என்றும் நீதானே!?_3_ஜான்சி

0
353

அத்தியாயம் 3

வரிசையாக தொழிலாளர்கள் நின்றவண்ணம் அந்த ஃபேக்டரியில் மிக சுறுசுறுப்பாக வேலை நடந்துக் கொண்டு இருந்தது. கை தன் போக்கில் வேலை செய்தாலும் வாய் அது போக்கில் பேசுமல்லவா?. தினம் 12 மணி நேர நின்று பணிபுரியும் ஷிப்டில் அவர்களுக்கான ஒரே ஆசுவாசம் அதுதானே? தன்னருகே நின்றவளின் அமைதி மற்றவளின் மனதை உறுத்தியது.

“ஏ, என்னாச்சு? எதுக்கு இன்னிக்கு இத்தனை அமைதியா இருக்குற நீ?”

“இல்ல கல்யாணம் தாலி கட்டினா மட்டும் போதாதாம், அதை பதிவு செய்யணுமாம் இல்லைன்னா அந்த கல்யாணம் செல்லுபடியாகாதாம் புள்ள”

“இப்படி யார் சொன்னது?”

“வீட்டில பேசிக்கிட்டாங்க, அவர் வந்ததும் அவருக்கு வேற கல்யாணம் செஞ்சு வைக்கப் போறாங்களாமாம்.அவருக்கும் எனக்கும் ஏணி வச்சா கூட எட்டாதாம் அதனால பொருத்தமான பொண்ணு பார்த்து கட்டி வைக்கப் போறாங்களாமாம்.”

“உன் புருசனுக்கு போன் போட்டு சொல்ல வேண்டியது தானே?”

“என் கிட்ட அவர் நம்பரும் இல்ல, போனும் இல்லியே?”

“கட்டின புருசன் நம்பர் இல்லைன்னு வெளில சொல்லாத வெட்கக் கேடு, சம்பாதிக்கிற அத்தனையையும் வீட்டில கொடுத்திடுற, ஒரு மாசமாவது மிச்சம் பிடிச்சு போன் வாங்கலாமில்ல?”

“அதெப்படி, நான் வீட்டுல என் சாப்பாட்டுக்கு பணம் கொடுக்க வேண்டாமா?”

“அப்ப உன் புருசன் அனுப்புற காசு? அப்படியும் விடிஞ்சதில் இருந்து நாயா பேயா வீட்டுக்கு உழைக்கிறியே? , அப்புறம் இந்த எட்டாயிரம் காசாலத்தான் அவங்க வாழறாங்களா என்ன? இவங்க இப்படி பேசுராங்கன்னு பயப்படாத புள்ள அதெல்லாம் கோவில்ல இல்லன்னா மண்டபத்தில தாலி கட்டினாலும் செல்லும்.”

“எதுக்கும் கொஞ்சம் பதட்டமாதான் இருக்கு. விபரம் தெரிஞ்ச யார் கிட்டயாச்சும் கேட்போமா புள்ள?”

“சரி சரி கேப்பம் கேப்பம்”

****

புவனேஸ்வரி சற்று அந்த சூழ்நிலை புரிந்து தெளிவாகி இருந்தாள். இப்போது எல்லா வகையிலும் பாதிக்கப் பட்டவள் அவள் மட்டுமே என்பதால் அவள் எத்தனை தெளிவாக இருக்கின்றாளோ அது பொறுத்தே அந்த குடும்பத்தின் நிலையும் அமையும் எனப் புரிந்துக் கொண்டாள்.

“செல்வன் சார், நீங்க இங்கேயே கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துக்கோங்க, நாங்க எங்க குடும்பத்தோட கலந்து பேசிட்டு வந்திடறோம்” அவளது கண்களினின்று இப்போது காதல் மயக்கம் விடுபட்டிருந்தது.

சந்தோஷ் நொந்த மன நிலையில் இருந்தான் வருங்கால மனைவியின் மீது இருந்த அந்த நல்ல எண்ணங்கள் அத்தனையும் சிதிலமாகிக் கிடந்தன. ‘இனியும் அவளை திருமணம் செய்தாக வேண்டுமா?’ எனும் சஞ்சலங்கள் எழுந்த போதும் கூட தங்கை என்னச் சொல்கின்றாளோ? அதுவே தீர்வு என தனது மனதில் குறித்துக் கொண்டான்.

அடுத்த பத்தாவது நிமிடம் திருமண மண்டபத்தின் வாயிலில் இருந்த, “செல்வன் வெட்ஸ் புவனேஸ்வரி” எனும் அத்தனை அலங்காரங்களும், சுற்றி முற்றி இருந்த ப்ளேக்ஸீகளும் தூக்கப்பட்டு இருந்தன.

‘தன்னைச் சுற்றி என்ன நடக்கின்றது? என அறியாமல் காயத்ரி அலமலந்து நின்றார். செல்வனை அவர் திருமண மண்டபத்தில் காணவே இல்லை. இப்போது மகளை தேடிச் சென்றால் அவளையும் காணவில்லை, தன்னுடைய அலைபேசியை அறையில் விட்டுச் சென்றிருந்தாள்.

சம்பந்தி வீட்டினர் எவருடைய அலைபேசியும் எடுக்கப் படவில்லை. அவர்கள் எங்கு இருக்கின்றார்கள்? என்று கூட அவருக்கு இன்னும் தெரியவில்லை. இன்னும் திருமணம் நடைபெற ஒன்றரை மணி நேரங்களே இருந்தன. இவரோ ஒருவர் மாற்றி மற்றவருக்கு அழைத்து அழைத்தே ஓய்ந்து விட்டார்.

கிருபாசினிக்கு தாயின் திட்டங்களின் படி எல்லாவற்றையும் நடத்தி விட்டு, இப்போது தான் மட்டும் தனியே கணவன் வீட்டார் முன்பாக நடந்தவைகளுக்காக பதில் கொடுப்பது பெரும் துயரமாக இருந்தது.

சந்தோஷின் கண்களில் காதலன்றி வேறொன்றும் கண்டிராதவள் தற்போது அவன் கண்களில் தனக்கான சலிப்பையும், வெறுப்பைக் கண்டதும் அவளது மனம் திடுக்கிட்டது.

 “அம்மாவை கூப்பிடுங்க சந்தோஷ், அம்மா சொல்லுவாங்க சந்தோஷ் ப்ளீஸ்”

தனக்காக அன்னை பேசுவாள் எனும் எண்ணத்தில் பலமுறை தாயை அழைத்து தனக்காக பேசச் சொல்லும் படி அவள் கூறியும் அவன் அசைந்துக் கொடுத்தானில்லை.

சந்தோஷின் தாத்தா கிருபாசினியிடம்

“நடந்தது என்ன? இதை நடத்தியது யார் யார்னு எங்களுக்கு தெளிவாகவே புரிஞ்சிருச்சு, உங்க உறவே வேணான்னு நினைக்கிறதா இருந்தால் மட்டும் தான் உங்கம்மாவை அழைச்சு பேசணும். சொல்லப் போனா நாங்க அதைத்தான் செய்திருக்கணும். ஆனால், உன்னை இன்னும் இந்த வீட்டு மருமகளாக நினைக்கிறதாலத்தான் உங்க அம்மாவை அழைக்காம உன் கிட்ட பேசிட்டு இருக்கிறோம். குறைந்த பட்சம் இந்த கல்யாணமாவது எந்த பிரச்சனையும் இல்லாமல் நல்லா நடக்கட்டும் என்று நினைக்கிறேன்” எனக் கூறியதை தலைகுனிந்து கேட்டுக் கொண்டு இருந்தாள் அவள்.

“தங்கச்சி வாழ்க்கை அந்தரத்தில் கிடக்குது, இப்ப என் கல்யாணம் ரொம்ப முக்கியமா? அதுவும் என் தங்கச்சியை இரண்டாம் தாரமா அவங்கண்ணனுக்கு கட்டிக் கொடுக்க திட்டம் போட்டவ கூட நான் கல்யாணம் செஞ்சுக்கிறதா? பொண்ணு பார்த்துட்டு வந்ததில் இருந்து தினம் தினம் இரண்டு பேரும் எத்தனை பேசிருப்போம், ஒரு நாளாவது இவ என் கிட்ட இதெல்லாம் சொல்லி இருப்பாளா? இப்படி ஒரு கல்மனசுக்காரியா இருந்திருக்கா… தன்னோட நல்லதுக்காக தன் சொந்த அண்ணா பொண்டாட்டியையே வீட்டை விட்டு விரட்டிருக்கா… இவளை கட்டிக்கிட்டு என் வாழ்க்கையும் நரகம் ஆகுறதுக்கா?” சந்தோஷ் வெடித்ததில்,

“அம்மா சொன்னதில் புத்திக் கெட்டுப் போயிட்டேங்க, நான் ஒன்னும் அவ்வளவு மோசமானவ இல்லிங்க… என்னை மன்னிச்சுக்குங்க” தன் வாழ்க்கையை தவற விட்டு விடுவோமோ எனும் பயத்தில் கிருபாசினி அழ ஆரம்பித்தாள்.

“ச்சு அண்ணா, என்ன பேசறீங்க? என் வாழ்க்கை அந்தரத்தில் கிடக்குதா? அதெல்லாம் இல்லை. இவங்களைப் போல இவங்க அண்ணனும் ஏமாத்தி இருந்திருந்தால் தான் என் வாழ்க்கை அந்தரத்தில் இருந்திருக்கும்.குறைந்த பட்சம் அந்த மனுசனாவது நேர்மையானவரா இருந்ததால என் வாழ்க்கை தப்பிச்சது.”

“எல்லாம் என்னாலத்தானே குட்டிம்மா? … ஒரே வீட்டில பொண்ணெடுத்து, கொடுத்துன்னு இருந்தா நல்லதுன்னு நான் சொல்லப் போய் தான் உனக்கு இன்னிக்கு இந்த நிலைமை?”

பேத்தியிடம் வந்து நின்ற தாத்தா அவளை ஆறுதலாக தனது தோளில் சாய்த்துக் கொண்டார். என்னதான் அவர் தோற்றத்தில் கம்பீரமாக தோன்றினாலும் அக்குரலில் அவரது மனம் கலங்கியிருந்தது தொனித்தது.

புவனியின் பெற்றோரின் கண்களும் கலங்கி இருக்க, பெரியவர் பேச்சிற்கு கட்டுப்பட்டு அனைவரும் அமைதி காத்து நின்றனர். இரசாபாசம் ஆகிவிடக் கூடாது என்பதாலேயே புவனி நேரடியாக தாத்தாவிடம் பேசி சந்தோஷின் திருமணம் நடைபெறுவதை சாத்தியமாக்கி இருந்தாள். என்ன இருந்தாலும் புவனியின் திருமணம் நடக்காமல் நின்றது அவர்களைப் பொறுத்த வரையில் மிகப்பெரும் துன்பமே.

“அண்ணி…” எதையோ சொல்ல விழைந்த கிருபாசினியை நோக்கி கை உயர்த்திய புவனேஸ்வரி “தயவு செய்து என்னை அண்ணின்னு மட்டும் அழைக்காதீங்க. என்னமோ போல இருக்கு” என தடுத்தாள். அதைக் கேட்டு முகம் கன்றியவளோ பேசாமல் தலை குனிந்தாள்.

புவனி இப்போது சந்தோஷை நோக்கி, “இங்க பாருண்ணா, இவங்க யாரோ ஒரு பொண்ணுக்கு செய்ததை நாமளும் செய்ய வேணாம், உங்களைப் பொறுத்த வரைக்கும் எத்தனை ஆசையா இரண்டு பேரும் திருமணத்துக்கான ஆசைகள் வளர்த்து இருந்தீங்க என்னால அது கெட்டுப் போகக் கூடாது. அப்படி எதுவும் ஆச்சுன்னா என்னை என்னாலயே மன்னிக்க முடியாது. குறித்த நேரத்தில் உன் திருமணம் நல்லபடியா நடக்கணும் அதுதான் என் ஆசை. என் வாழ்க்கை என்னாகுமோன்னு நீங்க பயப்பட வேண்டாம். அடுத்ததா நீங்க எந்த முகூர்த்தத்தில் சொல்லுறீங்களோ அன்னிக்கு, அந்த தேதியில், நீங்க சொல்லுற மாப்பிள்ளை கூட என்னோட திருமணம் நடக்கும்.”

“அதெப்படி இந்த பொய்காரி கூட நான் திருமணம் செஞ்சுக்கிறது? இப்பவே இவ்வளவு தகிடுதித்தம் செஞ்சவ இனியும் பொய் சொல்ல மாட்டான்னு என்ன நிச்சயம்?”

சந்தோஷின் நம்பிக்கையற்ற வார்த்தைகள் கிருபாசினியை கூறு போட்டது. முன் தினம் வரையிலும் எத்தனை எத்தனை காதல் மொழிகள் அத்தனையையும் தனது செயல்களால் கெடுத்துக் கொண்டாளே? இறைஞ்சும் பார்வையால் அவனை பார்த்துக் கொண்டு இருந்தாள் அவள். இழந்த நம்பிக்கையை பெறுவாளா அவள்?

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here