என்றும் நீதானே!?_5_ஜான்சி

0
383

அத்தியாயம் 5

“இங்க பாரு, என் மகன் செய்த முட்டாள்தனத்தினால உன்னை இந்த இரண்டு வருசமும் வீட்ல உக்காத்தி வச்சு காப்பாத்தினதே அதிகம். தாலி கட்டினா எல்லாம் பொண்டாட்டி ஆகிற முடியாது. எம்மவனுக்கும், அவன் தங்கச்சிக்கும் சேர்ந்தாப்புல நல்லதா சம்பந்தம் அமைஞ்சிருக்கு. உன்னால அவன் வாழ்க்கை நாசமா போகாம பார்த்துக்க. அவன் திரும்ப வர முன்னாடி நீ வீட்ட காலி பண்ணி போயிருக்கணும். என்ன புரியுதா? நீ எங்கயோ போயிட்டன்னு அவன் கிட்ட சொல்லினதும் அவன் உன்னை தலைமுழுகிடுவான்” காயத்ரி குரலெழுப்பாமல் உறுமிச் சென்றிருக்க அடுத்து வந்த கிருபாசினி தனது பங்கிற்கு அமிலத்தை ஊற்றினாள்.

“உன்னையெல்லாம் அண்ணின்னு மரியாதையா சொல்ல முடியுமா? இல்லை எங்கண்ணன் தான் உன்னை வெளியில் ஜோடியா அழைச்சுட்டு போக முடியுமா? ஒருத்தன் தாலிய கட்டினதும் அவன் தகுதியென்ன? நம்ம தகுதியென்னன்னு யோசிக்காம அவன் பின்னாடியே வந்துரது.”

‘தன்னிடம் அலைபேசியில் பேசும் சில நொடிகளிலும், அம்மாவைக் குறித்து பேசும் கணவன் இங்கு நடக்கின்றவைகளைச் சொன்னாலும் கூட அவனது பெற்றத்தாயை விடவா இவளை நம்பி விடப் போகிறான்?’ கிருத்திகாவின் மனம் சோர்ந்தது.

வழக்கமான வேலை நேரம்:

“ஏ லாவண்யா, அவசரமா எனக்கொரு வீடு பார்த்து தாப்பா”

நிமிர்ந்து கிருத்திகாவை முறைத்தாள் அவள்.

“வா முதலில் போலீஸ் ஸ்டேசன் போவோம், உன் புருசன் வீட்டுக்காரங்களை பிடிச்சுக் கொடுத்திடலாம்.”

“வேணான்டி”

“இந்த மனசாட்சி இல்லாததுங்கள பாவம் பார்க்குறியா நீ?”

“அதில்ல அவர் தங்கச்சி கேட்டதும் கூட சரிதானடி, அவர் எங்க நான் எங்க? எங்க இரண்டு பேருக்கும் ஏணி வச்சா கூட எட்டாதுடி.”

“ஏ அறிவுக்கெட்டத்தனமா பேசாதேடி வாய மூடு, ஏன் நீயா வந்து அவர தாலிக்கட்டச் சொன்ன?”

“அதெல்லாம் விடு, தயவு செய்து எனக்கு ஒரு வழி சொல்லேன்.” இது திருந்தாத கேஸ் என எண்ணியவளாக,

“சரி சரி, வீடுதானே? நான் பார்த்துத் தரேன்” என்றாள் அவள்.

***

தங்கையின் திருமணத்திற்காக ஆசையாசையாக புறப்பட்டு வந்திருந்த செல்வன் நிகழ்ந்தவை எல்லாம் எண்ணி எண்ணி அலமலந்து போயிருந்தான். அப்போதுதான் தனது உறவுகள் தான் வீட்டோடு மாப்பிள்ளையாக செல்லப் போவதாக எண்ணி தன்னிடம் கேட்ட அத்தனை கேள்விகளுக்குமான பொருள் அவனுக்கு புரிந்தது,

வீட்டிற்கு வந்தவனிடம் ஓரிரு உறவுகள் வந்து காரணம் கேட்க, தனது திருமண புகைப்படத்தையும், காணொளியையும் அவர்களோடு பகிர்ந்தவன், வீட்டில் உள்ளே சென்று தன் போக்கில் செயல்படலானான்.

முதலில் தான் வீட்டிற்க்கு திரும்ப கொண்டு வந்திருந்த பெட்டிகளை திறந்து அதில் தனது தாய்க்கும், தங்கைக்குமாக வாங்கி இருந்தவைகளை எடுத்து அலமாரியில் வைத்தான். அப்போது தான் தனது மனைவிக்காக வாங்கிக் கொடுத்து இருந்த அலைபேசி இன்ன பிற பொருட்களை அங்கு பார்த்தான்.

அந்தப் பொண்ணு உம் பொண்டாட்டி மொபைலை தண்ணிக்குள்ள போட்டிருச்சுப்பா, சரி செய்ய கொடுத்திருக்கிறேன்.”

“அதுக்கென்ன, நீ எனக்கு போன் செஞ்சா உம் பொண்டாட்டிக்கு கொடுக்காமலா இருக்கப் போறேன், நீ அம்மாக்கு போன் போடுடா”

“கிருத்திகா, இங்க வா, செல்வனுக்கு உன் கூட பேசணுமாம்”

தாயின் குரல் பல்வேறு தொனியில் காதில் ஒலித்தது. ‘ஒரு நாள், இரண்டு நாட்கள் இல்லை, இரண்டு வருடங்களாகவா தன் தாயிடம் தான் ஏமாந்து நின்றோம்?’ மனம் துரோகத்தில் தகித்தது, சொந்த இரத்தத்தின் துரோகம் என்பதால் அது மிகவும் வலித்தது.

தான் தாய் மற்றும் தங்கைகளுக்காக கொண்டு வந்தவைகளை உள்ளே வைத்து, அலமாரியை பூட்டி விட்டு சாவியை பத்திரமான இடத்தில் வைத்த பின்னர் தனது பெட்டிகளோடு அவன் வீட்டை விட்டு புறப்பட்டான். வீட்டின் பாதுகாப்பிற்கு அவனது உறவினர்கள் இருக்க, கதவை பூட்ட தேவை ஏற்படவில்லை.

காயத்ரி வீட்டிற்கு வந்த போது மகனையும் மகன் பெட்டிகளையும் காணாமல் திகைத்தார். உறவினர்கள் அவருடைய மகனின் திருமண புகைப்படம் மற்றும் காணொளியை காட்டி கேள்விகள் கேட்க, ஒரே நாளில் பெற்ற பிள்ளைகள் இருவரிடமிருந்தும் முழுமையாய் தொடர்பற்று பிரிந்ததை உணர்ந்தார். எல்லாவற்றுக்கும் காரணமான கிருத்திகாவை அவரது வாய் மென்று துப்பியது.

“தரித்திரம் பிடிச்சவ எங்கிருக்காளோ?”

***

இரவு மணி ஒன்பது

ஹோட்டலில் தனக்காக ஒரு அறையை ஏற்பாடு செய்து, அங்கே தனது பெட்டிகளை வைத்து விட்டு மதியம் முதலாக மனைவியை தேட ஆரம்பித்த செல்வன் இப்போது மனைவியின் பணியிட தோழியின் வாசலில் நின்றுக் கொண்டு இருந்தான்.

“உங்களுக்கு இரண்டாவதா கல்யாணம் நடக்கலைன்னு சொன்னா நான் நம்ப மாட்டேன் சார். அங்கேயும் கல்யாணம் செஞ்சுட்டு, இப்ப இவளையும் தேடி வர்றதானா… என் பிரண்டு உங்களுக்கு அத்தனை இளக்காரமா போயிட்டாளா?”

“சத்தியமா சொல்றேன் …அப்படி எதுவும் நடக்கவே இல்லைமா…, எனக்கு கல்யாணம் ஆகி இருந்தா நான் இப்படி உண்ணாம கொள்ளாம ரோடு ரோடா என் கிருத்திகாவை தேடி திரிஞ்சு இருப்பேனா? அவ என்ன செய்றா? எப்படி இருக்கான்னு தெரிஞ்சுக்க காலையிலருந்து தவியா தவிக்கிறேன்.”

“அவ்வளவு நல்லவரா இருந்திருந்தா இந்த அளவுக்கு அவளை கஷ்டப்படுத்தி இருக்க மாட்டீங்க?”

“எங்கம்மா நல்ல குணம், நல்லா பார்த்துப்பாங்கன்னு தான் அவங்க கிட்ட விட்டுட்டுப் போனேன். ஆனா… இத்தனை நடக்கும்னு எனக்குத் தெரியாது.” பெருமூச்செழுந்தான்.

“நீங்க எல்லாம் பணக்காரங்க சார், உங்களுக்கெல்லாம் அநாதரவா இருக்கிற பொண்ணை கட்டி, அப்புறம் உங்க விருப்பத்துக்கு இன்னொரு கல்யாணம் செஞ்சுக்கிறது எல்லாம் சாதாரணம்… எங்களை மாதிரி பொண்ணுங்களுக்கு அப்படியா சார்? தாலிக் கட்டுனவன் காப்பாத்துவான்னு நம்பினா நட்டாத்தில விட்டுட்டு போயிடறீங்க… உங்களுக்கெல்லாம் எதுக்கு சார் கல்யாணம்?”

“தப்புதான் மா, நான் அந்த சூழ்நிலையில அவ பொறுப்பை ஏத்திட்டு இருக்கக் கூடாது. அவளை துன்பத்தில இருந்து காப்பாத்துறேன்னு சொல்லி இன்னொரு கஷ்டத்தில இழுத்து விட்டிருக்கேன்.” தலையில் கை வைத்துக் கொண்டான். காலையில் இருந்து அலைந்ததும், தன்னை நம்பாதவளாக வாதாடும் மனைவியின் தோழியிடம் வாதாடுவதுமாக முழுக்க சோர்ந்து போய் விட்டிருந்தான் அவன்.

“உங்கம்மா செஞ்சதில ஒரே ஒரு நல்ல காரியம் கிருத்திகாவை வேலைக்கு அனுப்பினதுதான். இப்ப அவளை வீட்டை விட்டும் துரத்தி விட்டாச்சு, இனி அவ பாட்டுக்கு வேலைக்கு போய் அவ பொழைப்பை பார்த்துக்குவா… அவ வாழ்க்கையை அவ பார்த்துக்கட்டும். நீங்க உங்க வாழ்க்கையை பார்த்துக்கோங்க சார்.”

“நடந்த திருமண ஏற்பாடு எதுவுமே எனக்குத் தெரியாது. தயவு செய்து அவ எங்க இருக்கிறான்னு சொல்லுங்க… ப்ளீஸ் சிஸ்டர்.”

பிடிவாதமாக நிற்கும் தன் மனைவியின் தோழியிடம் செல்வன் மன்றாடிக் கொண்டு இருக்கையில் அலைபேசி ஒலிக்க அதில் புவனேஸ்வரியின் அழைப்பு வரவும் அவன் முகத்தில் பிரகாசம் கூடியது.

“சிஸ்டர், நான் சொன்னதும் நம்பலில்ல. இதோ இவங்களோடதான் எனக்கு திருமண ஏற்பாடு நடந்திருந்தது, இப்ப இவங்க கிட்டயே கேளுங்களேன்”

கிருத்திகாவின் தோழி லாவண்யா இன்னுமே அவனை நம்பாத பார்வை பார்த்துக் கொண்டு இருக்க, ஸ்பீக்கரில் அந்த அலைபேசி அழைப்பை ஏற்றான்.

“ஹலோ”

“ஹலோ, உங்க மனைவி கிடைச்சுட்டாங்களா சார்?”

“இல்லிங்க, இன்னும் தேடிட்டு இருக்கிறேன்.” இவன் குரலில் தெரிந்த வருத்தம் அலைபேசியில் பேசிக்கொண்டு இருந்தவளை பாதித்து இருக்க வேண்டும்.

“உங்களுக்கு ஏற்கெனவே திருமணம் ஆகிடுச்சுன்னு காலையில் நீங்க சொன்னதில் இருந்து ஏராளமான குழப்பங்கள். அண்ணனை எப்படியோ சம்மதிக்க வச்சு அவங்க திருமணம் ஆகி வீட்டுக்கு வர்ற வரைக்கும் எனக்கு ஒரு வழியாகிடுச்சு. உங்க தங்கை வாழ்க்கை பத்தி கவலைப்படாதீங்க என் அண்ணனுக்கு உங்க தங்கையிடம் இப்ப ரொம்பவே கோபம்னாலும் கூடிய விரைவில் சமாதானமாகிடுவான். உங்க தங்கை வாழ்க்கைக்கு எதுவும் பிரச்சனை இருக்காம நாங்க பார்த்துக்கிறோம்.”

“ரொம்ப ரொம்ப நன்றிங்க…”

“இப்ப நான் உங்க கிட்ட பேசினேன்னு தெரிஞ்சா எங்க வீட்ல கோபப்படுவாங்க. ஆனாலும், எதுக்கு அழைச்சேன்னா… தெரிஞ்சோ தெரியாமலோ உங்க வாழ்க்கையில என்னால பெரிய குழப்பம் ஆகிடுச்சு. நீங்க உங்க மனைவியோட நிம்மதியா வாழறீங்கன்னு தெரிஞ்சாதான் எனக்கு கொஞ்சமாவது ஆறுதலா இருக்கும்.”

“உங்க மனசுக்கு நீங்க ரொம்ப நல்லா இருப்பீங்கம்மா… என் வாழ்க்கையில் நடந்ததுக்கு நீங்க எந்த விதத்திலும் பொறுப்பில்ல, எங்கம்மாவோட பேராசையால உங்க குடும்பமே மன வருத்தத்துக்கு உள்ளாகிடுச்சு… அம்மா சார்பா உங்க கிட்ட நான் மன்னிப்பு கேட்டுக்கிறேங்க.”

“உங்க மனைவி கிடைச்சதும் என் கூட ஒரு முறை பேச வைங்க சார், என் முன்னால அவங்க நிறைய முறை அவமானப்பட்டுருக்காங்க. வீட்டு மருமகளை வேலைக்காரின்னு சொல்லி, அவங்க முன்னால இன்னொரு பொண்ணை உன் கணவனுக்கு கட்டி வைக்கப் போறேன்னு சொல்லுறப்ப அவங்க மனசு என்ன பாடு பட்டுருக்கும்னு என் மனசில அவங்களைப் பற்றியே அடிக்கடி சிந்தனை வந்து போகுது. ஒருவகையில் அதற்கு நானும் காரணம்னு மனசுல குத்துது…அவங்க கிட்டயும் நான் மன்னிப்பு கேட்டுக்கணும்.”

“ஐயோ …மன்னிப்பெல்லாம் வேண்டாம்… ரொம்ப பெரிய மனசுங்க உங்களுக்கு” செல்வன் தழுதழுக்க…

“போன் வச்சிடறேங்க சார்” அழைப்பை துண்டித்திருந்தாள். புவனியின் மனது இலகுவாகி இருக்க வேண்டும், செல்வனின் மனது கனத்திருந்தது.

லாவண்யா தன் கணவனோடு புறப்பட்டு வெளியில் வந்திருந்தாள். கேள்வியோடு தன்னை நோக்கிய செல்வனிடம் இராத்திரி ஆகிருச்சு இல்ல, அதான் வீட்டுக்காரரை துணைக்கு அழைச்சுக்கிட்டேன். கிருத்திகா இருக்கிற வீட்டுக்கு போக பத்து நிமிசமாகும். ரிக்சால போகலாம்.

“ரிக்ஷா…”

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here