என்றும் நீதானே!?_12_ஜான்சி

0
344

அத்தியாயம் 12

புதிதாக வாடகைக்கு எடுத்த வீட்டில் சமீபத்தில் வாங்கிய நாற்காலிகள் முதலாக இவளது எல்லாப் பொருட்களும் இடம் பெயர்ந்திருந்தன. முன்னம் இருந்த வீடும் வாடகை முடிய உபயோகித்துக் கொள்ளலாம் என இவர்கள் வசமே இருந்தது. செல்வன் தன் அன்னையை சந்தித்து திரும்ப வந்த பின்னர் இன்னும் சில புதிய பொருட்கள் அவர்களது வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தன.

சமையலறை மட்டும் இன்னும் இடம் மாற்றப் படாதிருக்க, இரவு உணவை  இருவரும் முன்பிருந்த வீட்டிலேயே உண்டனர். இருவரும் சேர்ந்து புது வீட்டிற்குச் சென்றுப் பார்க்க, அந்த புதுப் பெயிண்ட் வாசனையில் கிருத்திகா அடிக்கடி தும்மிக் கொண்டு இருந்தாள். பெயிண்ட் வாடைப் போக வசதியாக சற்று உயரமாக இருந்த அந்த பெரிய ஜன்னல்களை செல்வன் திறந்து விட்டான்.

அந்த வீட்டிலிருந்து அவளது அந்த பழைய போர்வையை எடுத்தவன், அவளது சில சேலைகளையும் தம் கைகளில் எடுத்துக் கொண்டான்.

“வீட்டை பூட்டிட்டு வா, நாம இன்னிக்கு அங்கினவே படுத்துக்கலாம்.”

வீட்டை பூட்டிக் கொண்டு வந்தவளுக்கு முன் தினங்களில் மனதில் இருந்த பாரங்கள் அகன்று மனம் இலகுவாக இருந்தது. மனதை உறுத்திய அந்த புவனேஸ்வரி எங்கோ ஏழு கடல்களுக்கப்பால் காணாமல் சென்றிருந்தாள்.

அவள் உள்ளே நுழையவும் அவன் கதவை தாழிட்டான். சுத்தம் செய்து வந்தவள் வழக்கம் போல அவனது கால்மாட்டில் படுக்க நினைக்க அவனது கரங்கள் அவளுக்காக விரிந்திருந்தன.

‘அதென்ன அவனது பார்வை இப்படி? … ஆள் குடிக்கும் பார்வையாய்?’ கிருத்திகாவிற்கு ஓடோடிப் போய் உடனே தன் உருவத்தை கண்ணாடியில் பார்க்கத் தோன்றியது. கடந்த மூன்று நாட்களில் தோன்றாத உணர்வெல்லாம் ஏன் கடந்த பத்து நிமிடங்களுக்கு முன்னர் தோன்றாத உணர்வெல்லாம் உள்ளூர திடீரென பூத்திருந்தன.

தயங்கி அவனருகில் அமர்ந்தவளை இழுத்து தன்னில் இறுக்கிக் கொண்டன அவனது கரங்கள். அப்போது தொடங்கிய மௌன பாஷைகள் நேரம் செல்லச் செல்ல அவனது அந்த முத்தங்கள், அவனது பிதற்றல்கள், அவளுக்கான அவனின் பிரத்யேக செல்லப் பெயர்கள். அம்மம்மா அவனது பேச்சிலும், கரங்களிலும் இவளது மனமும் உடலும் உருகி வழிந்தன.

அவளும் கூட தன் மனத்தடை அகன்ற ஒரு பிரத்யேக கணத்தில் அவனுக்காய் தான் சில வருடங்களாக சேகரித்திருந்த அத்தனை அன்பையும் கொட்டித் தீர்த்தாள்.

பாலைவனத்தில் சிக்கிக் கொண்டவர்கள் மழையை கண்டது போல இருவரும் இணைந்து, இறுகி, குழைந்து, மகிழ்ந்து திளைத்தனர். அவ்விரண்டு மனங்களின் இரண்டு வருடத் தளைகளை உடைக்க அந்த ஓரிரவு போதுமானதாக இருந்தது. ஒருவருக்கான மற்றவரின் அன்பை உணர்த்தத்தான் ஆயுட்காலம் மீதம் இருக்கின்றதே?

கிருத்திகா காலையில் விழித்த போது தன்னருகில் இருந்தவனின் முகம் தென்படவும், முன்பு போல கள்ளத்தனமாக பார்க்க வேண்டிய அவசியம் ஏதுமின்றி கவனித்துப் பார்த்தாள். தனக்கென ஒரு சொந்தம், தனக்கே தனக்கென… ஆஹா… ஒரே நாளில் தன் உலகம் அழகாகி விட்டதை அவளால் நம்ப முடியவில்லை. அவன் அருகில் படுத்து இடுப்பில் கரம் போட்டு அணைத்துக் கொண்டாள்.

பதிலுக்கு அவனது கரங்களும் அவளை அணைத்துக் கொண்டன. “என்னாச்சு இன்னிக்கு தண்ணி பிடிக்க வேண்டாமா?” கேட்டான்.

“பிடிக்கணும், ஆனா எழுந்துக்க தோணலியே?” மனதை மறையாமல் உரைத்தவளது புறம் சரிந்து, முகத்தை வருடிவிட்டவன் அவள் தலையில் முத்தமிட்டான். சில நிமிடங்கள் இருவரின் இறுகிய அணைப்பில் கழிய முகமலர்ந்து எழுந்து வழக்கமான வேலைகளை செய்யலானாள்.

காலை வேலைகள் முடிந்து இருவரும் உண்டு முடிக்கவும் இம்முறை இருவரிடமும் தயக்கமும், தடங்கலும் இல்லாதப் பேச்சு அருவியாய்…

அவள் எண்ணியது போலவே தான் வந்த நோக்கத்தை மனைவியின் தோழி அவளிடம் சொல்லி இருப்பாள் என இவன் அமைதியாக இருந்திருக்க, இவன்   நோக்கம் அறியாதவள் மனதிற்குள்ளாக அவனுக்கு கொடுத்த கௌண்டர்கள் அவள் சொல்லச் சொல்லக் கேட்டு அவன் சிரித்துக் கொண்டு இருந்தான்.

“ஊமைக் குசும்பி” மூக்கை பிடித்து ஆட்டினான்.

“அன்னிக்கு உங்க பின் மண்டை பார்த்தேனா?” வட்டமாக விரலால் வரைந்து அவன் மண்டை சொட்டையாகப் போவதை காண்பிக்க… அவளது அபிநயத்தில் சிரித்து முடித்தவன்… “அது எங்க குடும்பச் சொத்து… எல்லா வாரிசுங்களுக்கும் அப்படித்தான்” எனச் சொன்னான்.

“அதெப்படி இவ்வளவு படிச்சிருக்கீங்க, வசதியா இருக்கீங்க, எதுக்காக என்னை கட்டிக்கிட்டீங்க?” பல நாள் உறுத்தலை கேட்டே விட்டாள்.

“நல்ல வேலையில இருக்கிறேன்தான், ஆனா வசதியா இருக்கேன்னு நினைக்காதே…” மறுபடி சிரித்தான்.

“அப்பா இறக்கும் போதே நிறைய கடன், அம்மாவும் ரொம்ப கஷ்டப்பட்டுத்தான் வளர்த்தாங்க. படிப்பு எல்லாமே கடன்தான், அதை அடைக்க இன்னும் கூட கொஞ்சம் வருசமாகணும்.”

‘ம்ம்”

“படிச்சு முடிச்சதும் நான் வேலைக்கு போயிட்டேன். அம்மாவை வேலைக்கு போகாம நிறுத்தினேன் பாவம் அவங்க எவ்வளவுதான் உழைப்பாங்க?  கிருபாவோட படிப்பு பொறுப்பை, வீட்டுப் பொறுப்பை ஏத்துக்கிட்டேன். கிருபாவோட படிப்பும் எல்லாமே லோன் மூலமாகத்தான். எனக்கு பதவியும் சம்பளமும் ஒரு பக்கம் கூடிச்சு, இன்னொரு பக்கம் கடனும் கூடுச்சு.”

“…”

“அம்மாக்கு நானும் நல்லா வாழறேன்னு ஊர் உலகத்துக்கு காண்பிக்கணும்னு ஒரு வெறி, ஆனால், ஐ டில வேலை பார்க்கிறதில் எத்தனை சிரமம் இருக்கு, வேலைக்கு உத்தரவாதமில்லாத நிலை இதெல்லாம் அவங்களுக்கு புரியாதில்ல? வீடு கட்டணும்னு அவங்களோட ஆசையைச் சொல்லவும், சரி கடனோட கடன்னு அதையும் கட்டியாச்சு. அப்புறம் ஒவ்வொரு மாசமும் கடன் அடைக்க மூச்சு திணறிடுச்சு கிருத்தி. அப்பதான் இரண்டு வருச ஆன்சைட் ஆஃபர் வந்துச்சு. இரண்டு மூணு வருசத்தில தங்கச்சிக்கும் திருமணத்துக்கு பார்க்கணும் இல்லியா?  எப்படியும் கூடுதலா பணம் வந்தா நல்லது தானே? அப்படி நினைச்சு அதுக்கு ஒத்துக்கிட்டேன்.”

விழி விரித்து தன்னை பாவமாய் பார்த்தவளைக் கண்டு முறுவலித்தான்.

“எனக்கு அதிகமா ப்ரெண்ட்ஸ் கிடையாது…வெளிநாடு போகும் முன்ன ஒரு சின்ன ட்ரிப், ஸ்கூல் பிரண்ட் அழைச்சான்னு தான் உங்க ஊருக்கு வந்தேன். அன்னிக்கு உனக்கு நடந்ததை பார்த்து என நண்பன் “பாவம் நல்லப் பொண்ணுடான்னு சொல்லவும் தான் என்னன்னு கவனிச்சேன். உன்னை பார்த்து மனம் தாங்கலை. அந்த நேரம் அதுதான் உன்னை கல்யாணம் செய்துக்கணும்னு முடிவு எடுத்த நேரம்… என்னவோ ஆன்சைட்லாம் ஞாபகம் இல்லை. கல்யாணம் முடிஞ்சு திரும்ப வந்தப்ப அதை யோசிச்சாலும்… கல்யாணமாகி என் வீட்டுக்காரங்க கூட என் வீட்டில தானே இருக்கப் போற அதிலென்ன தப்பு?ன்னு தோணுச்சு… ஸாரி ஏற்கெனவே பிரச்சனையில் இருந்த உன்னை இன்னொரு பிரச்சனைக்குள்ள மாட்டி விட்டிட்டேன்.”

“அப்படிச் சொல்லாதீங்க” அவனை அணைத்துக் கொண்டாள்.

“அம்மா உன் மொபைல் சரியில்லாமப் போச்சுன்னு சொல்லவும், உனக்கு புது மொபைல் வாங்கிக் கொடுங்கன்னு அவங்கட்டச் சொல்ல எனக்கு கூச்சமா இருந்திச்சு கிருத்தி. கல்யாணம் ஆகாத தங்கச்சி இருக்கையில, இவனுக்கு ரோமான்ஸ் கேக்குதான்னு நினைச்சுப்பாங்களோன்னு தயக்கம்.”

“அதான் பேசினீங்களே… கிருத்தி சாப்பிட்டியா? கிருத்தி எப்படி இருக்க? கிருத்தி நல்லா இருக்கியா?” அவள் கிண்டலடிக்க கிணிகிணியென சிரித்தவளோடு சிரித்து ஓய்ந்தான்.

“நாம முதல்லயே அவ்வளவா பேசி பழகலை, அப்புறம் பேசினது கூட அம்மா போன், அப்புறம் நான் அதில் உன் கிட்ட இதை தவிர்த்து என்ன பேசச் சொல்லு?”

“இப்ப மட்டும் என்ன பேசினீங்களாம்? இங்க வந்த முத நாள் ஒரு அழுகையோட சரி, அடுத்த நாள் வேலைக்குப் போகாதன்னு சொல்லி நான் திரும்ப பேசவும் அமைதி ஆகியாச்சு…?”

“அது வேற ஒன்னுமில்ல…ஒரு குற்ற உணர்ச்சி தான், நீ தூங்கினதும் உன் கால் பிடிச்சு மன்னிப்பு கேட்டுக்குவேன் அப்பதான் எனக்கு தூக்கம் வரும்.”

“ஐயையோ” வாயில் கை வைத்தாள்.

“அது ஏன் அப்படி செய்தீங்க ஐயோ தப்பு.”

‘அதெல்லாம் தப்பில்ல, நேர்ல பேசத்தானே பயம் அதான் நீ தூக்கத்தில இருக்கப்ப பேசிக்குவேன்… மன்னிப்புக் கேட்க ஒத்திகைனு வச்சிக்கோயேன்.”

“அப்ப நான் உங்களை எத்துனேன்னு (மிதிப்பது) சொன்னது பொய்யா?”

“அது கொஞ்சம் உண்மைதான் ஹா ஹா” சிரித்தான்.

“போங்க போங்க பொய்யி…” என்றவள்

“அப்புறம் எப்பதான் என் கிட்ட பேசுறதா இருந்தீங்க?”

“நீ என்னை வீட்ட விட்டு வெளியே துரத்தி விடலைனதும் சிஸ்டர் உனக்கு சொல்லிருப்பாங்கன்னு நினைச்சேன்”

“ஹா ஹா முத நாளே துரத்திருப்பேன், லாவண்யாவுக்காகப் பார்த்தேன்”

“அதான் தெரியுமே… படைபலத்தோடு தானே வந்தேன். இல்லின்னா உள்ள வர விட்டுருப்பியா?

“அந்த ஆதார் எல்லாம்…?”

“சிஸ்டர் சொன்னதால உன் பயம் புரிஞ்சுச்சு…மேரேஜ் ரெஜிஸ்டர் செய்ய தேதிக் கேட்டு கொடுத்திருக்கேன், பதிவு செய்யப் போகணும். ஒன்னு இந்த வீடு மாறும் போதோ இல்லை பதிவு செய்யும் போதோ உன் கிட்ட மனம் திறந்து பேச நினைச்சேன். நீ ரொம்ப சண்டை போட்டா கால்ல விழுந்துறணும்னு கூட…”

“சும்மாருங்கப்பா” இவளுக்கு வெட்கமாகிவிட்டிருந்தது.

“ஆனா, நீ கொடுத்த பாரு எனக்கு அதிர்ச்சி வைத்தியம்… தயவு செய்து இனி ஒரு நேரம் இப்படி எதுவும் செய்திடாத…” அந்த எலி மருந்து அவன் கண்களில் நிழலாடி இருக்க வேண்டும்.

“அதை நினைச்சா எப்பவும் மனம் நடுங்குது. உனக்கு என் வீட்டாளுங்க செஞ்சதை நினைச்சே என் மனம் தாங்கலை… நீ இன்னும் எனக்கு பாவச்சுமையை ஏத்திருந்தியோ நான் பைத்தியமாதான் திரியணும்.”

அவன் துன்பம் தாளாமல் “மன்னிச்சுருங்க” சொல்லி தோளில் முகம் புதைத்தாள். இவன் இதயத்தில் ஈரமுள்ள மனிதன் என எண்ணிக் கொண்டாள்… தனக்கு இந்த அருமையான துணை கொடுத்த கடவுளுக்கு மனதினுள்ளே நன்றிகள் தெரிவித்தாள்.

“ஆனாலும் நான் படிக்காதவ அது உங்களுக்கு குறையா இல்லையா?”

“அதெல்லாம் ஒரு குறையுமில்லை…படிக்கணும்னா இப்ப வேணா படிக்கலாமே? வாழ்க்கை இருக்கிற வரைக்கும் கத்துக்கலாம். உனக்கு படிக்கணுமா? வேற எதாச்சும் கத்துக்கணுமா? சொல்லு.”

“ம்ம் யோசிச்சு சொல்லுறேன்”

“ம்ம்”

“ஆனாலும், உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு…” முணுமுணுத்தாள்.

“எனக்கும் தான்…” பதில் வந்தது.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here