என்றும் நீதானே!?_1_ஜான்சி

0
416

அத்தியாயம் 1

அதிகாலை நேரம் அந்த இடமே மிகவும் பரபரப்பாக இருந்தது. அங்கே வம்பு பேச்சுக்கள் இருந்தனவே தவிர, அடுத்து என்ன செய்ய வேண்டும்? என யாரும் பேசக் காணோம்.

“அதுதான் மாப்பிள்ளைப் பையனை காணோமில்ல, அடுத்து என்ன செய்யணும்னு பார்ப்போம்.” பெரியவர் ஒருவர் கூட்டத்திலிருந்து குரல் கொடுத்தார்.

“இந்த சனியனை தலைமுழுக பார்த்தா …எத்தன தடங்கல்?” திரை மறைவில் மணப்பெண்ணாக இருந்தவளின் தலையில் தனது ஆத்திரங்கள் தீர கொட்டுக்களை வைத்து நிமிர்ந்தாளவள்.

வலியில் அம்மணமகளின் கண்களினின்று கண்ணீர் சொட்டு சொட்டாக வடிய, அவள் தலை குனிந்தே அமர்ந்து இருந்தாள். அவளை கொட்டியவளின் இடுப்பில் அமர்ந்து இருந்த குழந்தை “அத்தே” என அவளிடம் பாய முயன்றது.

“உனக்கு என்ன இந்நேரம் அத்தே சொத்தேன்னு?” அவள் இப்போது சிடுசிடுப்புடன் தன் மகனுக்கும் முதுகில் இரண்டு அடிகள் வைத்தாள். குழந்தையின் வீறிடல் மற்ற சப்தங்களோடு கலந்தது.

அழுதுக் கொண்டு இருந்தவளோ தனது வாழ்க்கையை யார் யாரோ எடுத்து கையாளும் அவல நிலையை அறவே வெறுத்தாள். ‘இவை எல்லாவற்றையும் விட்டுவிட்டு எங்காவது ஓடி விடலாமா?’ எனத் தோன்றினாலும் கூட அவளால் அங்கே பதுமை போல வெறுமனே அமர்ந்திருக்கத்தான் முடிந்தது.

“உங்களுக்கு ஆட்சேபனை இல்லைன்னா நான் பொண்ணை கல்யாணம் செஞ்சுக்கிறேங்க” குரல் வந்த திசையில் அத்தனை பேரும் திரும்பிய போதும் குனிந்து அமர்ந்து இருந்த அவள் தனது நிலையினின்று அசைந்தாளில்லை.

*****

‘அவசரம் அவசரம்’, என அவளது மனம் உந்தித் தள்ளியது ‘அவன் வரும் முன்பாகவே அவள் இந்த வீட்டை விட்டு நீங்கிச் செல்ல வேண்டுமாமே? செல்லத்தான் வேண்டும், அவளுக்கென்று நிரந்தர இருப்பிடம் என்று எங்கும் இல்லையே?’ தன்னை மீறி வழிந்த கண்ணீரை, புறங்கையால் துடைத்து எறிந்து விட்டு அந்த பையில் தனது துணிகளை அடுக்கிக் கொண்டு இருந்தாள் கிருத்திகா.

“என்ன? எல்லாம் எடுத்தாச்சா?” அந்த அறைக்குள் வந்த காயத்ரி அவளிடம் கடுமையாய் விசாரித்தாள். அவளது கடுமைகள் எல்லாம் இவளோடு மட்டும் தான். ஆட்களுக்கேற்ப அவள் பேச்சில் குழைவும், திமிரும் அவ்வப்போது மாறி மாறி இடம் பெறுவதுண்டு.

‘கடந்த நாட்களில் அந்த புவனேஸ்வரி வீட்டிலிருந்து வந்தவர்களிடம் எத்தனையாக இவள் குழைவை காண்பித்தாள்?’ என்பதை கிருத்திகா பார்த்துக் கொண்டு இருந்தாளே?

“வீட்டில வேலை செய்யற பொண்ணுக்கா தனியறை கொடுத்து வச்சிருக்கீங்க? உங்க மனசு போல யாருக்கு வரும் அத்தை?” எனச் சொன்னவளின் பேச்சில் காயத்ரி முகம் மலர்ந்த விதம் சொல்லி முடியாது.

“ஆமாங்க அண்ணி, எங்க அம்மா குணம் அப்படி, ஆனா நீங்க கவலைப் படாதீங்க. உங்களுக்கு அண்ணன் கூட திருமணம் முடிஞ்சு நீங்க நம்ம வீட்டுக்கு வர்றதுக்குள்ள இவங்க வேற ஊருக்கு போகிறதா இருக்காங்க.”

மறைமுகமாக கிருத்திகாவுக்கு மிரட்டல் விடுத்திருந்தாள் கிருபாசினி.

“அதுவும் சரிதான், இந்த அறையில் நான் ஷிப்ட் ஆகிக்கிறேன், இங்க இருந்து வீட்டு நிர்வாகத்தை கவனிக்கிறது கூட நல்லாதான் இருக்கும்” அவ்வீட்டின் வருங்கால மருமகள் தனது கண்களால் அந்த வீட்டை அளவிட்டாள். அவளது மனதில் எதிர்கால கற்பனைகள் சுகமாக விரிந்தது.

தனக்காக வீட்டில் தெரிவு செய்த மணமகனது வீடு அவர்களை விடவும் சுமாரானதாக இருந்த போதும், அவனது இலட்சங்களில் வருமானம், போதைப் பழக்கங்களற்ற நல்ல குண நலன்கள் அவளது வீட்டினரை கவர்ந்து இருந்தது.

புவனியை பொருத்தவரையில் அவளுக்கான மணமகன் தெரிவில் வீட்டின் பெரியவரான தாத்தா மற்றும் அவளது பெற்றோர்கள் கருத்தே முக்கியத்துவம் வாய்ந்தது. அதனால் வீட்டை பெரிது படுத்தவில்லை. வருங்கால கணவன் தோற்றத்தில் கம்பீரமாக அழகாக இருக்கின்றான். கூடுதலாக தன்னை போற்றி பாராட்டும் வருங்கால கணவனின் வீட்டினர் என்றிருக்க, தனது எதிர்கால வாழ்க்கை அவளுக்கு மிகவும் பிரகாசமாக தெரிந்தது.

அந்த நேரம் கிருபாசினியின் அலைபேசி ஒலிக்க அவள் நாணிகோணிய விதத்தை பார்த்த புவனிக்கு அது யாராக இருக்கும் எனும் ஊகம் எழுந்து உடனே தெளிவாகவும் ஆனது.

“யாரது? அண்ணன் தானா?” கேட்டவளின் கிண்டல் குரலுக்கு கூச்சமாய் தலையசைத்தவள் தனது வருங்கால கணவன் சந்தோஷீடன் இரகசிய உரையாடல்களுக்காக மறைவிடம் நாடிச் சென்று விட்டிருந்தாள்.

புவனி எனும் புவனேஸ்வரி வளமையான குடும்பத்தை சார்ந்தவள். அவர்களது குடும்பத் தலைவரான தாத்தா சொல்வது தான் அவர்கள் வீட்டுச் சட்டம். தனது இரு பெரியப்பா குடும்பங்கள் மற்றும் இவர்களது குடும்பம் என இவர்களது குடும்பம் மிகப் பெரியது. பெரியப்பாக்கள் வீட்டில் இரண்டிரண்டு ஆண் பிள்ளைகள் இருக்க இவர்கள் தன் அண்ணனுக்கு அடுத்து வீட்டின் கடைக் குட்டியாக இவள்.

வீட்டின் ஒரே பெண் குழந்தை என்பதால் மூவர் குடும்பத்திற்கும் அவள் மிக முக்கியமானவளாகிப் போனாள். அவர்கள் குடும்பத்தில் பெரியப்பா ,மகன்களுக்கு சில வருடங்கள் முன்பாகவே திருமணம் ஆகி இருந்தது. சந்தோஷ் மற்றும் புவனேஸ்வரிக்கு ஒரே வீட்டில் சம்பந்தம் செய்ய வேண்டும் எனும் முனைப்பில் அவர்களது குடும்பத்தினர் இருந்தனர்.

வீட்டின் செல்லப் பெண்ணான அவளது விருப்பம் தாண்டி, அந்த வீட்டில் எதுவும் நடந்தது இல்லை. அவளது நலன் கருதியே பெண் கொடுத்து பெண் எடுக்கும் இந்த அத்தனை ஏற்பாடுகளும் நிகழ்ந்தன. அவர்களது உறவுக்குள்ளாக புவனேஸ்வரியை விரும்பி பெண் கேட்ட அருமையான ஒரு சம்பந்தம் வந்த போதும் கூட அந்த வீட்டில் சந்தோஷீற்கு எடுக்க பெண் இல்லை என்பதால்தான் அவள் வீட்டினர்கள் செல்வனை தெரிவு செய்தது,.

“என்ன இருந்தாலும் அவங்க வீட்டுப் பொண்ணு நம்ம வீட்டில இருந்தா நம்ம பொண்ணை அவங்க நல்லா பார்த்துக்குவாங்க” என்பது புவனேஸ்வரியின் தாத்தாவின் நம்பிக்கை.

இப்படியாக ஒரு குடும்பத்தில் பெண்ணெடுத்து, பெண் கொடுத்து என அங்கே இரு திருமணங்கள் ஏற்பாடு ஆகி இருந்தது. அதில் ஒரு இணை தங்களுக்குள்ளாக இரகசியங்கள் பல பேசி கொஞ்சிக் கொஞ்சி நாட்களை கடந்திருக்க, தான் மட்டும் தனியளாக நாளைக் கடத்துவது புவனிக்கு வருத்தமாக இருந்தது.

தனது தாய் மற்றும் தங்கையுடன் புகைப்படத்தில் இருக்கும் செல்வனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு ‘தான் எப்போது தன்னவனோடு பேசிப் பழகுவது?’ என எண்ணி நின்றாள் அவள்.

செல்வன் புவனேஸ்வரி இணையில் அவர்களுக்குள் முதலில் உரையாடலை நிகழ்த்தியது புவனிதான். அவனை அவன் பணி புரியும் அந்த நாட்டின் நேரத்திற்கு ஒப்ப அலைபேசியில் தொடர்புக் கொண்டு,

 “நான் தாங்க புவனி அதாவது புவனேஸ்வரி அதாவது சந்தோஷ் தங்கச்சி” என்றவளிடம் அவன் அத்தனை பவ்வியமாக,

“வணக்கம்ங்க, திருமண ஏற்பாடு எல்லாம் ஒன்னும் சிரமமில்லையே? அம்மாவால அதிகமா அலைய முடியாது. கிருத்திகாவுக்கும் சில வேலைகள் பகிர்ந்துக் கொடுத்து சேர்ந்து செய்தீங்கன்னா சுளுவா இருக்கும். அவ கிட்ட பேசிக்கோங்க.” என்றிருந்தான்.

‘வீட்டில வேலைக்கு இருக்கிற பெண் மேல இவங்களுக்கு இத்தனை நம்பிக்கையா?’ என அவனது பேச்சில் புவனி அசந்துதான் போனாள்.

அவன் சொன்னது போல கிருத்திகாவின் அலைபேசி எண்ணை காயத்ரியிடம் புவனி கேட்ட போது கிருத்திகாவிடம் அலைபேசி இல்லவே இல்லை என்று காயத்ரி மறுத்து விட்டதோடு, தனது வருங்கால மருமகளுக்கு உதவியாக சென்று வர தனது உறவுமுறையில் சிலரை வீட்டிலேயே இருத்திக் கொண்டார். அதனை புவனேஸ்வரியும் பெரிதளவில் கண்டுக் கொள்ளவில்லை. அதன் பின்னர் எதற்காகவும் செல்வனிடம் பேசும் வாய்ப்பு அவளுக்கு கிட்டவும் இல்லை.

தனது அலைபேசி எண் அவனிடம் இருப்பதால் எப்படியும் தன்னை அழைப்பான் என எண்ணி இருந்தவள் அடுத்தடுத்த நாட்களில் அவனிடம் இருந்து தனக்கு அழைப்பு வராததோடு, அடிக்கடி அவனிடமிருந்து தனது அண்ணனுக்கு அழைப்புகள் வந்ததாக அறிந்த போது ‘இப்படியும் ஒரு கூச்ச குணமுள்ள ஆண் மகன் இருப்பானா?’ என ஆச்சரியம் கொண்டாள்.

காயத்ரியும் கூட ஒரு முறை மகனைக் குறித்துப் பேசுகையில் “செல்வன் திருமணத்திற்காக லீவு எடுத்து வருவதால் தற்போது அவனுக்கு வேலை அதிகம், தனக்கே அவன் இப்போதெல்லாம் அதிகமாக அழைப்பதில்லை.” என கூறி இருந்தார். தான் அவனுக்கு ஒரு முறை அழைத்தாயிற்று, மேலும் மேலும் வலிய பேசுவானேன்? அவனாக அழைக்கும் வரைக்கும் காத்திருப்போம் என எண்ணி புவனேஸ்வரியும் அடக்கியே வாசித்தாள்.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here