என்றும் நீதானே!?_13_ஜான்சி ( நிறைவு)

0
379

அத்தியாயம் 13

ஒரு வாரம் கழிந்திருந்தது, தம்பதிகள் மொத்தமாய் பக்கத்து வீட்டிற்கே குடிபோய் விட்டனர். எத்தனை பேசியும் அவன் தன் தாயிடம் என்ன பேசினான்? என அவள் கேட்டு தெரிந்துக் கொள்ள அவள் முனையவில்லை.

தன்னை என்னவெல்லாம் கொடுமை படுத்தி இருந்தாலும், தனது நியாயமான குணங்களால் மனம் கவர்ந்தவனுக்காக பொறுத்துப் போனாள். என்ன இருந்தாலும் அவர் அவன் தாய்… தான் ஏதோ ஒரு வேகத்தில் எதையாவது சொல்லி, அவனை நோக வைக்கக் கூடாதெனும் கிருத்திகாவின் எச்சரிக்கை உணர்வுதான் அதற்கு காரணம். அதிலும், செல்வனின் சுமைகளை உணர்ந்த பின்னர் அவனுக்கு எந்த விதத்திலாவது உதவ வேண்டும் என அவளுக்குத் தோன்றிக்கொண்டே இருந்தது. குறைந்த பட்சம் அவனை தொந்தரவு செய்யாமலாவது இருக்க வேண்டுமென்றும் தான்.

செல்வன் அவளிடம் வேலையை விடச்சொல்லி மறுபடி வலியுறுத்தவும் தனது மாமியார் செய்கையால் அவள் ஏற்கெனவே அந்த முடிவிற்கு வந்திருந்தாளே? எனவே, தயங்காமல் வேலையை விட்டு விட்டாள்.

இதற்கிடையில் லாவண்யாவும் இவர்களை வீட்டில் வந்து சந்தித்துச் சென்று இருந்தாள்.பூஞ்சை மனம் கொண்ட தோழியை குறித்து வெகுவாக அறிந்தவள் அல்லவா? இவளைக் குறித்து அங்கு யாரும் தவறாக பேசவில்லை எனச் சொல்வதற்காகவே மெனக்கெட்டு வந்திருந்தாள். தோழியின் வாழ்க்கை மலர்ந்ததில் அவளுக்கு மிகுந்த மகிழ்ச்சி.

“அண்ணா இவ எதையாச்சும் லூசுத்தனமா செய்வா… எவ்வளவு அடிச்சாலும் தாங்குவ நீ ரொம்ப நல்லவ… மாதிரி கேரக்டர் இவ…அதனால கொஞ்சம் கவனமாக பார்த்துக்கோங்க.”

“அதான் இவ செய்யறதை நானே என் கண்ணால பார்த்தேனே? …” என ஆரம்பித்தவன் கிருத்தியின் சைகைகளை கண்டு அவள் விசம் குடிக்கவிருந்ததை லாவண்யாவிடம் சொல்லாமல் பேச்சை மாற்றி விட்டான்.

***

ஓரிரு நாட்கள் கழித்து…

செல்வனும் கிருத்திகாவும் அன்று காலை சட்டப்படி தங்களது திருமணத்தை பதிவு செய்திருந்தார்கள். அதே மகிழ்ச்சியோடு அருகில் இருந்த கோவிலுக்குச் செல்ல அங்கே அவர்கள் எதிரில் வந்தது புவனேஸ்வரி.

அத்தனை அழகாக இருந்த புவனியை கிருத்திகா கண்கொட்டாமல் பார்த்திருந்தாள் …

“நல்லா இருக்கீங்களா செல்வன் சார்?, நல்லா இருக்கீங்களா கிருத்திகா? எனக்கு உங்க இரண்டு பேரையும் சேர்த்துப் பார்க்க ரொம்ப மகிழ்ச்சியா இருக்குங்க. என்னால உங்களுக்கு ஏற்பட்ட மன வருத்தத்துக்கு மன்னிப்பு கேட்டுக்கறேங்க கிருத்திகா.”

“அச்சச்சோ அப்படி சொல்லாதீங்க.” கிருத்திகா பதிலளித்தாள்.

“எனக்கு திருமணம் முடிவாகி இருக்குங்க, ஏற்கெனவே விரும்பி கேட்டவங்க தான் அதனால என் திருமணம் நின்றுப் போன விபரம் கேள்விப்படவும் வந்து பேசி முடிவு செய்திட்டாங்க. அதற்காகத்தான் கோவிலுக்கு வந்தேன்… இப்ப உங்க இரண்டு பேரையும் பார்த்துட்டனா? அவ்வளவு சந்தோஷமா, நிறைவா இருக்கு.” மகிழ்ந்தவளை…

“உங்க மனம் போல நல்லா இருப்பீங்க” கணவனும் மனைவியும் ஒரு போலச் சொல்ல மென்மையாய் சிரித்து நகர்ந்தாளவள்.

ஆன்சைட்டிலிருந்து வந்தவன் தங்கையின் திருமணம் முன்னிட்டு எடுத்திருந்த விடுமுறைகள் முடியவும் தனது வேலைக்கு திரும்பினான். அவனுக்கு பெரும்பாலான நாட்களில் வீட்டிலிருந்தே வேலைகள் செய்ய வேண்டி இருந்தது. அந்த வீட்டில் தனக்கென ஒரு அறையை மட்டும் எடுத்துக் கொண்டவனது வேலை நேரத்தில் கிருத்திகா அவனை தொந்தரவு செய்வதில்லை.

பள்ளிக்கு சென்றால் தான் கல்வி கற்க முடியுமா என்ன? அருகில் சிறு பிள்ளைகளுக்கு டியூசன் எடுக்கும் பெண்ணிடம் செல்வன் அவளை சேர்த்து விட்டிருந்தான்.டியூசன் சென்று வருவதும், வீட்டிலிருந்து பயிற்சி செய்வதுமாக அவள் கல்வி கற்கவும் ஆரம்பித்தாள்.

டியூசனுக்கு படிக்க வரும் மற்றவர்கள், பென்சிலோடு திண்டாடும் கிருத்திகாவைப் பார்த்து சிரித்தாலும் இவள் அவர்களை கண்டுக் கொள்வதில்லை.

“தப்பு தண்டா செய்யறதுக்குத்தான் கூச்சப்படணும் கத்துக்குறதுக்கு என்ன கூச்ச நாச்சம் எல்லாம்….”அலட்சியமாகச் சொல்லி கடந்து விடுவாள்.

“ஐயே இத்தன நாளா படிக்குற இதுகூட தெரியலியா?” எனக் கேட்டால்

“நான் கொஞ்சம் மெதுவாவே கத்துக்கிறேன், எனக்கொன்னும் அவசரமில்ல…” என்பாள்.

பள்ளிக் கல்வியோடு கூட பிடித்த தையல் கலை, எம்ராயட்ரி எனக் கற்றுக் கொள்ள “இது ஏன் செய்ற? தையல் மெஷின்ல வேலை செஞ்சா காலுக்கு வலிக்குமே?” என கரிசனையாக பேசியவனிடம் தன் உடல் நிலையை பார்த்துக் கொள்வதாக உறுதியும் அளித்தாள்.

சில மாதங்கள் அடுத்து கிருத்திகா கருவுற்று இருந்ததை உறுதிப் படுத்தியதும் அவர்களுக்கு அத்தனை மகிழ்ச்சி. அவளது படிப்பு தவிர மற்றவற்றை செல்வன் நிறுத்தி விட்டான். “குழந்தை பிறந்து, உன் உடம்பு நல்லா தேறி வந்ததும் மறுபடி என்ன விரும்புறியோ கத்துக்க” எனச் சொன்னவனை அவளால் மறுக்க முடியவில்லை.

அவன் அவ்வப்போது தன் தாயை சந்தித்து வருவதை அவள் அறிவாள். எல்லாவற்றையும் பகிர்ந்துக் கொள்ளும் தம்பதியர் ஒருவரை மற்றவர் காயப்படுத்தி விடக் கூடாதென அந்த பேச்சுக்களை மட்டும் தவிர்த்தனர்.

அன்று தாயை சந்திக்கச் சென்றவன் மனைவி கருவுற்று இருப்பதை சொல்லி திரும்பி இருந்தான். தன் தாய் நல்லவரோ கெட்டவரோ மகனாக அவன் தனது கடமையை செய்வதில் அவன் என்றும் பின்வாங்கவில்லை.

அவ்வப்போது திரும்ப வரும் போது கிருத்திகாவிற்கு ஏதாகிலும் தகவல் சொல்லுவான், அவளும் வெறுமனே கேட்டுக் கொள்வாள். இவள் கருவுற்ற சில மாதங்கள் கழித்து ஒரு நாள் “கிருபா உண்டாகி இருக்காளாம்” என்றுச் சொன்னான். தங்கையின் வீட்டிற்கு தான் சென்று வந்தால் அவளுக்கு பிரச்சனை ஆகி விடக் கூடாதென அவன் அங்குச் செல்வதில்லை… மிகவும் கவனமாக இருந்து வந்தான்.

அவனது வேலையை பொறுத்த வரையில் ஆன்சைட் சென்று வெற்றிகரமாக வேலையை முடித்து வந்ததில், விரைவில் அவனது சம்பளம் கூட வாய்ப்பிருந்தது. அது குறித்து தெரிய வந்ததும், நடுத்தர வர்க்க குடும்பத் தலைவனாக தனது வரவு செலவுகளில், கடன்களை அடைப்பதில் என்னென்ன மாற்றங்கள் செய்யலாம் என முன்பே திட்டமிடலானான்.

காயத்ரிக்கு மகனற்ற கடந்த சில மாத தனிமைகள் ஏதோ உணர்த்தி இருக்க வேண்டும். தனது ஆத்திரத்திற்கு வடிகாலாக அன்றொரு நாள் மருமகளை அடித்த போதும் தொடர்ந்த சில நாட்களுக்கும் அவருக்கு அது மிகச்சரியாகவே தோன்றியது. மனைவிக்காக மகன் பேசியவைகள் முட்டாள்தனமாகவே இருந்தன.

அன்றைய தினம் கிருத்திகாவை அடித்து விட்டு, அவளுக்கு நல்லதொரு பாடம் கற்பித்து விட்டதாக அவர் பெருமையாக வீட்டில் அமர்ந்திருந்தார். அப்போது மகன் வீட்டிற்கு வரவும், மனைவிக்கு ஆதரவாக பேச வந்து விட்டான் என இகழ்ச்சியாக எண்ணியவராக நிமிர்வாகவே இருந்தார். ஆனால், அவன் அவரிடம் அதுக் குறித்து முதலில் ஒன்றுமே கேட்கவில்லை.தனக்கான இரண்டாம் திருமண ஏற்பாடு குறித்து அவனுக்கு அவரிடம் கேட்க வேண்டி இருந்ததே?

“அம்மா… அப்பா இறந்தப்ப நாம மூணு பேரும் ரொம்ப கஷ்டப் பட்டோமில்ல? ஆனா அப்ப கூட நாம நேர்மையா இருந்தோம்… இல்லைமா? ஏன் இப்ப கூட நமக்கு கடன்கள் இருக்குதான்… ஆனாலும், உழைச்சு கடனை அடைச்சுடலாம்னு ஒரு உத்வேகம் இருக்கு. யாரையும் ஏமாற்றிப் பிழைக்கலைனு மனசில ஒரு தைரியம் இருக்கில்லம்மா? … நமக்கெல்லாம் இப்படி சம்பாதிச்சு சேர்ந்தா தான்மா பணம் உடம்பில ஒட்டும். எதுக்காக அந்த இல்லாத குறுக்கு வழியெல்லாம் நாம பார்க்கணும்?”

மகன் எது குறித்துக் கேட்கிறான் எனப் புரிந்ததும்…

“புத்திக் கெட்டவன் நீ, வீட்ல வாலிப பிள்ளை இருக்கிறதை மறந்திட்டு அந்த அவளை தாலிக்கட்டி கொண்டு வராட்டா இந்நேரம் நீங்க இரண்டு பேரும் நான் நினைச்சது போல நல்லா இருந்திருப்பீங்க… எவளுக்கோ பரிஞ்சுட்டு வந்து எனக்கு புத்தி சொல்லுறியா நீ?.”

“நீங்க இன்னிக்குச் செஞ்சது மாபாவம் மா… நீங்க அவளை விரட்டி விட, நான் தான் அவளை தேடிப் போனேன். அதுக்கு அவளை நடுரோட்டில விட்டு அடிச்சிருக்கீங்க? நான் போனப்ப அவ விசம் குடிக்க எடுத்து வச்சிருந்தா… ஏதோ என் நல்ல நேரம் முதலில் இங்க வர நினைச்சவன் அங்க போனேன்… இல்லன்னா இந்நேரம் அவளை பொணமாதான் பார்த்திருக்கணும். சும்மா இருந்தவள தாலிக்கட்டி வீட்டுக்கு கொண்டு வந்து பொணமாக்குன பழிபாவம் என்னை சாகற வரை துரத்திருக்கும்.”

“எல்லா தப்பையும் உன் மேல வச்சுட்டு என்னை குறை சொல்லாதடா…”

“ஆமாம்மா என் தப்புதான்…. அன்னிக்கு அவ அநாதரவா இருந்தப்ப எனக்கு யார் ஞாபகம் வந்தாங்க தெரியுமா? நீங்க தான்… அப்பா இறந்தன்னிக்கும் அப்புறமும் உங்களை நான் பார்த்திருந்தேனே? அன்னிக்கு அவளைப் பார்க்கவும் எனக்கு அதே ஞாபகம்… பரிதவிப்பு. அதனால என்னால அவளை அங்க அப்படியே விட்டுட்டு வர முடியலை. அப்பா இறந்ததுக்கு அப்புறம் ஒரு வேளை நான் இராத்திரி தூங்கினதுக்கு அப்புறம் நீங்க ஏதாவது செஞ்சுப்பீங்களோன்னு பயந்து பயந்து முழிச்சு உங்களை கவனிச்சுப் பார்த்துட்டு இருப்பேன் தெரியுமா? அதே துயரத்த அவக்கிட்ட அன்னிக்குப் பார்த்தேன்மா”

மௌனம்…

“அவளை உங்களுக்கு பிடிக்கலைன்னு எனக்கு புரியுதுமா…. …ஆனா அவளை என்னால ஒருபோதும் விட்டுக் கொடுக்கவே முடியாது. எனக்கு என்னிக்கும் அவ மட்டும் தான். நான் அவள கட்டிக்கிட்டது உங்களுக்கு கோபம்னா என் கிட்ட சண்டை போடுங்க… திட்டுங்க…வேணும்னா அடிங்க. ஆனா இனி ஒரு வார்த்தையோ, அடியோ அவ மேல படக்கூடாதும்மா. அப்படின்னா நீங்க என்னை கஷ்டப்படுத்தினதுக்கு சமம்.”

வாக்குவாதம் செய்ய விழையாமல் சொல்ல நினைத்தவைகளை சொல்லி விடைப் பெற்று இருந்தான். மாதாமாதம் கல்விக்கடன்கள், வீட்டு லோன் தவறாமல் கட்டிக் கொண்டும் அவருக்குத் தேவையான செலவுகளை செய்துக் கொண்டும் தங்கைக்கு சீர்கள் எதிலும் குறையில்லாமல் நிறைவேற்றுகின்றவன் தனது குடும்பத்தையும் நடத்திக் கொண்டு இதோ இப்போது ஒரு குழந்தைக்கு தகப்பனாகவும் போகின்றான்.

தனது கடமைகளில் தவறாதவனுக்கு தான் செய்ய வேண்டியவைகளைச் செய்யாமல் தவறி விட்டோமோ? காயத்ரியின் மனம் உறுத்தியது.

புவனேஸ்வரி திருமணம் சிறப்பாக முடிந்து அவள் வாழ்க்கை சீர்ப்படவும் கிருபாசினி மீது இருந்த வருத்தத்தை ஆண்கள் யாரும் பெரிதளவில் காட்டுவதில்லை. அதுவும் அவள் அவர்கள் வீட்டு வாரிசை சுமந்துக் கொண்டிருக்க அவளுக்கு அங்கே சலுகைகளுக்கு குறைவில்லை.  ஆனால், பெண்களால் அவளது செய்கையை அவ்வளவாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

வெளியில் நடக்கும் அரசியலை விட உள் வீட்டில் நடக்கும் அரசியல் மிகப் பெரியது. யாருக்கும் புரியாத வகையில் பெண்கள் மற்றவரை முக்கியப்படுத்தவும் செய்வார்கள். அதே நேரம் தள்ளி வைக்க வேண்டுமானால் தள்ளி வைக்கவும் செய்வார்கள்.

வீட்டின் செல்லப் பெண்ணான புவனேஸ்வரிக்கு அவள் நிகழ்த்தவிருந்த தீமையை அவ்வீட்டு அம்மாக்கள் மறக்க தயாராக இல்லை. அவளது திருமணத்தின் போது கிருபாசினியை ஒரு செல்லா காசு பொல நடத்தியது அவளுக்கு புரியாமலில்லை.

புவனேஸ்வரியோ அவளை அண்ணியென அழைப்பதுமில்லை, தானும் உறவு கொண்டாடுவதில்லை. நிரப்பப் படாத அந்த வெற்றிடம் இனி என்றும் நிரம்புமா? எனும் கேள்விக்கும் விடையில்லை.

தான் ஒருகாலத்தில் கிருத்திகாவிற்கு கொடுத்த புறக்கணிப்பை தான் அனுபவிக்க நேர்ந்தது துயரமே. காயத்ரி மனம் மாறி புலம்பியதைக் கேட்டவளுக்கும் அண்ணன் வாழ்வில் தாங்கள் செய்தது தவறோவென தோணலாயிற்று.காலம் கடந்த ஞானம்.

பல மாதங்கள் தயக்கத்திற்குப் பிறகு காயத்ரி துணிந்து ஒரு முடிவு எடுத்தார். தான் செய்வதை எல்லாம் தனியாக செய்து விட்டு இப்போது மகனிடமும், மருமகளிடமும் தனியாகச் சென்றுப் பேச தயக்கமாக இருந்தது. அந்த வார இறுதியில் அக்கம் பக்கம் இருந்த பெரியவர்களை அழைத்துக் கொண்டு செல்வன் வீட்டிற்கு சென்றே விட்டார்.

“அத்தனை பெரிய வீட்டை கட்டிட்டு, நீ ஏன்பா வாடகை கொடுத்திட்டு இங்க தனியா இருக்கணும்.இப்பவே அங்க வந்திட்டீன்னா… குழந்தை பொறந்ததுக்கு அப்புறமும் அங்க இருந்தா நாங்க பார்த்துக்குவோம்ல. ஏதோ சொந்த பந்தம் இல்லாதது போல எதுக்கு இவ்வளவு தூரம் தனியா இருந்துக்கிட்டு?”

வந்தவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக அவனை வீடு திரும்புவது குறித்தே சொல்ல அவன் கிருத்திகாவைக் குறித்து யோசித்தான். இவர்கள் இருவரும் முட்டிக் கொண்டால் இவன் மன நிம்மதி அல்லவா போகும்?

“நான் யோசிச்சு சொல்றேன் பெரியப்பா” அனைவரையும் நன்கு உபசரித்து அனுப்பினான்.

தனிமையில் இருக்கும் போது… “நீ என்னச் சொல்ற கிருத்தி?”

“போகலாம்ங்க”

“உனக்கு கஷ்டமா இருக்கும்ல?”

“அதொன்னும் பிரச்சனை இல்லை, பிடிக்கலைனா பேசாம இருந்துக்க வேண்டியதுதான்…வாய் பேசுனா தான சண்டைலாம். நீங்க என் கூடவே இருக்கிறப்ப எனக்கென்ன கஷ்டம்?”

“உண்மையைச் சொல்லு, எனக்கு வாடகை மிச்சப்படுத்த பார்க்குறியா கஞ்சப் பிசினாறி. எத்தனையோ செலவில இதுவும் ஒன்னு. உன் மன நிம்மதிய விட எதுவும் பெருசில்ல புரியுதா?”

தனது பிரச்சனைகளைச் சொன்னதில் இருந்து செலவுகளை குறைத்திருந்தவளின் குணம் ஞாபகம் வரக் கேட்டான்.

“ச்சே ச்சே அதில்ல, உங்க அறையில தான நான் இருந்தேன். உழைச்சு வீடு கட்டுன மகராசனுக்கு இருந்து அனுபவிக்க கொடுத்து வைக்கலைன்னு அடிக்கடி நினைச்சுப்பேன். உங்க அம்மாவை பிரிஞ்சு இருக்கிறதும் உங்களுக்கு கஷ்டம் தானே? வயசான காலத்தில அவங்களுக்கு ஏதாச்சும்னா…ஐயோ பக்கத்தில இருந்தோமில்லன்னு தோணும்… இதெல்லாம் யோசிச்சுத்தான் சொன்னேன்.”

“எனக்காக நீ இத்தனை யோசிச்சா நான் என்ன யோசிக்கிறதாம்?” அவள் கன்னங்களை வருடி விட்டான்.

“அப்படின்னா….நீங்க எனக்காக யோசிங்க” சிரித்தாள்.

அவர்கள் வாழ்க்கை மலர்ந்த அந்த வீட்டிலேயே மனைவிக்கு சிறியதாக வளைக்காப்பு விழா வைத்து இருந்தான். கடந்த மாதங்களில் நன்கு பழகி இருந்த அக்கம் பக்கத்தவர்கள் வந்து விழாவை விமரிசையாக கொண்டாட்டமாக நடத்தி தந்தனர்.

அடுத்த மாதத்தில்… செல்வனும் கிருத்திகாவும் தங்களது சொந்த வீட்டில் குடிபெயர்ந்தனர்.கிருபாசினி அவ்வப்போது வீட்டிற்கு வந்துச் சென்றாள்.

கிருத்திகாவுக்கும் காயத்ரி மற்றும் கிருபாசினிக்கும் முன் பின் அறியாதவர்கள் போன்ற ஒரு வகை ஒட்டாத ஒரு உறவு அங்கே பேணப்பட்டது.

மூவரும் கண்ணுக்குத் தெரியாத கோடொன்றை வரைந்து விட்டு அதனை ஒருவருக்கொருவர் தாண்டாமல் பார்த்துக் கொண்டனர்.சிலருக்கு குற்ற உணர்ச்சி என்றால் சிலருக்கு மானப் பிரச்சனை. கோடுகள் அழியாமல் இருக்கட்டும் அதுதான் உலகிற்கு நல்லதாம்.

பிரசவத்திற்கு நெருங்கிக் கொண்டு இருக்கும் மனைவியின் வசதிக்காக வீட்டு வேலைக்கு ஆள் வைத்த பின்னர் செல்வனால் கவலைக்கொள்ளாமல் தனது வேலையை செய்ய முடிந்தது.

தன் தாயும் அவனது கண்பார்வையில் இருக்க அவனுக்கு அதுவும் ஒரு நிறைவுதான். அது எவராயினும் குடும்பத்தில் அமைதி நிலவும் பட்சத்தில் வெளி உலகில் சாதிக்க தடையென்ன?

குறிப்பிட்ட வாரத்தில் கிருத்திகாவிற்கு சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. செல்வன் லீவு எடுத்துக் கொண்டு கிருத்திகாவை கண்ணிமை போல கவனித்துக் கொண்டான். இவர்களது மகிழ்ச்சியில் பங்குக் கொள்ளவும் முடியாமல், விலகவும் முடியாமல் இதுதான் காயத்ரிக்கு தண்டனை போலும். செல்வனுக்கோ குழந்தையின் வரவோடு, பதவி மற்றும் சம்பள உயர்வும் ஒரே நேரம் வர மகிழ்விற்கு எல்லையே இல்லை எனலாம்.

ஒரு சில மாதங்களில் கிருபாசினிக்கு வளைக்காப்பு அணிவித்து தாய் வீட்டிற்கு அழைத்து வந்தனர். காயத்ரி மகளை கவனித்துக் கொள்ள இருக்க ஒரு குறையுமின்றி பேறுகாலம் பார்த்தனர்.

கிருத்திகா எதிலும் பட்டுக்கொள்ளவில்லை, காயத்ரி எதையும் எதிர்பார்க்கும் தகுதியில் இல்லை. கிருபாசினிக்கோ நினைத்தனை பேச வாயும் இல்லை என்றானது. அங்கானால் கணவனிடம் யோசித்தே பேச வேண்டும். இங்கு எதையும் பேசினால் அண்ணனுக்கு பதில் சொல்ல வேண்டும். பேராசையின் விளைவுகள் வெவ்வேறு விதமோ?

கிருபாசினிக்கும் சில மாதங்களில் ஆண் குழந்தை பிறந்தது. தாய் வீட்டில் மூன்று மாதங்கள் இருந்து வேண்டிய ஓய்வையும் கவனிப்பையும் பெற்றுக் கொண்டாள். அவள் மகனுக்கு தாய் வீட்டில் செய்ய வேண்டிய முறைகளை செல்வன் செய்ய அவளை திருப்தியாகவே அனுப்பி வைத்தனர்.

வருடங்கள் கடந்திருந்தன…

அந்த வீட்டின் முன்பக்கம் ஒரு சிறு கடை முளைத்திருந்தது. முதுகில், கைகளில் ஜன்னல், கதவு, கம்பி, கயிறு எல்லாம் வைத்து அனைத்து வகை நவீன பிளவுஸ்களும், சுடிதார்களும் அங்கு தைத்து தரப்பட்டன.

24 மணி நேரத்திற்குள் கொண்டு வந்து கொடுக்கப் படாவிட்டால் பீட்ஸா ப்ரீ என்பது போல அந்த “கே எஸ் டெய்லரிங்க் ஷாப்”பில் ஒரு வாரத்திற்குள் துணி தைத்து தரப்படாவிட்டால் துணி தைக்கும் காசு கொடுக்க வேண்டாம் ப்ரீ ப்ரீ ப்ரீ” எனச் சொல்லி பிரபலப்படுத்தி இருந்தனர்.

வெறும் பேச்சு…விளம்பரம் என்றில்லாது அப்படி ஒரு வாரத்திற்குள் துணி தைத்துக் கொடுக்காத பட்சத்தில் தையல் கூலியை திரும்பவும் கொடுத்து இருந்தனர்.

துணி தைக்க ஆர்டர் கொடுக்க காலை ஒரு மணி நேரம் மற்றும் மாலை ஒரு மணி நேரம் என வைத்து இருந்தனர். அப்படியும், அங்கே எப்போதும் கூட்டம் அலைமோதியது.

அக்கடையின் உள்ளே நான்கு டெய்லர்கள் கருமமே கண்ணாக தைத்துக் கொண்டு இருக்க அதன் சத்தம் காதைப் பிளந்தது. கிருத்திகா வரிசையாக வந்தவர்களின் இரசனைக்கேற்ப எப்படி உடை தைத்து வேண்டும்? என விசாரித்து… விபரங்கள் புரியாதவர்களுக்கு தன்னிடம் இருந்த விதவிதமான உடைகள் அணிந்த மாடல்களின் புத்தகங்களைக் கொடுத்து தெரிவு செய்ய உதவினாள்.

எப்படி தைக்க வேண்டும்? என முடிவெடுத்ததும் அளவெடுத்தாள் குறித்துக் கொண்டாள். ரசீதில் பெயரையும், தொகையையும் எழுதி, பணத்தை வாங்கி நிரம்பிய கல்லாவில் இட்டாள்.

வாங்கிய பணத்திற்கு வாடிக்கையாளர் பெயரை பில்லில் எழுதி, அத்தோடு கூட அவர்கள் தைக்க கொண்டு வந்த துணிகளின் ஓரம் கத்தரித்து தனது புத்தகத்தின் ரசீது பக்கத்திலும், வாடிக்கையாளருக்கான இரசீதிலும் ஸ்டாப்ளரால் அடித்து கொடுத்தாள்.

அவளது பொறுமையான குணத்திற்கு இந்த தொழில் வெற்றியோ வெற்றியாக அமைந்திருந்தது என்றே சொல்ல வேண்டும்.

ஒருவருக்கொருவர் பிடிக்காத இரு பெண்கள் ஒரே வீட்டில் அமர்ந்து ஒருவர் மூஞ்சை ஒருவர் வெட்டு வெட்டென்று எதற்கு பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும்? இதை விட்டு விட்டு எதையாவது உருப்படியாகச் செய்யலாம் என அவள் எடுத்த முடிவு மிகச்சரியானதாக இருந்தது.

மாலை எட்டு மணிக்கு கடையை பூட்டி அவள் உள்ளே வர, காயத்ரியிடம் விளையாடிக் கொண்டு இருந்த கார்த்திக் “அம்மா” வென அவளிடம் ஓடி வந்தான்.

இரண்டாம் வகுப்பு படிக்கின்ற மகனது படிப்பை பார்த்துக் கொள்வதும் கிருத்திகாதான். தாயும் பிள்ளையும் ஒருவருக்கு மற்றவர்கள் கற்பித்துக் கொள்வார்கள், கற்றும் கொள்வார்கள்.

இப்போது இருவர் கைகளிலும் நோட்டு புத்தகம் இருக்க தாய்க்கும், மகனுக்கும் ஏதோ வாக்குவாதம்.

உள்ளறையில் இருந்து வேலையை முடித்து கழுத்தை சொடக்கிட்டு வந்த செல்வனுக்கு இப்போது பின் மண்டையில் ஒரு குட்டி நிலா உதயமாகி இருந்தது.செல்வனிடம் இரண்டு நோட்டு புத்தகங்களுடனும் விரைந்துச் சென்ற கார்த்திக்…

“அப்பா அப்பா, நீங்களே சொல்லுங்க… என் கையெழுத்து அழகா இருக்கா… இல்லை அம்மா கையெழுத்து அழகா இருக்கா?”

“அவ இப்ப பிசினஸ் மேக்னெட்டுடா இப்ப வந்து அவ கையெழுத்த பத்தி கேட்கிற நீ?”

“சொல்லுங்கப்பா, காட் பிராமிஸ் உண்மைய சொல்லுங்கப்பா…” மகன் பிடிவாதம் பிடித்தான்.

“நீ என்ன இருந்தாலும் என் மகன் பார்த்தியா? அதனால உன் கையெழுத்துதான் ராஜா என்னைப் போலவே நல்லா இருக்கு…”

அப்பா சொன்னதும் மகனுக்கு திருப்தியோ திருப்தி… வேறு விளையாட்டில் அவன் கவனம் மாறி விட…

“என்னது? அப்ப என் கையெழுத்து நல்லா இல்லியா?” அந்த பொறுமையின் சிகரம் கணவனது சீண்டலை தாங்க முடியாமல் துரத்த, அவனும் அவளுக்குப் பயந்து வீட்டைச் சுற்றி ஓட ஆரம்பித்தான்.

அந்த நிலவொளியில் ஓடிக் களைத்து நின்றவர்கள் சட்டென ஒருவரை மற்றவர் பார்த்து சிரித்து விட்டிருக்க ஒருவர் மற்றவர் தோள் சாய்ந்து புன்னகை பூத்திருந்தனர்.

சுபம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here