது கண்ணீர் காய்ந்த இரு முகங்களும் வலித்தன.

தன் தாய் அவள் மனதில் ஏற்படுத்திய வடுவை ஆற்ற, செல்வன் தன்னால் இயன்ற ஆறுதலை சொல்லிக் கொண்டு இருந்தான்.

“தம்பி, தம்பி வேலை முடிஞ்சிருச்சு.சாவி வாங்கிக்கோங்க” வாசலில் வீட்டு ஓனரம்மாள் சப்தம் கேட்க மனைவியிடமிருந்து விலகி முகம் கழுவி வெளியே வந்தான்.

அடுத்தடுத்து வேலைகள் மிக வேகமாக நடந்தன. கிருத்திகா வாடகைக்கு எடுத்திருந்த வீட்டின் அடுத்த வீடு பெரியதாக இருந்தது. எனவே, செல்வன் அதில் வாடகைக்கு மாறிக் கொள்வதாக அவரிடம் பேசி முன்பணம் கொடுத்திருந்தான். அதனை சுத்தப்படுத்தி, வர்ணம் பூசி, தேவையான சில மாற்றங்கள் செய்து தருவதற்கு வீட்டு உரிமையாளருக்கு இரண்டு நாட்களாகி இருந்தன. 

பொருட்களை இந்த வீட்டினின்று அந்த வீட்டிற்கு மாற்ற உதவிக்கு ஆட்கள் வைத்துக் கொண்டான். கிருத்திகா வீட்டில் இருந்த வண்ணம் நடக்கின்றவைகளை வேடிக்கைப் பார்த்தாள். கணவனது ஆறுதலான பேச்சில் மனம் கொஞ்சம் ஆறுதல் பெற்றிருந்தது.

கடந்த நாட்களில் லாவண்யா வேலைக்கு வந்திருந்தால் செல்வன் இரண்டாவது திருமணத்தை மறுத்து வந்ததாக தன்னிடம் சொல்லி இருந்திருப்பாள். அது போல, லாவண்யா விபரத்தை தன்னிடம் சொல்லி இருப்பாள் என எண்ணி செல்வன் இவளிடம் சொல்லாமல் இருந்திருக்கலாம் எப்படியெனினும் அது அவளுக்கு எவ்வளவு நல்ல செய்தி?

அவன் தாய் ஊரார் நடுவே தான் செய்யாதவற்றை எல்லாம் செய்ததாக சொன்னபோது மனம் விட்டுப் போனது என்றாலும் கணவனுக்கு இரண்டாவது திருமணம் எல்லாம் நடக்கவில்லை என்பதை தெரிந்துக் கொண்ட பின்னர் அவள் மனதில் அத்தனை ஆசுவாசம். துன்பத்திலும் இன்பம் என்பது இதுதான் போலும்!

“எனக்கே எனக்கா…

எனக்கே எனக்கா…”

மனதின் துள்ளாட்டத்தை முகத்தால் மறைக்க முடியவில்லை. மனதிலும் உடலிலும் அடிவாங்கிய தடமும், வலியும் கூட மரத்துப் போகும் அளவிற்கு அவளது மனம் மலர்ந்திருந்தது.

இந்த அறையிலிருந்த பெரும்பாலான பொருட்கள் எல்லாம் அந்த அறைக்கு மாற்றும் வேலை முடிந்திருந்தது. அந்த மாலை நேரத்தில் இருவரும் சேர்ந்து தேநீர் அருந்த அவர்களுக்கு வாய்த்திருந்தது. இம்முறை அவர்கள் மனங்களிலும், பானங்களிலும் இனிப்பு மிகுந்திருந்தனவோ?

சற்று நேரத்தில் செல்வன், “அம்மாவை பார்த்துட்டு வரேன்” என்றுச் சொல்லி அவளிடம் விடைப் பெற்றான். மூன்று முதல் நான்கு மணி நேரங்கள் கழித்தே திரும்பி வந்தான்.அவன் முகத்திலிருந்து அவளால் ஒன்றையும் கண்டுக்கொள்ள முடியவில்லை. எதையும் கேட்டுத் தெரிந்து துன்பப்படவும், அவனை துன்பப்படுத்தவும் அவள் விரும்பவில்லை.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here