என்றும் நீதானே!?_2_ஜான்சி

0
376

அத்தியாயம் 2

“என்ன முன்பின் தெரியாதவங்களை திருமணம் செய்துக் கொண்டோமேன்னு இருக்கா?”

சற்று முன்னர் திருமணம் செய்துக் கொண்ட தனது மனைவியிடம் வினவிக் கொண்டு இருந்தான் அவன். அவன் தன்னையும், தனது படிப்பு, வேலை இவற்றையெல்லாம் பகிர்ந்துக் கொண்டான்.

இவள் தன்னையும் தன்னிடம் இருந்த ஒரு குட்டிப் பையில் அடங்கிய தன்னுடைய உடைமைகளையும் பார்த்துக் கொண்டு இருந்தாள். தன்னைக் குறித்து குறிப்பிட்டுச் சொல்லத்தான் அவளிடம் என்ன இருக்கின்றது? தாழ்வுணர்ச்சி அவளை அரிக்க ஆரம்பித்தது, மனதின் ஏதோ ஓரத்தில் ஒரு பட்சி அவளிடம் தனக்கு இந்த நிழல், இந்த உறவு நிலைக்காது என ஆரூடம் சொன்னது.

“ஏங்க, பேச மாட்டீங்களா?” திரும்ப திரும்ப தன்னிடம் பேச்சுக் கொடுக்கும் அந்த ஆண்மகனை அவமானப் படுத்தி விடக் கூடாதெனும் எண்ணத்தில் மனதில் இருந்தவைகளை கோர்த்து ஒரு வழியாக கேட்டு விட்டாள்.

“அதெப்படி உங்க வீட்டில கேட்காம என்னை கல்யாணம் செய்துக்கிட்டீங்க?, உங்க வீட்டில வருத்தப்பட மாட்டாங்களா?”

“எங்க குடும்பம் ரொம்ப அன்பான குடும்பம். அதுவும் என் மேல என் வீட்டில் இருக்கிறவங்க உயிரையே வச்சிருக்காங்க, நான் ஒன்னு சொன்னா அதை அப்படியே ஏத்துப்பாங்க. அதனால நீங்க எதையும் மனதில் போட்டு குழப்பிக்க வேண்டாம்.”

எதற்கும் தனது வீட்டிற்கு அவளை அழைத்துச் செல்லும் முன்பாக  அவளுக்கு சில நல்ல உடைகளை, தேவையான எல்லாவற்றையும் வாங்கி நல்லதொரு பையில் அவற்றை மாற்றி அவர்கள் வீட்டிற்கு வந்தபோது இரவாகி விட்டிருந்தது. மகன் ஏற்கெனவே அலைபேசியில் விபரம் தெரிவித்து இருக்க அவ்வீட்டின் கதவு வெகு சாதாரணமாக திறந்து இருவரையும் உள்ளே ஏற்றுக் கொண்டது.

****

திருமணத்திற்கு முன் தினம் தான் செல்வன் இந்தியா வந்துச் சேர்ந்தான். வந்தது முதல் அவன் திருமண வேலைகளில் மூழ்கி விட அவ்வப்போது அவன் கேட்ட கேள்விகளுக்கு சரியான பதில் கிடைக்காததை அவன் உணரவில்லை.

மண்டபத்திற்கு புறப்பட்டு நின்ற தங்கையின் மகிழ்ச்சி பார்த்து அவன் மனம் பூரித்தது. இரவே அனைவரும் திருமண மண்டபம் சென்று விட மண்டப வேலைகள் எல்லாவற்றையும் செய்ய ஆள் வைத்திருப்பதாகவும், வீட்டிற்கு வருகின்றவர்களை கவனிக்கும் படியும் இவனுக்கான வேலைகள் பலவற்றையும் காயத்ரி இவனுக்கு சொல்லிச் சென்று இருந்தார்.

மறுபடி தாயிடம் ஏதோ கேட்க, அவர் அவனிடம் மிக முக்கியமான ஏதோ ஒன்றைச் சொல்ல அவன் அந்த வேலையாக ஓட வேண்டி இருந்தது. உறவினர்கள் அவனிடம் “பெரிய இடமாச்சே? அப்புறம் அங்க தான் தங்கிறதா இருக்கியா?” என பேசியவைகள் எவையும் அவனுக்கு புரியவில்லை.  

இரவு முழுக்க ஓட்டத்தின் நடுவில் தான் தேடியவள் கண்ணில் படா விட்டாலும் கூட ‘வேலையாக இருப்பாளோ? சரி வேறு எங்கே சென்று விடுவாள்?’ என எண்ணி கிடைத்த இடத்தில் சில மணி நேரங்கள் தன் வீட்டிலேயே தூங்கி, காலை 7 மணி முகூர்த்தம் என்பதால் அதிகாலை நான்கு மணிக்கே புறப்பட்டு இலகுவாக பேண்ட் ஷர்ட்டில் நின்றவனுக்கு பெண் வீட்டிலிருந்து அலைபேசியில் அழைப்பு வந்தது.

தான் வீட்டில் இருப்பதாக கூறியவனுக்கு மரியாதை செய்யும் நிமித்தம் பெண் வீட்டினர் இவனைத் தேடி வர, அவர்கள் வரவின் காரணமாக அவனுக்கு சில பதில்கள் கிடைத்தன. அவை அனைத்தும் அவனது மனதிற்கு ஒவ்வாதவைகளாக இருந்தன.

முன் தினத்தில் இருந்தே அவனிடம் பெண் வீட்டார் மிகப் பணிவாக பேசியதுக் கண்டு, ‘தங்கை வாழப் போகும் குடும்பம் மிக நல்ல குடும்பமாக இருக்கின்றதே? பெண் வீட்டினரோடு மாப்பிள்ளை வீட்டினர் இத்தனை தன்மையாக பேசுவது எல்லாம் பெரிய விஷயம் தான்’ என எண்ணி இருந்தான்.

அதற்கான காரணம் இப்போது சற்று முன்னர்தானே அவனுக்கு புரிய வந்தது? அவர்கள் அவனுக்காக கொண்டு வந்து இருந்தவைகளை கண்ட போது முதல் முறையாக அதிர்ச்சி அடைந்தான் எனின், அவன் திருமண மண்டபம் சென்றபோது அங்கு அலங்கரிக்கப் பட்டு இருந்த மணமக்கள் பெயர்களைக் கண்டு மறுமுறை வெகுவாக கலங்கிப் போனான்.

புவனேஸ்வரியின் அண்ணன்களுக்கு செல்வனின் முக மாறுதலின் காரணம் புரியவில்லை. செல்வனோ தான் உடனடியாக சந்தோஷ் மற்றும் புவனேஸ்வரியிடம் பேச விரும்புவதாகச் சொல்ல சந்தோஷீக்கு ஒதுக்கப் பட்ட அறையில் அவர்கள் மூவரும் சந்திப்பதாக முடிவானது.

திருமணத்திற்காக ஆயத்தமாக புறப்பட்டுக் கொண்டு இருந்த புவனிக்கு சந்தோஷிடமிருந்து அலைபேசியில் செய்தி வந்தது. தன்னிடம் செல்வன் பேச விரும்புகின்றான் என அண்ணன் அவனது அறைக்கு வரச் சொன்னதும் முதன் முறையாக அவனை நேரில் காணவிருக்கும் ஆர்வத்தில் அவள் கூச்சமும் தயக்கமுமாக அந்த அறைக்குள் நுழைந்தாள்.

காயத்ரியோ தனது திட்டத்தின் படி இன்னும் சற்று நேரம் கழித்து மகன் வருவான், என்ன நடக்கின்றது என தன்னிடம் விபரம் கேட்பான். தான் சொல்ல வேண்டியவைகளை எவ்வாறு அழுத்தம் கொடுத்துச் சொல்ல வேண்டும்? எப்படி எல்லாவற்றிற்கும் அவனை சம்மதிக்கச் செய்ய வேண்டும்? என தான் பேச வேண்டியவைகளை மனனம் செய்த வண்ணம் அந்த திருமண மண்டபத்தின் வாயில் நோக்கி பார்த்தவராக காத்திருந்தார்.

“என்ன இருந்தாலும் நம் வீட்டின் மாப்பிள்ளையை வீடு சென்று அழைத்தால் தான் மரியாதை” என புவனேஸ்வரியின் தாத்தா கூறியிருக்க அவர் பேச்சை தட்டாமல் பெண்ணின் பெரியப்பா மகன்களான அண்ணன்கள் மாப்பிள்ளைக்கு மரியாதை செய்ய எண்ணி அதிகாலையே வீடு சென்று செல்வனை ஏற்கெனவே திருமண மண்டபம் அழைத்து வந்தது காயத்ரி அறிந்திராத ஒன்று.

தனது அண்ணனின் அறைக்குள் நுழைந்த புவனி கண்டது வெகு சாதாரணமாக புறப்பட்டு நின்ற செல்வனைத்தான். அவன் இன்னும் முகம் கூட மழித்து இருக்கவில்லை. புதுமாப்பிள்ளைக்கான எந்த பொலிவுமின்றி அவனது முகம் வாடி கருத்துப் போய் இருந்ததைக் கண்டதும் அவளுக்கு நெருடியது.

மாப்பிள்ளை நின்ற கோலத்தில் ஏதோ சரியில்லை என உணர்ந்த சந்தோஷ் தங்கை உள்ளே வரவும் கதவை உள்பக்கமாக தாளிட்டான். கதவினின்று திரும்பியவனை செல்வன் நின்ற விதம் இன்னுமாய் அசைத்தது.

“எனக்கு ஏற்கெனவே திருமணம் ஆகிருச்சுங்க, இதெல்லாம் என்னன்னு எனக்குத் தெரியாது. தயவு செய்து என்னை மன்னிச்சிடுங்க, ஆனால் என் தங்கை வாழ்க்கையை இது பாதிச்சிரக் கூடாதுங்க அவ பாவம்” தன்னிரு கைகளை கூப்பி நின்றிருந்தான் செல்வன்.

புவனேஸ்வரிக்கு தான் அவனோடு பேசிய போது இடைவெளி விட்டு மரியாதையாக பேசியது, அவன் நடவடிக்கை எல்லாவற்றின் காரணமும் இப்போது சட்டென்று புரிந்தது. நொடி நேரத்தில் அவளது கனவுக் கோட்டைகள் இடிந்து விட்டிருக்க அங்கே அவள் எப்படி உணர்வற்று சரியாமல் நின்றாள்? என்பதையே அவளறியாள்.

‘தங்களைச் சுற்றி என்ன நிகழ்ந்துக் கொண்டு இருக்கின்றது?’ என்பதை உணர முடியாமல் உடன் பிறப்புகள் இருவரும் திக்கென்று நிற்க, அவர்களுள் முதலில் சுதாரித்தவன் சந்தோஷ் தான். எதிரில் நிற்பவனை அடித்து நொறுக்கி விடும் உத்வேகத்துடன் பாய்ந்து அருகில் வந்தவன் செல்வனிடம் விரல் உயர்த்தி பேசலானான்.

“அதென்ன வெளிநாட்டில் போய் அம்மா அப்பாக்கு தெரியாம கல்யாணம் செஞ்சுக்கிறது, அப்புறம் உள்நாட்டில் ஒரு பொண்ணை கட்டிக்க திட்டம் போடுறது? இதெல்லாம் எந்த ஊர் நியாயம் ம்ம்?” உறுமினான். ஒரு சில நாட்கள் தான் என்றாலும், தான் அவனோடு பேசும் போதும் கூட இதனை அவன் குறிப்பிட வில்லையே எனும் ஆதங்கம்.

“ஐயோ இல்லிங்க, வெளிநாட்டில எல்லாம் இல்லை இங்க தான் என் கல்யாணம் நடந்தது. ஒரு இக்கட்டான சூழ்நிலையில் என் மனைவி சிக்கி இருந்தப்ப, எதிர்பாராமல் நடந்தது எங்க திருமணம், அடுத்த இரண்டு நாளில் ஆன்சைட் போக வேண்டி இருந்ததால, என் மனைவியை அம்மா தங்கச்சி பொறுப்பில வீட்டில் விட்டுட்டு போனேன்.” அவன் கூறவும் ஏதோ புரிந்தவள் போல எதிரில் நின்றவள்

“கிருத்திகா? கிருத்திகாதானே?” எனவும்

புவனேஸ்வரி வாய்வழி கேட்ட அந்த பெயரில் குளம் வற்றி நீரற்று மூச்சுக்கு துடிக்கும் மீன் மழையை கண்டதும் ஆர்ப்பரிப்பது போல செல்வன் பரிதவித்தான்.

“கிருத்திகா ஆமாங்க கிருத்திகா உங்களுக்கு என் மனைவியை தெரியுமாங்க? அவளை நேத்து வந்ததில் இருந்து தேடுறேன் காணலியே. எப்படியும் இங்கே தானே இருப்பா, கல்யாண வேலையில் மும்முரமா இருக்கிறா போலன்னு நான் பாட்டுக்கு களைப்பில் தூங்கி எழுந்ததும் இந்த விஷயம்னு புரிஞ்சது. இதெல்லாம் எதுக்கு நடந்ததுன்னு எனக்கு இப்ப ஆராய நேரமில்லை. அதனாலத்தான் முதலில் பெரியவங்க கிட்ட பேசாமல் உங்க இரண்டு பேர் கிட்ட முதலில் பேசிரலாம்னு நினைச்சேன். இனிதான் அவளைப் போய் தேடணுங்க… எங்க போனாளோ? என்ன ஆனாளோ?”

தனது திருமணத்திற்கு சான்றான புகைப்படத்தையும், காணொளியையும் அவர்களுக்கு காண்பித்தவனுடைய புலம்பல்கள் நிற்கவில்லை. குழந்தையை பறிகொடுத்த தகப்பனை போல அவனுடைய செய்கைகள் இருந்தன.

கிருத்திகா குறித்து தனக்குத் தெரிந்தவைகளை அவனிடம் பகிர்ந்துக் கொண்ட புவனேஸ்வரி இனி என்னச் செய்ய வேண்டும்? என்று ஒருவாறாக முடிவிற்கு வந்து விட்டிருந்தாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here