என்றும் நீதானே!?_4_ஜான்சி

0
315

அத்தியாயம் 4

“என்னதான் கோவில்ல கல்யாணம் செய்தாலும் அதை பதிவு செய்துக்கணும் இல்லைன்னா சட்ட பூர்வமா அது செல்லாதும்மா” வக்கீலம்மா சொல்வதை மனம் தொய்ந்து பார்த்துக் கொண்டு இருந்தாள் அவள்.

“அப்படின்னா என் வீட்டுக்காரர் நினைச்சா இன்னொரு கல்யாணம் பண்ணிக்கலாமா?” அவன் கட்டிய தாலியை பரிதவிப்போடு பற்றிக் கொண்டவளாக கேட்டாள்.

“உங்க திருமணம் பதிவாகலை என்கிறதை சாதகமா எடுத்து அவர் ஒருவேளை இரண்டாவதா திருமணம் செய்ய நினைத்தால் செய்யலாம். ஆனால், இன்னிக்கு தேதியிலயும் திருமணத்தை பதிவு செய்யாம எத்தனையோ தம்பதிகள் ஒற்றுமையா வாழத்தான் செய்றாங்க. நீங்களும் உங்க கணவரும் இப்ப வேணும்னாலும் உங்க திருமணத்தை பதிவு செய்துக் கொள்ளலாம். பயமா இருந்தா உங்க கணவரிடம் மனசு விட்டு பேசுங்க.”

“ம்ம்…”

“பதிவு திருமணம் என்பது உங்களுக்கோ, உங்க வாரிசுகளுக்கோ சட்ட ரீதியான உதவி தேவைப்படும் போது சான்றாக உதவும் என்கிறதால திருமணத்தை பதிவு செய்வது நல்லதுதான்மா.”

‘ம்ஹீம்… வாரிசா? எங்க நமக்கு அந்த கொடுப்பினை இல்லையே’ மனதிற்குள்ளாக பொருமியவள் விடைப்பெற்று வெளியில் வந்தாள். வந்ததும்…

“அதான் பேசச் சொல்லுறாங்கல்ல, உன் வீட்டுக்காரர் கூட பேச வேண்டியதுதானே?”

“அதெல்லாம் அவங்க அம்மா என் கிட்ட அவர் பேச போன் தராதுடி, அவர் பேசறப்ப கிட்ட நின்னுக்கிட்டே என் கிட்ட போன நீட்டும் அவரு நல்லா இருக்கியான்னு நாலு வார்த்தை கேட்பார், நான் ம்ம் ம்ம் ன்னு பதில் சொல்வேன் அவ்வளவுதான் போன் திரும்ப வச்சுக்கும். என் கிட்ட அவர் நம்பர் கூட இல்லை. கேட்டா தரவும் தர மாட்டாங்க.”

“என்னடி சொல்லுற? எப்படித்தான் உன் பிரச்சனையை சரி பண்ணுறது?”

“பார்ப்போம்” இரு பெண்களும் பெருமூச்செழுந்தனர்.

***

அண்ணனின் திருமணம் நடைபெற்றே ஆக வேண்டுமென்பதில் புவனி உறுதியாய் நிற்க காயத்ரியை கலந்துக் கொள்ளாமல் மேடையில் சந்தோஷீம், கிருபாசினியும் வந்து அமரவும் காயத்ரிக்கு பதட்டம் மிகவாயிற்று.

தனது அருகில் வந்து நிற்கும் செல்வனை ஏறிட்டுப் பார்த்தார் காயத்ரி. என்னென்னவோ யோசித்து வைத்து இருந்தார்தான் ஆனால், ஒன்றும் பேச முடியவில்லை. அவர் அருகில் நின்று தங்கையின் திருமணம் முழுவதும் நிறைவேறும் மட்டும் நின்று கண் குளிர பார்த்து இரசித்தவன். தன் கையில் இருந்த பையில் நோட்டுக்கட்டுக்கள் இருக்க அத்தனையையும் தாயின் கைகளில் திணித்தான்.

“இன்றைக்கு உங்களுக்கு நிறைய செலவு இருக்கும்… இந்த பணம் காணவில்லைன்னா இந்த கார்ட் உபயோகிச்சுக்கோங்கம்மா. பணத்துக்கு நீங்க கவலையே பட வேணாம் வழக்கம் போல மாசா மாசம் டான்னு வந்திடும்… பார்த்துக்கோங்கம்மா”, சொன்றவன் விறுவிறுவென்று அங்கிருந்து நகர்ந்து விட்டான்.

‘இரண்டு திருமணங்கள் என்றுச் சொன்னார்களே?’ என மனதில் பலர் முணுமுணுத்துக் கொண்டனர், சிலர் வாய்விட்டு கேட்கவும் செய்தனர். காயத்ரி பதில் சொல்லியும் சொல்லாமலும் சமாளித்துக் கொண்டு இருந்தார்.

தனது மகன் தான் சொல்வதற்கு ஏற்ப நடந்துக் கொள்வான் எனும் தனது திட்டம் பொய்த்துப் போனதில் கோபமும், நானில்லாமலா என் மகள் வந்தாள்? என்னை கலந்தாலோசிக்காமல் எப்படி எனது மகளின் சம்பிரதாயங்களை எல்லாம் தங்களது உறவினர்களைக் கொண்டு நடத்தலாம்? எனும் முறுமுறுப்பில் இருந்தவர் மண்டபம் காலி செய்யும் போது மணமக்கள் நேரடியாக மாப்பிள்ளை வீட்டிற்கே செல்வதாக முடிவாகவும் அனைவர் முன்பும் நியாயம் கேட்டு பொரிந்து விட்டார்.

“அம்மா இப்ப என் வாழ்க்கை உன் கையிலமா, கொஞ்சம் அமைதியா இரு…ப்ளீஸ்மா” கிருபாசினி தாயிடம் கெஞ்சினாள். தன் தாய்க்காக இந்த மாப்பிள்ளை போனால் இன்னொருவன் என சந்தோஷை  அவளால் விடமுடியாதே?

“உங்களுக்கு பெத்தவ வேணாம், நேத்திக்கு வந்தவங்கதான் முக்கியம்.” பொருமினார்.

“வேணும்னா உங்க மகளை உங்க கூடவே அழைச்சுட்டு போங்க, எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை” சந்தோஷ் சொல்ல கிருபாசினி பதறினாள்.

“அம்மா… ஏன் மா?”

முயன்று தன்னை அடக்கிக் கொண்ட காயத்ரி மகள் மண்டபம் விட்டு நீங்கும் வரை அங்கு நின்றவர் கை நிறைய பணத்தோடும் மகன் தந்த அவனுடைய அந்த வங்கிக் கணக்கின் அட்டையோடும் வீடு திரும்பினார்.

மகன் இத்தனையாக முட்டாள்தனம் செய்வானென்று அவர் நினைத்து இருக்கவில்லை. இரண்டு வருடங்கள் முன்பாக திடீரென்று அவன் மணம் முடித்து வந்ததும், அப்போது அவனை நம்பி புதிதாக கட்டிய அந்த வீட்டின் கடன்கள், வரவு செலவுகள் கூடவே மகளின் திருமணமும் இருக்க அவரால் மகனை எதிர்த்து ஒன்றுமே சொல்ல முடியவில்லை,

ஏற்கெனவே மகனது இரு ஆண்டுக்கால வெளி நாட்டுப் பயணம் முடிவாகி இருந்ததை அறிந்து இருந்ததால் அந்த சந்தர்ப்பத்தை முழுக்க முழுக்க தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார். மகனும் மருமகளும் தம்பதியாக வீட்டுக்கு திரும்பவே நள்ளிரவு ஆகி இருந்ததால் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் வீட்டுக்குள் இருவரையும் எடுத்துக் கொண்டவர் அந்த பெண்ணை மருமகள் என எவருக்கும் அறிவிக்கவே இல்லை.

திருமணம் செய்துக் கொண்டதோடு சரி செல்வனும் தாயை நம்பி தன் மனைவியை ஒப்படைத்தவன் தன் வேலை வெளிநாட்டுப் பயணம் என மும்முரமாக இருந்தான். புறப்பட்டுச் செல்லும் முன்பாக, மனைவிக்கென தேவையான பொருட்கள், தன்னுடன் பேச வசதியாக புதிய எண் இணைப்புடன் அலைபேசி, செலவழிக்க பணம் என கொடுத்திருந்தான். அவன் வீட்டை விட்டுச் சென்ற அடுத்த நிமிடம் அத்தனையையும் கிருத்திகாவிடம் இருந்து தனது கையில் வாங்கிக் கொண்டார் காயத்ரி.

அடுத்து தான் வாழ வந்திருக்கும் வீடு என வீட்டின் வேலைகளை பொறுப்பெடுத்து செய்ய ஆரம்பித்த கிருத்திகாவின் தலையிலேயே அத்தனை வேலைகளையும் சுமத்தி விட்டு தாயும், மகளும் சொகுசாக இருந்தனர். கூடுதலாக அவள் இலவசமாக உண்பதாக பேசியே அவள் மனதை இருவரும் வருத்த, அக்கம் பக்கம் விபரம் கேட்டு தேடி, தனது உணவிற்காக உழைக்க வேண்டி கிருத்திகா வேலைக்குச் செல்ல ஆரம்பித்தாள்.

அவளுக்கு தன் கணவன் திரும்ப வந்த பின்னே தன் வாழ்வு மாறிவிடும் எனும் நம்பிக்கை இருந்தது. இங்கு நடப்பதை விடவும் பலவிதமான கொடுமைகளை அவள் கேட்டிருக்கின்றாளே? தன் சொந்த வீட்டின் வேலையை செய்வதெல்லாம் வீடே இல்லாதவர்களை பொருத்தவரைக்கும் கொடுமை எனும் கணக்கில் வராது. அதனால் அவளை அவ்வீட்டினர் பொருட்டாய் மதிக்காத போதும் தன் வீடு எனும் உணர்வுடன் அவளால் அத்தனையையும் கடக்க முடிந்தது.

வேலைக்குச் செல்வதால் அவளுக்கு கிட்டியதும் நன்மையே, இத்தனை ஆண்டுகள் கிடைக்காத நட்புக்கள் எல்லாம் இப்போது கிடைத்திருக்கின்றனவே? பேசிக்கொண்டே வேலை செய்வதில் அந்த பேக்டரியில் 12 மணி நேரங்கள் நின்று பணிபுரிந்தாலும் கால்வலியே தெரிவதில்லை. விளையாட்டும் சிரிப்புமாக அது கிருத்திகாவின் புது உலகம்.

ஆரம்பத்தில் ஆறாயிரமாக இருந்த அவளது சம்பளம் தற்போது எட்டாயிரமாக மாறி இருந்தது. தனக்கென சொற்ப பணத்தை வைத்துக் கொண்டு மொத்தத்தையும் மாமியாரிடமே கொடுத்து விட இப்படியொரு அடிமை தேடினாலும் கிடைக்காது எனும் முடிவிற்கு காயத்ரி வந்திருந்தார்.

காயத்ரி கிருத்திகாவை மருமகளாக ஏற்கவோ, அறிவிக்கவோ இல்லை எனினும், ஆரம்பத்தில் மகனது விருப்பத்திற்கு மாறாக நடக்கும் எண்ணம் காய்த்ரிக்கு சிறிதளவும் இல்லை. புவனேஸ்வரி குடும்பத்தினர் குறித்த தகவலை தரகர் கொண்டு வந்த போது தான் ‘மகனுடைய வாழ்க்கை சிறக்க இப்படியொரு வாய்ப்பு இருக்கும் போது அதை தவற விடுவானேன்?’ என அவருக்கு தோன்றி இருந்தது.

அது நாள் வரையில் சொந்த மருமகள் கிருத்திகாவை குறித்து சொந்தக்காரப் பெண் என மற்றவர்களிடம் சொல்லி இருக்க, யாருக்கும் செல்வனுக்கு திருமணமானது தெரிய வந்திருக்கவில்லை.அதனால்தான் அந்த சம்பந்தம் அவர்களை தேடி வந்தது. வீட்டில் இருக்கும் போது அடுப்படியிலும், மீதி நேரம் வேலையிலும் கழிக்கும் கிருத்திகாவிற்கு தன் கணவனுக்கு பெண் பார்க்கும் விஷயம் தெரியாமல் போயிற்று. தெரிந்தே இருந்தாலும் அவளுக்காக சண்டையிட, அவள் உரிமையை பெற்றுக் கொடுக்க யார்தான் இருக்கிறார்கள்?

இளம் வயதில் கணவனை இழந்த காயத்ரி வெகு சிரமத்துடன் தான் குழந்தைகளை வளர்த்து இருந்தார். செல்வனின் படிப்பினால் மட்டும் தான் அவர்கள் குடும்பம் மீண்டு வந்துக் கொண்டு இருந்தது. இவர்களது வறுமையில் இவர்களை விலக்கி வைத்த சொந்தங்களை இவர்களும் மறுபடி நாடவில்லை. செல்வன் தன் நண்பனின் ஊருக்குச் சென்ற சமயம் நிகழ்ந்த திருமணம் என்பதால் இங்கு உறவிலும் யாருக்கும் அத்திருமணம் குறித்து தெரியவர வாய்ப்பில்லாமல் போனது.

காயத்ரிக்கு படிப்பறிவு இல்லையென்றாலும் சூட்சும அறிவு அல்லது சூது கொண்ட அறிவு மிக அதிகம். எப்படி எப்படி நடந்துக் கொண்டால் இந்த சம்பந்தத்தை தக்க வைத்துக் கொள்ளலாம் என திட்டமிட்டு காய் நகர்த்தினார்.

பஞ்சப் பராரியான கிருத்திகாவை பிடிக்காத கிருபாசினிக்கு தன் அண்ணனுக்கு இணையான அண்ணியாக புவனேஸ்வரியை கற்பனை செய்ய மிகப் பிடித்தது, தனக்கு இணையாக வரவிருக்கும் சந்தோஷையும் தான். அப்படியும் என்ன? தன் அண்ணனும் கிருத்திகாவும் ஈருயிர் ஓருடலாகவா வாழ்ந்து விட்டார்கள்? அதனால் அவர்களை பிரிப்பதற்காக அவள் மனம் சங்கடமெல்லாம் படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here